தலைப்பு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

உத்தம பக்தர்களுக்காக உருகிவிடுகிற நவநீத இதய சாயி!

பாபா எவ்வாறெல்லாம் தனது பக்தர்களுக்காக தன்னையே பல சந்தர்ப்பங்களில் அர்ப்பணிக்கிறார் என்பதற்கான சிறு சிறு உதாரணங்கள் இதோ...

ஒரு செயலில் தன்னையே கரைத்துவிடுபவர் பாபா! செயலில் சிறியது பெரியது என எதுவும் இல்லை பாபாவுக்கு... மாணவ குழந்தைகளிடம் பேசும் போதும் சரி தனக்கு வரும் கடிதங்களை பார்வையிடும் போதும் சரி செயலாகவே மாறி கரைந்துவிடுபவர் பாபா... ஒருமுறை தரிசனத்து பாபா வருகிற போது இடைமறித்து ஒரு மாணவர் காபி தருகையில்... "சுவாமி.. மன்னிக்கவும் சூடு பண்ணி தருகிறேன்!" என நேர்காணல் அறை வாசலில் நெடு நேரம் காத்திருந்த மாணவர் பாபா வெளிவரும் போது அவ்வாறு சொல்கிறார்.. "பரவாயில்லை ஆறிப்போனதே போதும்.. சூடாக இருந்தால்.. இன்னும் சில நிமிடம் என் குழந்தைகள் இன்னமும் தரிசனத்துக்காக காத்திருப்பார்கள்" என ஆறிய காபியை சூரிய சாயி அப்படியே வாயில் விட்டு துரிதப்படுகிறார்.. அது தான் பாபாவின் பெருங்கருணை! 


ஒருமுறை சுவாமிநாதன் எனும் ஒரு இளைஞர் பம்பாயில் பாபா தரிசனத்திற்காக வருகிறார்.. கூட்டமோ கூட்டம்... அரபிக் கடலே திரண்டது போன்ற கூட்டம்... ஆனால் அந்த இளைஞருக்கு விசித்திரமான ஒரு எண்ணம் வந்தது.. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் எனக்கு சுவாமி பாத நமஸ்காரம் தர வேண்டும் என... மிக உருக்கமாய் வேண்டிக் கொள்கிறார்... அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் மேடைக்கும் அத்தனை தூ.....ரம்! பாபா மேடை மீது தோன்றுகிறார்.. அனைவரையும் ஆசீர்வதிக்கிறார்! அந்த இளைஞருக்கோ பாபா ஒரு புள்ளி போல் தோன்றுகிறார்.. பாபா கீழிறங்கி நேராக வருகிறார்.. தடுப்புகளை தாண்டி வந்து அந்த இளைஞரின் முன் அந்த தடுப்புகளில் ஒரு கம்பில் கால்களை தூக்கியபடி "தீஸ்கோ!" என்கிறார்... சுவாமிநாதனுக்கு சுவாமி அளித்த மின்னல் பொழுது வரம் அது! திக்குமுக்காடிப் போகிறார்... கண்களில் ஆனந்தக் கண்ணீர் அதிர்ச்சி கலந்து பொங்கி வழிகிறது! 


பாபாவின் நெடுநாளைய பக்தை ஜெயலட்சுமி கோபிநாத்! அவரின் கணவர் கோபிநாத் மறைந்து போய்விடுகிறார்.. சோகமே வடிவாய் அந்த துயரச் சம்பவத்தின் 5ஆம் நாள் பர்த்திக்கு வருகிறார்... பாபாவோ தூர ஆசி வழங்கி அப்படியே சென்றுவிடுகிறார்...ஏதும் பேசவில்லை... இருந்தும் தரிசனம் பஜனை என ஓரளவுக்கு ஆறுதல் பெறுகிறார் அவர்.. மீண்டும் அடுத்த மாதமே பர்த்தி விஜயம்... அந்த சமயத்தில் பாபா அருகே வந்து பேசுகிறார்.. அப்போது "நான் பெருந்துக்கத்தில் இருந்த போன மாதம் நீங்கள் ஏன் ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை?" எனக் கேட்கிறார் ஜெயா அம்மையார்... அதற்கு பாபாவோ "சென்ற மாதம் நீ வந்திருந்த போதே நான் உன்னோடு பேசி இருந்தால் நீ வெடித்து அழுதிருப்பாய்.. உன் சோகமான அந்த முகத்தை என்னால் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அதான் உன்னோடு பேசவில்லை!" என்கிறார்.. பக்தர்களிடம் இப்படி ஒரு பரிவையும் கரிசனத்தையும் இறைவன் பாபாவை தவிர எவரால் வைக்க முடியும்? உண்மையில் பாபா வழங்குவது தரிசனம் அல்ல கரிசனம்!


ஒருமுறை எழுத்தாளர் கே.ஆர் வாசுதேவன் அவர்களுக்கு பாபாவோடு ஒரு நேர்காணல் ... அதை நூலாசிரியர் சகுந்தலா பாலுவும் பதிவு செய்திருக்கிறார்... "நீ கடலில் விழுந்து விடலாம் என அங்கே சென்றாய்! ஆனால் விழுந்து விடாமல் ஏதோ சித்த பிரமை அடைந்தவன் போல் மைல் கணக்காக கரையிலேயே நடந்தாய்!" என பாபாவே எழுத்தாளருக்கு நடந்ததை அவரோடு பகிர்ந்து கொள்கையில் பாபாவின் தாமரைக் கண்களில் ஓரிரு பனித்துளி எட்டிப் பார்க்கிறது! பாபாவின் தெய்வத்திருக் கண்களை நன்றாக உற்று பார்த்தால் கங்கை நீர் தேங்கி இருப்பதை இப்போதும் புகைப்படத்தில் காணலாம்! அது தான் அருட் பெருங் கருணைக்கான அடையாளம்!


ஒருமுறை சென்னை பெங்களூர் சாலையில் ஒரு விடுதியில் பாபாவும் அவரோடு கஸ்தூரி போன்ற பக்தர்களும் தங்கி இருக்கிறார்கள்! அந்த அறையில் எந்த வசதியுமில்லை... கட்டில் இல்லை.. மெத்தை இல்லை... சரி என பாபாவோடு அனைவரும் தங்குகிறார்கள்... அந்த இரவு குளிர்கிறது.. சரிவரப் போர்வை கூட இல்லை.. அதனை சேவைத் திலகம் கஸ்தூரியே "ஏதுமற்றதை பாபா எங்களோடு பகிர்ந்து கொண்டார்!" என ஒரு ஜென் பார்வையில் அந்த இரவுத் தங்கலை பதிவு செய்திருக்கிறார்! அந்தப் போர்வையற்றப் பொழுதுகளில் உடனே தான் கொண்டு வந்திருந்த ஒரு சிவப்பு சால்வையை அங்கே பாபாவோடு தங்கியிருந்த ஒரு இஞ்சினிய பக்தர் வம்படியாக கொடுத்து பாபாவை போர்த்திக் கொள்ளச் சொல்கிறார்! பாபாவும் போர்த்திக் கொள்கிறார்.. அந்த இரவில் படுத்த உடனேயே அனைவருக்கும் தூக்கம் வந்துவிடுகிறது... விடிகிறது... விடிகாலையில் சேவைத்திலகம் கஸ்தூரி எழுந்து கொள்கிறார்... எழுந்த உடனேயே தன் மேல் போர்த்தப்பட்ட அந்த சிகப்பு சால்வையை தொட்டு ஆச்சர்யப்படுகிறார்... அன்று இரவே அனைவரும் தூங்கிய பிறகு குளிரால் நடுங்கிய கஸ்தூரிக்கு பாபா சால்வையை போர்த்தி விட்டது அதற்குப் பிறகே அறிந்து கொள்கிறார் கஸ்தூரி...

அந்தக் கஸ்தூரி மான் ரத்னாகர குல ரகுமானை எண்ணி கண் கலங்குகிறது! மயிலுக்கு போர்வை தருபவர் சாதாரண அரசன்.. வெயிலுக்கே போர்வை தரும் கருணை இறைவன் தான் பாபா என்பதை சேவைத் திலகம் உணர்ந்து கொள்கிறார்! அந்த சேவைத் திலகத்திற்கே சேவை புரிந்த சேவாவதாரர் தான் சுவாமி!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 68 / ஆசிரியர்: ரா.கணபதி) 


பாபாவின் பேரன்பு அளவிட முடியாதது...! ஆழங்கள் ஆழ்ந்தது! பாபாவின் கருணை எல்லைகள் இல்லாதது... பேதமற்றது... கடலின் ஆழம் அறிய எப்படி அலைகளுக்குள் அலைகளாகவே ஆழ்ந்து உள்நோக்கி செல்ல வேண்டுமோ... அப்படி பாபாவின் கருணையை உணர மனம் தாண்டி நமக்குள் நாம் செல்ல வேண்டும்... அங்கேயே அவரின் இருப்பிடத்தையும்.. பெருங்கருணையின் பிறப்பிடத்தையும் நாம் கண்டடையலாம்!


   பக்தியுடன் 

வைரபாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக