தலைப்பு

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ காபூல் தபஸ்வி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு ஆன்மீக தபஸ்வி எவ்வாறு பாபாவை அவரது சிறுவயதில் தரிசித்தார்? என்ன ரூபம் அவர் கண்டார்? எப்படிப் பரவசப்பட்டார்? பிறகு அவர் என்ன ஆனார்? எனும் அதிசய அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


ஒரு ஆன்மீக தபஸ்வி.. காபூலில் இருந்து வருகிறார்.. அவரை காபூல் தபஸ்வி என அழைக்கிறார்கள்!  அவதாரங்களாலும் மகான்களாலும் புனிதம் இன்னமும் கங்கையாய் புரண்டு வரும் பாரதத்திற்கு வருகிறார்! நிறைய மகான்களை தரிசிக்கிறார்... மகான்களை தரிசிப்பது என்பது அகக்குளியல்...அவர்களின் தியான அதிர்வலைகள் நம் மேல் பட நமது அகத்தை அப்படியும் சுத்தீகரித்துக் கொள்ளலாம்.. இப்போது மகான்கள் அரிதாகவே வெளியே தென்படுகிறார்கள்... சென்ற மகான்களின் சமாதிகளோ இன்னமும் நம் அகத்தை குளிப்பாட்டிக் கொண்டே இருக்கிறது! தரிசித்துக் கொண்டே அப்படியே அந்த காபூல் யோகி தென் இந்தியாவுக்கு வருகிறார்...! அவதார புருஷர்கள் யாரேனும் இருக்கிறார்களா? எனத் தேடுகிறார்... மகான்களின் தரிசனம் புண்ணியம்...‌ ஆனால் அவதார புருஷர்களின் தரிசனமோ புண்ணியம் இருந்தால் மட்டுமே அப்பெரும் பாக்கியமே வாய்க்கும்..! ஆக அவர் அப்படியே ஆந்திரப்பிரதேசத்திற்கு வருகிறார்.. சாதாரண அவதார புருஷனை அல்ல பரிபூர்ண அவதார புருஷனையே தரிசிக்கப் போகிறோம் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை... எதிர்பார்க்கா நிகழ்வே ஆன்மீக நிகழ்வு! அப்படியே அவர் அனந்தப்பூர் மையம் கொண்டு புட்டபர்த்தி வருகிறார்...இறைவி சத்யம்மா கோவிலில் வந்து தஞ்சம் அடைகிறார் அந்த காபூல் தபஸ்வி! காபூல் எங்கே இருக்கிறது? புட்டபர்த்தி எங்கே இருக்கிறது? அதற்கு உள்ள தொடர்பை யாரேனும் கற்பனை செய்ய முடியுமா? காலம் பாபாவின் கையில்... அவர் காலத்தை மட்டுமல்ல எதையும் என்னமும் செய்யும் வல்லமை படைத்த மகா இறைவன்!


அவர் அப்படி தங்கி இருப்பதை புட்டபர்த்தி ஜனங்கள் கேள்விப்படுகிறார்கள்! அவர் தனது தாந்த்ரீக சக்தியால் பூக்களை, பழங்களை வரவழைத்துக் கொடுத்ததால் அதைக் காண்பதற்கே மக்கள் குவிந்தனர்.. அவ்வகை சக்தி கத்தி போல் பழங்களையும் நறுக்கலாம் அல்லது ஆளையும் கொல்லலாம்.. அவ்வகை சக்தி கைவரப் பெற்றவர் ஒருகட்டத்தில் அகந்தை ஏற்பட்டு ஆன்மீக வழியில் இருந்து தடம் மாறுவதும் உண்டு...! அது சிருஷ்டி சக்தி இல்லை! மாந்த்ரீக வசிய தேவதை செயல்பாடு அவை! சிருஷ்டி என்பதோ இறைவனால் மட்டுமே புரியக்கூடிய ஒன்று... ஆனால் இந்த யோகியோ அன்பே மிகுந்தவராய் இருக்கிறார்.. நல்லவர் அவர்! எதை வைத்து எனில்...?


பால பாபா சத்யம்மா கோவில் வழியாக செல்லும் போதெல்லாம் அந்த காபூல் தபஸ்வியை பார்த்து புன்னகை புரிவார்! ஒருவேளை அவர் நல்லவர் இல்லை எனில் பாபா அதை அவருக்கு உணர்த்தி அப்புறப்படுத்தி இருப்பார்.. இல்லை பாராமுகம் காட்டியிருப்பார்.. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை...

செயல்முறையை விட இறைவன் பாபா அதன் நோக்கத்தையே கவனிக்கிறார்! நோக்கம் நல்லதாயின் வழிமுறை முக்கியமல்ல.. அது இறுதியில் நன்மையே தரும்! அன்போடு கொஞ்சிப் பேசி ஒருவருக்கு நாம் அளிக்கும் விஷம் அமுதமாக மாறிவிடுவதில்லை... ஆனால் அன்னை அதட்டித்தரும் மருந்து காய்ச்சலை குணப்படுத்துகிறது.. அதுபோலவே நோக்கமே முக்கியம்!


அப்படி நல்ல நோக்கம் கொண்ட காபூல் யோகியும் பாபாவை நோக்குகிறார்... அவர்மேல் காபூல் யோகி காதல் வயப்படுகிறார்.. அகப்பார்வை பெற்ற யாருக்குத்தான் பாபாவை தரிசிக்க  காதல் வராது?! பாபாவை பார்க்கும் போதெல்லாம் பரவசப்படுகிறார்... துளி இறை அனுபவம் அடைந்தவர் கூட பாபா இறைவன் என்பதை உணர்ந்து கொள்வார! பாவோடு பேச ஆர்வப்படுகிறார்! பாபா அதை உணராதவரா? ஒருநாள் அவரை பஜனைக்கு அழைத்து வரச் சொல்கிறார்... சந்தோஷம் தாளவில்லை அந்த யோகிக்கு... (யோகி என்ற பெயரும் தபஸ்வி என்ற பெயரும் அர்த்தத்தில் ஒன்றே! ) அந்த யோகியும் சாயி பஜனையில் கலந்து கொள்கிறார்.. "நீங்களும் எதாவது பாடுங்களேன்? " என பாபா அன்பு ததும்பக் கேட்கிறபோது அவரும் ஆழ்ந்த பக்தியோடு  ஹிந்தி பக்திப் பாடல்களை பாடுகிறார்.. வெறும் மக்களை கவர்வதற்காக புரியும் தாந்த்ரீகருக்கு பக்தி இருக்காது வேஷமே இருக்கும்.. அவரின் பாடல்களைக் கேட்கிறவர்களுக்கு அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரின் பக்தி உணர்வை கவனித்து அவர் தூய்மையானவர் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது! பாபா அந்த யோகி பாடுவதை நன்றாக தலையாட்டி அனுபவிக்கிறார்! இந்த உலகம் முதல் கந்தர்வ உலகம் வரையிலான உயரிசையும் உயிரிசையும் பாபா தானே! தன்னைத் தானே அனுபவிப்பது போல பாபா அந்தப் பாடல்களை அனுபவிக்கிறார்!


பஜனை முடிந்து ஆரத்தி நிகழ்கிறது.. பாபாவுக்கு மலர்மாலை சூட்டப்படுகிறது... கண்ணம்மாவின் தம்பியை அழைத்து அந்த மலர் மாலையை எடு என பாபா சொல்லிட... அந்த மலர் மாலையை அப்படியே  அந்த காபூல் யோகிக்கு அணிவிக்கிறார்...! காபூல் யோகி இதனை எதிரே பார்க்கவில்லை... விபூதி சிருஷ்டித்து பாபா யோகியின் நெற்றியில் இடுகிறார்! அதுமட்டும் நிகழ்ந்திருந்தால் பரவாயில்லை... அதற்கு மேல் ஒரு கிளைமாக்ஸ் அனுபவம்... 


அதில் பிரம்மித்துப் போய் பாபாவின் காலடியிலேயே விழுந்து ,"மேரா பத்ரிநாத் மேரா பத்ரிநாத்!" (என்னுடைய பத்ரிநாதரே என்னுடைய பத்ரிநாதரே) என கதறி அழுகிறார் யோகி...! ஆம் பாபா அவருக்கு ஸ்ரீ பத்ரிநாராயணனாக காட்சி அளித்ததில் அவரால் அந்தப் பரவச நொடியை தாங்கவே இயலவில்லை...! அப்போது பாபா அவரின் தோளினை இறுகப் பிடித்துத் தூக்கி...


"இனி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டியதில்லை...எந்த தேசமும் செல்ல வேண்டியதில்லை... உங்கள் தவத்திலேயே மூழ்கியிருங்கள்! உங்கள் குருவை தியானித்துக் கொண்டிருங்கள்!" என ஆசி கூறி வழி அனுப்புகிறார்! தன்னை தியானி என்று பாபா சொல்லவே இல்லை... அதுதான் இறைவன் பாபா! அதனால் தான் பாபா இறைவன்! பாபா அவரவர் குருவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அப்படி! காரணம் குருமார்கள் பாபாவின் கைக்கருவிகளே! யாரை வழிபட்டாலும்.. அந்த வழிபாட்டினால் நமக்கு குணமாற்றம் நல்லவிதமாக ஏற்படுகிறது எனில் அந்த வழிபாடு இறைவன் பாபாவிடமே போய்ச் சேர்கிறது! "நான் எவ்வளவு வழிபட்டாலும் என் தீய குணங்களை மாற்றிக் கொள்ளமாட்டேன்!" என மனிதர் அகந்தையோடு நினைத்தால் அந்த வழிபாடு நேர விரயமே தவிர அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 87/ Author : Jantyala Suman babu / Eng Translation : Pidatala Gopi Krishna / Source: Bala leelamrutham / Author: VR Krishna Kumar / Page : 210)


"உங்கள் தவத்திலேயே மூழ்கியிருங்கள்!" என பாபா அந்த யோகியை சொன்ன சொல் எத்தனை சத்தியமானது! இப்படி யோகிகளும் மகான்களும் தவத்தில் சதா மூழ்கியிருப்பதால் தான் மனித பாவங்களால் பாவம் இந்த பூமி இன்னமும் கடலில் மூழ்காமல் தாக்குப்பிடிக்கிறது...!  நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இறைவன் பாபாவுக்கு நன்றிக் கடன் பட்டவர்களே! அந்தக் கடனை அடைக்கவே இயலாது! நம்முடைய குணமாற்றம் மட்டுமே நாம் பாபாவுக்கு தினசரி செலுத்த வேண்டிய அந்த நன்றிக்கடனுக்கான வட்டி!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக