தலைப்பு

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ Y.V குடும்பராவ் | புண்ணியாத்மாக்கள்

சுவாமியின் பெங்களுரு பிருந்தாவன ஆசிரமத்தை எவ்வாறு ஶ்ரீ ராமபிரம்மம் அவர்கள் திறம்பட நிர்வகித்தாரோ… அதேவிதமாக புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தை நிர்வகித்தவர் திரு.குடும்பராவ் அவர்கள். பாபாவுக்கு சேவை செய்வதற்காகவே தன் பணியை (துணை நீதிபதியாக பதவிவுயர்வு பெற்றிருந்த சமயத்தில்) ராஜினாமா செய்தவர். பிரசாந்தி நிலையத்தில் குடியேறி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சேவையில் ஈடுபட்டு தனது வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொண்ட புண்ணியாத்மா திரு. குடும்பராவ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பி இதோ…











🌹நீதித்துறையிலிருந்து தெய்வீக சேவைத்துறை:

சத்யசாயி பக்தர்கள் வட்டத்தில் உலகம் முழுக்க மிகப் பிரபலமாக குடும்பராவ் என்று அறியப்பட்ட ஸ்ரீ எல்லமராஜு வெங்கட குடும்ப ராவ், ஒரு வழக்கறிஞர். மேலும்  மாநில நீதித்துறை உறுப்பினராகப் பணியிலிருந்தவர். 1957ம் ஆண்டு தொடங்கி, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பக்தராக ஆனவர். அந்த சமயத்தில் அவர், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள மடகாசிராவில் செஷன்ஸ் கோர்ட் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றினார். அவருடைய கனவில் வந்து பகவான் பாபா அழைத்ததன் மூலம் தனது நம்பிக்கையை உறுதிசெய்ததாக உணர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன், பாபாவுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்காக 1967ல் தன் பணியை (அந்த சமயம் துணை நீதிபதியாக பதவிவுயர்வு பெற்றிருந்தார்) ராஜினாமா செய்தவர். அப்போதிருந்து அவர் பிரசாந்தி நிலையத்தில் குடியேறினார், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக (30 ஆண்டுகளாக) பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சேவையில் ஈடுபட்டு தனது வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொண்டவர்.

ஆசிரமத்திற்கு வருகை புரிந்த புதிய, பழைய, உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் அனைவருக்குமே குடும்பராவ் என்ற பெயர் மிகப் பரிட்சயமான ஒன்று.  அவர் போட்டோக்ராபிக்-மெமரி என்று சொல்லப்படக்கூடிய அதிவுன்னத நினைவாற்றல் கொண்டிருந்தார்; மாறாத பொறுமையுடையவராக காணப்பட்டார். பல ஆண்டுகளாக கடவுளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ததன் மூலம் அவர் அத்தகைய பொறுமையைப் பெற்றிருந்தார். ஆண்டு முழுவதும் நாள் தோறும், காலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை சேவை புரிந்த அவர், எளிமையாகவும் பணிவுடனும் தன் சேவைப் பணிகளை செய்துவந்தவர்.

 


🌹 புட்டபர்த்தியில் முதல் சந்திப்பு:

அவரது மனைவி சியாமளா தேவியுடன் ஸ்ரீ குடும்பராவ் பிரசாந்தி நிலையத்திற்கு முதன் முறையாகச் சென்ற நிகழ்வு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அவர்களுக்கு அமைந்தது. அதுவரை தன்னுடைய ஷீரடி சாய்பாபா தான் ஸ்ரீ சத்ய சாயிபாபா என்று போற்றி வழிபட்டு வந்த பகவானை முதன் முறையாக சந்திக்கவிருந்தார். அந்தப் புனிதமான முதல் சந்திப்பில், பாபாவிற்கு பாதபூஜை செய்யவேண்டுமென்று தனியாத  ஆசைகொள்கிறார். முதல்நாள் மாலையிலேயே அவர்களிடம் வந்த பாபா, "எப்பொழுது பாத பூஜை செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். பகவான் தனது இதய ஆசையை எப்படி அறிந்தார் என்று குடும்பராவ் வியந்துபோனார். 


குடும்பரராவ் சுவாமியுடன்..


"சுவாமி! பாத பூஜைக்கு புது வஸ்திரம், பன்னீர் மற்றும் இதர பொருட்களை வாங்கி வர, இப்போதுதான் புக்கப்பட்டினத்திற்கு ஒரு நபரை அனுப்பியுள்ளேன். தாங்கள் சொல்லுகின்ற சமயத்தில் உங்கள் தாமரைப்  பாதங்களை வணங்கிட எங்களை அனுமதியுங்கள்" என்று பக்தியுடன் கூறினார் குடும்ப ராவ். ஆனால் கருணை மிகுந்த பகவானோ, குடும்பராவைக் கடிந்துகொள்வது போல பதிலுரைத்தார். "இந்தப் பொருட்களெல்லாம் பாத பூஜைக்கு அவசியம் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஏன் அந்நியனைப் போல் நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் என்னிடமிருந்து வேறுபட்டவராக ஏன் உணர்கிறீர்கள்? நானே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். நாளை காலை தயாராக இருங்கள்" என்று கூறி தெய்வீகப் பேரன்பை மழையெனப் பொழிந்தார் சுவாமி.


மறுநாள் காலையில் ராவ் தம்பதிகள் சுவாமியின் பாதத்தினருகில் அமர்ந்து மனதார வணங்கினர். அதனைத் தொடர்ந்து நடந்த அந்தரங்கப் பேட்டியில் பகவானுக்கு அவர்களைப் பற்றி எல்லாம் தெரியும் என்றும் அவர்களின் நித்திய துணைவன் தாமே!  என்றும் வெளிப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலான, மறக்க முடியாத அனுபவம் என்னவென்றால், அவர்கள் பார்த்தியிலிருந்து திரும்பிச் செல்லும்போது அவர்களின் மாட்டு வண்டியின் பின்னால் ஆசிரமத்தின் எல்லையைக் கடக்கும் வரை சுவாமி அவர்களோடு நடந்து சென்று வழியனுப்பிய தெய்வீக அன்பு . மேலும், "தசரா பண்டிகைக்கு திரும்பி வாருங்கள்" என்ற வார்த்தைகளுடன் ஒரு தாயினுடைய பாசத்தையும் வெளிப்படுத்தியது, என்றுமே  மறக்கமுடியாத நிகழ்வாக திரு.குடும்பராவ் அவர்களுக்கு அமைந்தது.



🌹 கடவுளருகில் சேவை செய்வது - கத்திமேல் நடப்பது:

"உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு புட்டபர்த்திக்கு வாருங்கள்" என்று கனவில் பெறப்பட்ட கட்டளையைப் பற்றி சுவாமியிடம் தெரிவித்தபோது, பகவான் "மிகவும் நல்லது, செய்!"  என்றார். குடும்பராவ் உடனே தன் ராஜினாமா கடிதத்தை எழுதி, பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்று, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினார். 1968ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா முடிந்ததும், தம்பதிகளை நேர்காணலுக்கு அழைத்த சுவாமி, அவர்களின் வீடு, வேலை, சொத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடித்துவிட்டு பிரசாந்தி நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தினார். எந்த மறுப்புமின்றி சுவாமியின் கட்டளைக்கு உடனே  கீழ்ப்படிந்து 1968 ஏப்ரல் முடிய சில நாட்களுக்கு முன்பே, பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.


கடவுளுடன் வாழ்வதும், அவருக்காக உழைப்பதும் கூரிய கத்திமுனையில் நடப்பது போன்றது என்பதை விரைவில்  குடும்பராவ் உணரத் தொடங்கினார். பகவானின் அதிருப்தி சில சமயங்களில் தண்டனையாக வெளிப்படுத்தப்பட்டது, அந்த தண்டனை பெரும்பாலும் "பகவானின் மௌனமாக" இருந்தது. நெருப்பு வார்த்தைகளை விட மௌனம் மிகவும் வேதனை தரக்கூடியது என்று பகவானின் அருகில் சேவையாற்றிய பலரும் உணர்ந்துள்ளனர்.  "ஒருவரது அகங்காரத்தின் (EGOவின்) தந்திரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே கடவுளுக்குப் பிரியமானவராக ஆவதற்கு ஒரே வழி" என்ற ரகசியத்தைக் கண்டுபிடிக்க குடும்ப ராவுக்கு சிறிது காலம் பிடித்தது.


குடும்பராவ் பிரசாந்தி நிலையத்தில் குடியேறி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1972 இல் அவருக்கு மிகவும் கடுமையான சோதனை நேர்ந்தது. சுவாமி அவர் மீது கோபம் கொண்டவராக, பல மாதங்களாக அவருடன் பேசாமல் இருந்தார். ஆனால் மற்றவர்கள் மூலமாக சேவைக்குறிப்புகளை அனுப்பினார். பகவானுக்கு நேரடியாக பல கடிதங்கள் மூலமாகவும் பிறர் மூலமாகவும் அவர் செய்த கெஞ்சல்கள் எதுவும் பலனளிக்கவில்லை. பிரசாந்தி நிலையத்தை விட்டு எங்காவது போய்விடலாம் என்றுகூட யோசிக்குமளவுக்கு கடினத்தை உணர்ந்தார் குடும்பராவ். ஒருகட்டத்தில்  பலவீனமானமாகி  பிரசாந்தி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்; ஆனால் செல்ல முடியவில்லை.

கடைசியாக பகவானின் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளின் போது, குடும்பராவ் மக்கள் தொடர்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றலாம் என்று திரு.கஸ்தூரி அவர்களின் மூலம் சுவாமி செய்தி அனுப்பியபோது, அந்த  சோதனை முடிவுக்கு வந்தது. அதுமட்டுமல்ல பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின் திரு.குடும்பராவ் அவர்களை சுவாமி, ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் செயலாளராக பொறுப்பேற்கும்படி கட்டளையிட்டார். ஆக அந்த 'நெருப்பு சோதனையின்' இரகசிய வெகுமதிகள் சுவாமிக்கு மட்டுமே தெரிந்திருந்தன என்பது பின்னர் அவருக்கு விளங்கியது .

சுவாமிக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையே பாலமாக, பிரசாந்தி நிலையம் நகரக்குழுத் தலைவராக, ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் செயலாளராக, இவை யாவையும்விட முக்கியமாக சுவாமியின் உதவியாளராக முப்பது ஆண்டுகள் புனித சேவையாற்றிய திரு.குடும்பராவ் அவர்களின் பிரஷாந்தி நிலைய வாழ்க்கையில் நிகழ்ந்த மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்களும், சோதனைகளையும்   படிப்பினைகளையும்  பற்றி பகுதி-2ல் காணலாம்.








🌹 வெந்தபுண்ணால் நொந்திருந்தவரைக் கேலி செய்த பாபா:

பகவானின்  55வது பிறந்தநாள் விழாவின் நாராயண சேவைக்கு, சூடான சாம்பார் அடங்கிய பெரிய பாத்திரம் ஒன்றை  ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்த போது, பாத்திரம் இடறி திரு.குடும்பராவ் அவர்களின் மேல் சாம்பார் கொட்டியது!. தொடை முதல் கணுக்கால் வரை கொதிக்கும் சாம்பார் பாதிப்பு ஏற்படுத்திவிட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூட்டினால் மிகவும் பாதிப்படைந்திருந்த தோலுக்கான சிகிச்சைக்குப்பின் மருத்துவர்களால், அவரது கால்களில் கட்டு போடப்பட்டது. அன்று மதியம் குடும்பராவ் நொண்டிக் கொண்டே மந்திருக்குச் சென்றார். அவரின் காலில் இருந்த மருந்துக்கட்டைப் பார்த்து சுவாமி, "இதெல்லாம் என்னஉங்கள் கால்களுக்கு ஒன்றும் ஆகவில்லை" என்று கேலி செய்தார். அதுமட்டுமல்ல, அவரிடம் சில விருந்தினர் பேட்ஜ்களை கொடுத்து, அவற்றை குறிப்பிட்ட பக்தர்களிடம் சென்று தனிப்பட்ட முறையில் ஒப்படைக்கும்படியும்  கூறினார்!. குடும்பராவோ எந்த மறுப்பும் கூறாமல், சுவாமியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பிரஷாந்தி வளாகம் முழுவதும் நொண்டிக்கொண்டே நகர்ந்தவாறு வேலையை முடித்தார்.


அன்று மாலை அவரது மனைவி அவரின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டார். கட்டுப் போடப்பட்ட கால்களுக்குக் கீழே சில தலையணைகளை வைத்து  உயர்த்திப் படுக்க வைத்ததால் அவர்  நிம்மதியாகத் தூங்கினார். மறுநாள் காலையில் அவருடைய கால்களின்  நிலையைப் பார்க்க விரும்பினாள். கட்டை சிறிது அவிழ்த்த அவளுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏதும் நடக்காதது போல கால்களின் தோல் முற்றிலும் சாதாரணமாக இருந்தது!  மருத்துவர்கள் அணிவித்திருந்த கட்டை முழுவதுமாக அகற்றிப் பார்த்தபோது, ஒரே நள்ளிரவில் எல்லாம் சரியாகிவிட்டிருந்தது தெரியவந்தது! முந்தைய நாளின் விபத்துக்குச் சாட்சியாக இருந்த டாக்டர்களையும் மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் குடும்பராவ் சர்வசாதாரணமாக மந்திருக்கு  இயல்பாக நடந்து சென்றார். அவரைக் கவனித்த கணத்தில் சுவாமி சொன்னதாவது, "நான் உன்னிடம் சொல்லவில்லையாஉங்கள் கால்களுக்கு ஒன்றும் ஆகவில்லை!"

 


🌹 கல்பவிருக்ஷமா தென்னை மரமா?

பிரசாந்தி நிலையத்தில் குடியேறிய பிறகும், குடும்பராவ் தனது வீட்டில் விநாயகப் பெருமான்  உள்ளிட்ட சில தெய்வங்களின் ரூபங்களை தொடர்ந்து வழிபட்டு வந்தார். 1960ம் ஆண்டு பகவான் பாபாவால் அவருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட 'சோமசேகர லிங்கம்’ அதில் அடக்கம். அந்த தெய்வரூபங்களுக்கான அவருடைய தினசரி வழிபாடுகளைத் தவறாமல் சிரத்தையோடு செய்து வந்தார்.  அதேபோல ஒரு நாள் காலை அவர் தனது தினசரி வழிபாட்டின் பாதியில் இருந்தபோது சுவாமி, குடும்பராவை உடனடியாக வரும்படி சொல்லி அனுப்பினார். சுவாமியின் கட்டளையைக் கேட்டறிந்த குடும்பராவ், உடை கூட மாற்றாமல் மந்திருக்கு விரைந்தார். (பூஜைகளின் போது அணியும்) சம்பிரதாய உடையில் இருந்த குடும்பராவைப் பார்த்து சுவாமி, "பிராமணர்கள் வேடிக்கையான மனிதர்கள். கல்பவிருட்சம் உங்கள் எதிரில் இருந்தாலும்நீங்கள் தென்னை மரத்தை வணங்குகிறீர்கள்! சுவாமி நேரிலேயே இருக்கும்போதுசிலைகளை வழிபடுவது தேவையா?" என்றார். 

ஆனாலும் கருணாமூர்த்தியான பகவான், அவரை அருகில் அழைத்து தனது அங்கை அசைப்பில் வரவழைத்த ஒரு இனிப்புப் பண்டத்தை அளித்து  "உனக்காக இதோ விநாயகப் பிரசாதம்" என்று அதை குடும்ப ராவிடம் கொடுத்தார். குடும்பராவ் அன்று முதல் அனைத்து சடங்கு வழிபாடுகளையும் கைவிட்டார்!


🌹 ஆசிரமவாசம் ஆன்மீக உயர்மாற்றத்திற்கானது:

சுவாமி புட்டபர்த்தியிலிருந்து வெளியூர் செல்லும் சமயங்களில் குடும்பராவ் அவர்களுக்கு கடிதமனுப்புவார். 1977ம் ஆண்டு குரு பூர்ணிமாவுக்குச் சில நாட்களுக்கு முன்பு, சுவாமியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். அந்தக் கடிதத்தில் ஆசிரம வாசிகளுக்கான முக்கிய அறிவுரைகளாக  எழுதியிருந்ததன் சுருக்கம் பின்வருமாறு:


"கடவுளுக்காக தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் துறந்து ஆசிரமத்திற்கு வந்த ஆசிரமவாசிகள் இப்போது கடவுளைக் கைவிட்டு புதிய உறவுகளை வளர்த்துக் கொண்டால்அது ஆசிரம வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது. கடவுளின் பாதத்தில் தஞ்சம் அடைந்துஉலகத்தின் கவலைகளைத் துறந்து,  அமைதிபொறுமைபணிவு மற்றும் கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கோபம்பொறாமை மற்றும் அகங்காரத்தை விட்டுவிடவேண்டும். சுவாமியின் சமீபத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவ்வாறே அவர் இல்லாத நேரத்திலும் ஒருவர் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய சிறந்த நடத்தை மற்றும் உயர்மாற்றம் இருந்தால் மட்டுமேஅவர்கள் சாயியின் அருளைப் பெற முடியும்".

திரு. குடும்பராவ், மேற்கண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஒழுங்குமுறை விதிகளையும் உன்னிப்பாகப் பின்பற்றியதோடு, மற்றவர்களிட மும் கருணையுடன் செயலாற்றினார்.


🌹 கூழாங்கல் எரிந்து நீரோட்டம் காட்டிய லீலை:

1980ம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தில் கல்லூரி மற்றும் விடுதி கட்டப்பட்டபோது, நீர் விநியோகத்திற்கான கூடுதல் ஆதாரங்களைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் ஒரு ஆழ்துளை கிணற்றை சித்ராவதி நதிப்படுகையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக திருப்பதியில் இருந்து வந்த வல்லுநர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இடங்களைக் கண்டறிந்தனர். இதுகுறித்து சுவாமியிடம் தெரிவிக்கப்பட்டது, அன்றைய தரிசனம் முடிந்தபின் சுவாமி அந்த  இடத்தை பார்வையிட வந்தார்.  பின்னர் சுவாமி ஒரு கூழாங்கல்லை எடுத்து, அதை சிறிது தூரத்திற்கு எறிந்துவிட்டு, "இந்த கூழாங்கல் எங்கு விழுகிறதோ அங்கு துளையிடவும்!" என்றார். அதன்படி, அந்த இடத்தில் ஆழ்துளைக்  கிணறு போடப்பட்டபோது, அதிக அளவில் நல்ல குடிதண்ணீர் பொங்கிவந்தது. நீரோட்டம் கண்டறிய வந்திருந்த நிபுணர்கள் ஆச்சரியப்பட்டு,  தண்ணீரின் அளவு மற்றும் தரம் இரண்டும் தங்கள் கணிப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்  அப்பாற்பட்டு இருப்பதாக சான்றளித்தனர்!


🌹 செய்தி வரும் முன்பே இரங்கல் தந்தி:

1981ம் ஆண்டு ஒரு நாள் அதிகாலையில் பகவான் பாபா குடும்பராவை அழைத்து, தில்லியின் ஸ்ரீ சத்ய சாயி அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர் ஸ்ரீ சோகன்லால் காலமானார் என்றும், தந்தி மூலம் இரங்கல் செய்தி அனுப்புமாறும் கூறினார். அவரது மறைவு குறித்து டெல்லியில் இருந்து தொலைபேசி அல்லது தந்தி மூலம் எந்த செய்தியும் வராததால் குடும்பராவ் லேசாகத் தயங்கிக் குழப்பமடைந்தார். ஆனாலும் சிறிதும் தாமதிக்காமல் தெய்வீகக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து "இரங்கல் செய்தியை" தந்தி மூலம் அனுப்பிட ஏற்பாடு செய்தார். சுவாமியின் சொல்படி உடனே நடந்துகொண்ட அவருக்கு சிறிது நேரம் கழித்து, சோகன்லாலின் மறைவு பற்றிய முதல் தகவல் தொலைபேசி மூலம் சோகன்லாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைத்தது.



🌹 ஆத்மார்த்தமான உறவு!

குடும்பராவ் அவர்களுக்கு குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டிருந்தது. மருத்துவர்களின் சிகிச்சையில் அவர் இருந்தபோதும் கூட தனது கடமைகளை மனசாட்சியுடன் செய்து வந்தார். 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் நாள் காலை பத்து மணியளவில், த்ரயீ பிருந்தாவனத்தில் இருந்த சில பக்தர்களிடம் பகவான், "இன்று ஒரு நல்ல நாள்குடும்பராவ் உலகை விட்டு வெளியேற இது ஒரு நல்ல நாள்" என்று கூறினார். பதினோரு முப்பது மணிக்கு பிரசாந்தி நிலையத்திலிருந்து பிருந்தாவனத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, "குடும்பராவ் சில நிமிடங்களுக்கு முன்பு நிம்மதியாகக் காலமானார். தகனம் செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு சுவாமியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றவாறு. உடனே அந்தச் செய்தியை  பகவானிடம் தெரிவித்தனர். பகவான், "குடும்பராவ் இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரியும். மாலை ஐந்து மணிக்குள் தகனத்தை முடிக்கச் சொல்லுங்கள். நமது மாணவர்களும் கலந்து கொண்டு  வேதம் சொல்லியும்பஜனைகள் பாடியும் இறுதிச்சடங்கு நிகழட்டும்" என்றார். அன்று மாலை சித்ராவதி ஆற்றங்கரையில் குடும்பராவின் தகனம் நடந்தது.

பகவான் பாபா பிருந்தாவனத்திற்குப் புறப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பே ஒரு பராமரிப்புப் பொறியாளரை அழைத்து, ஒரு வேட்டியையும் சால்வையும் கொடுத்து, "குடும்பராவ் விரைவில் உலகை விட்டுப் போய்விடுவார். அவரின் இறுதிச் சடங்கின்போதுஇந்த ஆடைகளால் அவரது உடலை மூடவும்!. அவர் தனது இறுதிமூச்சை விடுவதற்கு முன்பு இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே!" என்று சொல்லியிருந்தார். பகவானுக்கும் அவர் தேர்ந்தெடுத்த பக்தனுக்கும் இடையே இருந்த ஆத்மார்த்தமான உறவு என்பது அதுதான்!

ஜெய் சாயிராம்

 

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக