தலைப்பு

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

விநாயகராக காட்சி அளித்த ஸ்ரீ சத்ய சாயி பரம்பொருள்!

ரமண மகரிஷியின் முக்கிய சீடர்களில் ஒருவரான அமிர்தானந்தரின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்... 

பகவான் ரமண மகரிஷியின் சீடராக இருந்த அமிர்தானந்த சுவாமிகள் சின்னஞ்சிறு வயதில் தினசரி செய்து வந்த கணபதி ஹோமத்தின் பிரதிபலனாக அவரின் 78 ஆவது வயதில் இறைவன் சத்ய சாயியை தரிசிக்கும் பெரும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.. அந்த தெய்வீக சந்தர்ப்பத்தில் இறைவன் சத்ய சாயி அவருக்கு சாட்சாத் விநாயகப் பெருமானாக காட்சி அளித்த அற்புத அனுபவம் இதோ...

பகவான் ரமண மகரிஷியிடம் நெடுங்காலமாக மிகவும் நெருக்கமாக இருந்தவர் சுவாமி அமிர்தானந்தர்.ரமண மகரிஷியின் மறைவுக்குப் பின்னர் அமிர்தானந்தரின் உள்ளுணர்வில் புட்டபர்த்திக்கு போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 

ஒரு வாரம் யோசித்த பின்னர் திருவண்ணாமலையிலிருந்து புட்டபர்த்திக்கு ஓர் இரவு வந்து சேர்ந்தார். அடுத்த நாள் காலை தரிசனத்தில் ரமணரை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தார் சுவாமி அமிர்தானந்தர். தரிசனம் கொடுக்க உள்ளே நுழைந்த பகவான் அவரை பார்த்தவுடன் புன்னகை முகத்துடன் அருகில் வந்து "அமிர்தம்" என அழைத்தார். சுவாமி அமிர்தானந்தர் ஆனந்த பரவசம் அடைந்தார்.  ரமண மகரிஷி மட்டுமே அவரை அவ்வாறு அழைப்பாராம். ரமண மகரிஷி மட்டுமே அழைத்த அந்தப் பெயரை பாபா உச்சரித்தபோது, "சொல்லும் குரலும், ஒலியும்,  பாணியும் அப்படியே ரமணர் அழைப்பது போலவே உள்ளது" என சிலாகித்துக் கொண்டார் சுவாமி அமிர்தானந்தர்.

பின்னர் பாபா அவரை அழைத்துக்கொண்டு நேர்காணல் அறைக்கு சென்றார். சுவாமி அமிர்தானந்தர்  திருவண்ணாமலை ஸ்கந்தாஸ்ரமத்தில் பகவான் ரமண மகரிஷி யோடு யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகையில் அவரை ஆஸ்துமா நோய் தாக்கியதும் பின் அதிலிருந்து அவர் மீண்டதையும் குறிப்பிடுகிறார். தவறான யோக பிரயோகத்தினால் தான் ஆஸ்துமா  அவரை தாக்கியது என்ற விஷயத்தை அவரிடம் தெரிவித்தாராம் சத்ய சாயிபாபா. இதில் அதிசயம் என்னவென்றால் இவருக்கு அந்த நோய் தாக்கிய சமயம் பாபாவின் ஜனனமே நிகழ்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தை அவரின் திருவாயால் சொல்ல கேட்டு ஆச்சரியப்படுகிறார் சுவாமி அமிர்தானந்தர்.


பாபா அவரிடம் அவர் சிறு வயதில் செய்த கணபதி ஹோமத்தை பற்றி விவரித்துவிட்டு "சிறுவயதில் அந்த ஹோமத்தை செய்ததால்தான் 78 ஆண்டுகளுக்கு பிறகு என்னை வந்து காணும் பாக்கியத்தை பெற்றீர்" என்று கூறியவுடன் சுவாமி அமிர்தானந்தர்  வியப்புடன் பாபாவை பார்க்க அவர் முகத்தில் பண்டைய நூல்களில் விவரித்துள்ளபடி தங்க நிற யானையின் உருவம் கொண்ட கணபதி உருவம்  தெரிய அவர் மெய்சிலிர்த்துப் போனார். பாபா கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று  கணபதி தரிசனம் கண்ட அந்த நொடியில் புரிந்து கொண்டார்.
இந்த தரிசனத்திற்குப் பிறகு நான்கு நாட்களுக்கு பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஒரு தனி அறையில் யாரிடமும் பேசாமல் உணவு, பானம், தூக்கம் ஆகியவற்றை மறந்து ஏதோ ஒரு ஆனந்த நிலையில் இருந்தார்.

ஆதாரம்: "Sathyam Shivam Sundaram”, Vol-I by Prof. N Kasturi. Published by Sri Sathya Sai Books and Publications Trust, Prasanthi Nilayam.

2 கருத்துகள்: