தலைப்பு

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாபாவின் சமாதியை முன்பே துல்லியமாக தெரிவித்த ஸ்ரீ சிவபால யோகி மகராஜ்!!

எவ்வாறு ஒரு மகான் பாபாவிடம் பக்தி பூண்டிருக்கிறார்... எவ்வாறு அவர் பாபாவிடம் நடந்து கொள்கிறார்... 2011 ல் பாபா சமாதி ஆவார் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பே எந்த சந்தர்ப்பத்தில் யாரிடம் பகிர்ந்து கொள்கிறார் ... மிக சுவாரஸ்யமான பதிலாக... பதிவாக இதோ...


அது 1993... வொயிட் ஃபீல்டில் இருக்கிறார் பாபா.. ஒரு பக்தையிடம் பேசுகிறபோது... தங்களை தரிசித்துவிட்டு டெல்லி செல்கிறேன் என்கிறார்... அங்கே எங்கு போகிறாய் ? என பாபா கேட்கிற போது... சிவயோகி மகராஜை தரிசிக்க போகிறேன் என அவர் சொல்கையில்... "ஏன் அவர் இத்தனை ஆண்டுகளாக  என்னை வந்து பார்க்க வரவில்லை? என கேள்! பாபா அழைக்கிறார் என்று சொல்!" என பாபா சொல்லியதை யோகியிடம் தெரிவிக்க... "ஓ பாபா எனக்காக காத்திருக்கிறாரா?" என பரவப்பட்டுக் கொண்டே பாபாவை தரிசிக்க விரைகிறார்!

யோகிக்காக தனியான ஆசனம்... ரமேஷ் ஹாலில் தரிசனம் முடித்து யோகியை ஒரு பங்களாவில் தங்கச் சொல்லி உத்தரவு... இப்படியே சில நாள் கடந்து போகிறது... "அடியார்கள் கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்...ஆனால் கடவுள் நமக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்.. இது சரியல்ல...ஆகவே நாம் கிளம்பி விடுவோம்!" என யோகி தன் உடன் வந்திருக்கும் தனது அடியார்களிடம் தெரிவிக்கிறார்! சில நிமிடங்களிலேயே.. பாபா மாணவர் ஒருவர் வர... எங்கும் போக வேண்டாம் எனவும் பாபா நாளை உங்களை கண்டு பேசுவார் எனவும் தகவல் சொல்கிறார்... அடுத்த நாள்...


சில வெளிநாட்டு பக்தர்களோடு பாபா சிவயோகியை சந்திக்கிறார்.. "பங்காரு‌.. உன்னை பார்க்க வேண்டும் என நினைத்தேன்... நீ ஏன் சுவாமியை காண இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டாய்?" எனக் கேட்க... "கடவுளே நீங்கள் அழைத்தீர்கள்... உடனே வந்து விட்டேன்!" என யோகி தெரிவிக்க... பாபாவும் யோகியும் பேசுவது ஸ்ரீகிருஷ்ணரும் சுதாமாவும் பேசுவது போல் காட்சியளிக்கிறது! 

"நீ ஏன் உத்திராட்சம் அணிகிறாய் பங்காரு... ஆரம்ப சாதகர்களுக்குத் தான் அது தேவை... உனக்கு அவசியமில்லை!" என்கிறார் பாபா..

"சுவாமி கொடுத்தால் கைக்கடிகாரம் அணிந்து கொள்கிறாயா?" என பாபா கேட்க..

"கடவுளே.. நான் எதையுமே அணிந்து கொள்வதில்லையே!" என யோகி பதிலுரைக்க...

"ஆமாம்.. காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான் கைக்கடிகாரம் அணிந்து கொள்ள வேண்டும்... காலாதீதர்கள் (காலத்திற்கு அப்பாற்பட்டவர்கள்) ஏன் அணிய வேண்டும்? சுவாமியும் அணியவில்லை பார்!" என பாபா தெரிவிக்க.. சிருஷ்டி கைக்கடிகாரத்தை ஒரு வெளிநாட்டு பக்தர்க்கு அளிக்கிறார் பாபா!


21 வருடங்கள் ஜபமாலையை உருட்டியதால் அவரின் கை தவ விரல்கள் மடங்கிப் போயிருக்கிறது.. "உனக்கு ஜபம் எல்லாம் தேவையில்லை.. ஏன் இன்னமும் அதனை செய்து கொண்டிருக்கிறாய்?" என பாபா கேட்டபடி யோகியின் கைவிரல்களை தடவிக் கொடுக்கிறார் பாபா! அது கங்கை பெருக்கெடுத்து காசியின் படித்துரையை நீவுவதைப் போல் அமைகிறது! காவி உடை அணிவாயா என ஊதா நிறவுடை அணியும் யோகியை பாபா கேட்க.. கடவுள் உங்களுக்கு எது விருப்பமோ அதை அணிகிறேன் என்கிறார்... பாபா காவி உடையும் காவி டர்பனும் அளிக்கிறார்... "நாம் கடவுளின் உபசாரத்தை பெற்று பேரானந்தம் அடைந்தோம்!" என யோகி தான் தங்க வைக்கப்பட்ட ஆசிரம பங்களாவில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...பாபா உங்களை தன்னோடு பர்த்திக்கு அழைக்கிறார் என ஒரு மாணவர் அறிவிக்க.. காரில் பயணமாகிறார் யோகி! பர்த்தியில் சிறப்பு விருந்தினராக 2 வாரம் தங்குகிறார்! பாபாவே தவ விரல்களை நீவிவிடுகிறார் எனில் யார் அந்த சிவபாலயோகி...


ஜனவரி 24 1935 ஆம் ஆண்டு பூவுலகில் பிறந்தவர் யோகி.. இயற்பெயர் சத்யராஜு.. பாபா பெயரோ சத்யநாராயண ராஜு ... எத்தனை பொருத்தம்! இறைவன் சிவன் யோகியின் 14 ஆவது வயதில் தோன்றி புருவ மத்தியை தொட்டு சமாதி நிலைக்கு ஆழ்த்துகிறார்... அப்படியே தியான சமாதியை பெறுகிறார் யோகி... தினசரி 23 மணிநேரம் இப்படியே 8 ஆண்டுகள்...பிறகு தினசரி 12 மணிநேரம் இப்படியே 4 ஆண்டுகள்! இந்த நிலையை பார்த்த சில விஷமிகள் கெரோசின் நெருப்பூற்றி யோகி மேல் வீசியும் எறிகின்றனர்... ஒரு கோப்ரா பாம்பும் கொத்துகிறது.. எந்த உடல் உணர்வும் இல்லை யோகிக்கு.. பகவான் ஸ்ரீ ரமணரை போல தியான சமாதியில் லயித்துப் போகிறார்...காயகல்ப பயிற்சி செய்யும் இன்னொரு யோகி இவரை காப்பாற்றுகையில்... 185 ஆண்டுகள் வாழ்ந்த தனது குருவான ஸ்ரீ தபஸ்வி மகராஜே இந்த பாலயோகியாக பிறந்திருக்கிறார் என உணர்ந்து கொள்கிறார்! 12 ஆண்டுகால தவத்திற்கு பிறகு 1963 ல் பாரதம் சுற்றுகிறார்... 1987ல் வெளிநாடுகளும் செல்கிறார்!


ஒருமுறை டெல்லி சர்வ ஜோதி அரோரா என்பவருக்கு பாபா கனவில் சென்று "3 ஆவது மார்ச் நீ ஒரு பெரியவரை உன் இல்லத்திற்கு அழைத்து உணவருந்தச் செய்ய வேண்டும்!" என உத்தரவு இடுகிறார்.. அது 2003...! டெல்லியில் யோகி தரிசனம் தருவதை அறிந்து அவரை அழைக்க.. உணவு பரிமாற... இப்படியே யோகிக்கு மிகவும் நெருங்குகிறார் அரோரா.. யோகிக்கு பலமுறை உணவு பரிமாறி இருக்கிறார் அரோரா...பாபா ஏற்படுத்திய ஆன்ம பந்தம் அது! 


அதே 2003 ஆம் ஆண்டு.. பாபாவிற்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு சக்கர நாற்காலியில் தரிசனம் தருவதை கேள்விப்பட்டு.. யோகியை சந்தித்து அதைக் கூறி அழுகிறார்... யோகியோ நிதானமாக "இதோ பார்! நான் ஒரு விஷயம் சொல்கிறேன்.. கேள்! பகவான் பாபா வாமன அவதாரம் எடுத்திருக்கிறார்... ஏன் இந்த சிறு வடிவம் என மக்கள் கேட்கிறார்கள்... ஆனால் இந்த உலகத்தையே தனது சின்னஞ்சிறிய ஈரடியால் தான் பாபா அளக்கிறார்! அவரால் நூறு காயங்களிலிருந்து உடனே எழுந்து விட முடியும்.. !" என்று சொல்லி இப்படி அறியாமையில் உழன்று வருத்தப்பட வேண்டாம் என்கிறார்!

யோகியின் அடியார் அவரை தான் கல்கி அவதாரம் என கருதிக் கொண்டிருந்த போது.. யோகியோ "நான் கல்கி அவதாரம் இல்லை.. கல்கி அவதாரப் பணிக்கு உதவ வந்தவன்!" என்கிறார்... பிறகு யார் கல்கி அவதாரம் ? எனும் கேள்வி எழ... "அதற்கு ஸ்ரீ சத்ய சாயி பாபா என்ன சொன்னார் தெரியுமா?" "நான் இருக்கையில் சிறு சிறு அவதாரங்கள் எதற்கு ?" என பாபா சொன்னதை யோகி தெரிவித்து...

"பகவான் பாபாவே கல்கி அவதாரம்.. உண்மையை சொல்ல வேண்டுமானால்... அவர் அதற்கும் அப்பாற்பட்ட பூர்ணாவதாரம்!" என்கிறார் யோகி...

ஒருமுறை அரோராவிடம் யோகி.. "இதுவரை செய்யாத லீலைகளை பாபா இப்போது செய்து கொண்டிருக்கிறார்... அதனால் உலகமே துக்கம் அடையும்... ஆம்...பாபா சமாதி அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே நான் சமாதி அடைந்து விடுவேன்!" என யோகி தெள்ளத்தெளிவாகச் சொல்கிறார்... பாபா 95 வயதாக தனது அவதாரத்தை சொல்லி இருக்கிறாரே... அப்போது 2021 ல் தான் சமாதி அடைவார் என அரோரா நினைக்க...


ஒருமுறை டெல்லி அரோராவிடம் பர்த்திக்கு தான் உடனே செல்ல இருப்பதாக தெரிவித்து யோகி கிளம்புகிறார்... வெளியே அறை எடுத்து 1 வருடம் தங்குகிறார்... அவர் தங்கியதில் 2 முறை தான் பாபாவை தரிசனம் செய்கிறார்! பிறகு அரோராவுக்கு அழைப்பு விடுக்கிறார் யோகி... யோகியின் தவ தேகம் தணல் தேகமாகி.. காய்ச்சல் எடுத்து தனது ஜீவனை பாபாவோடு ஐக்கியப்படுத்திவிடுகிறது... யோகியின் எலும்புகளில் சில சங்கு வடிவம் பெற்றிருக்கின்றன...! அவருடைய சமாதி ஆந்திராதேசத்திலேயே இருக்கிறது.. அவரின் ஆசிரமம் இந்தியா மற்றும் வெளிநாட்டிலும் இருக்கிறது! அதற்கு பிறகு தான் பாபா சமாதி ஆகிறார்...! இறைவனுக்கென்ன ஜனனமும் மரணமும்...?! பாபா சமாதி என்ற பெயரில் லீலைகள் நடத்தி பொதுதரிசனத்தை நிறுத்திக் கொண்டு.. தனது அடுத்த அவதார பிரேம புறப்பாட்டிற்கான ஆயத்தப் பணிகளை ஆரம்பிக்கிறார்!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 193) / Author : Jantyala Suman babu / Eng.Translation : pidatala Gopi Krishna) 


முதலில் யோக்கியனாக வாழ வேண்டும்... அதுவே மனிதன் யோகியாக வாழ்வதற்கான முதல்படி நிலை.. தியாக வாழ்வே யோக வாழ்வு... உண்மையில் மனிதன் எதையும் தியாகம் செய்ய வேண்டியதில்லை.. காரணம் ஒரு தூசி துரும்பு கூட பூமியில் மனிதனுக்கு சொந்தமில்லை... சொந்தமில்லாத பொருளை எப்படி மனிதனால் தியாகம் செய்ய இயலும்? இதை உணர்ந்தாலே போதுமானது... அகத்துறவு தானாக எழ ஆரம்பிக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக