தலைப்பு

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

சுவாமி ஸ்ரீ ஆத்மானந்தா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

தனது குரு உத்தரவு தந்த பிறகே எவ்வாறு ஒரு தூய துறவி பாபாவை பற்றி அகம் திறக்கிறார் என்பதையும்... பாபா யார்? எனும் பிரபஞ்ச ரகசியத்தை எந்த இடத்தில்? யார் சென்று கேட்க? எவ்வாறு அதனை வெளிப்படுத்தினார்? என்பது சுவாரஸ்யமாக இதோ...


சத்யசேதனா சர்வதேச ஆன்மீக இயக்கத்தின் துவக்குநர் சுவாமி ஸ்ரீ ஆத்மானந்தா... அவர் ஜுன் 18 -1951 ஆம் ஆண்டு ஒரிஸ்ஸாவில் பிறக்கிறார்... சின்னஞ்சிறிய வயதிலிருந்து ஆன்மீக தேடலில் ஈர்க்கப்படுகிறார்... ஸ்ரீமத்பகவத் கீதையே அவரது உற்ற தோழன்... கீதை ஞானத்தை கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்.. கீதையை வாசிப்பது என்பது உணவு பட்டியலை வாசிப்பது போல்.. கீதையின் அர்த்தங்களை உணர்வது என்பது பெயர்ப்பட்டியலில் வாசித்த உணவை சாப்பிடுவது போல்‌... கீதை வழி நடப்பது என்பதே சாப்பிட்ட உணவு ஆரோக்கியமாவது போல்... ஆக வாசிப்பதல்ல அது சொல்லியவழி கடைபிடிப்பதே ஆன்ம ஆரோக்கியம்!


அப்படி கடைபிடித்தபடி ஆத்மானந்தா பல மகான்களின் காலடியில் சேவையாற்றுகிறார்... அதில் மகரிஷி மகேஷ் யோகியும் ஒருவர்.. ஆழ்நிலை தியானத்தை வெளிநாடுகளில் பரப்பிய மகரிஷிகளின் அணுக்கத்தையும் அவரடி சேவையையும் பெறுகிறார் ஆத்மானந்தா! பாரதம் முழுதும் தனது ஆன்ம தேடல் எனும் பாதங்களால் அளக்கிறார்... இறைவனுக்கு மூன்றடி தேவைப்பட்டது...ஆன்ம ஞானம் அடைய துறவிகளுக்கு முந்நூறு அடிகளும் மனிதர்களுக்கு மூவாயிரம் அடிகளும் தேவைப்படுகிறது!

அம்பாஜி(குஜராத்), பிர்பும், குருஷேத்ரா, மவுன்ட் அபு, அஸ்ஸாம், ஹரித்வார், உத்தர் காசி, கங்கோத்ரி, கோமுக், சிக்கிம் போன்ற இடங்களில் தியானம் செய்கிறார்... அவரின் ஆன்ம தாகம் புதுவையில் அதிகமாகிறது... புதுவை ஸ்ரீ அன்னையிடம் சரணடைகிறார்... சாதனையின் உச்சத்தை 1993 ஆம் ஆண்டு எய்துகிறார்... சில நாள் தனை மறந்த நிர்விகல்ப சமாதியில் இருந்துவிட்டு "அஹம் பிரம்மாஸ்மி" யை வெளிஉலகத்திற்கு திருச்செய்தியாக சுமந்து வருகிறார்! 


ஆத்மானந்தாவின் பிரதான ஆசிரமம் திருவண்ணாமலை அடிவாரத்தில் அமைகிறது! பாரதம் முழுவதும் கீதா யோகத்தை பரப்ப எத்தனிக்கிறார்... ஸ்ரீ சத்ய சாயியும் யோகிகளும் என்ற தெலுங்கு புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் சுவாமி ஆத்மானந்தாவை ஒருமுறை தரிசிக்கிறார்... அப்போது...

அவருடன் இரு சாயி பக்தரும் இருக்கிறார்கள்... பாபாவுடனான உங்களுடைய அனுபவத்தை தெரிவியுங்கள் என்று கேட்ட போது... முதலில் மௌனமாகிறார்... தன்னுடைய குருவின் உத்தரவு வேண்டும் என்கிறார்.. அவருடைய குரு கிழக்கு வங்காளத்தை சார்ந்த தாகூர் பரமஹம்ச ஸ்ரீ நிகமானந்தா! 


சுவாமிஜி ஸ்ரீ ஆத்மானந்தா அவர்களின் குரு பரமஹம்ச ஸ்ரீ நிகமானந்தா

சில நிமிடம் கடந்து.. மொழிபெயர்ப்பாளரை சுவாமிகள் உற்று நோக்கி "குருவின் அனுமதி கிடைத்துவிட்டது!" என தெரிவிக்கையில்.. மீண்டும் பாபா அனுபவம் கேட்கிறார் மொழிபெயர்ப்பாளர்... உடனே ஆத்மானந்தா "அவரே உச்சபட்சமான ஆன்மீக ஆசான்..(Supreme Master)" என்று பாபாவை பற்றி தெரிவித்துக் கொண்டு.. தன்னுடைய சில தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தபடி அதனை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்! தான் இரண்டு ஆண்டுகள் (1983 - 86) பாபாவின் தெய்வீக பேரிருப்பு அருகில் (புட்டபர்த்தி, பிருந்தாவனம்) இருந்தமையைப் பற்றியும் ஆனந்தமாகப் பகிர்கிறார்...


ஒருமுறை நவம்பர் 15- 2013 மதியம் 2 மணிக்கு ஆத்மானந்தா மொழிபெயர்ப்பாளரோடு பேசுகிற போது... "பகவான் பாபா இறைவனின் வடிவமே! ஸ்ரீ ராமர் , ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற எந்த அவதாரத்தோடும் சாயி அவதாரத்தை ஒப்புமைபடுத்த முடியாது! தனித்துவ அவதாரம் ஸ்ரீ சாயி அவதாரம்... பிற அவதாரங்களை போல் சாதனை ஏதுமே தேவைப்படாமல் பிறந்தது முதலே சக்தியோடு திகழ்வது சாயி அவதாரம்... பிரபஞ்ச பிரேமையை உலகத்தில் பரப்பிடவும்... துயரமடைந்த மனித இனத்தையே ஆரோக்கியத்தால் ஆன்ம ஞானக் கல்வியால் உயர்த்துவதுமே சாயி அவதாரத்தினுடைய இரண்டு கண்ணான பிரபஞ்சக் கோட்பாடுகள்..." என விவரித்து... "சத்தியத்தின் பிரேமையின் முழுமுதற் வடிவமே பாபா !" என தீர்க்கமாகப் பேசுகிறார் சுவாமி ஆத்மானந்தா!


Proof : Sri SathyaSai and Yogis / Page no: 201) / Author : Jantyala Suman babu / Eng.Translation : Pidatala Gopi Krishna | Source : Personal interview with the book translator P.Gopi Krishna)


பூமிக்கு வெளியே என்ன இருக்கிறது? என்பதைக் காண நாம் தேராக இருந்தால் போதுமானது.. ஆனால் பூமியின் உள்ளே என்ன இருக்கிறது? என்பதைக் காண நாம் வேராக இருக்க வேண்டியிருக்கிறது! அது போலவே இறைவன் பாபாவை உணர்வதற்கு நாம் நமக்குள்ளே பயணப்பட வேண்டும்... பாபாவை நோக்கி பயணிப்பதற்கான ஒரே குறுக்குவழி நமக்குள்ளே பயணிப்பதே... அது ஒன்றே சுலபமாக பாபாவை அடையச் செய்துவிடுகிறது! வெண்ணெயை நெருப்பிட்டாலே நெய்யாகிறது.. நெருப்பிடாமல் திறந்து வைத்தால் கெட்டுவிடுகிறது... அது போலவே உள்ளம்... தியானமே அத்தகைய நெருப்பு...! தியானமும் சேவையுமே இரு சிறகுகள்...! ஆழமான தியானமே தன்னலமிலா சேவைக்கு வித்திடுகிறது... எதையும் எதிர்ப்பார்க்காத அகந்தையற்ற பணிவான சேவை மட்டுமே ஆன்மாவை நோக்கியே தியான சூழ்நிலைக்கு அழைத்துச் செல்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக