தலைப்பு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ தாகூர் அபிராம் பரமஹம்சா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரிசாவில் உலவிய மகான் எவ்வாறு தனது பக்தரை பாபாவிடம் தனது சமாதிக்கு பிறகு ஆற்றுப்படுத்துகிறார் என்பதும்... குருவே இறைவனிடம் வழிகாட்டுகிறார் எனும் சத்தியமும் சுவாரஸ்யப் பகிர்வாக இதோ...


ஒரிசா நரகர்பூர் ஆசிரமத்தின் தலைவராக இருப்பவர் ஸ்ரீ தாகூர் அபிராம் பரமஹம்சா... பாராளுமன்ற உறுப்பினரான பிரம்மானந்த பாண்டா (அப்போது அவர் வெறும் பத்திரிகை ஆசிரியரும் அரசியல்வாதியுமே) தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு நிலைகுலைந்து போகிறார்... அவரின் இதயப்பறவை ஆறுதலுக்காக ஆன்மீகக் கிளையைத் தேடுகிறது.. ஆன்மீகமே இதுவரை மட்டுமல்லாது இனிமேலுமான மனித இனத்தின் ஒரே ஆறுதலாக ஆனந்தமாகத் திகழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை! அலைகளில் எப்படி குருவிகள் அமர முடியும்...? அதற்கு கிளைகளே தேவை! அவ்வாறே நரகர்பூர் ஆசிரமத்திற்கு பாண்டா வருகிறார்... ஒரு படகுப் பயணம் அது...‌ கரையை அடைந்த உடனேயே ஒருவர் அவரை வரவேற்கக் காத்திருக்கிறார்! "நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள்... வாருங்கள் ... குளித்துவிட்டு உணவு அருந்துங்கள்!" என்கிறார் அவர்..‌பாண்டாவுக்கு ஆச்சர்யம் "நான் தாமதமாக வந்தேனா...? இப்போது தான் நான் முதன்முறையாக வருகிறேன் ! " என்கிறார்! அது 27 ஜுலை 1957. பெரும்பாலும் இப்படித்தான் ஆசிரமத்திற்கு வரவழைக்க தந்திரமாக பேசுவார்கள் என நினைக்கும் பாண்டாவிடம்... "நீங்கள் தானே பிரம்மானந்த் பாண்டா... பிரபதி பத்திரிகையின் ஆசிரியர்... தாகூர் பரமஹம்சர் நீங்கள் மதியம் 1.30 க்கு வருவதாகச் சொன்னார்... உங்களை பிரசாதம் எடுத்துக் கொள்வதற்கு என்னை அனுப்பினார்... இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார்... மாலையில் நீங்கள் சென்று தரிசிக்கலாம்!" என்கிறார்! பாண்டாவுக்கோ பேராச்சர்யம்... தான் வருவதே யாருக்கும் தெரியாத போது எப்படி பரமஹம்சருக்கு தெரிந்தது என... அவரின் மகிமை உணர்கிறார்! 


மாலை வராண்டாவில் பரமஹம்சர் அமர்ந்திருக்கிறார்... கூட ஒரு இளம் சன்னியாசியோடு பாண்டா தரிசிக்கிறார்! பரமஹம்சரின் உடல் முழுதும் சந்தனம்...கழுத்தில் மலர்ச்சரம் நெக்லஸ் போல... சந்தனமோ தானே வாசனை எனவும்... மலர்களோ தாமே வாசனை எனவும் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு அந்த மகானின் கழுத்தில் மணக்கிறது... தாடையில் வழிந்தும் வழியாததுமாக வெண்ணருவியாக தாடி தவழ்கிறது...! ஒரு வெள்ளை வேட்டியும் டவலும் உடுத்திக் கொண்டிருக்கிறார்...ஒருவித அமைதியையும் மரியாதையையும் அவர் சன்னதி முன் அனுபவிக்கிறார் பாண்டா! 


"நீங்கள் கட்சி மாற இருப்பதாக உணர்கிறேன்... நீங்கள் எங்கே சென்றாலும் உங்களுக்கு நன்மையே!" என்கிறார் பரமஹம்சர்... அவர் சொன்னதைப் போலவே வருங்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறுகிறார் பாண்டா! 1957 முதல் 1963 வரை ஒரு ஆன்மீக பந்தத்தில் பரமஹம்சர் இருக்கும் பாக்கியம் பெறுகிறார் பாண்டா! 

ஒருமுறை பரமஹம்சர் உடல் நோய்வாய்ப்படுகிறது! அதைக்கேள்விப்பட்டு பாண்டா வேதனையுற்று ஆசிரமம் விரைகிறார்! பாண்டாவை பார்த்தவுடன் பரமஹம்சர் அருகே அழைக்கிறார்... 

பாண்டா குருவே என மனக்குரல் கதறியபடி அழுகிறார்... "உங்களிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை... நீங்கள் விரைவில் உடல்நலம் பெற்று எழ வேண்டும்.. அடிக்கடி உங்களை வந்து நான் தொழ வேண்டும்!" என்கிறார் பாண்டா.. அவர் விழி நீர் பரமஹம்சரின் காலடியில் விழுகிறது! "இந்த உடலோ வயோதிகம் அடைந்துவிட்டது இனி மேல் இதனால் பயன் இல்லை... நீங்கள் விரைவில் ஒரு பேரற்புத பேரழகு வடிவத்துடன் தொடர்பில் இருப்பீர்கள்!" என்கிறார்! பிறகு 27 1963 அன்று சமாதி அடைகிறார் பரமஹம்சர்!

அது என்ன அப்படி ஒரு பேரழகு வடிவம்? என யோசிக்கிறார்... புரியவில்லை...! 2 வருடம் கடக்கிறது...பம்பாய் வார இதழில் பாபாவின் செய்தி ஒன்றை வாசிக்கிறார்... அதில் பாபாவின் தெய்வத்திருவுருவம் தரிசித்த உடனேயே தனது குரு சொன்ன மொழிகள் நெஞ்சம் நிறைக்கிறது... நினைவில் குதிக்கிறது... பாபாவை எப்படியாவது தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மலர்கிறது! ஒருநாள் நண்பர் ஒருவரால் சத்தியம் சிவம் சுந்தரம் நூலை வாசிக்கிறார்... அந்தத் திருநூலை தான் ஒரியாவில் மொழிபெயர்க்க வேண்டும் என சேவைத் திலகம் கஸ்தூரிக்கு கடிதம் எழுதுகிறார்... அவரோ தாங்கள் பர்த்திக்கு  பாபாவின் அனுகிரகம் பெற வாருங்கள் என அழைக்கிறார்... திலகம் அழைக்க ஒரியா உலகம் அசைந்து போகிறது! ஃபெப்ரவரி 21 1966  பர்த்தியில் பாபாவின் முதல் தரிசனம் பாண்டாவுக்கு... பாபா தனது தெய்வத்திருக் கரங்களால் விபூதியை அளித்து வருகிறார்... பாண்டா ஆனந்தத்தின் எல்லையையே அடைகிறார்...!  27 அன்று புக்கபட்டிணத்தில் பாபா உரையாற்றுகிறார்... அங்கேயும் பாண்டா சென்று தெய்வத்திருவுரையையும் பஜனைகளையும் பருகி ஆன்ம தாகம் தணிக்கிறார்! பாபா ஓய்வெடுத்த போது அவர் அறைக்கு உள்ளேயே சென்று காலடியில் விழுகிறார் பாண்டா! கண்ணில் நீர்... "சுவாமி நான் பெர்ஹம்பூரில் இருந்து வருகிறேன்!" என்கிறார் பாண்டா! "பெர்ஹம்பூர் ஒரிஸ்ஸா எல்லை?" என்கிறார் பாபா.. "ஆம் பாபா!" இது பாண்டா... "நீ புட்டபர்த்திக்கு வா அங்கே பேசலாம்!" என பாபா அறிவிக்க... "சுவாமி நான் ஒருவாரம் அங்கே உங்கள் தரிசனத்தையும் பிரசாதத்தையும் பெற்றேன்!" என்கிறார்... "இவரை அங்கேயே என்னுடன் பேச ஏன் அழைத்துவரவில்லை ?" என சொல்லியபடி பாபா சேவைத்திலகம் கஸ்தூரியையும் ராஜாரெட்டியையும் பார்க்கிறார்... இருவரும் தங்களுக்கு தெரியாது என சைகை காட்டி ஆச்சர்யப்படுகிறார்கள்... சுவாமி தான் வெறும் சாதாரண ஆள்.. என்னை எப்படி அவர்கள் அந்தக் கூட்டத்தில் அடையாளம் கண்டிருக்க முடியும்? என பாண்டா மனதில் நினைப்பதற்கும் பாபா எழுவதற்கும் சரியாக இருக்கிறது! 


"சுவாமி நான் சத்தியம் சிவம் சுந்தரம்..." எனச் சொல்ல வருவதற்கு முன்பே.. "எனக்கு தெரியும் நீ அதைச் செய்வாய்!" என மொழிபெயர்க்க அனுமதியும் தந்துவிடுகிறார்! வால்மீகியுடையதை கம்பர் மொழி பெயர்த்தது அந்த யுகம்... வால்மீகியே கம்பரை அழைத்து ஸ்ரீராம தரிசனம் பெற வைத்து ஸ்ரீராமரே எழுது எனச் சொல்கிற அற்புதங்கள் இந்த கலியுகத்தில் மட்டுமே சாத்தியம்! அது நிகழ்ந்தும் விடுகிறது! தனது குருவான பரமஹம்சர் அன்று சொன்ன பேரற்புத பேரழகு வடிவம் பாபாவே... குருவருளே திருவருளிடம் சேர்த்திருக்கிறது என பரிபூரணமாக உணர்கிறார்!

பிரம்மானந்த பாண்டா சுவாமியுடன்... 

பாண்டா ராஜ்யசபா உறுப்பினராக ஆனதும் பாபா சங்கல்பமே... மேலும் பெர்ஹம்பூர் சமிதிக்கு தலைவராகவும் பிறகு ஒரிஸ்ஸா மாநில சமிதிக்கு தலைவராகவும் பாபா உயர்த்துகிறார்! "ரஸோ வைசஹா" (கடவுள் பேரானந்த வடிவே) என ஒரு புத்தகமும் எழுதுகிறார் பாபா! ஒருமுறை பாண்டாவின் குரு தாகூர் அபிராம் பரமஹம்சர் "மகனே நீ உன் மகனுக்கு வரன் தேடுகிறாயா?" எனக் கேட்கிறார்... "குருநாதா.. அவன் இன்னும் கல்லூரி முடிக்கவில்லை... அதற்குப் பிறகு தான்!" என்கிறார்.. பரமஹம்சர் இன்ன தேதியில் உன் மகனுக்கு திருமணம் செய்! என பாண்டாவுக்கு தேதி குறித்து பிறகு சமாதி ஆகிறார்... பிறகு அவர் பாபாவும் பாபாவை சார்ந்துமாக வாழ்க்கை மாறிவிடுகிறது... பாண்டா மறந்தே போகிறார்... ஆனால் பாபா எப்படி மறப்பார்..? அவர் குரு குறித்த அதே தேதியில் பாபா பாண்டாவின் மகனுக்கு தன் தெய்வத்திரு முன்னிலையில் திருமணம் புரிந்து வைக்கிறார்! குருவருள் நிர்ணயித்து திருவருள் நிகழ்த்திய அந்த நன்னாள் 28 ஜுன் 1973 என்பது குறிப்பிடத்தக்கது!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 59 / Author : Jantyala Suman babu / Eng Translation : Pidatala Gopi Krishna ) 


தாய் தந்தையை காட்டுகிறார்... தந்தை குருவை காட்டுகிறார்... குரு இறைவனை காட்டுகிறார் என்பது பாரதீய ஆன்மீக மரபு... அவதாரங்கள் கலியில் மும்முறை தான் நிகழ்ந்திருக்கிறது...‌ஆனால் அதற்கு முன்பும் பின்பும் அவதாரங்கள் தங்களின் கருவிகளான மகான்களை மண்ணுலகில் அனுப்பி மனித இனத்தை அறவழியில் ஆற்றுப்படுத்துகிறார்கள்! தாய் முக்கியமா மனைவி முக்கியமா எனக் கேட்பது போல் இறைவன் முக்கியமா? குரு முக்கியமா? எனும் கேள்வி...! இருவருமே எப்படி இரு கண்களோ...‌அப்படியே இறைவனும் குருமகான்களும்...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக