தலைப்பு

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

"ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்" திரைப்படமாக விரைவில்...

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை பற்றி இரண்டு பாகங்களாக  உருவாக இருக்கும் பிரம்மாண்டமான  திரைப்படமும்... அதைச் சார்ந்த மிக பிரம்மிப்பூட்டும் வியப்புமிகு செய்திகளும்...


இறைவனின் கலியுக முதல் அவதாரமான ஸ்ரீ ஷிர்டி சாயியின் திவ்ய சரிதத்தை ஹிந்தியில் முதன்முதலாக திரைப்படமாக உருவாக்கச் சொன்னதே ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் தான்! அதனை ஸ்ரீசத்ய சாயி பாபாவின் பக்தரும் சாயி நிறுவனத்தின் முதல் அகில இந்தியத் தலைவருமான இந்துலால்ஷா அவர்களே தயாரிக்கிறார் (சரளா சேரிட்டிஸ் டிரஸ்ட் எனும் அவரது மனைவி பெயரில்)... 

ஸ்ரீ இந்துலால் ஷா & ஸ்ரீமதி. சரளா ஷா தன் தெய்வத்துடன்... 

இதற்கு முக்கிய நடிகர் தேர்வு முதல் பாடகர் தேர்வு வரை எல்லாமே பாபாவின் நூதனத் தேர்வே... "ஷிர்டி கே சாயிபாபா"(Shirdi Ke Sai Baba) என 1977'ல் ஹிந்தியில் திரைப்படமாக வெளியாகி பிரம்மாண்டமாக வெற்றி பெறுகிறது! 

Shirdi Ke Sai Baba(1977)  Full movie 

இந்த பாலிவுட் திரைப்படமே முதன்முதலில் ஷிர்டி பாபாவின் மகிமையை பாமர மக்கள் வரை கொண்டு போய் சேர்க்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் யூட்யூபில் இன்று கோடிக்கணக்கான Viewsகளை அள்ளிக் குவித்திருக்கிறது.  இத்திரைப்படத்தில் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் தன்னைப் பற்றிய முக்கியத்துவமே செய்து கொள்ளாமல்... திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்ரீ ஷிர்டி சாயியை மட்டுமே பிரதானப் படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது!

Bhagavan Sri Saibaba(1989) Full Movie

இதனைத் தொடர்ந்து 1989'ல் பிரபல இயக்குநர் ஓம் சாயி பிரகாஷ் அவர்களின் தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படமான பகவான் ஸ்ரீ சாயிபாபா எனும் தெய்வீகக் காவியமும் பெரிய பிரபலம் அடைந்து ஷிர்டி பாபா புகழைப் பரப்பியது! 

ஆம் அதே இயக்குநர் ஓம் சாயி பிரகாஷ் இயக்கத்தில் இப்போது தெலுங்கு மற்றும் கன்னடத்தில் "ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்" என்கிற திரைப்படம் வெள்ளித் திரையில் வெகுவிரைவில் பாபாவின் சங்கல்பத்தோடு வெற்றிநடை போட வருகிறது.. திரைப்படம் எனும் பிரம்மாண்ட ஊடகம் வழியாகவும் இன்னமும் பல லட்சக்கணக்கான பேர்கள் பாபாவை இறைவன் எனும் சத்திய அனுபவத்தை உணர்வதற்கான பெரியதொரு வாசல் திறக்கவிருக்கிறது!


இயக்குநர் ஓம் சாய்பிரகாஷ்

இது இயக்குநர் ஓம் சாயி பிரகாஷ் அவர்களின் 100 ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது... 

ஏற்கனவே அம்மன், அருந்ததி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா அவர்களும் சத்யசாயி பாபாவின் திவ்ய சரிதத்தை திரைப்படமாக உருவாக்கி இருப்பதும் நாம் அறிந்ததே... எல்லாம் மிகச்சரியான நேரத்தில் பாபாவின் சங்கல்பம் வெளியிடும் என்பதையும் நம்மால் உணர முடிகிறது... பிரேம காலம் கனிந்து கொண்டிருக்க பிரம்மாண்ட திரையில் பாபா சரிதத்தை அகில உலகமே பார்த்து வியக்கும் காலமும் கனிந்து கொண்டிருக்கிறது! 


"ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்" என்கிற திரைப்படத்தை டாக்டர் தாமோதர் தயாரிக்கிறார்... இது இரண்டு பாகங்களாக வெளியாகிறது... 1926 முதல் 1949 வரை பால காண்டமாகவும்... பிறகானது (1950 - 2011) மகிமா காண்டமாகவும் வெளியாக இருக்கிறது... இதற்காக கடந்த திங்கட்கிழமை (22/08/2022) ஏகாதசி நன்னாளில் இதன் தயாரிப்புச் சின்னம் ஹைதராபாத் பிரசாத் லேபில் அறிமுகப்படுத்தப்பட்டது! இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற விஜயதசமி (தசரா - அக்டோபர் 5/ 2022) அன்று துவங்கப்பட உள்ளது! பாபாவின் அவதாரத்திருநாளான நவம்பர் 23/2023 'ல் இதன் முதல் பாகம் வெளியாக இருக்கிறது! 

நடிகர் சாயிகுமாரோடு இணைந்து இதுவரை 12 திரைப்படம் செய்திருப்பதாகவும் இதன் இயக்குநர் தெரிவித்தார்.. பாபாவின் சரிதத் திரைப்படத்தில் நடிகர்கள்  சுமன் சி மோகன், முரளி மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது...

பாபாவின் மேல் தனக்கு அளவில்லா பக்தி இருப்பதாகவும்... பாபாவை பற்றி தன் தந்தையிடம் நிறைய பேசி இருப்பதாகவும்... பாபாவின் சர்வதர்ம சேவையை வியப்பதாகவும்.. 1986ல் தந்தை காலமானபிறகு.. ரெட்டி என்கிற தனது பெயரோடு இணைந்திருந்ததை நீக்கிவிட்டு சாயி என்று சேர்த்து கொண்டதாகவும் 100 படங்கள் இயக்கிய ஓம் சாயி பிரகாஷ் பரவசமாய் தெரிவித்தார்! "பகவான் ஸ்ரீ சாயிபாபா" என்கிற திரைப்படம் 108 நாள் ஓடி பாபாவும் கண்டு களித்து ஆசி வழங்கிய ஓம் சாயி பிரகாஷ் இயக்கிய பெரும் வெற்றித் திரைப்படமாகும்!

Title Logo Launch of Sai Prakash's 100th Film Sri Satya Sai Avatharam | NTV ENT

தயாரிப்பாளரான டாக்டர் தாமோதர் தெரிவித்ததாவது "நான் ஒரு மருத்துவனாக சுவாமி சேவையில் ஈடுபட்டு வருகிறேன்... ஒருமுறை புட்டபர்த்தியில் சுவாமி பிறந்தநாளுக்கு வந்திருந்த ஓம் சாயி பிரகாஷ் என்னிடம் நான் சுவாமியை பற்றி திரைப்படம் ஒன்று எடுக்க இருக்கிறேன் என அறிவித்தார்... அதற்கு நான்... அதனை நானே தயாரித்து விடுகிறேன் என்று உடனே பதில் அளித்தேன்... அமெரிக்க டாக்டர் நண்பர்கள் பலர் எனக்கு இதில் உதவி செய்வதாக தெரிவித்திருக்கிறார்கள்" என மிகப் பரவசமாக பகிர்ந்து கொண்டார்...

"எல்லாம் பாபாவின் திட்டப்படி படம் நன்றாக உருவாகும்... உண்மையில் இதில் நடிப்பது எனக்கு கிடைத்த வரம்!" என மனம் திறந்தார் பிரபல நடிகர் "சிவாஜி" திரைப்பட வில்லன் நடிகர் சுமன் சி மோகன்...


ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் என்கிற திரைப்படத்தை இயக்கும் ஓம் சாயி பிரகாஷ் அவர்களுக்கு திரைப்பட வாழ்வில் இது 50 ஆவது வருடம்... ஸ்ரீ ஷிர்டி சாயி சமாதி ஆகி 100 வருடம் கடந்து விட்டது.. கடந்த 20 ஆண்டுகளாக ஸ்ரீ ஷிர்டி சாயி பாபாவின் புகழ் பட்டிதொட்டி எல்லாம் தெருவுக்குத் தெரு கோவில் எழுப்பி ஜனம் கொண்டாடுகிறது... ஷிர்டி சாயியின் இரண்டாவது அவதாரமான பரிபூர்ண இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் புகழும் இதோ பரவ ஆரம்பித்து விட்டதன் செய்தியை இந்தத் திரைப்படமும் பிரேம காலத்தில் கட்டியம் கூறுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக