"புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தத் தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் ஸ்ரீ ராமபிரம்மம் இதோ...!
ஸ்ரீ கே.ராமபிரம்மம் அவர்கள் ஏறத்தாழ 30 வருடங்கள், சுவாமியின் பெங்களூரு பிருந்தாவன் ஆசிரம வளாகத்தின் பராமரிப்பாளராக இருந்தவர். பிருந்தாவனத்தில் சுவாமியை அதிகாலையில் முதலில் சந்திப்பதும், இரவில் நித்திரைக்கு முன் சுவாமிக்கு பாதசேவை செய்து இறுதியாக விடைபெறுபவரும் அவரே. அதோடு மட்டுமல்லாமல் சுவாமியுடன் சேர்ந்து உணவருந்தும் பெரும்பாக்கியமும் பெற்றிருந்தவர். எல்லோராலும் பெரிதும் விரும்பப்பட்டவர்; அந்நாட்களில் பிருந்தாவன விடுதி மாணவர்களால் அன்போடு "தாத்தையா" ( தாத்தா) என்று அழைக்கப்பட்டவர். சுவாமியின் விசுவாசமான பணியாளராகவும், சிறந்த பக்தராகவும் இருந்தவர். புட்டபர்த்தி ஆசிரமத்தின் பொறுப்புக்களை எவ்வாறு திரு.குடும்பராவ் அவர்கள் திறம்பட நிர்வாகித்தாரோ அதேபோல பெங்களூர் பிருந்தாவன ஆசிரமத்தை நிர்வகித்தவர் ஸ்ரீ ராமபிரம்மம் அவர்கள். சுவாமி ராமபிரம்மம் அவர்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கடிதங்கள் அனுப்பியிருப்பார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, வெளியூர் செல்லும் சமயங்களில், ராமபிரம்மத்திற்கென கட்டாயம் ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கி வருவது சுவாமியின் வழக்கம்.
🌹முதல் சந்திப்பு:
ஸ்ரீ ராமபிரம்மம் ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற நகரமான விஜயவாடாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு நல்ல விவசாயி மற்றும் வியாபாரி. மேலும் அவர் ஷீரடி சாயிபாபாவின் பக்தர்.
தனது ஐம்பத்தொன்றாவது வயதில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை முதன்முதலில் பிரஷாந்தி நிலையத்தில் தரிசித்தார். அது 1953ம் ஆண்டு; தரிசனம் தந்த முதல் நாளே பகவான் அவரிடம் "ராமபிரம்மம், எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். ராமபிரம்மம், பாபாவிற்கு தன் பெயர் எப்படித் தெரியும்? என்று மிகுந்த ஆச்சரியம் கொண்டார். அதோடு மூன்றாவது நாளில், பாபா அவருக்கு பாதபூஜை செய்யும் வாய்ப்பை அருளினார். பாதபூஜை செய்யும்போது வியப்பிலும் வியப்பாக அவர் அங்கே கண்டது இளம் சத்ய சாயி பாபாவினுடைய பாதங்களை அல்ல, வயதான ஷீரடி பாபாவின் பாதங்களை! நிமிர்ந்து பார்க்க, நாற்காலியில் சத்ய சாயி பாபாவிற்கு பதிலாக ஷீரடி பாபா அமர்ந்திருந்தார். முதல் சந்திப்பிலேயே மாபெரும் மகிமையைக் காணும் பெரும் பாக்கியம் ஸ்ரீ ராமபிரம்மம் அவர்களுக்கு கிட்டிற்று.
🌹தெய்வ சமீபத்தில் வாழும் வரம்:
ராமபிரம்மம் குண்டூரில் புகையிலை ஏற்றுமதி தொழிலில், கடின உழைப்பாலும் நேர்மையாலும் விரைவில் செழிப்படைந்தார். 1955ம் ஆண்டின் இறுதியில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவதியுற்றார். மருத்துவம் மற்றும் ஓய்வுக்காக கர்நாடகாவில் உள்ள மைசூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். சுமார் ஒரு வருடம் மைசூரில் இருந்ததால் அவரது தொழில் முடங்கியது. தனது கடனை அடைப்பதற்காக தனது பெரும்பாலான சொத்துக்கள் மற்றும் நிலங்களை விற்க வேண்டியிருந்தது. ஒரு வருடத்திற்குள், அவர் ஒரு கோடீஸ்வரனிலிருந்து ஏழையாகத் தள்ளப்பட்டார். பாபா மீதான அவரது நம்பிக்கை கடுமையான சோதனைக்கு உட்பட்டாலும், அவர் தளராத பக்தியினில் வெற்றி பெற்றார். பகவான் பாபா அவர் மீது அளவற்ற அன்பைப் பொழிந்து அவருக்கு ஆதரவாக நின்றார். ஐந்து வருடங்களில் ராமபிரம்மத்தின் உள்ளம் கடின சலசலப்புக்கும், செதுக்கல்களுக்கும் உள்ளாகி, அவருடைய தெய்வீக ஏக்கம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.
1963ம் ஆண்டில், அவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக பகவானிடம் ஆசிர்வாதம் பெறச் சென்றார். திருமணத்திற்கான வேளை இன்னும் கூடிவரவில்லை என்றும் திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி வைப்பதாகவும் உறுதியளித்தார் பகவான். அதேசமயத்தில் ராமபிரம்மத்தின் ஆன்மா தெய்வீகத்துடன் இணைந்து வாழ்வதற்கான நேரம் கூடிவந்திருந்தது. ராமபிரம்மத்தை தன் மனைவி மற்றும் மகளுடன் பிருந்தாவன ஆசிரமத்தின் மேலாளராகக் குடியேறச் சொன்னார் சுவாமி. ராமபிரம்மம் பல ஜென்மங்களில் தவமிருந்ததற்குப் பலனாகக் கிடைத்த அந்த வரத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்.
🌹குடும்பமும் - பற்றின்மையும்:
பெங்களூர் ஆசிரமத்தில் சுவாமி முதல் மாடியில் தங்கும் அதே கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஸ்ரீ ராமபிரம்மம் அவர்களும் அவரது மனைவியும் வசித்து வந்தனர்.அவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உண்டு. அவர்கள் தங்கள் பெற்றோரைக் காண அவ்வப்போது பிருந்தாவனத்திற்குச் வருவது வழக்கம்.அப்படி அவருடைய பிள்ளைகள் வரும்போதெல்லாம், மற்ற பக்தர்களைப் போல வெளியில் தங்குவார். தன் மகன் வந்திருப்பதாக, மகள் வந்திருப்பதாக அவர் சுவாமியிடம் சொல்வதெல்லாம் கிடையாது. மாறாக சுவாமி அவரிடம், "ராமபிரம்மம், உங்கள் முதல் மகன் வந்திருக்கிறார், அவருக்கு தங்குமிடம் கொடுங்கள், ராமபிரம்மம், உங்கள் இரண்டாவது மகன் வந்திருக்கிறார், அவருக்குத் தங்குமிடம் கொடுங்கள்" என்றெல்லாம் கூறுவதுண்டு. நமக்கான வேலையை நாம் செய்ய வேண்டும்; மற்றபடி சுவாமி நம்மைக் கவனித்துக் கொள்வார் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவர்.
🌹சுவாமியின் விருப்பமே உண்மையான பக்தனுக்கான கட்டளை:
ராமபிரம்மத்தின் பேத்தியினுடைய திருமணம் குண்டூரில் நடக்கவிருந்தது.பதினைந்து நாட்களுக்கு முன்பே திருமண அழைப்பிதழைப் பெற்றிருந்தார். அதனை பகவானிடம் சமர்ப்பிக்கவும் செய்திருந்தார். ஆனால் திருமணத்தில் கலந்துகொள்ள சுவாமியிடம் அனுமதி கேட்கவில்லை. ஆனால் பகவானே, “நீங்கள் போய் கல்யாணத்தில் கலந்துக்கலாம்” என்றார். திருமண நாள் நெருங்கும் போது, பாபா தன்னை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே குண்டூருக்குக் கிளம்பச் சொல்வார் என்று எதிர்பார்த்தார்.ஆனால், பகவான் அந்த சமயத்தில் எதுவும் சொல்லவில்லை. எனவே ராமபிரம்மமும் அமைதியாக இருந்தார்.திருமணத்திற்கு மறுநாள் பாபா அவரிடம் "ராமபிரம்மம்! நீங்கள் ஏன் திருமணத்திற்குச் செல்லவில்லை?" என்றார். ராமபிரம்மமோ அலட்சியமாக, "சுவாமி! நான் திருமணத்திற்கு செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்று நினைத்தேன். இல்லாவிட்டால் என்னைப் போகச் சொல்லியிருப்பீர்கள் அல்லவா"என்றார். சுவாமியின் கட்டளை இன்றி தன் சொந்த இல்லத் திருமணத்திற்கே கூட செல்வது கூடாதென்று அலட்சித்தது இருந்துவிட்டார். பகவான் அளவற்ற மகிழ்ச்சியடைந்து, "நல்ல பிள்ளை! இதுவே உண்மையான பக்தனின் அடையாளம்" என்றார். ராமபிரம்மம் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பகவானை மகிழ்விப்பதைத் தவிர வேறெந்த லட்சியமும் இல்லாதிருந்தார்.
🌹இறந்துபோன மகன் இன்டெர்வியூ ரூமிற்கு வந்த அதிசயம்:
ஸ்ரீராமபிரம்மத்தின் இரண்டாவது மகன் நாகபூஷணம் ஜூன் 3ம் தேதி விஜயவாடாவில் திடீரெனக் காலமானார். அது 1964ம் ஆண்டு, கடுமையான சூறாவளி காரணமாக விஜயவாடாவிற்கும் பிருந்தாவனுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் அந்த நேரத்தில் துண்டிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், பகவான் பாபா அன்று மாலை அவரை அழைத்து, "உங்கள் மகன் நாகபூஷணம் இறந்துவிட்டார். உடனே உங்கள் மனைவியுடன் ஊருக்குச் செல்லுங்கள். ஆனால், அங்கு சென்றுசேரும் வரை உங்கள் மனைவியிடம் மரணத்தைப் பற்றிச் சொல்லாதீர்கள்" என்று கட்டளையிட்டார். பதினேழு மணி நேரப் பயணத்தில், ஏதோ முக்கியமான விஷயமாக பாபா நம்மை ஊருக்கு அனுப்பியுள்ளார் என்பதைத் தவிர வேறு எதையும் மனைவியிடம் அவர் தெரிவிக்கவில்லை. ஊரை அடைந்த பின், தன் அன்பு மகனின் இறப்பை அறிந்து பெருந்துக்கம் அடைந்தாள். தன மகனின் பிணத்தைப் பார்த்தாள், தங்களுக்கு நேர்ந்த சோகத்தை பகவானுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாள். அப்போது தான் ராம்பிரம்மம் அவளிடம் உண்மையைச் சொல்லி ஆறுதல்படுத்தினார். நம் நீண்ட பயணத்தின் போது, “ஒரு தாயாக, இந்த துக்கத்தைத் தாங்குவது உன்னால் இயலாது” என்று சுவாமி கூறினார். உன் மீதுள்ள அளவற்ற கருணையினால் தான் சுவாமி இந்த மரணத்தைப் பற்றி உனக்கு முன்பே தெரிவிக்கவில்லை என்று எடுத்துச் சொன்னார். இருவரும் பதினைந்து நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
ராமபிரம்மத்திற்கும் அவரது மனைவிக்கும் பகவான், வாழ்வையும் மரணத்தையும் குறித்த ஞானமொழியுடன் கூடிய நீண்ட ஆறுதல் கடிதம் எழுதியனுப்பினார். ஆனால், தனது இளம் மகனை இழந்த தாயின் இதயத்தில் உள்ள வேதனைத் தீ அவ்வளவு எளிதில் அணையவில்லை.பிருந்தாவனத்திற்குத் திரும்பியதும், பகவானிடம் மனம் விட்டு அழுது புலம்பினாள்,"பாபா! நான் என் மகனை இழந்துவிட்டேன்." பாபா அவளிடம், "அவன் எங்கும் செல்லவில்லை. அவன் என்னுடன் தான் இருக்கிறான் " என்றார். "உங்களுடன் இருக்கிறாரா?" என்று துக்கத்தில் மூழ்கியிருந்த தாய் ஆச்சர்யத்துடன் கேட்டாள். சுவாமி அந்தத் தம்பதிகளை தன்னுடைய நேர்காணல் அறைக்குள் அழைத்துச் சென்றார். பதினைந்து நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தகனம் செய்த தங்கள் மகன் பிருந்தாவனத்தில் உள்ள நேர்காணல் அறையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்கள்!. பாபாவின் மகிமையையும், பிறப்பு இறப்பு குறித்த ஞானமொழிகளையும் உடனே உணர்ந்து கொண்டாள். கர்மசாரத்தின் பிரகாரம் அவர்களின் பார்வையிலிருந்து மகனின் உருவமானது இன்டெர்வியூ அறையிலிருந்து மீண்டும் மறைந்தது. எனினும், தாளாத புத்திரசோகத்தில் இருந்த தாயின் உணர்வுகளைத் தணித்து சாந்திபடுத்தத் தேவையான அனைத்தையும் அந்த ஒரே நிகழ்வின்மூலம் செய்து முடித்தார் சுவாமி.
🌷 கீழ்ப்படிதலும் வெற்றியும்:
ராமபிரம்மம், உருவத்தில் சுவாமியை விட உயரமாகவும் மிகுந்த பருமனாகவும் இருப்பார். ஒரு நாள், தன்னுடைய ஆரஞ்சு நிற அங்கியை பகவான் அவரிடம் கொடுத்து அதை அணியச் சொன்னார்! வேறு யாராவதாக இருந்தால், அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால், ராமபிரம்மம் அப்படிச் செய்யவில்லை. மிகுந்த பணிவுடனும் தீவிரத்துடனும் , சுவாமி கொடுத்த அங்கியை தன் கைகளில் எடுத்துக் கொண்டார். "சுவாமி! நான் முயற்சி செய்கிறேன், ஆனால், என் பெரிய தலையும், நீண்ட கைகளும் இதற்குள் எப்படிப் பொருந்துமோ தெரியவில்லை", என்று சொன்னபடி அந்த அங்கியை அணிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினார். பகவானும் விடுவதாய் இல்லை!
சுவாமியின் சிறிய அங்கி அவருக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும் ராமபிரம்மம் சிரமப்பட்டு மூச்சுத் திணற, தன் தலையை அங்கிக்குள் தள்ள முயன்றரார். மிகவும் ஆச்சரியப் படும்வகையில், அந்த அங்கி விரிவடையத் தொடங்கியது!. ராமபிரம்மத்தின் பருத்த உடலுக்குப் பொருத்தமாக இருக்கும் வரை அது விரிவடைந்து விட்டது. அந்த அனுபவத்திலிருந்து அவர் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் மற்றவர்க்கும் எடுத்துக் கூறுவார், "பாபா உங்களுக்குச் சொல்வதை நீங்கள் உண்மையாகச் செய்ய முயற்சிக்கும்போது, அவர் அந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்க தவறாமல் உதவி செய்வார்".
🌷துணை ஜனாதிபதியே ஆனாலும் பயமில்லை:
ஒரு நாள் மாலை சுமார் 6 மணியளவில் பிருந்தாவனத்திற்கு, அப்போதைய இந்தியத் துணை ஜனாதிபதி திரு. ஸ்ரீ B .D. ஜட்டி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற வந்தார். அவருடன் சில மத்திய அமைச்சர்களும் கர்நாடக முதல்வரும் இருந்தனர். அந்த சமயத்தில், பாபா ஏற்கனவே ஓய்வு பெறத் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டிருந்தார். பாபாவின் அனுமதியின்றி மந்திர் வளாகத்திற்குள் விருந்தினர்களோ பார்வையாளர்களோ செல்ல முடியாது என்பதால், ராமபிரம்மம் துணை ஜனாதிபதி மற்றும் பிற பிரமுகர்களை சாய்ராம் ஷெட் மண்டபத்திலேயே மரியாதையுடன் வரவேற்றார். மேலும் அவர்களிடம் மறுநாள் காலையில் வருமாறும் கேட்டுக் கொண்டார். துணை ஜனாதிபதியோ, "நாளை சூரிய உதயத்திற்கு முன், பிரதமரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயமிது, எனவே தயவு செய்து பாபாவைச் சந்திக்க இங்கே காத்திருக்கிறேன் என்பதை அவரிடம் தெரிவிக்கவும்" என்றார். ராமபிரம்மம் பணிவாக அதே சமயத்தில் உறுதியாக "ஐயா! ஓய்வு பெற்ற பிறகு சுவாமியின் கதவைத் தட்ட யாரும் துணிய முடியாது. தயவு செய்து என்னை மன்னியுங்கள்" என்றார்.
"அப்படியானால் என்ன செய்வது? சுவாமியின் கவனத்தைப் பெற நீங்களே தயவுசெய்து ஒரு வழி சொல்ல முடியுமா?" என்றார் வந்திருந்தவர். அதற்க்கு ராமபிரம்மம், "எனது அனுபவத்தில் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தயவுசெய்து இங்கே அமர்ந்து, 'சாய்ராம் சாய்ராம்' என ஜெபித்து, பாபாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிக்கலாம்". என்றார். திரு B.D ஜட்டி அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு சுவாமியை பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். சில நிமிடங்களில், பகவான் தனது அறையிலிருந்து வெளிவந்து ராமபிரம்மத்திடம், அவரை உள்ளே அழைத்து வரும்படி அறிவுறுத்தினார். அன்று பகவான், வந்திருந்தவரோடு முப்பது நிமிடங்களுக்கு மேல் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. வந்திருப்பவர்கள் துணை ஜனாதிபதியும், முதல் அமைச்சரும் என்றபோதிலும் சுவாமியின் கட்டளைக்கு மட்டுமே கீழ்ப்படிந்து தனது சேவை வாழ்க்கையை நமக்கெல்லாம் ஆதர்ஷமானதாகச் செய்திருக்கிறார் ஸ்ரீ.ராமபிரம்மம் அவர்கள்.
🌷கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் சாயிநாதன்:
ராமபிரம்மத்தின் மேற்பார்வையில், பிருந்தாவனத்தின் விவசாய பண்ணையில் ஒரு ஆழ்துளை கிணறு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அங்கிருந்த சேவாதளருக்கும் வேலையாட்களுக்கும் பகவான் கொடுத்த சில இனிப்புகளைக் கொடுத்துவிட்டு வயல்வரப்பு வழியாக மந்திரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சற்று நேரமாகி விட்டதை உணர்ந்து, தனக்காக பாபா கடிகாரத்தைப் பார்த்தபடி காத்திருக்க கூடும் என்று நினைத்தார். வேகமாக நடக்க ஆரம்பித்த அவசரத்தில் வரப்பில் வழுக்கி விழுந்தார். தரையில் விழுவதற்கு சற்றுமுன் “சாயிராம்” என்று கத்தினார். அத்தகைய பருமனான உடல் கொண்ட அவர், வயலில் திடுமென விழுந்திருந்தாலும் எந்த அடியும் அசௌகரியமும் இன்றி எழுந்து கொண்டார். அவரது ஆடைகள் மட்டுமே அழுக்காகி இருந்தன, சீக்கிரமே கொஞ்சம் சரிசெய்தபடி அவர் பகவானை அணுகியதும், "ராமபிரம்மம்! நீ என் பெயரைச் சொன்னவுடன், நீ பண்ணையில் விழுந்த இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயங்களிலிருந்து காப்பாற்றினேன். ஆனால், நான் உன்னை அழைக்கும் போது, என்னிடம் வர நீ நேரம் எடுத்துக்கொண்டாய். இது முறையா?" என்றார். உடனே ராமபிரம்மம், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தை எண்ணி, பகவான் பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.
அதாவது, இந்த சம்பவத்திற்கு ஒரு மாதம் முன்பு ஓர்நாள் மந்திரின் கீழ்தளத்தில் ராமபிரம்மம் இருந்தபோது, முதல் தளத்தில் இருந்து பகவான் தன்னைக் கூப்பிடுவது அவருக்குக் கேட்டது. அப்போது அவர் கையில் ஒரு தெர்மோஸ்க் பிளாஸ்க் இருந்ததால் அதனுடன் சுவாமியிடம் செல்வது நன்றாக இருக்காது என்று எண்ணினார். எனவே சமையலறைக்குச் சென்று பிளாஸ்கை அங்கே வைத்துவிட்டு பகவானிடம் சென்றார்.பகவான் அவரைக் கூர்மையாகப் பார்த்து “ஏன் வந்தாய்?” என்று கேட்டார். ராமபிரம்மம் “சுவாமி! நீங்கள் என்னை அழைத்தீர்கள்" என்றார் பணிவுடன். பாபாவோ கடுமையாக, "அது சில நிமிடங்களுக்கு முன்பு, இப்போது இல்லை" என்று கூறி திருப்பி அனுப்பினார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம், “இறைவன் பக்தனின் குரலுக்கு அந்த க்ஷணமே வருபவர்” என்பதை உணர்கிறோம். மேலும் இறைவனின் சேவையிலிருப்போர் எத்தகைய விழிப்போடு இருந்து நேரத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதையும் உணர்கிறோம்.
🌷கழிப்பறை சுத்தம் செய்த கடவுள்:
ராமபிரம்மம் அவர்களின் கடைசிக் காலங்களில் அவருடைய நீரிழிவு உபாதையினால் சிரமப்பட்டார். இரவில் அடிக்கடி கழிப்பறை செல்லவேண்டி இருந்தது. அவரின் உடல்பருமன் மற்றும் வயதின் காரணமாக ஒவ்வொருமுறையும் யாரவது துணைக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் சில மாணவர்கள் அந்த சேவைப்பணியை ஏற்பது வழக்கம். சுவாமி ஊட்டிக்குச் சென்றிருந்த சமயம், மல்லிகேஸ்வரன் என்ற மாணவர் அந்த சேவைப் பணியை ஏற்றிருந்தார். ஓர்நாள் அந்த மாணவர் அயர்ந்து உருங்கிவிட்டபின், ராமபிரம்மத்திற்கு கழிப்பறை செல்லவேண்டி இருந்தது. ஆனால் உதவிக்கு ஆளில்லை; எனவே தன் சுவாமியை நினைத்து வேண்டியபடி தானே நகர முயற்சித்தார்.
பலநூறு மைல்களுக்கு அப்பால் ஊட்டியிலிருந்த சத்யசாயி தேவன் அங்கே ப்ரத்யச்சமாகத் தோன்றி அவருக்கு கழிப்பறை வரை செல்வதற்கு உதவி செய்தார். மேலும் ராமபிரம்மம் சென்று முடித்தபின் அந்த கழிப்பறையைக் கழுவியும் விட்டார். இந்த சம்பவத்தை மல்லிகேஸ்வரனிடம் "தாத்தையா" ராமபிரம்மம் சொன்னபோது, அது அவரின் வயோதிகத்தினால் ஏற்பட்ட கற்பனையோ அல்லது கனவோ என்றெண்ணி அந்த மாணவர் அலட்சித்து விட்டார். சுவாமி ஊட்டியிலிருந்து திரும்பியபின் அந்த மாணவரிடம் "என்னை பாத்ரூம் கழுவ வைத்துவிட்டாயே?" என்று வேடிக்கையாகக் கூறிச் சென்றார். அப்போது தான் அந்த மாணவர்க்குப் புரிந்தது, "அன்றொரு நாள் இரவு ராமபிரம்மத்திற்கு சேவை செய்தது சாக்ஷாத் பரப்பிரம்ம சாயி பகவானே" என்று!
🌷பகவானின் இதயத்தில் இடம்பிடித்தார்:
ராமபிரம்மம் மீது அளவற்ற அன்பையும் கருணையையும் பொழிந்த பகவான், நூற்றுக்கணக்கில் கடிதங்களை எழுதினார் என்பதை நாம் முன்பே கண்டோம். அதில் ஒரு கடிதத்தின் கவிதையைக் காண்பதன் மூலம், இறைவனின் இதயத்திலேயே நீங்கா இடம்பிடித்தவர் ஸ்ரீராமபிரம்மம் என்பதைக் காணலாம். அந்தக் கவிதை வரிகள் பின்வருமாறு;
"என்னைக் காண விரும்பிய சக்குபாய் சிந்திய ஏக்கக் கண்ணீரை நான் எப்போதாவது மறந்தேனா?
என்வழிபாடு தவிர வேறெந்த ஆவலுமற்ற பக்த நந்தனார் அனுபவித்த துயரங்கள் எனக்கு நினைவில்லையா?
என் தரிசனத்துக்காக ஓயாமல் அழுது மன்றாடிய மீராபாய் என் நினைவில் இருந்து மறைந்துவிட்டாளா?
ராமா, ராமா என்று ஓயாமல் தெய்வீக வேட்கையோடு எங்கும் அலைந்த தியாகராஜரின் பிரார்த்தனையை நான் எப்போதாவது புறக்கணித்திருக்கிறேனா?
ஓ! ராமபிரம்மம்! இவற்றையெல்லாம் எப்பொழுதும் அறிந்திருக்கும் உனது சாயி, கண்ணீர் மல்கும் உன் வேண்டுதல்களை ஏன் கேட்க மாட்டார் ? அவர் தன் கருணையை உன் மீது ஏன் பொழியமாட்டார்?
உறுதியாக இரு! அவர் எப்பொழுதும் தவறாமல் பாதுகாப்பார்.
காட்டிலோ, வானத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ, மலை உச்சியிலோ அல்லது ஆழ்கடலின் நடுவிலோ நீ எங்கிருந்தாலும் சாயியே நம்பகமான ஒரே புகலிடம்! அவர் உன்னை என்றும் மறக்க மாட்டார்."
- பாபா
மூலம்: சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக