தலைப்பு

புதன், 24 ஆகஸ்ட், 2022

தாம்பூலத் தட்டோடு வந்த ராமய்யா தம்பதிகளை ராகு காலம் முடியும் வரை காக்க வைத்த பாபா!

பாபாவுக்கு யாவரும் சமமே! ஈ முதல் நாய் வரை... பறவை முதல் மனிதர் வரை ஒன்றாகவே பேரன்பு செய்தவர் பாபா...! அந்த வரிசையில் ஒரு ஏழைத் தம்பதியினரை வேண்டும் என்றே நீண்ட நேரம் காக்க வைக்கிறார் ... ஏன்? எதற்காக? அவர்கள் ஏழை என்பதாலா? பரவசமான பதில் சுவாரஸ்யமாய் இதோ...


அது 1994 ஆம் ஆண்டு...! ஏப்ரல் மாதம்... பிருந்தாவனத்தில் ஆசி மழை பொழிந்து கொண்டிருக்கிறார்... வரண்ட பாலையில் பாபா வந்திறங்கினாலும் வற்றாத ஆசி மழை பொழிந்து... ஒட்டகங்களும் அன்னப் பறவையாக மாறுகிற ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன...! சாயி ரமேஷ் ஹாலில் பக்தர்கள் திரண்டனர்... வெளிச்ச முகங்களே எங்கெங்கும் பிரகாசித்தன‌... அத்தகைய ஒருநாளில் ஏழைத்தம்பதிகளான தரைப்பெருக்கும் ராமய்யா குடும்பம் கையில் தாம்பூலத் தட்டோடு தங்களது மகளின் திருமண பத்திரிகையோடு காத்திருந்தனர்... திரு.ராமய்யா அவர்கள் 20 வருடமாக துப்புரவு பணி புரிந்த ஹாஸ்டலில் வார்டனாக இருந்தவர் நூலாசிரியர்.. ஆக திரு ராமய்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க... மந்திரின் வாயிலுக்கு எதிரே ஹாஸ்டல் மூலையில் தும்பிக்கையை தூக்கிய யானை வடிவ சிமெண்ட் காங்கிரீட் அருகே தம்பதியினரை நிற்க வைக்கிறார் நூலாசிரியர்... 


அவர்களும் நம்பிக்கையை தூக்கியபடி தும்பிக்கையை தூக்கிய யானை முன் நிற்கிறார்கள்... நூலாசிரியர் அதற்கு முந்தைய நாளே பாபாவிடம் அதைப் பற்றி தெரிவிக்கிறார்... நாம் தெரிவித்தால் தான் பாபா ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் பாபாவுக்கு இல்லை...! அன்று தரிசனம் நிகழ்கிறது... வழியோரம் விழி வைக்கிறார்கள்... பாபா அப்படியே கடந்து போய்விடுகிறார்... தும்பிக்கையை வைத்து அந்த சிமெண்ட் யானை உச்சந்தலையில் ஓங்கி அடிப்பதைப் போன்ற உணர்வு ராமய்யாவுக்கு... "சுவாமி திரும்பி கூட பார்க்கவில்லையே!" என்ற அங்கலாய்ப்பு... "சுவாமி சுவாமி சுவாமி!" என்று உள்ளே பதட்டம்... அவர்களது குடும்பத்தில் நடைபெறப்போகிற முதல் சுப நிகழ்ச்சி... ஆனால் பாபாவின் பாராமுகம் தாங்கவில்லை... நூலாசிரியரும் அதனை கவனித்துக் குழம்பிப்போகிறார்... அவர்கள் அருகே அசந்து வருகிறார்...


"நீங்கள் அப்படியே பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள்! சுவாமி நேர்காணல் முடித்துவிட்டு.. ஒருவேளை காரில் வந்தால் இப்படித்தான் வரவேண்டும்! பொறுமை ராமய்யா!" என்கிறார் நூலாசிரியர்... ராமய்யா தலையாட்டுகிறார்... விழிநீரும் சேர்ந்தே ஆடுகிறது! பாபாவின் நிகழ்ச்சி நிரலை பாபாவே தீர்மானிக்கிறார்... எல்லாவற்றையும் பாபா முன்கூட்டியே அனைவரோடும் கலந்தாலோசித்து நிகழ்த்துவதில்லை... அதில் திருப்பு முனைகள் ஏராளம்! "ஏற்றுக் கொள்ளுதல் எனும் தெய்வீக குணம் இருக்குமானால் பாபாவின் திருச்செயல் எதுவாயினும் அதனை நாம் அப்படியே ஏற்று நிறைவடைகிறோம்!" இல்லை எனில் நமக்குள் இருக்கும் தெய்வீகம் தொய்'வீகமாகிவிடுகிறது! 


பாபா நேர்காணல் முடித்து வெளியே வருகிறார்.. 10 நிமிடங்களில் பரபரப்பு... சேவாதளர் நெருங்குகிறார்கள்... 

பாபா காரில் ஏறவில்லை... நடந்தே வருகிறார்... கைகளை அசைத்தபடி வருகிறார்... நேராக ராமய்யாவை நோக்கி வருகிறார்... ராமய்யா தம்பதிகளின் கண்ணீரே அந்த நிகழ்வை முதலில் தரிசிக்கிறது... அவர்களால் நம்பவே முடியவில்லை... புன்னகை கொஞ்சக் கொஞ்ச வெளிச்சத்தை சூரியனுக்கு இரவல் தந்தபடி பாபா நெருங்குகிறார்... ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ராமய்யாவை நெருங்குகிறார்.. ராமய்யா ஒஸ்தாரய்யா... கருணையோடு அவர்களை பாபா உற்று நோக்குகிறார்..

 கைவிரல்கள் நடுங்கியபடி தாம்பூலத்தட்டை நீட்டுகிறார்கள்... நூலாசிரியரும் தூரம் இருந்தே கவனித்து மகிழ்ச்சி அடைகிறார்... அந்தத் தாம்பூலத்தட்டிலிருந்து பாபா எனும் ஆதிமூலம் அழைப்பிதழை கைப்பற்றி தனது தாமரைக்கரங்களால் சிருஷ்டி  மஞ்சள் அட்சதையை தூவுகிறது!

அவர்களின் உச்சந்தலைக்கு மேலே மஞ்சள் அட்சதை... உச்சந்தலைக்கு கீழே கண்ணீர் அட்சதை!


"தரிசனத்தின் போது நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள் என சுவாமிக்கு நன்கு தெரியும்... இன்று திங்கள் கிழமை... 7.30 லிருந்து 9 மணிவரை மங்கலமில்லாத ராகுகாலம்... நீங்களோ வீட்டில் வீசேஷம் வைத்திருக்கிறீர்கள்...அந்த நேரத்தில் சுவாமி உங்களை ஆசீர்வதிக்க விரும்பவில்லை! அதற்காகவே இப்போது இவ்வளவு தூரம் சுவாமி உங்களுக்காக நடந்து வந்தேன்!" என்கிறார்... தம்பதிகளால் என்ன பேச முடியும்? கருணையின் முன்பு மொழி தன்னை எப்படி தலைகாட்டிக் கொள்ள முடியும்? 

அத்தோடு இன்றி அன்றைய பிற்பகல் பாபா நூலாசிரியரை அழைத்து சிறப்பான பட்டுப் புடவைகளை கையில் எடுத்தபடி... ஒன்றை ராமய்யா மனைவிக்கும்.. மற்றொன்றை அவன் மகளுக்கும் கொடுத்துவிடு... அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதனை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும் என்கிறார் பாபா! "சுவாமி நீங்கள் எதை தந்தாலும் மனநிறைவோடு பெறுவார்கள்!" என்கிறார் நூலாசிரியர்... இப்படி உளறிக் கொட்டினேன் என திறந்த மனதோடு பதிவு செய்கிறார் நூலாசிரியர்... ஆனால் பாபாவோ "அவர்கள் எதனை மிகவும் விரும்புகிறார்களோ அதனையே சுவாமி கொடுக்க விரும்புகிறேன்!" என்கிறார் பாபா! பாபாவின் கருணையை நினைந்து என்ன பேசுவது என்றே நூலாசிரியருக்கு தெரியவில்லை!


(ஆதாரம் : சத்யம் சிவம் சுந்தரம் - பாகம் 7 / பக்கம் : 3 / ஆசிரியர் : பி.என்.நரசிம்மமூர்த்தி) 


ஒரு பக்தர் பாபாவிடம் "உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை சுவாமி?" என்கிறார்... அதற்கு பாபா "உன்னை யார் சுவாமியை புரிந்து கொள்ள முயற்சிக்க சொன்னது... பேசாமல் அனுபவி!... தலையில் சிந்திப்பதை விடுத்து சுவாமியை இதயத்தால் அனுபவி!" என்கிறார்... அதுவே பாபா...! வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் தான் பக்தர்கள் நல்லநேரம் பார்க்க வேண்டுமே தவிர சேவைக்கு அல்ல என்பதையும் பாபா தெளிவுபடுத்துகிறார்! இல்லை எனில் ஏன் தனது அவதாரங்களுக்கு பாபா அஷ்டமி நவமியை தொடர்ந்து யுகம் யுகமாக தேர்ந்தெடுக்க வேண்டும்?


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக