தலைப்பு

சனி, 27 ஆகஸ்ட், 2022

பாபாவே "பாட்டி பாட்டி" என அழைத்த ஒரு பக்த பெருமாட்டி!

எவ்வாறெல்லாம் தனது பக்தர்களிடம் பாபா பரிசுத்த பேரன்பையும் பரிவையும் அதில் பரிபக்குவத்தையும் ஊட்டி ஊட்டி வளர்த்து பாதுகாத்தார் எனும் இதய அணுக்கப் பதிவு சுவாரஸ்யமாய் இதோ...


அந்த பெருமாட்டி பெயர் ஜானகி அம்மையார்... தென்னை மரம் திண்ணை வரை குனிந்து தலையசைக்கும் கேரள தேசம்...! அவர் பெற்றெடுத்த பிள்ளை பெயர் வைக்கத்தப்பன்...பெரும்பாலும் வைக்கத்தில் பிறக்கும் தலைச்சம் பிள்ளையை வைக்கம் கோவில் சந்நதியில் கிடத்தி... நீயே இந்தக் குழந்தைக்கு துணை சுவாமி என மனமுருகி வேண்டி சுவாமி பெயரையே வைப்பார்கள்... ஆகவே வைக்கத்தப்பன்...

அந்த அம்மையாரின் கணவர் தவறிப்போகிறார்... பாபா பக்தரான படியால் பாபாவின் நீள் கருணை அவரை தன் ஆசிரமத்திலேயே தங்க வைக்கிறது... மகன் வைக்கத்தப்பன் வெளியூரில் வேலை செய்து வருகிறார்...

அந்த ஜானகி அம்மையாரை பாட்டி பாட்டி என்று தான் பாபா அன்போடு அழைப்பார்... பாபா மேலான பக்தி பாட்டிக்கு ஆசிரம தங்குதலில் இருந்து மேலும் மேலும் அதிகமாகிறது... பாபா தனது பேரன்பால் மட்டுமே ஆசிரம இயக்கத்தை மட்டுமல்ல அகில உலகத்தையே தனது காலடியில் கட்டிப் போட்டிருக்கிறார்... பாபாவின் அதே இயக்கம் தொடர.. பாபாவின் அதே பேரன்பையே நாம் செயல்படுத்த வேண்டும்.. வேறு உபாயமில்லை...!

ஒரு முறை பாட்டியின் மகன் வேலை ஓய்வு பெறுகிறார்.. சரி தன் அம்மாவை தன்னிடமே வைத்துக் கொள்ளலாம் என நினைத்து புட்டபர்த்தி கிளம்பி வருகிறார்... ஆனால் பாட்டிக்கு பாபாவை விட்டுப் பிரிய மனமே இல்லை... ஆசிரம வாழ்க்கை அவருக்கு பந்த பாசம் கடந்த பரிபக்குவத்தை ஏற்படுத்தியும்... பாபா மேல் அளவிட முடியாத பிரேம பக்தியையும் இதயத்திற்குள் இறக்கி விடுகிறது! பாபாவும் பாட்டியை ஆசிரமத்திலிருந்து விட சம்மதிக்கவில்லை... அம்மா.. மதர் என்று தான் பெண்மணிகளை அழைப்பார் பாபா... "பாட்டி" என ஜானகி அம்மையாரை அழைக்கிறார் எனில் அது மிகவும் விசேஷ பிரேமையே! வந்த மகனை அப்படியே பேக் செய்து நீ இல்லறத்தை நடத்து.. இவள் இங்கேயே இருக்கட்டும் என திருப்பி அனுப்பிவிடுகிறார் பாபா!

 

ஒருமுறை பாட்டியிடம் "பாட்டி.. உன் பையனுக்கு நான் பொருள் வசதி செய்து தந்திருக்கிறேன்.. தரிசனத்துக்கு வரும் பிறரது காரின் அருகில் உன் மகன் காரும் இங்கே நின்றால்.. எப்படி இருக்கும்?" என கிருஷ்ண குறும்பு புரிகிறார்..பந்த பாசம் துறந்த பாட்டிக்கு தன் மகன் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை துளிர்க்கிறது.. பிறகு அவரது மகன் தான் சேமித்த பணத்தில் வாங்கிய மாரிஸ் -8 காரில் தரிசனத்துக்கு வருகிறார்.. காரின் அருகே வந்த பாபா அவரது காதோரம் "உன் ஆழ் மனதின் ஆசை எனக்கு மட்டுமே தெரியும்..‌ கார் ஆசை உனக்கு இருந்தது இல்லையா...இப்ப நல்ல டிரிப் அடி!" என பாட்டியின் மகனிடம் சொல்ல.. அவர் பரவசப்படுகிறார்!

ஒருமுறை பாட்டியின் மகனுக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்ய வேண்டிய சமயம் வருகிறது.. ஆனால் அவரது மகன் (பாட்டியின் பேரன்) கனடாவில் இருந்தபடியால் அவருக்கு அது குறித்து எந்த ஆர்வமும் இல்லை! அந்த வைக்கத்தப்பன் சுவாமி தரிசனத்துக்கு வந்தபோது சுவாமியே ஒருநாள் "உன் பிள்ளை உன்னருகில் இல்லை ஆகவே சஷ்டியப்த பூர்த்தி (60 ஆவது வயது திருமணம்) செய்ய உனக்கு விருப்பமில்லை.. சரி...ஆனால் அவள் பிள்ளை அதை கொண்டாட வேண்டும் என அவள் நினைக்கமாட்டாளா?" என தீர்க்கமாகச் சொல்ல... "அந்த அம்மாவை சந்தோஷப்படுத்துவதே எனக்கு சந்தோஷம்!" என்கிறார் பாபா! 

பிறகு பிரசாந்தி நிலையத்திலேயே பாபா அவருக்கு 60 ஆவது திருமணத்தை சிக்கனமாய் சீரும் சிறப்புமாய் நிகழ்த்தி வைக்கிறார்! அவருக்கு ஒரு பேத்தி நல்லாள் என்று பெயர்.. தனது முதிர் காலத்தில் அந்த வைக்கத்தப்பன் பர்த்தியப்பனுக்கே தனது மீதி வாழ்வை ஜோதி வாழ்வாக்க பாத்தியம் இடுகிறார்!


(ஆதாரம் : அன்பு அறுபது/ பக்கம் : 36 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


அத்தகைய பேரன்பே பாபாவுடைய பேரன்பு... அந்த பாட்டி விஷயத்தில் பாபாவின் பேரன்பு பேரன் அன்பாக  மலர்ந்திருக்கிறது! பிறரை நாம் நேசிப்பது பாபாவையே போய்ச் சேர்கிறது.. அப்படியே பிறரை விமர்சிப்பதும் / கோபிப்பதும்... நேசித்தால் நெருங்கிவரும் பாபா... சக மனிதரை நாம் நிந்தித்தால் நம்மைவிட்டு விலகிப் போய்விடுகிறார்! ஒவ்வொரு உலகாயத செய்கையிலும் பாபா மனிதர்க்கு பேரன்பையே ஊட்டுகிறார்... பரிபக்குவத்தையே காட்டுகிறார்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக