தலைப்பு

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

பேராசிரியர் N. கஸ்தூரி | புண்ணியாத்மாக்கள்

மூன்றான ஸ்ரீ சாயி அவதாரங்களில் ஷீரடிசாயி மற்றும் சத்யசாயிக்கு அடுத்தபடியாக "பிரேமசாயி"  அவதாரம் வரவிருப்பது நாமனைவரும் அறிந்ததே. பிரேமசாயி பாபாவின் தாயார் ஆகின்ற பாக்கியம் பெற்ற உன்னத ஆன்மா, சேவைத்திலகம் தெய்வத்திரு. கஸ்தூரி அவர்கள். 1990களின் முற்பகுதியில், மாணவர்களுடனான ஒரு நேர்காணலின் போது சுவாமி, "பேராசிரியர் கஸ்தூரி பிரேமசாயி பாபாவின் தாயாக இருப்பார்அவர் இப்போது ஏற்கனவே மறுபிறவி எடுத்துள்ளார்" ​​என்று கூறினார். அப்பேற்பட்ட உன்னத ஆத்மா திரு.கஸ்தூரி அவர்களைப்பற்றி நினைவுகூர்ந்து ஆனந்தப்பட இந்தப்பதிவு.




🌹இளமைப் பருவம்:

திரு. கஸ்தூரி அவர்கள் 1897 ஆம் ஆண்டு தற்போதய கேரளாவின் பாலகாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெரியம்மை நோயால் சீக்கிரமே இறந்துவிட, கஸ்தூரி தனது விதவைத் தாயின் ஆபரணங்களை விற்ற பணத்தில் பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருந்தது. பள்ளியில் படிக்கின்ற காலங்களில் இலவச உணவைப்பெற, அவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை நான்கு மைல்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. முதுகலைப் படிப்பின்போது திருவனந்தபுரம் கோவிலில் (இலவசமாகத் ) தங்கியிருந்து படித்தார். பின்னர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே எம்.ஏ., மற்றும் பி.எல் பட்டப்படிப்புகளையும் முடித்து கல்லூரி விரிவுரையாளரானார். பின்னர், மைசூர் பல்கலைக்கழகத்தில்  பேராசிரியரானார்.  திருமணம் செய்து இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகளோடு இனிதே காலம் உருண்டோடியது. அந்த சமயங்களில், ராமகிருஷ்ணா மிஷனில் அவர் தன்னை முழு மனதுடன் ஈடுபடுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

🌹முதல் தெய்வீக சந்திப்பு:

'கஸ்தூரி' என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ஸ்ரீ நாராயண கஸ்தூரி ரங்கநாத சர்மா முதன்முதலாக 1948 ஆம் ஆண்டு தனது 51வது வயதில், புட்டபர்த்திக்கு விஜயம் செய்தார், அப்போது சுவாமிக்கு 22 வயது. 

சுவாமியுடனான தனது முதல் சந்திப்பில்... சுவாமி கஸ்தூரி அவர்களிடம், "நீங்கள் எனது வாழ்க்கைச் சரிதத்தை எழுதுவீர்கள்." என்றார்.  "நானா?"  என்று கஸ்தூரி ஆச்சர்யத்துடன் அன்றைய தினத்தில் பதிலளித்தார். சுவாமியின் வாக்கின்படி, பின்னாளில்... சுவாமியின் சரிதத்தை எழுதி அதை சத்தியம் சிவம் சுந்தரம் என்ற தலைப்பில் வெளியிட்டார். பின்னர் சனாதன சாரதி என்ற மாதஇதழின் ஆசிரியரானார். அதுமட்டுமின்றி, பாபாவின் தெய்வீக சொற்பொழிவுகளை மேடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் செய்தார். பாபாவின் மற்ற அனைத்து பக்தர்களைக் காட்டிலும், திரு.கஸ்தூரிக்கு சுவாமியின்  அருகாமையில்  அதிகபட்ச நேரத்தை செலவிடும் தனிச்சிறப்பு இருந்தது.

 

🌹கர்ம யோக சாரம்:

சுவாமியுடன் நிரந்தரமாக பிரஷாந்தியில் தங்குவதற்கு முன்பாக 1954ல், திரு.கஸ்தூரி அவர்களுக்கு  பெங்களூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநராகப் பதவி வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை ஏற்க கஸ்தூரி தயாராக இல்லை. மாறாக, பிரசாந்தி நிலையத்தில் குடியேற விரும்பினார். அவர் சுவாமியிடம் சென்று "சுவாமி! நான் உங்கள் பணியைத்தான் செய்ய விரும்புகிறேன்" என்றார். அதற்கு சுவாமி அவரிடம், "கஸ்தூரி! அகில இந்திய வானொலியின் பணி எனது வேலை இல்லை என்று நினைக்கிறீர்களா?" என்றார். உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது என்றும், அனைத்து வேலைகளும் கடவுளின் வேலையாக ('சர்வ கர்ம பகவத் ப்ரீத்யர்த்தம்') மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்போது கஸ்தூரிக்கு நன்கு விளங்கிற்று, இதுவே  கர்ம யோகத்தின் சாரமாகும். சுவாமியின் கட்டளைக்கேற்ப அந்த பணியை கஸ்தூரி அவர்கள் செவ்வனே செய்தார். அகில இந்திய வானொலிக்காக 'ஆகாஷ வாணி' என்ற சொற்றொடரை உருவாக்கியவர் திரு.கஸ்தூரி அவர்கள் தான் என்பது சுவாரஸ்யமான தகவல்.

 

🌹மூர்த்தி-பூர்த்தி:

1980ம் வருடம் ஓர்நாள்... பிரஷாந்தி நிலையத்தில் சுவாமி, குறிப்பிட்ட மூன்று பேரை நேர்காணலுக்கு வரவழைத்துவிட்டு கதவை மூட முற்பட்டபோது, ​​கஸ்தூரி வாசலில் ஆஜரானார். சுவாமி சிரித்துக் கொண்டே "பார் கஸ்தூரி! உள்ளே மூன்று 'மூர்த்திகள்' இருக்கிறார்கள்- கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி மற்றும் நரசிம்மமூர்த்தி" என்றார்.


தன்னை நோக்கி விரலைக் காட்டி, "இதுவும் ஒரு 'மூர்த்தி!' உள்ளே கஸ்தூரிக்கு இடமில்லை”. நகைச்சுவைப் பேச்சுக்குப் பெயர்பெற்ற கஸ்தூரி, "சுவாமி! நானும் உள்ளே வந்தால் அது பூர்த்தி ஆகிவிடும்" என்று பதிலளித்தார். சுவாமி கலகலவென்று சிரித்துவிட்டு கஸ்தூரியை உள்ளே அனுமதித்தார்.

 

🌹சுவாமி மறைத்த மோதிரம்:

மற்றொரு சந்தர்ப்பத்தில் கஸ்தூரி சுவாமியை அணுகி,  ரத்தினம் பதித்த தனது தங்க மோதிரத்தை பாபாவின் திருவுருவப்படம் பதித்த மோதிரமாக மாற்றும்படி கேட்டுக்கொள்ள விரும்பினார். கஸ்தூரி நேர்காணல் அறைக்குள் நுழைந்ததும், பாபா, "ஓ! நீங்கள் ஒரு பெரிய பக்தராக அனைவர்முன் வலம்வர உங்கள் மோதிரத்தில் சுவாமியின் பெரிய படத்தை விரும்புகிறீர்கள். எல்லோரும் பொறாமைப்படுவார்கள், நீங்கள் பிரபலமாவீர்கள் அல்லவா? மக்கள் என் உருவப்படத்தை விரல்கள், கைக்கடிகாரங்கள், லாக்கெட்டுகள் போன்றவற்றின் மீது  பதித்து வலம் வருகிறார்கள். அதோடு  தங்கள் வீடுகளின் சுவர்களிலும், ஆலயங்களில் உள்ள பீடங்களிலும் வைக்கிறார்கள். அதற்குப் பதிலாக, உங்கள் இதயத்தின் பீடத்தில் என்னை நிறுவுங்கள். அதுவே எனது வீடு." என்றார். பின்னர் சுவாமி கஸ்தூரியின் மோதிரத்தின் மேல் ஊதினார். உடனே அந்த மோதிரம் காற்றில் மறைந்தது. அதைக்கண்ட கஸ்தூரி  ஏமாற்றமடைந்து சோகமுற்றார்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு, பாபா கஸ்தூரியின் மீது இரக்கம் கொண்டு, ஒன்பது விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் கொண்ட ஒரு தங்க மோதிரத்தை தன் கையசைப்பில் உருவாக்கினார். பாபா , "இப்போது நீங்கள் என்னுடையவர் என்று அறிவிக்க இயலாது, நவகிரக மோதிரம் என்பதால் எல்லோரும்  கிரகங்களின் தாக்கத்தை  முறியடிக்க மோதிரம் அணிந்துள்ளீர்கள் என்று நினைப்பார்கள். மேலும் என்னுடைய அனுக்ரஹம் ஒன்றே போதும் நவக்ரஹங்களினால் வரும் கேடுகள் முறியடிக்கப்பட! என்ற உண்மையை நீங்கள் சீக்கிரம் உணர்வீர்கள். அதுவரை இதை அணியுங்கள்" என்றார்.

 

🌹மனிதனின் இருப்பே பகவானின் மிகப்பெரும் அதிசயம்:

ஒரு பௌர்ணமி தினத்தன்று கஸ்தூரியும் இன்னும் சில பக்தர்களும் (அப்போது பிரஷாந்தியில் கட்டிட பணிகள் நடந்து கொண்டிருந்தது) சுவாமி அங்கிருந்த மணல் குவியல்களில் அமர்ந்து சில 'அதிசயங்கள்' செய்து மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினர். கஸ்தூரி சுவாமியிடம் "நாம் அந்த மணல் குவியல்களில் அமர்ந்து சிறிது நேரம் பஜனை செய்வோம்" என்று கேட்டுக்கொண்டார் . 

உடனே சுவாமி, "உனக்கு பஜனையில் ஆர்வம் இல்லைநான் அற்புதங்கள் செய்து உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். அதோடு அதிசயங்கள் நிகழ்த்த மணல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறீர்கள்" என்று கூறி மறுத்துவிட்டார் சுவாமி. குழுவில் இருந்த ஒருவர் "சுவாமி! நீங்கள் காற்றில் இருந்து பொருட்களை உருவாக்க முடியும் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். நாங்கள் கட்டுமானப் பணிகள் நடக்குமிடத்துக்குச்  செல்ல வேண்டியதில்லை, மந்திரத்திலேயே கூடுவோம். நீங்கள் கருணை காட்டினால் இங்கே ஒரு அதிசயம் நடக்கும்" என்றார். பின்னர் பாபா அந்தக் குழுவை மிகவும் அருவருப்பாகப் பார்த்து, "அதிசயம், அதிசயம் - நீங்கள் எப்போது பார்த்தாலும் அற்புதங்களுக்காக கூக்குரலிடுகிறீர்கள். உங்களுக்கு ஒரு பெரிய அதிசயம் தெரியாது - உங்கள் ஒவ்வொருவரின் இருப்பே எனது அதிசயம்" என்று தெரிவித்தார். சுவாமி அந்த பௌர்ணமி தினத்தில் வழக்கமான வேடிக்கையின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தகர்த்தார். ஆனால், "எளிமையாக  தோற்றமளிக்கும்" அந்த அறிவிப்பின் மூலம் மாபெரும் சத்தியத்தை உணர்த்தியிருந்தார். சுவாமி ஒருமுறை, "நானே நடராஜர் - டான்ஸ் மாஸ்டர், நீங்கள் அனைவரும் நடன மாணவர்கள். உங்களுக்கு நடனத்தின் ஒவ்வொரு அசைவையும் கற்றுக்கொடுக்கும் வேதனை எனக்கு மட்டுமே தெரியும்." என்று கூறினார்.

 

🌹மந்திரோபதேசம்:

பலரும் கஸ்தூரியிடம், "பாபா உங்களுக்கு வகுத்த மார்க்கம் எது? பக்தியா? கர்மமா? ஞானமா? அல்லது தியானமா? அவர் அருளிய மந்திரம் என்ன? வாரத்தின் எந்த நாட்களில் விரதம் இருக்கிறீர்கள்?  மௌனம் கடைப்பிடிக்கிறீர்களா?" என்று கேட்பது வழக்கம். அத்தகைய கேள்விகளுக்கு கஸ்தூரியின் பதில்  "என் கதை, ஒரு காதல் கதை. அன்பே எனது சாதனா, அன்பே எனது பாதை, அன்பே எனது மந்திரம். அன்பே எனது விரதமும் விருந்தும், எனது மௌனமும் எனது பேச்சும் எல்லாம் அன்பேயாகும்".

 

முன்பொரு சமயம், ஸ்வாமியிடம் மந்திர தீட்சை பெற வேண்டுமென்று கஸ்தூரி துடித்துக்கொண்டிருந்தார். அனைவரும் காசி சென்றிருந்த சமயம், மந்திரம் பெறுவதற்கு காசியே சிறந்த இடம் என்று நினைத்து, கங்கையில் நீராடி, சுவாமியிடம் மந்திரம் பெறுவதற்காக காலை முழுவதும் விரதம் இருந்தார்.  ஆனால், சுவாமி அவரை நிராகரித்தார்.  அந்த சம்பவத்தை பின்னாளில் ஒரு சொற்பொழிவின்போது பகவானே விவரித்தார்: "மந்திரோபதேசம் பெறுவதற்கு காசியே சிறந்த இடம் என்று கஸ்தூரி நினைத்ததால், என்னிடம் மந்திரம் வேண்டினார். என்னிடமிருந்து மந்திரம் வரும் வரை அவர் சாப்பிட மறுத்தார்,கண்ணீருடன் இருந்தார். ஆனால், அவனுடைய வேண்டுகோளுக்கு நான் எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், எல்லா மந்திரங்களும் யாரைக்குறித்துப் பேசுகின்றனவோ? உங்களுக்கு யார் பாதுகாப்பளிப்பதாக உறுதியளிக்கிராரோ? அவரே தனக்குக் கிடைத்தபின்னும் ஒரு மந்திரத்தைக் கேட்பதைப் பாருங்கள்." அந்த நிகழ்வைக்குறித்து திரு.கஸ்தூரி குறிப்பிடும்போது, "நாம் பாபாவின் அருகாமையைப் பெற்றாலும் அதன் அருமையைச் சரியாக உணரும்படி நாம் பாபாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்கிறார்.


 



 




🌹பூர்வாஸ்ரமம்:

சுவாமியுடன் வசிக்கத் தொடங்கிய பின், கஸ்தூரி தனது வழக்கமான "நகைச்சுவை" மற்றும் "விமரிசனங்களை” விட்டுவிட்டார். ஸ்வாமியைக் குறித்து பேசும்போது கூட "சிறு நகைச்சுவை"யுடன் மட்டுமே பேசுவார். கேரளாவிலிருந்து மைசூருக்கு சென்றபோது அவர் கன்னடமொழி பயின்று, அம்மொழியில் பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டதுடன், ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளராகப் பெரும் புகழடைந்தார். ஆனால் பர்த்தியில் வந்து தங்கியபின், முந்தைய வெளியீடுகளில் ஒரு புத்தகத்தைக் கூட தன்னுடன் கொண்டு வரவில்லை என்று யாரேனும் கேட்டால், “அவை எல்லாம் என் முந்தைய வாழ்க்கையைச் (பூர்வாஸ்ரமம்) சேர்ந்தவை. அவற்றை இங்கு ஏன் கொண்டுவரவேண்டும்?" என்பார்.


🌹விபூதி அபிஷேகம்:

சிவராத்திரி மற்றும் விஜயதசமி ஆகிய விசேஷ நாட்களில் ஸ்வாமி ஷீரடி பாபாவின் விக்ரகத்துக்கு விபூதி அபிஷேகம் செய்வது வழக்கம். சுவாமியின் பக்தர்கள் அனைவரும் அறிந்த, உலகப்பிரசித்தி பெற்ற அற்புதம் அது. திரு. கஸ்தூரி அவர்கள் பாத்திரத்தை தலைகீழாக விக்ரகத்தின் மேலே பிடித்துக் கொள்ள, ஸ்வாமி தன் தெய்வீகத் திருக்கரத்தை பாத்திரத்தினுள் செலுத்தி விபூதியைப் பொழிய வைப்பார். 

பல ஆண்டுகள் அவ்விதமாக பாத்திரத்தைப் பிடித்துக் கொள்ளும் பாக்கியம் திரு.கஸ்தூரிக்கே கிட்டியது. சுவாமி அப்பாத்திரத்தினுள்ளே தன் திருக்கரத்தை நுழைத்தவுடன் பாத்திரம் விபூதியில் நிரம்பி கனக்கும் என அவர்  கூறுவார். சுவாமியும் அதுசமயம், "ஜாக்கிரதைபாத்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்" என அவரை எச்சரிப்பார். சில நேரங்களில் விபூதியுடன் சில விலையுயர்ந்த கற்கள் கூட வந்து விழும். கஸ்தூரி சிறிது விபூதி எடுத்து தனது ஜேபில் (பாக்கெட்டில்) வைத்துக் கொள்வார். ஆனால் வீட்டுக்கு வந்து சேரும்போது அவரது ஜேபி காலியாக இருக்கும். வழியில் யார் கேட்டாலும் அந்த விபூதியை கொடுத்து விட்டிருப்பார். திரு.கஸ்தூரியின்  இதயம் மிகவும் விசாலமானது. "நான்”, “எனது” என்ற உணர்வுகள் அவர் இதயத்தில் இருந்ததேயில்லை. ஸ்வாமி கொடுக்கும் எப்பொருளானாலும் அதை அடைய ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதாக எண்ணுபவர்.


🌹 சுவாமியுடன் பத்ரி யாத்திரை:

சுவாமியுடன் பத்ரி யாத்திரை செல்லும் பாக்கியம் கஸ்தூரி தம்பதியருக்குக் கிட்டியது. பத்ரி கர்ப்பகிருகத்தில் ஆதிசங்கரர் நிறுவிய லிங்கத்தை, சுவாமி தங்கியிருந்த இடத்திலேயே வரவழைத்தார். மேலும் (தானே வரவழைத்த) கங்கா ஜலத்தால் அதற்கு அபிஷேகம் செய்வித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் ருத்ரம், நமகம் மற்றும் சமகம் ஒதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஸ்வாமி கஸ்தூரியை நோக்கி, "என்ன கஸ்தூரிஇதெல்லாம் உனக்குத்  தெரியாதாபாவம்உன் வாழ்க்கை பூராவும் பாடம் கற்பதிலேயே கழிந்து விட்டது. இதையெல்லாம் நீ எப்படி கற்றுக் கொள்ள முடியும் ?” என்றார். பத்ரியிலிருந்து திரும்பியபின் கஸ்தூரி அந்த மந்திரங்களனைத்தையும் கற்றுக்கொண்டு, ஸ்வாமி குளிக்கும்போது அவரது அறையில் அவற்றை ஓதினார். ஸ்வாமி ஸ்நானம் செய்தபின் அவரது திருக்கமலப் பாதங்களில் ஒவ்வொரு நாளும் வில்வதளங்களும், துளஸி தளங்களும் சமர்ப்பிப்பார். ஸாக்ஷாத் சிவனுக்கே பூஜை செய்யும் எத்தகைய பாக்கியம் அது!


🌹நாமமும் ரூபமும்:

ஒருமுறை புனித யாத்திரை சென்ற கஸ்தூரி,  அநேகமாக அனைத்து கோயில்களிலுமே ஸ்வாமியின் தரிசனத்தைப் பெற்றதாக உணர்ந்தார். திரும்பியவுடன்  ஸ்வாமிக்குத் தன் நன்றியைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கான பதில்மடலில் சுவாமி, "நாமமும் ரூபமும் வெவ்வேறல்ல. நாமம் ரூபத்தைக் காட்டும் ரூபம் நாமத்தை நினைவுபடுத்தும். ஆகையினால் உன் ஹ்ருதயத்தில் சதா சர்வகாலமும் நாமம் களிநடம் புரிகையில்,  நீ ரூபத்தைப் பார்ப்பது இயல்பான நிகழ்வு தானே" என்று எழுதியிருந்தார். சுவாமியின் இந்த அறிவிப்பில் நாம் உணரும்படியான படிப்பினை யாதெனில், “சதா நாமத்தை ஹ்ருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தால், இறைவனின் ரூபத்தயும் காண முடியும்”.


🌹 நவீன விஞ்ஞானிகளும் - ராவணனும்:

ஒருமுறை கஸ்தூரியிடம் சுவாமி, ஒரு எளிய கேள்வியை எழுப்பினார் "ராவணனின் மிகப்பெரிய தவறு என்ன?" அந்தக் கேள்விக்கு கஸ்தூரியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு சுவாமியே இவ்வாறு பதிலளித்தார்: "ராவணன் பிரகிருதியை அவளது தலைவனிடமிருந்து பறித்துக்கொண்டான். இன்றைய விஞ்ஞானிகளும் அதே தவறைச் செய்கின்றனர்சீதை தான் பிரகிருதி; ராவணன் அவளைக் கடத்திச் சென்றான்.  அதேவிதமாக அறிவியல் இயற்கையைச் சுரண்டி, பின் இயற்கையை வென்றதாகப் பெருமிதம் கொள்கிறது. அத்தகைய விஞ்ஞானிகளும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டாடுபவர்களும் அழிவுக்கு ஆளாக நேரிடும். இயற்கையின் இறைவனான இராமனின் அறிவுரைக்கு அன்று இராவணன் செவிசாய்க்கவில்லை. அதுபோலவே இன்றைய அறிவியலுக்கு உயிர்களின் மீது மரியாதையும் மதிப்பும் இல்லை; காயப்படுத்தவும் அவமதிப்பதற்கும் அஞ்சுவதில்லை. மேலும் பிரகிருதியின் எஜமானான இறைவனையும் நவீன அறிவியல் மறுக்கிறது."

 

🌹 சுவாமியின் தனிப்பட்ட கவனம்:

திரு.கஸ்தூரியின் ஆரோக்கியம் குறித்து ஸ்வாமி மிகவும் அக்கறை காட்டுவார். அவருக்கு அறுபது வயதாகும்போது அவரைக் குறைவாக உண்ணும்படி கூறினார். அவருக்கு எண்பது வயதானவுடன் அவரை அதிகம் சாப்பிட வைத்தார். தன்னுடன் உணவு உண்ணுமாறு அழைப்பதுடன் அவர் நிறைய சாப்பிடுகிறாரா என்றும் ஸ்வாமி பார்த்துக் கொண்டார். ஸ்வாமி இனிப்புத் தின்பண்டங்கள் ஏதேனும் வரவழைக்கும் போது கஸ்தூரி, தனக்குக் கிடைத்ததில் ஒரு பகுதியைத் தன் கைக்குட்டையால் சுற்றி வீட்டிற்குக் கொண்டு செல்வார். ஒருமுறை அவர் அவ்விதம் எடுத்துச்செல்வதைக் கண்ட ஸ்வாமி, "இது மாதிரி இவற்றை இந்த உலகுக்கு அப்பாலும் எடுத்துச் செல்ல திட்டமிடுகிறாயாஇங்கு என்ன இருக்கிறதோ அதை இங்கேயே அனுபவிக்க வேண்டும்" என்றார். அன்றைய தினத்திலிருந்து அதுபோன்ற புனிதமான பிரசாதங்களை சுவாமியின் அருகாமையிலேயே அவர் உண்ணும்படியானது.


🌹 அடையவேண்டியதை அடைந்துவிட்டார்:

1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, திரு.கஸ்தூரி அவர்களினுடைய உடல் நலம் குன்றி மிகவும் பலவீனமானார். டாக்டர்கள் சுவாமியிடம்  தெரிவித்த போது சுவாமி, "பிறப்பை இறப்பு தொடர்வது திண்ணம். யாரும் இங்கு நிரந்தரமானவர் இல்லை. இந்த சரீரமும் கூடத்தான்”, எனக் குறிப்பிட்டார். அதோடு திரு.கஸ்தூரி அவர்களின் உறுதியான நம்பிக்கையைப் புகழ்ந்தார். "அவன் தொடர்ச்சியாக பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் என்னை தரிசித்த முதல் நாளிலிருந்து இறுதிவரை என் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை தளரவேயில்லை” என்றார்.


அதேநாளில் மாணவர்களின் நாடக ஒத்திகையைப் பார்க்க கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்ற சுவாமி திடீரென்று எழுந்து, "நான் ஆஸ்பத்திரிக்கு சென்று கஸ்தூரியைப் பார்க்க வேண்டும்", என்றார். உள்ளே நுழையும்போதே, கஸ்தூரி, கஸ்தூரி என கூப்பிட்டுக் கொண்டே வந்தார் ஸ்வாமி. அந்த அழைப்புக்காகவே காத்துக் கொண்டிருந்த கஸ்தூரி  தன் கண்களை உடனே திறந்தார். நமஸ்காரம் செய்யும் பொருட்டு இரு கைகளையும் இணைக்க முயன்றார். ஸ்வாமி அவரது இரு கைகளையும் பற்றிக் கொண்டார். அவரைப் பார்த்துக் கொண்டே விபூதி வரவழைத்துக் கொடுத்தார். ஸ்வாமி கூறினார். "இன்னும் ஒரு மணிநேரம் தான் இருக்கிறது. அவன் உலகப்புகழ் பெற்றவனாதலால்இசைக் கருவிக் குழுவுடன் கூடிய ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”. எல்லாம் முடிந்தவுடன் தனக்குத் தெரிவிக்குமாறும், கூட்டாக "ஓம் ஸ்ரீ ஸாயிராம்" உச்சாடனம் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

மதியம் 12.30 மணிக்கு கஸ்தூரியின் உடலை சோதித்த டாக்டர், "எல்லாம் முடிந்து விட்டது" என்றார். சுவாமிக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பஜனை செய்யுமாறு ஸ்வாமி சொல்லியனுப்பினார். அந்த உடலின் மீது வைக்கும் பொருட்டு ஸ்வாமி ஒரு மாலையை ஸ்வாமி காருண்யானந்தர் மூலம் அனுப்பியிருந்தார். மாலை ஏழு மணிக்கு பஜனையை நிறுத்துமாறும், பிறகு கதவு பூட்டப்பட்டு காலை ஆறு மணிக்குத்தான் திறக்கப்பட வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார். மறுநாள் காலை ஆறுமணிக்கு கதவைத் திறந்த டாக்டர் மலைத்துப் போனார். அறை முழுவதும் நறுமணம் பரவியிருந்தது. காற்றில் நறுமணம் நிறைந்திருந்தது. உயிர்நீத்த கஸ்தூரி முகத்தில் ஜீவகளை காணப்பட்டது. இது சுவாமியிடம் தெரிவித்தபோது அவர், "இரவு முழுவதும் நான் அங்கிருந்தேன்” என்றார்.


ஆகஸ்ட் 15-ம் நாள் சுதந்திரதினம், பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும், கொடியேற்று விழாவை முடித்துவிட்டு, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்வாமி பணித்தார். உணவு விடுதியைக் கூட மூடிவிடுமாறு அறிவுரை அனுப்பப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. ஊர்வலத்தில் வாத்திய இசைக்குழு வேத பாராயணம், பஜனை எல்லாம் ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை திரு.கஸ்தூரி அவர்களின் குடும்பத்தினரனைவரும் தரிசனத்துக்காக முதல் வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தனர். சுவாமி கஸ்தூரியின் மகளான பத்மம்மாவிடம் கூறினார்,"எதை அடையவேண்டுமோ அதை அவன் அடைந்து விட்டான். நீ எந்தவித சடங்கும் செய்ய வேண்டாம்".

அனாயாஸேன மரணம்

வினா தைன்யேன ஜீவிதம்

அந்தியகாலேன தவநாமஸ்மரணம்

தேமே க்ருப்யா ஸாயி த்வயி பக்திமசஞ்சலம்

"லோ கா ஸமஸ்தா சுகினோ பவந்து"

ஜெய் சாயிராம்


மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர் 

1 கருத்து: