தலைப்பு

சனி, 6 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ நாராயணகிரி சுவாமிகள் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு தூய துறவி எவ்வாறு ஆன்மீகத்தில் மகானாக அகமாற்றம் அடைந்தார்...? பாபாவை எந்த வடிவில் தனது முதல் தரிசனத்தில் கண்டார்...? சமாதி அடைகையில் அவரது குரு அவருக்கு சொல்லிய ரகசியம் என்ன? தன் காலில் விழுகிற போது அன்பர்களிடம் அவர் சொன்ன செய்தி என்ன? சுவாரஸ்யமாக இதோ...


அது 1904. 118 வருடங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் நரேந்திரா... சுவாமி விவேகானந்தரின் இயற்பெயரும் இதுவே! மத்திய பிரதேசத்தில் ராஜபரம்பரையில் பிறக்கிறார் நரேந்திரா... சிறுவயது முதலே சிவபக்தி அதிகம்...! ஜபமும் பூஜையும் இறைவன் சிவனுக்கு அந்த சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறார்... அந்தக்காலத்தில் நாம் சொப்பு விளையாடுவோம்... இப்போது வீடியோ கேம்ஸ் ஆனால் அவருக்கோ விளையாட்டே பூஜையாகிறது! எப்பேர்ப்பட்ட தவ ஆன்மாவாக இருந்திருப்பார்! அந்த சிவபூஜை அவருக்கு பற்றின்மையை தருகிறது.. பழுத்த இலை மரத்தில் தங்குவதில்லை.. பழுத்தால் பிரிவு வலிப்பதில்லை...!

குடும்பத்தின் அனுமதியோடு அவர்களைப் பிரிந்து இமாலயம் செல்கிறார்.. தவச்சுரங்கமே அங்கே தான் குளிர குளிர கனிந்திருக்கிறது! அங்கே ஜுனாகாத் சென்று ஸ்ரீ சங்கரகிரி சுவாமிகளை தரிசிக்கிறார்! அவருடைய ஞான போதனையால் ஆன்மீகத்தில் முன்னேறுகிறார்! சில ஆண்டுகள் கடந்து அவருடைய குருவால் ஸ்ரீ நாராயண கிரி சுவாமிகள் என சன்யாச தீட்சாநாமம் பெறுகிறார்! ஆன்மீகப் பயண இலக்கு சுவாமியே ஆனால் அதற்கான வழிகாட்டிகள் குரு மகான்களே...! பேராசைக்காரர்களும் ஆணவக்காரர்களும் போலியான சாமியார்களிடமே மாட்டிக் கொள்வர்.. உண்மையான ஆன்ம தாகம் மிகுந்தவர்களே உண்மையான மகான்களை கண்டடைவர் என பகவான் ரமணரே ஒருமுறை பகிர்ந்த சத்தியம் இது!


அவரது குரு சமாதி அடையும் நிலையை எய்துகிறார்... "நீ விரைவில் சத்தியத் திருவுருவை தரிசிக்கப் போகிறாய்! அவரே நித்திய வஸ்து! சர்வ நிரந்தரம்! அவரின் தெய்வீக ஒளியை நீ அனுபவிப்பாய்! அப்போது நீ மிக உன்னத அமைதியில் ஆழ்வாய்!" என ஸ்ரீ சங்கரகிரி சுவாமிகள் திருவாய்மலர்கிறார்! இவர் தான் குரு! குரு எப்போதுமே மெய்வழியிலேயே இட்டுச் செல்வார்! பிறகு குரு சமாதி ஆகிறார்! ஆம் ஆதியோடு சமமாக கலந்து போகிறார்.. அதுதான் சமாதி!


ஒருமுறை லூதியானாவிற்கு ஸ்ரீ நாராயண கிரி பயணிக்க அங்கே பண்டிட் வசந்த் குமார் அவர்களை சந்திக்கையில் "கடவுளுக்காகவும் அமைதிக்காகவும் நான் எங்கேயும் அலைவதே இல்லை... கடவுள் ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக அவதரித்திருக்கிறார்! அங்கே பிரசாந்தி நிலையத்தில் நீங்கள் சென்றால் பேரமைதி வாய்க்கும்... கணக்கில்லா கருணை பிரம்மாண்டம் பாபா" என்கிறார் மிக தீர்க்கமாக...

"கடவுள் இப்படி மனித வடிவில் உதிக்க முடியுமா?" ஒரே சிந்தனை ஸ்ரீ நாராயண கிரி சுவாமிகளுக்கு... அவரின் அத்தனை சந்தேகங்களையும் பண்டிட் தீர்த்து வைக்கிறார்! சிந்தனையில் சந்தேகம் இருந்தால் தெளிவு பிறக்கும் ஆனால் சந்தேகமே சிந்தனையாக இருந்தால் அது சத்தியத்தை நோக்கி இட்டுச் செல்லாது!


சரி பாபாவை தரிசிப்போம் என முடிவு செய்கிறார் சுவாமிகள்... அவர் எனக்கு சிவதரிசனம் தந்தால் மட்டுமே அவரை கடவுளாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என மனதில் நினைத்துக் கொண்டே... புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் வருகிறார்... முதல் வரிசையில் தரிசன பாக்கியம் கிடைக்கிறது! பாபா காவி உடையில் நடந்து வருகிறார்... சுவாமிகளுக்கோ அது கண்களுக்கே தெரியவில்லை... புலித்தோல் உடுத்தி ஜடாமுடியுடன் ஜோதிரூபமாக பாபா நடந்து வருவதையே தரிசிக்கிறார்... இமயத்திலிருந்து வருகிறவர் கைலாசத்திற்கே சென்றது போல பரவசப்படுகிறார்... பாபா அவரை கடந்து போகிறார்... "பாபா.. பாத நமஸ்காரம் செய்ய மறந்துவிட்டேனே... இந்தப் பாவிக்கு அது கிட்டுமா?" என மனதில் நினைக்கிறார்... ஒரு தூய துறவி தன்னை பாவி என்கிறார்.. சாதாரண மனிதர்கள் நாம் நம்மை என்ன சொல்லிக் கொள்வது...?! அவர் மனதில் நினைத்த அடுத்த நொடி பாபா அவரை நோக்கி திரும்பி அவர் முன் வந்து "பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்!" என்கிறார்... மானசரோவரில் ஓடுகிற நதியை தன் கண்வழி சுவாமிகள் கொட்டி பாபாவுக்கு அபிஷேகமே புரிந்துவிடுகிறார்! சமாதிக்கு முன் தன் குருநாதர் சொன்ன வாக்கு எத்தனை சாத்தியமானது எனப் புரிகிறது சுவாமிகளுக்கு...!


பிறகு 1986 ல் தனது 82 ஆவது வயதில் புட்டபர்த்தி வருகிறார் சுவாமிகள்... "எப்போது திரும்பிச் செல்கிறாய்?" என பாபா கேட்க.. மூன்று நாள் கடந்து என்கையில் சரி மாலை நாம் சந்திப்போம் எனச் சொல்கிறார் பாபா... நேர்காணலில் பாபா "நீ என்ன செய்து வருகிறாய்? "குரு கிரந்த் வாசிக்கிறாயா? "சரி சரி வேறென்ன செய்கிறாய்?" என பாபா கேட்கிற ஒவ்வொரு கேள்விகளுக்கும் கண்ணீர் பொங்க நிற்கிறாரே தவிர சுவாமிகளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை... பக்தி இறைவனை நேருக்கு நேர் சந்திக்கிற போது என்ன பேசிவிடும்? பேச என்ன இருக்கிறது?! "நீ சிவரூபத்தை வழிபடுகிறாயா?" என பாபா கேட்க..."ஆம் நான் வழிபடுகிறேன்!" என்று சொன்னால் அகந்தையாகிவிடுமே என மனதிற்குள் சுவாமிகள் நினைக்க.. பாபா ஒரு லிங்கத்தை சிருஷ்டி செய்து தருகிறார்...இதனை தினந்தோறும் அபிஷேக ஆராதனை செய்யச் சொல்கிறார்... அது ஒரு பிரத்யேக சிருஷ்டி லிங்கம்... அதை உற்று கவனித்தால் பாபா நின்று ஆசீர்வதிப்பது அந்த லிங்கத்தினுள் பளிச்சிடும்...! பிரம்மிக்கிறார் சுவாமிகள்!


"சுவாமியை தரிசித்த பிறகே அடியேன் ஆன்மீகப் படிநிலைகளில் உயர்ந்தேன்! காரணம் அவர் எனக்குள் உறைந்திருக்கிறார் என்பதை அணுஅணுவாக உணர்கிறேன்! பாபாவை விட எனக்கு வேறேதும் பெரிதாகவும் முக்கியமாகவும் தோன்றவில்லை...என் உடம்பே பிரசாந்தி நிலையம் ஆகிவிட்டது! இதுவரையோ இதற்கு முன்னமோ இப்படி ஒரு இறைவனை எங்கேயும் கண்டதே இல்லை !" என அகம் திறந்து கேட்கிறவர்களுக்கு தெளிவு தருகிறார்! 

சாயிசரஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் (Authors of "Light of Lights) ஏதாவது பாபாவை பற்றி பேசமுடியுமா? என கேட்கிற போது..

"ஆச்சர்யங்களுக்கெல்லாம் ஆச்சர்யம் பாபா - அதிசயங்களுக்கெல்லாம் அதிசயம் பாபா" என கண்ணீர் ததும்ப மொழிகிறார்... சுவாமிகளின் பாதங்களில் விழப்போன இருவரையும் தடுத்து..."இறைவன் சிவன் அங்கே இருக்கிறார்.. அங்கே செல்லுங்கள்!" என பிரசாந்தி நிலைய திசையை நோக்கி கைக்காட்டுகிறார்!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 139) / Author : Jantyala Suman babu / Translation : Pidatala Gopi Krishna | Source : Sathyam Shivam Sundaram ch5 - 42,45/ Light of Lights - pg 113) 


ஆழ்ந்த ஆன்ம சாதனை ஒருவருக்கு நிகழ நிகழ பாபாவே பரப்பிரம்மம் என்பதை உணர முடிகிறது! அதனை உணர உணர ஆன்மீக வாழ்க்கை விடிகிறது! இறைரூபம் முக்கியமல்ல தூய பக்தியே முக்கியம்! இறைவன் பாபாவோடு மனம் நடத்துகிற பேரம் அல்ல மனித இதயத்தினுள் இருக்கிற ஈரமே இறைவன் பாபா கவனிக்கிறார்... பக்தி பக்குவத்தையே தருகிறது.. பக்குவம் ஞானத்தையும் ஞானம் பேரின்பத்தையும் தருகிறது! சுவாமிகளுக்கு தந்தது போலவே...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக