தலைப்பு

வியாழன், 29 ஜூன், 2023

திசைதோறும் தியான நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் சாயி வட விருட்சம்!

வட விருட்சம் ஏன் உருவானது? எதற்காக உருவானது? அதனுடைய முக்கியத்துவம் என்ன? மற்ற மரங்களை போல் அது வெறும் ஒரு மரமா? உண்மைகள் உடைக்கப்பட்டு ஆன்மீக உற்சவம் ஏறுகிறது சுவாரஸ்யமாக இதோ...


அது 1959. பாபா சித்ராவதி மணலில் பக்தர்களோடு கூடி இருக்கிறார்! தினந்தோறும் சித்ராவதி மணலில் சித்திர விசித்திர அற்புதங்களை பாபா நிகழ்த்துவது வழக்கம்! 

அது போல் அன்று ஒரு நாள். அது இரண்டு மாதங்களுக்கு முன்பு... ஆம் சரியாக ஏப்ரல் மாதத்தில்... அந்த மாலை நேரத்தில் பக்தர்கள் மத்தியில்  குளிர் முகம் தவழ அமர்ந்திருக்கிறார் பாபா!

வழக்கம் போல ஏதாவது ஒரு சிருஷ்டி லீலை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்! 

சித்ராவதி நதிக்குக் கூட அப்போது அங்கே என்ன நிகழப் போகிறது? எனும் ஒரு யோசனை இருக்க வாய்ப்பே இல்லை! 


மணலுக்குள் இருந்து மணல் ஒட்டாமல் வரப்போகும் சூடான மைசூர் பாகுகளா? அல்லது  தெய்வச் சிற்பங்களா? பாபா எதனை மணலுக்குள் இருந்து சிருஷ்டிக்கப் போகிறார்? பக்தர்கள் மத்தியில் ஒரே ஆவல்! ஒரே பரபரப்பு! 

பாபாவோ மணல் மேல் தனது விரல்களால் சதுரம் போடுகிறார்..‌எதை எதையோ வரைகிறார்...எதை எதையோ எழுதுகிறார்... பிறகு மணலுக்குள் தனது கைகளை விடுகிறார்.. இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை என்பதால் சுற்றி இருந்த பக்தர்கள் மேலும் பரவசப்படுகிறார்கள்! பாபா அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே

சூட்டோடு சூடாக ஒன்றை மணலுக்குள் இருந்து எடுக்கிறார்!

யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு வஸ்து! பளபளப்பாக மாலை சூரியன் மோத அது மேலும் மின்னிக் கொண்டிருக்கிறது..

பாபா அதனை எடுத்து அனைவருக்கும் காட்டுகிறார்.. மணலில் இருந்து அதை எடுத்ததால் சில மணல் துகள்கள் கீழே உதிர.. மனமும் உதிர்வதற்காகவே அதனை எடுத்துக் காட்டுகிறார் என்று அப்போது யாருக்குமே தெரியவில்லை! 

இப்படி ஏன் எதையோ ஒன்றை திடீரென பாபா எடுக்க வேண்டும்?


பாபா வழக்கமாக சிருஷ்டி லீலைகள் மட்டுமல்ல ஞான கீதையையும் அந்த சித்ராவதி மணலில் உபதேசிப்பார்! ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அங்கேயே  வெளிப்படுத்துவார்! அதுபோல் அன்றும் புத்தரைப் பற்றியும் , போதி மரத்தைப் பற்றியும் பேச்சு எழுகிறது! 

புத்தர் வேறு பாபா வேறு அல்ல! ஆக அப்படி பாபா ஞானாவதாரமான புத்தர் சார்ந்த விஷயங்களை பேசியபடியே ஒன்றை எடுக்கிறார்! அது ஒரு காப்பர் பிளேட்... அதில் நிறைய மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன...!

தகடு என்பார்கள்.. ஆனால் கொஞ்சம் பெரியது! 10 அங்குலம் - 15 அங்குலம் என அளவியலில் செவ்வக (rectangle) வடிவம் அது! போதி மரத்தைப் பற்றி பேசிவிட்டு இதை ஏன் இப்போது சிருஷ்டித்து எடுக்கிறார்? என்று யாருக்குமே புரியவில்லை! 

மனிதனின் அகச் சூட்டை தணிப்பதற்காக சுடுகின்ற மாலையில் சூட்டோடு சூடாக எடுக்கப்பட்ட எந்திரம் அது!

அதில் பொறிக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டி மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் என்கிறார் பாபா! மேலும் பாபா இது வரப்போகிற காலத்தில் ஆன்ம சாதகர்களுக்கு மிகப்பெரும் பயனை அள்ளி அள்ளித் தரப்போகிறது என்கிறார்! அப்போது அது யாருக்குமே புரியவில்லை... சரி! இப்போது மட்டும் அது புரிந்து விட்டதா?

அவர்களோ சாதாரண அப்பாவி ஜனங்கள் ஆகவே புரியவில்லை.. இப்போது அறிவிற் சிறந்தவர்கள் பக்தர்களாக நிரம்பி வழிந்தும் அந்த யந்திர மகிமை இப்போது மட்டும் நமக்கு புரிந்து விட்டதா?


ஆக.. அப்போது பாபா அதனை சிருஷ்டித்து இரண்டு மாதம் கடந்து போகிறது! சிலர் அந்த யந்திரத்தைக் கூட மறந்து போய்விடுகிறார்கள்! ஆனால் பாபா அதை மறக்கவே இல்லை! மிகச் சரியாக 29 ஜுன் 1959 ஆம் ஆண்டு அதனை மலை மேல் ஒரு அழகான பகுதியில் ஆழமாய்ப் புதைத்து , தனது தெய்வீக சக்தியை மேலும் அதற்கு அளித்து ஒரு ஆலஞ் செடியை நட்டு வைக்கிறார்! ஆலஞ்செடிக்கு தெய்வீக அதிர்வலைகளை உள்ளிழுத்து வெளிப்படுத்தும் ஆற்றல் இயற்கையாகவே இருக்கிறது! ஆகவே தான் பாபா வேறெந்த செடியையும் நடாமல் , ஆலஞ்செடியை நடுகிறார்! இதன் அடிவாரத்தில் உலக ஆன்மீக சாதகர்கள், யோகிகள் திரள்வார்கள் என்று அன்று பாபா உள்ளர்த்தத்தோடு பேசுகிறார்! அந்த நாள் இன்று! எல்லோரும் அப்போது வியக்கிறார்கள்! 

மனிதனின் முதல் நோய் மறதி என்பது போல் பலர் அதன் மகிமையை மறந்தே போய்விடுகிறார்கள்!

பாபா சொன்ன யோகிகள், ஆன்ம சாதகர்கள், தவசிகள் இவர்கள் அனைவரும் எங்கிருந்தோ அல்லது இமாலயத்தில் இருந்தோ தான் வருவார்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம்... பாபா சொன்ன உள்ளர்த்தம் அது இல்லை!

தனது ஒட்டு மொத்த உண்மையான பக்தர்களே நாளை இந்த தபோவன நிழலில் வந்து ஆன்ம சாதகர்களாக அமர்ந்து யோகிகள் ஆவார்கள் என்பதே பாபா நம்மிடம் உணர்த்தியது!

இதை வட விருட்சம் என்று அழைக்கிறோம்!.


"ஓம் ஸ்ரீ சாயி சாதனானுகிரக வட விருக்ஷா பிரதிஷ்டாபகாய நமஹ"

(ஆன்ம சாதகர்களுக்கு அனுகிரகம் செய்வதற்காக வடதிசையில் தியான மரம் நட்டவருக்கு நமஸ்காரம்)

என்று சாயி அஷ்டோத்திரத்தில் தினந்தோறும் இந்த மந்திரத்தையும் சேர்த்து உச்சரிக்கிறோம்! ஆனால் ஒரு முறையேனும், ஒரு அமர்வேனும் இதில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என்று  ஒருமுறையாவது நாம் நினைத்திருக்கிறோமா?

    இல்லற வாழ்க்கை எனும் கனமான பூட்டின் சாவியே இங்கே தான் இருக்கிறது என்பதை இன்னமும் உணராமல் பொருள் குவிந்திருக்கும் அங்காடிகளுக்குள்ளேயே புட்டபர்த்தியிலும் பிரசாந்தி நிலையத்திலும் நாம் சுற்றி வருகிறோம்! இது ஆன்ம நியாயமா? இது தான் ஆன்மீகமா? 

இது சாதாரண மரமல்ல... மிக சக்தி வாய்ந்த யோக சாந்தித்யம் நிறைந்த அதிர்வலைகளால் அந்த ஆலமரமே இப்போது ஒரு இதிகாச ரிஷியாக விஸ்வரூபம் எடுத்து ஓங்கி உயர்ந்திருக்கிறது! இன்னமும் அந்த யந்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிற சிறு சிறு சக்கரங்களும் , தெய்வீகக் கோணங்களும், ஆன்மீக பீஜாட்சர எழுத்துக்களும் உயிரோட்டமாய் , வட்டவடிவமாய்ச் சுற்றியபடி இயங்குகின்றன... அங்கே அமர்ந்து கண்களை மூடி தியானத்தின் ஆழம் சென்றால் அதன் ரீங்காரத்தை இன்றளவும் காதுகளில் கேட்க முடிகிறது!

அப்பேர்ப்பட்ட அந்த மரத்தடிக் கிளியாய்க் கூட பிறக்க வேண்டும் என்றே அடியேனுக்கு நினைக்கத் தோன்றுகிறது! 

வீணான மனிதப் பிறவி எடுத்து அந்த தியான மரத்தைத் தவிர வேறு எல்லா இடங்களுக்கும் சுற்றி பார்த்துப் பொழுதைக் கழிக்கும் வேடிக்கை மனிதரா நாம்? இல்லவே இல்லை! பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயி இறைவனின் பக்தர்கள் நாம் என்பதற்கு என்ன தான் பிற மனிதர்களிடம் இருந்து நாம் வித்தியாசப்பட்டிருக்கிறோம்?

பாபா தியான மரம் நட்ட 64 ஆவது ஆண்டு இது! அந்த நாளும் இன்று! குறைந்தது 64 பக்தர்களாவது ஒன்றிணைந்து அங்கே அமர்ந்து தியானம் செய்ய வேண்டாமா? அப்படி இதுவரை செய்திருக்கிறோமா? அந்த மரத்திடம் இருந்து வெளி வருகிற மூச்சுக் காற்று சாட்சாத் பாபாவின் மூச்சுக் காற்று இல்லையா? அதை எப்போது ஆன்மா வரை நாம் அனுபவிக்கப் போகிறோம்? 

அதன் கிளைகள் வேத காலத்து ரிஷிகள் யோகாசனம் செய்வது போல் பின்னிப் பிணைந்திருக்கும்...! கவனித்திருக்கிறீர்களா? அது மரமே இல்லை! 

தியானத்தின் தாவர வடிவம் அது! நமது பிறவியை முடித்து பாபாவின் பாதார விந்தங்கள் எனும் தெய்வீகக் கரை சேர்க்க கை நீட்டி நம்மை அரவணைக்கக் காத்திருக்கும் விஸ்வரூபத் துடுப்பு அது!

இப்படி ஒரு தியான விருட்சம் இதற்கு முன் இல்லவே இல்லை! பாபா தனது புத்த அவதாரத்தில் கூட தியான மரம் நடவில்லை! கலியுகத்தில் ஆன்மீகத்தையே சுலபமாக்கிய ஒரே ஒரு புரட்சிகர இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா மட்டுமே!


ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக ஆசை ஆசையாய் சமைத்து வைத்து ஊட்டுவதற்காக காத்திருப்பது போல் நமக்காக,நமது ஆன்மீக முன்னேற்றத்துக்காக மட்டுமே நமது உண்மைத் தாயான பாபா தியான மரத்தை நட்டு வைத்து இன்றளவும் காத்திருக்கிறார்!

நாம் இன்னமும் குழந்தைத்தனமாக பக்குவமின்றி உலக விளையாட்டுகளில் ஈடுபட்டு, ஆசைச் சகதியில் விழுந்து எழுந்து அதுவே சுகம் என்று இன்னமும் எத்தனை நாளைக்கு நமது சாயித் தாயை காக்க வைக்கப் போகிறோம்?


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. நாம் நம் சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே.ஒவ்வொரு நிமிடமும் ஸ்வாமியுடன்..(அவர் சொற்படி )வாழும்போது..கவலைக்கோ..சந்தேகத்திற்கோ இடமில்லை. நாம் வாழ்வதே போதிமரத்தடியில்தான்..ஸ்வாமியோடு!!👍

    பதிலளிநீக்கு