தலைப்பு

செவ்வாய், 20 ஜூன், 2023

விஷத்தை முறித்த இரு அமுத அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் தோன்றிய அவதாரம் தனது தனிச்சிறப்போடும்... அதே சமயம் ஒருமித்த அடையாளத்தோடும், ஒருமித்த சம்பவத்தோடும் திகழ்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சுட்டிக் காட்டும் பதிவு இதோ...!


கம்சனின் அசுரப் படையில் ஒருத்தி பூதனை, அவள் ஒரு தேர்ந்த  குழந்தைக் கொலையாளி! எங்கெல்லாம் குழந்தையின் அழுகுரல் கேட்கிறதோ அங்கே எல்லாம் மோப்பம் பிடித்து தனது தனத்தின் விஷப்பாலை அருந்த வைத்து குழந்தைகளை கொன்றுவிடுவாள்! ஏன்? அது கம்சனின் கட்டளை! ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்திருப்பதால் அவரால் தமது உயிருக்கு ஆபத்து என பகையை முளையிலேயே கிள்ளி எறிய... இந்த நேரடி விஷப்பால் ஏற்பாடு!

அப்போது பூதனை நுழைகிற இடம் நந்த கோபரின் கோகுலம்! ஒவ்வொரு வீடாக மோப்பம் பிடிக்கிறாள்... அதை அறிந்த குழந்தை கிருஷ்ணர் அவள் கவனத்தை கலைக்க அழுகிறார்...அவளும் அழுகையின் திசை தேடி வேட்டையாட நுழைகிறாள்..

ஸ்ரீ பால கிருஷ்ணருக்கு விஷப் பால் தர.. அதை விட கொடூரமான வேஷ பாசத்தை முகத்தில் காட்டி சுவாமியை தூக்குகிறாள்! யசோதையும் ரோகிணியும் ஸ்ரீ பால கிருஷ்ணரின் மேல் அவள் வைத்த கவனத்தை எவ்வளவோ தடுக்க முயன்றும்... அதை எல்லாம் சட்டையே செய்யாமல் சட்டம் போல் சுவாமியை வளைக்கிறாள் பூதனை... பால் தருகிறாள்..

 

விஷத்தையே விழுங்கி ஏப்பம் விடும் இறைவன் பூதனையின் தனத்தை உறிய உறிய விஷப்பால் வற்றி ரத்தம் கசியக் கசிய ரத்தமும் வற்றி உயிரை விடுகிற போது அழகான மாயத் தோற்றம் நீங்கி அசுரத் தோற்றத்தில் தரையே பிளக்கும் சப்தத்தோடு சாய்கிறாள் அவள்! இறைவன் கைகள் பட்டு இறந்ததால் அவள் உடல் எங்கும் நறுமணம் கமழ்கிறது... செய்த பாவம் எல்லாம் அழிந்து போகிறது! துவாபர யுக விதிப்படி அசுரர்களை அழித்து அவர்களுக்கு நற்கதி அருள்வதற்காக எழுந்த அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்!

(ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம் : 10-221)


சொர்க்கத்தையே வெற்றி கொண்டு அந்த வெற்றிக் கொக்கரிப்பைக் கொண்டாடும் விதமாக நர்மதை நதியில் யாகம் வளர்த்து, கோலாகல விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் மாமன்னர் பலி... அந்த சமயத்தில் அதிதி, காஷ்யபருக்கு மகாவிஷ்ணு மகனாக அவதரித்து சிறு அந்தணக் குழந்தை ரூபம் எடுத்து அந்த வேள்விக்குச் செல்கிறார்! 

அந்த வாமன ரூபத்தை பார்த்த மாத்திரத்தில் பலிச் சக்கரவர்த்தியின் மகளான ரத்னமாலாவுக்கு அந்த தெய்வீகக் குழந்தையை அள்ளி அரவணைத்து மார்பில் வைத்து பாலூட்ட வேண்டும் போல் தோன்றுகிறது!


"பலி யக்னே வாமனஸ்ய திருஷ்ட்வ ரூபமத பரம் 

பலி கன்ய ரத்னமாலா புத்ர ஸ்நேகம் சகாரஹ

எததிருஷ்யோ யதி பவேத் பாலஸ்தம்ஹி சுஷிஸ்மிதம் 

பயாயமி ஸ்தானம் தேன ப்ரஸ்ஸனம் மனஸ்ததா!"


அந்த தெய்வீகக் குழந்தையை அப்படியே ரத்னமாலா அள்ளி அணைக்கிற போது இதற்கு பாலூட்டினால் எப்படி இருக்கும் என்ற உணர்வு மேல் எழுகிற போது.. வாமன மூர்த்தி "இஷ்ட காம்யர்த்த சித்தியர்த்தம் (உன் ஆசைகள் அப்படியே நிறைவேறட்டும் என்கிறார்!) பிறகு பலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு அதை அவர் தர... விஸ்வரூபம் எடுக்கும் வாமன மூர்த்தி இரண்டு அணிக்கு வானம் பூமியை அளந்து...மூன்றாவது அடிக்கு பலியின் தலைமேல் கால் வைத்து அவரை பாதாளத்தில் தள்ளிய போது.. பலியின் மகளான ரத்னமாலா "இவனுக்கா நாம் பால் ஊட்ட வேண்டும் என்று நினைத்தோம்! இவனுக்கு பால் அல்ல விஷத்தையே ஊட்ட வேண்டும்!" என்று ஆவேசப்படுகிறாள்... அவளே பூதனையாகப் பிறந்து வாமனர் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரிக்கையில் அவருக்கு தனது தனத்தால் விஷப்பால் ஊட்டுகிறாள்...! வாமனர் "உன் ஆசை அப்படியே நிறைவேறட்டும்!" என்பதும் அப்படியே நிறைவேறிவிடுகிறது!


(கர்க சம்ஹிதா , கோலோக காண்டம் - 13.30) 


இதே போல் தான் கலியுகத்தில் ஸ்ரீ சத்ய சாயியாக மகாவிஷ்ணு அவதரிக்கையில் பாபாவின் பால பருவத்திலேயே அவர் மேல் பொறாமையும் ஆத்திரமும் அடைந்து பலர் இன்னல் பல செய்திருக்கிறார்கள்! 

யார் அன்போடு அழைத்தாலும் தனது நண்பர் குழாமோடு அழைத்தவர் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் தருவதை அவர்கள் மனதிற்கு மகிழ்ச்சி தருவதற்காக பால பாபா உண்பார்! 

        

அப்படி ஒரு முறை ஒரு பெண்மணி பாபாவை  சிற்றுண்டிக்கு அழைக்க... அதற்குள் சில விஷமிகள் அவளின் மனதை நஞ்சேற்றியதில் அவளும் வடையில் நஞ்சேற்றி விடுகிறாள்! பிறகு வேஷ பாசத்தோடு பால் வடியும் பால பாபாவை வரவழைத்து சிற்றுண்டிக்கு உபசரித்து.. கைகள் நடுக்கமே இன்றி.. அவளின் ஈவு இரக்கம் கொல்லைப் புறமாக தப்பிச் செல்ல.. அந்த விஷ வடைகளை பாபாவின் தட்டில் இடுகிறார்! எதையும் அறியாதவர் போல் அந்த விஷத்தை கொஞ்சம் கூட புன்முறுவல் மாறாமல் பிட்டுப் பிட்டுச் சாப்பிடுகிறார் பாபா! பிறகு திடீரென வாய் திறந்து வாந்தி எடுக்கிறார்.. பிட்டுப்பிட்டுத் தின்ற வடைகள் எல்லாம் முழு முழு வடைகளாக வெளியே வருகிறது! திரும்பிப் பார்த்து அந்தப் பெண்மணியை ஒரு முறை முறைத்தவுடன் அந்தப் பெண்மணி அதிர்ந்து நடுங்கி பால பாபாவின் கால்களில் விழுந்தழுது தான் செய்த பாவத்திற்காக வருந்துகிறார்! அவரும் மறுநொடியே புன்னகைத்து வாஞ்சையோடு ஆசீர்வதிக்க... வேறொரு முறை அந்தப் பெண்மணி வீட்டுக்கு சென்றிருக்கும் போது "அன்று போல் ஸ்பெஷல் போஜனம் வேண்டாம்! சாதாரண போஜனமே போதும்!" என்று சொல்லி சிரித்தபடி வேடிக்கைப் பேசுகிறார்!


தீயவரை அழித்து  நல்லவரை காக்க வந்த துவாபர யுக தர்மத்திற்கான அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் 

தீயவரை அழிக்காமல் தீயவருக்குள் இருக்கும் தீமையை அழித்து அவர்களை நல்லவராக அகமாற்றம் அடையச் செய்வதே கலியுக தர்மத்து ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்!


"மஞ்சள் மணிகள் மூன்றடுக்கும்,மூக்கில் முத்து புல்லாக்கும் ,வலது காது மேல் முத்துக் காதணிகளும், மேல் சட்டை போன்ற எந்த நகைகளும் இல்லை...  இடுப்பில் பட்டும்... சிறு கைக்குட்டை போல் தலையைச் சுற்றியும் அணிந்திருக்கிறார்.. கவிகள் சொல்வது போல் எப்போதுமல்ல.. விசேஷ காலங்களிலேயே தலையில் மயிற்பீலியும்...  எப்போதும் நெஞ்சில் ஒரு பிறப்புக் குறியீடான மச்சம் இருக்கும் அதன் பெயர் ஸ்ரீவத்ஸம்! இது அவதாரங்களுக்கே உண்டான அறிகுறிக் குறியீடு! இந்த சாயி அவதாரத்திற்கும் அது இருக்கிறது!" என்று ஸ்ரீ கிருஷ்ணரின் அங்க அடையாளங்களை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!


ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணருக்கு அதே போல் நெஞ்சுப் பகுதியில் இருந்த மச்சத்தையும்  சில கொடுத்து வைத்த பக்தர்கள் தரிசித்திருக்கிறார்கள் நேரிலும் , கனவிலும்...! அது மட்டுமல்ல.. *பாபாவின் உள்ளங்கால்களிலும் சங்கு சக்ர முத்திரை இருப்பதையும் பக்தர்கள் சிலர் தரிசித்திருக்கிறார்கள்!*

புறப்போருக்கே சங்கு தேவை மனிதனின் மனப்போருக்கு அது தேவையில்லை... அழிப்பதற்கே சக்கரம், அகமாற்றம் அடையச் செய்வதற்கு அளப்பரிய பேரன்பே போதும்! என்கிற வகையில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கைகளில் ஏந்தி இருந்த சங்கையும் சக்கரத்தையும் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் கால்களில் ஏந்தி இருக்கிறார் என்றே அதனை உணர முடிகிறது!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 32 -36 | Author : Dr.J.Suman Babu) 


"ஓம் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணாய நமஹ" என்பதைத் தவிர என்ன மொழி சொல்லி இறை சாயியை வர்ணிப்பது , வியப்பது, துதிப்பது.. இந்த மூன்று செயல்களையும் நாம் ஒரே ஒரு செயல் செய்தால் அதிலேயே மூன்றுமே அடங்கிவிடுகிறது ... அதுவே பாபாவின் பாதங்களில் நமது நித்திய "சரணாகதி!"


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக