திடுதிப்பென்று எழுந்து பார்த்தால், நேரமாகிவிட்டிருந்தது. பதறிப்போய் மருத்துவமனைக்கு ஓடினார். ஆனால் அந்த மாணவர், டிஸ்சார்ஜ் ஆகிப்போயிருந்தார். 'இதென்ன, நான்தான் வந்து அழைத்துப் போகிறேன் என்றேனே! அதற்குள் என்ன அவசரம்!' என்று நினைத்தவர், வேகமாக விடுதிக்குத் திரும்பி வந்தார். அங்கே, அறையில் அந்த மாணவர் உட்கார்ந்திருந்தார். 'ரொம்ப ஸாரி! காலையில் அடிச்சுப் போட்டாப்ல தூங்கிட்டேன். என்னால வரமுடியாமப் போச்சு!' என்று நண்பர் சொல்ல, அந்த மாணவர் ஆச்சரியத்துடன், 'என்ன சொல்றே? நீதானே காலைல ஹாஸ்பிடல்லேர்ந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்தே?' என்றார் பதற்றமும் பரபரப்புமாக!
'நான் வரவேயில்லையே' என்று நண்பர் குழம்ப, அவரின் உருவத்தில் போய் அந்த மாணவரை அழைத்து வந்தது ஸ்வாமிதான் என்று புரிந்ததும், அங்கே இருந்த அன்பர்கள், வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திணறிப்போய் நின்றார்கள்.
நம் ஸ்வாமி நம்மோடுதான் இருக்கிறார்; எப்போது வேண்டுமானாலும் ஆபந்பாந்தவனாய் வந்து நம்மைக் காப்பார் என்ற நம்பிக்கை, பக்தர்கள் அனைவருக்குள்ளும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. புட்டபர்த்தியில் மட்டுமல்ல, ஸ்வாமியை அன்போடு வழிபடும் எத்தனையோ இடங்களில் ஸ்வாமி சத்யசாயிபாபா பிரத்யட்சப்பட்டிருக்கிறார். காட்சி தந்து அருள்வதும், மறைந்து நின்று அருள்வதும் இறைவன் இயல்புதானே! ஆழந்த அமைதியில் மனமுருகிக் கரைந்து, ஸ்வாமியை நினைத்திருந்தால் நம்முன் சாயி வந்து நிற்பார்!
ஆதாரம்: சக்தி விகடன் இதழில்... கவிஞர் பொன்மணி எழுதும் 'சத்தியம் நிகழ்த்திய அற்புதம்' தொடரில் இருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக