தலைப்பு

புதன், 14 ஜூன், 2023

இரு அவதாரத்தையும் வழிபடும் ஆதி சேஷன்!

எவ்வாறு பச்சிளம் குழந்தைப் பருவத்தில் ஆதி சேஷன் யுகம் கடந்தும் இரு அவதார விஜயத்திற்கும் அது செய்த வழிபாட்டுப் பங்கு என்ன? என்பதை ஆதாரத்துடன் சுவாரஸ்யமாக இதோ...!


சாந்தாகாரம் புஜக சயனம் 

பத்மனாபம் சுரேஷம்

விஷ்வாதாரம் ககன சதுர்ஷம்

மேக வர்ணம் சுபாங்கம் 

லஷ்மி காந்தம் கமல நயனம்

யோகி ஹ்ருத் தியான கம்யம்

வந்தே விஷ்ணும் பவபய ஹரம் 

சர்வ லோகைக நாதம் 


விஷ்ணு மாயாவினால் சிறைச்சாலை காவலாளிகள் எல்லாம் கடமை மறந்து மயக்கமுற்ற நிலையில் இருக்கிற அந்த அற்புத நள்ளிரவு ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ கிருஷ்ணராக தேவகி வசுதேவருக்கு அவதரிக்கிறார்! சிறைக் காவலாளிகளோ மயக்கத்தில் ஆகவே ஸ்ரீ மன் நாராயணர் சொல்லிய படியே வசுதேவர் யுகக் காவலாளியான ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு போர்வையில் அள்ளி அணைத்து கூடையில் வைக்கிறார்... அது பூஜைக்கேற்ற பூக்கூடையை காட்டிலும் புனிதமான கூடையாக மாறுகிறது! பிறகு தேவகி புடவையின் முந்தானை ஓரத்தை கிழித்து பச்சிளம் அவதாரக் குழந்தைக்கு இதமான தலையணை ஆக உருமாற்றி... பிறகு அந்த தெய்வீகக் கூடையை வேறொரு துணியால் மெதுவாய் மூடுகிறார்! அந்தக் கூடையை தன் தலை மேல் வைத்த போது அந்த நொடியே வசுதேவர் கழுத்திலும் கால்களிலும் பிணையப்பட்ட இரும்புச் சங்கிலி தானாக ஒரு மொட்டு அவிழ்வதைப் போல் அவிழ்கிறது! அது மட்டுமல்ல அவரின் தலை எழுத்தெனும் கர்ம கட்டுகள் யாவும் அந்த கணமே அவிழ்கின்றன... 

சிறைக் கதவு தானாக திறந்து கொள்கிறது எப்படி வானத்து சூரியக் கதவு விடியல் பொழுதில் திறந்து கொள்கிறதோ அப்படி...

பூர்ண அவதாரத்தை தலை மேல் வைத்து கொண்டாடிடும் முதல் பாக்கியம் பெற்ற வசுதேவர் அந்தத் தெய்வீகக் கூடையை தலை மேல் தாங்கி மெதுவாக சிறைவிட்டு நகர்கிறார்!


மாபெரும் அவதாரத்தை அண்ணார்ந்து தரிசிக்கிறது பூமி... தலை தாழ்த்தி தரிசிக்கிறது வானம்... எப்படி அதனால் சும்மா இருக்க முடியும்.. ஆகையால் வானம் தன் உடல் சிலிர்க்க ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது.. அது மழைத் துளியாக பூமியில் தெறிக்கிறது... வசுதேவரோ அந்த மழையில் நனைந்தபடி நடந்து செல்கிறார்... நம்மை கருணையில் நனைக்கும் இறைவன் மழையில் நனைவானே என சிறையை ஒரு முறை திரும்பிப் பார்க்கும் வசுதேவருக்கு திகைப்பு காத்திருக்ககறது.. அந்த சமயம் பார்த்து ஆதிசேஷன் தோன்றி சிறைக் கதவுகளை சார்த்திவிட்டு வேக வேகமாக வசுதேவர் பின் ஊர்ந்து வந்து அந்தக் கூடைக்கு குடை பிடிக்கிறது.. நந்தகோபரின் இடத்திற்கு செல்லும் வரை ஆதிசேஷனின் குடைபிடித்தல் தொடர்கிறது! இது இறைவன் ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ கிருஷ்ணராய் அவதரிக்கையில் ஆதிசேஷன் பூமிக்கு இறங்கி வந்து வழிபாடு செய்த செம்மையைக் குறிக்கிறது!

(ஆதாரம் : பாகவதம் : 10.3.48-49)


இதே போல் கலியுகத்தில் இறைவன் ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரிக்கையிலும் நிகழ்ந்திருக்கிறது! ஸ்ரீ ஈஸ்வரம்மா எந்த நேரம் வேண்டுமானாலும் எட்டாவது முறையாக பிரசவிக்கலாம் என்ற நிலை... ஒரு பாய் துணி விரித்து அந்த எட்டாவது பிறப்பை ஏந்த பயபக்தியோடு காத்திருக்கிறது! ஸ்ரீ மன் சத்ய சாயி நாராயண விரத தீர்த்த பிரசாதத்தை மாமியார் லஷ்மம்மா தனது மருமகள் ஸ்ரீ ஈஸ்வராம்பாவுக்கு வழங்க குழந்தை பிறந்து விடுகிறது..‌ தேஜோ மயம் பொருந்திய அந்த திவ்ய குழந்தையை அப்படியே பூப் போல அந்தப் பாயில் படுக்க வைக்கிறார் லஷ்மம்மா! சில நொடிகளில் அந்தப் பாய் தானாக நெளிவதைப் பார்த்து திடுக்கிடுகிறார் லஷ்மம்மா! உடனே குழந்தையை கையில் ஏந்த அந்தப் பாயை சற்று உயர்த்த அந்தக் காட்சியை கண்டு உயிர் உறைய திடுக்கிட்டு அசைவற்று இருக்கிறார் அவர்! அந்தப் பாயின் அடியில் கருநாகம் (கோப்ரா) சுருண்டு பாய்க்கு பதமாகவும் பிஞ்சு பாபாவுக்கு இதமாகவும் படுத்திருக்கிறது! 


பொதுவாக அந்தக் காலத்து புட்டபர்த்தி கிராம மக்கள் பனை ஓலை அடியிலும் சுவற்றின் விளிம்பிலும் பாம்புகளை பார்க்காமல் இல்லை... ஆனால் இப்படி கோப்ரா'வே சாதுவாய் சமர்த்தாய் தவநிலையில் அதுவும் வீட்டுக்குள் அதுவும் பாயின் அடியில் சுருண்டு படுத்திருப்பது என்பது வழக்கத்திலேயே இல்லாத அபூர்வ அதிசயக் காட்சி! அந்தக் கிராமத்தினர் அதுவரையிலும் அதற்குப் பிறகும் கண்டிராத செய்கை! ஆம் ஆதிசேஷனே கோப்ரா வடிவில் இறைவன் பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை உணர்த்த நிகழ்ந்த அதி அற்புத சம்பவம் துவாபர யுகத்தையே நம் கண்முன் பிரதிபலிக்கிறது!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 26,27 | Author : Dr J.Suman Babu ) 


ஏன் பாபாவுக்கு அந்த கோப்ரா குடை பிடிக்கவில்லை? என்று யாரும் கேட்க மாட்டோம்! காரணம் வீட்டுக்குள் மழை ஒழுகவில்லை... இறைவன் மாற்றிடம் செல்லவில்லை.. பெற்றவர்கள் கைதிகளாக இல்லை! அவர்கள் கைதிகளானது பாபாவின் இதயத்தில் மட்டுமே! வளர்ப்புத் தாயே அருகே குடியிருந்த கலியுக காலம் இது! யுகம் தோறும் வேறு வகையான வாழ்க்கை முறை , அதன் பொருட்டே இறைவன் அந்தந்த யுக விதிகளுக்கு ஏற்ப தன் அவதார அகம் புறத்தை மாற்றி அமைக்கிறார்! ஆயினும் யுகத் தொடர்ச்சி பலவகைகளில் கலியிலும் தொடர்ந்த வண்ணமாய் இரு பேரவதாரமும் ஒன்றே எனும் சத்தியத்தை நம் அந்தரங்க ஆன்மாவில் உணர்த்திக் கொண்டே இருக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக