தலைப்பு

திங்கள், 5 ஜூன், 2023

"சத்யா" என்ற பெயருக்கான துவாபர யுகத் தொடர்புகள்!

துவாபர யுக அவதாரத்திற்கும் கலியுக அவதாரத்திற்கும் "சத்யம்" என்ற பெயரோடு நிறைய தொடர்பிருக்கிறது... அதை விவரிக்கும் ஆச்சர்ய பதிவே சுவாரஸ்யமாக இதோ...


ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்தில் அவதரிக்கிற சமயம் ஸ்ரீ பிரம்ம தேவர் ஒரு தெய்வீகக் கவிதையால் ஆன்மப் பூக்களைத் தூவுகிறார்.. அது


"சத்யவ்ரதம் சத்யபரம் த்ரி சத்யம் 

சத்யஸ்ய யோனின் நிஹிதாம்ச சத்யே 

சத்யஸ்ய சத்யம் ருத சத்ய நேத்ரம் 

சத்யாத்மகம் த்வம் சரணம் பிரஸ்ஸன்ன" 


அதன் அர்த்தம்...

இறைவா! நீயே சத்தியத்தின் வடிவம்! எது சத்தியமோ அது நீயே! உன்னைப் பெறுவதற்கு சத்யமே மிகச் சிறப்பான சாதனம்! ஆகவே தான் நீ சத்தியத்தை கடைபிடிக்கிறாய்! உன் கருணையில் கரைகிறேன்.. ஏனெனில் நீயே சத்தியத்திற்கெல்லாம் சத்தியம் , நீயே நிரந்திரமாய் சத்தியத்திலேயே நிலைத்திலிருக்கிறாய்!" என்று ஸ்ரீ பிரம்மா தனது தெய்வீக கவிதை வரியில் சத்தியத்தை தூவுகிறார்! அதிலேயே சத்ய நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணராய் அவதரித்த சூட்சுமம் அடங்கி இருக்கிறது!


(ஆதாரம் : வியாச பாரதம் 10.2.26)


அது போலவே கலியுகத்தில் ஸ்ரீ சத்ய நாராயணர் ஸ்ரீ சத்ய நாராயண விரதம் வழியாக தனது அவதாரத்தை உறுதி செய்கிறார்! 

லக்ஷ்மம்மா - கொண்டம ராஜு இருவரும் தெய்வீகத் தம்பதிகள், ஒரு சிறு குடில் அமைத்துக் கொண்டு வசித்து வருகிறார் கொண்டம ராஜு... அவர் தனது பெரும்பாலான நேரங்களை தியானத்திலும் இதர ஆன்மீக சாதனையில் கழித்து வருகிறார்! அவரது தர்ம பத்தினி லஷ்மம்மா வழிபாட்டு விஷயங்களில் நேரத்தை செலவு செய்கிறார்! அவருக்கு இஷ்ட தெய்வம் ஸ்ரீ சத்ய நாராயணர்! அந்த பகுதியே ஸ்ரீ சத்ய நாராயண வழிபாட்டிற்கு பிரபலம்! அந்த கால புட்டபர்த்தியில் ஒரு அந்தண ஜோதிடர்.. அவர் நிகழ்த்தும் ஸ்ரீ சத்ய நாராயண விரத பூஜா முறையில் திருமதி லஷ்மம்மா ஈர்க்கப்படுகிறார்! 

அன்றைய தினம் ஸ்ரீ ஈஸ்வரம்மாவுக்கு இடுப்பு வலி எடுத்த போது கூட மாமியார் லஷ்மம்மா அதிகாலை நான்கு மணி முதல் அவரது இல்லத்தில் ஸ்ரீ சத்ய நாராயண விரத பூஜையிலேயே கலந்து கொள்கிறார்! தனது மருமகளின் இந்த இக்கட்டான இடுப்பு வலி சூழ்நிலையிலும் விரதம் முடித்து பிரசாதத்தோடே இல்லம் வர வேண்டும் என்ற ஒரு வைராக்கிய பக்தி லஷ்மம்மாவுக்கு! விரதம் முடித்த பின் விரைந்தோடி வந்து தனது மருமகளின் வாயில் அந்த சத்ய நாராயண விரத தீர்த்தத்தை ஊட்டுகிறார்‌.. அந்த நொடியே குழந்தை பிறக்கிறது... அதைப் பார்த்த மாத்திரத்திலேயே "சத்ய நாராயணா" என்ற பெயரே அந்தக் குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்பது அனைவரின் ஒருங்கிணைந்த உள்ளுணர்வும்... 


"ந ஹம் மனுஷயோ நச தேவ யக்ஷ ஸஹா

ந பிராம்மண ஹ ஷத்ரியா வைஸ்ய சூத்ர ஹா 

அஹம் சத்ய போதஹ சத்யம் சிவம் சுந்தரம்"


"நான் மனிதனில்லை  , தேவனில்லை!, யக்ஷன் இல்லை, நான் பிராமண - ஷத்ரிய - வைஸ்ய - சூத்திரன் இல்லை!  

நானே சத்தியத்தை போதிப்பவன், சத்தியம் சிவம் சுந்தரமானவன்!" 

என்பதே இறைவனே தனது சாமுத்ரிகா லட்சணத்தை குறிக்கும் வேத வடமொழி துதி! 


இறைவன் பாபாவே இதனை 

"சத்தியமே நான்! எனது பேரிருப்பு அதுவே! நான் பிரதிபலிப்பது அனைத்தும் சத்தியமே! என்னுடைய பெயரும் சத்தியமே! நான் சத்தியங்களுக்கெல்லாம் சத்தியம்!" என்கிறார்.. இது அப்படியே ஸ்ரீ பிரம்ம தேவர் ஸ்ரீ சத்ய நாராயணன் பற்றி தெரிவித்த அந்த தெய்வீகக் கவிதையோடு கன கச்சிதமாய்ப் பொருந்திப் போகிறது! 

ஒருமுறை கொடைக்கானல் சாயி சுருதி மந்திரில் இறைவன் பாபா ஒரு பரம ரகசியத்தை மாணவர்களோடு பகிர்கிறார்

  "அந்த ஸ்ரீமன் சத்ய நாராயணனே ஸ்ரீ சத்ய சாயியாக இந்த பூமியில் இறங்கி வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! ஸ்ரீ ராமர் போலவே ஸ்ரீ கிருஷ்ணர் போலவே ஸ்ரீ சத்ய சாயியும் பூர்ணாவதாரம்! ஒரு சில சமயத்தில் ஆன்மீக குருமார்களும் எனது தெய்வீக சக்தியால் பூமிக்கு வருகிறார்கள்! ஆனால் அந்த வருகையோ என் அவதாரத்தைப் போல அவதாரமாக ஆகாது! 


(Source : Sri Krishna Sri Sathya Sai | Pages : 18 -20 | Author : Dr J.Suman Babu)


"சத்ய நாராயணா" என்ற பெயர் இறைவன் பாபாவுக்கு சூட்டப்பட்டது மனித இச்சையால் அல்ல.. அதுவும் அவரது தெய்வீகத் திட்டங்களில் ஒன்று என்பதை நம்மால் உணர முடிகிறது! ஸ்ரீசத்ய நாராயணனே ஸ்ரீ சத்ய சாயி என்கிற பெயர் பொருத்தம் உயிர் பொருத்தத்தை விடவும் உன்னதமாகத் திகழ்கிறது!  தர்மத்தை மீட்டெடுக்க சத்தியத்தால் மட்டுமே முடியும்!  சத்யமேவ ஜெயதே என்பது பாரதத்தின் ஆணிவேர்! சத்தியமே ஆன்மீக வாழ்க்கைக்கான முதல்படி! அதில் ஏற்றிவிட்டு வழிநடத்தவே இறைவன் பாபா நம்மை அவரின் பக்தர்களாய் தேர்ந்தெடுத்திருக்கிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக