தலைப்பு

சனி, 24 ஜூன், 2023

துவாபரக் குழல் ஒலி இனிமையை சாயி கிருஷ்ணர் இதயத்தில் காது வைத்துக் கேட்ட பக்தர்!

எவ்வாறு இறைவன் பாபாவே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்..? எதற்கு "சாயிபாபா" என்ற நாமகரணம்...? தனது பௌதீக அன்னைக்கே பாபா விளக்கும் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!


பௌதீகத்தில் குழந்தைப் பருவமாக பாபா பால பாபாவாக இருந்த காலகட்டம்! 

ஒருமுறை தன்னைச் சுற்றி இருந்த.. கூடி இருந்த பக்தர்கள் மத்தியில் "நானே ஸ்ரீ ராமர், நானே ஸ்ரீ கிருஷ்ணர் , பல இடங்களில் எனக்கு பல பக்தர்கள் இருக்கிறார்கள்! பல மொழிகளிலும் என்னிடம் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்!" என்று மிக மிக வெளிப்படையாக உண்மையை உடைத்தும் பேசுகிறார்! பௌதீகமான அந்த சிறுவயதிலேயே...

இதனை இறைத்தாய் ஈஸ்வராம்பா உற்று கேட்கிறார்! ஆனால் ஈஸ்வராம்பாவோ தனது சிறுவயதிலிருந்தே கோகுலத்தையும் கோ இனத்தையும் மயக்கிய ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்க வேண்டும் என்பதோ தீராத விருப்பம்! அந்த விருப்பம் நிறைவடைய பாபாவை கேட்க ஆர்வம்! ஆனால் மனதில் தைரியம் வரவழைத்துக் கேட்பதில் தாய்க்கு தீராத தயக்கம்!

ஒரு நாள் முடிவாக தனது நீண்ட நாள் விருப்பத்தை பாபாவிடம் இறைத் தாய் வேறுவிதமாகக் கேட்கிறார்! 

"ஷிர்டி பாபாவிடம் ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் இருந்ததா?" என்பதே! இதுவரை யாரும் பாபாவிடம் கேட்காத மிக நூதனமான கேள்வி!

அதற்கு பாபா அளித்த பதில் அதைவிட நூதனமானதும் சூட்சுமமானதும்...

"அது என்னிடம் இருந்தது போலவே இப்போதும் என்னிடம் இருக்கிறது! அப்போது மட்டுமில்லை இப்போதும் எப்போதும் நான் ஸ்ரீ கிருஷ்ணரே! அந்த கிருஷ்ணரே உங்கள் அனைவரின் இதயத்தையும் உருக வைக்க இப்போது ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்திருக்கிறார்!" என்று அந்த பிரபஞ்ச ரகசியத்தை மிகத் திண்மையாக எடுத்துரைக்கிறார் பாபா!

இதை பாபா அறிவிக்கிற போது பக்தர்கள் அனைவரும் மந்திரின் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள்! திடீரென ஆழ்ந்த அமைதி‌ அந்த மந்திர் (பிரசாந்தி நிலைய சன்னதி ) அறையில் ஒரே நிசப்தம்! எந்தப் பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை! அப்போது எங்கிருந்தோ டக் டக் டக் என்ற  ஒரு மரக்கட்டை ஓசை அனைவர் காதுகளிலும் கேட்கிறது!

அது நடக்கும் சப்தமே என்று அனைவரும் புரிந்து கொள்கின்றனர்... அந்த ஓசை அருகே கேட்க கேட்க அது மரப்பாதுகை சப்தம் என்பதை யாவரும் விளங்கிக் கொள்கின்றனர்! ஆனால் அது யார் என்பது எவரின்  கண்களுக்கும் புலப்படவில்லை...!

வராண்டாவில் வருகிற சமயம் .. ஸ்ரீ ஈஸ்வராம்பா மிகவும் சப்தமாக "கால்களில் அந்தப் பாதுகையோடு நீங்கள் இந்த அறையில் நுழையக் கூடாது!" என்கிறார்! காரணம் அது சன்னதி என்பதால் வருவது யார் என்றே அறியாத போதும் கூட ஸ்ரீ ஈஸ்வராம்பா அந்த வார்த்தையை உதிர்க்கிறார்! ஆனால் அந்த வார்த்தை எச்சரிக்கையை காது கொடுக்காதது போல் அந்த அரூபம் ஏற்படுத்திய பாதுகை சப்தம் இன்னும் அதிகமாகவே கேட்கிறது! அந்த மரப்பாதுகை சப்தம் பாபாவை நோக்கி வந்து அப்படியே நின்றுவிடுகிறது! 


அப்போது பாபா "நான் என்னுடைய முந்தைய அவதாரத்தில் பாழடைந்த மசூதியில் வாழ்கிற போது.. இப்போது என் முன் வந்திருக்கிறவர் போல்தான் தோற்றம் அளிப்பேன்!" என்கிறார்! வந்திருப்பது யார் என உடனே ஸ்ரீ ஈஸ்வராம்பாவுக்கு இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடுகிறது! "ஓஹோ.. அதற்காகத் தான் உங்கள் பெயரை "சாயிபாபா" என்று வைத்துக் கொண்டீர்களா?" என்று கேட்கிறார்! அதற்கு ஆம் என்பது போல் புன்னகைத்துக் தலையாட்டுகிறார் பாபா!

அப்போது மந்திர் மத்தியில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்... அவர் உடனே பாபாவிடம் "சுவாமி.. நீங்கள் தான் ஸ்ரீ கிருஷ்ணரா?" என்று கேட்கிறார்...

உடனே பாபா "ஆம் நானே தான் ஸ்ரீ கிருஷ்ணர்... உனக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையைக் கேட்க விருப்பமா?" என்று பாபா சற்றே அவர் எதிர்பார்க்காத கேள்வியை கேட்கிறார்... யார் தான் அதற்கு வேண்டாம் என்று பதில் சொல்லிவிட முடியும்! 

அந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தர் உடனே எழுந்து பாபாவின் அருகே வர... பாபா அவரை குனிய வைத்து தனது இதயத்தின் அருகே கொண்டு வர... அவரின் காதுகளை தனது இதயத்தின் பக்கம் நன்றாக கேட்க வசதி செய்து கொடுக்க... அவரும் தனது கொடுத்து வைத்த காதுகளால் பாபாவின் இதயத்தை அழுத்தி.. ஒரு சங்கில் காது வைத்துக் கேட்பது போல் கேட்கிறார்...  அந்த புல்லாங்குழல் இசையைக் கேட்டு அப்படியே அவர் தன்னிலை மறக்கிறார்! உடல் உணர்வற்றுப் போகிறார்... அதீத நிலை (trance)க்குச் சென்றுவிடுகிறார்! பிரம்மாண்டப் பேரானந்தத்தையும் சேர்த்தே அனுபவிக்கிறார்!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 41 - 42 | Author : Dr.J.Suman babu )


கொடுத்து வைத்தவர்கள் ஸ்ரீ சத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிரபஞ்ச ரகசியத்தை உணர்ந்து கொண்டு அனுதினமும் அந்தப் பெருஞ்சத்தியத்தை பேரானந்தமாக அனுபவிக்கிறார்கள்! கலியில் பிரபஞ்ச ரகசியம் அனைவருக்கும் பொதுவாக வெளிப்படும் பிரேம காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது... அது வெளிச்சமாகும் வரை பல இதயம் உறங்கிக் கொண்டிருக்கிறது...அந்த பிரேம நெருக்கம் பாஞ்சஜன்யம் ஊதும்... அப்போது பூப்பூக்கும் கேட்காத காதும்... அது மாயையை மோதும்... விழிப்புணர்வடையும் விழிப்படையாத ஏதும்... பிரேம ரகசியம் இப்போதைக்கு இவ்வளவு போதும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக