தலைப்பு

செவ்வாய், 27 ஜூன், 2023

பாமரனுக்குப் புரியவைத்த பாபாவின் செயல்கள!!

முனிவர்களாலும் ஞானிகளாலும் எப்படிப்பட்ட திறன் படைத்தவராயினும் எனது உண்மைத் தன்மையை யாராலும் புரிந்து கொள்ள இயலாது என பகவான் பாபா கூறியுள்ளார். பகவான் ஒருவருக்கே தெரியும் அவரது செயல் களின்  நீதி பரிபாலனம். பாமரர்களாகிய நமக்கு அது விளங்காதது. அதை எடைபோடும் தகுதியும் நமக்கு கிடையாது. எல்லாமே அவரது திருஉள்ள அருட்காப்பு என்ற பரிபூரண சரணாகதி மனப் பான்மையோடு இந்த பதிவில் சங்கமிப்போம்...  


🌷பரம பக்தர் ஸ்ரீ ராமபிரம்மம்:

ஸ்ரீ கே.ராமபிரம்மம் அவர்கள் ஏறத்தாழ 30 வருடங்கள், சுவாமியின்  பெங்களூரு பிருந்தாவன் ஆசிரம வளாகத்தின் பராமரிப்பாளராக இருந்தவர். பிருந்தாவனத்தில் சுவாமியை அதிகாலையில் முதலில் சந்திப்பதும், இரவில் நித்திரைக்கு முன் சுவாமிக்கு பாதசேவை செய்து இறுதியாக விடைபெறுபவரும் அவரே. அதோடு மட்டுமல்லாமல் சுவாமியுடன் சேர்ந்து உணவருந்தும் பெரும்பாக்கியமும் பெற்றிருந்தவர். எல்லோராலும் பெரிதும் விரும்பப்பட்டவர்; அந்நாட்களில் பிருந்தாவன விடுதி மாணவர்களால் அன்போடு "தாத்தையா" (தாத்தா) என்று அழைக்கப்பட்டவர். சுவாமியின் விசுவாசமான பணியாளராகவும், சிறந்த பக்தராகவும்  இருந்தவர்.


🌷பரிபூரண சரணாகதி:

ஸ்ரீ ராமபிரம்மம் அவர்களின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் முடிந்து, திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு முதல்நாள். பாபா ஸ்ரீராமபிரம்மம் அவர்களை அழைத்து , நாளை நடக்கவிருக்கும் உன் மகனின் திருமணத்தை நிறுத்திவிடு என்று கூறிச் சென்றுவிட்டார்.

ஸ்ரீராமபிரம்மத்திற்கு இதற்கான காரணங்கள் தெரியவில்லை. ஆயினும்  பாபாவிடம் பரபூரண சரணாகதி கொண்டவராதலால், பெண் வீட்டினரிடம் இந்த செய்தியைக் கூறினார். திடுக்கிட்ட பெண் வீட்டார், ஸ்ரீராமபிரும்மத்தை வசைபாடி நிந்தித்தனர். செய்வதறியாத அவர், இதுவும் பாபாவின் திருஉள்ளமே என அமைதி காத்து நின்றார். 

பகவானின் அந்தச் செயலுக்கு, ஒரு  விளக்கமாக சோக நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. ஸ்ரீராமபிரம்மத்தின் மகன், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அன்றுகாலை ஒரு விஷநாகம் தீண்டி இறக்க நேர்ந்தது. மணப்பெண் வீட்டினருக்கு ஸ்வாமியின் செயலின் முழுப்பொருளும் விளங்கியது. திருமணம் நடை பெற்றிருந்தால் தங்களுடைய பெண் மண நாளிலேயே கைம்பெண்ணாக மாறி இருப்பாள் என்பதை உணர்ந்த அவர்கள்,  ஸ்ரீராமபிரும்மத்திடம் தங்களுடைய தகாத சொற்களுக்காக  மன்னிப்பு கேட்டனர்.


🌻சாயிராம்... ஒரு சாமானிய மனிதருக்கு வரும் சந்தேகம். ஏன் பகவான் தமது அத்யந்த பக்தரின் மகனைக் காக்கவில்லை. அப்படி செய்திருந்தால் திருமணம் நடைபெற்று, அனைவரும் மகிழ்வடைந்திருப்பார்கள் அல்லவா. பகவானுடைய அளப்பரிய சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமல்ல இது. அந்த ஜீவன் தனது தொடர் ஜென்ம கர்ம வினைகள் முடிவுற்றதால், மறுபிறப்பின்றி பாபாவின் திருவடியில் சங்கமிக்கும் சமயமாவதால் பாபா அதனை அனுமதிக்கிறார்! ஜென்ம கணக்கு முடிவுற்றால் கர்மக் கணக்கும் முடிந்துவிடும்! மரணமே நிரந்தரமானது! அதை உணரும் மனம் சுதந்திரமானது! ஆகையால் தெய்வ சங்கல்பமும், தெய்வநீதியும், ஒரு துலாக் கோலின் சமன்பாட்டுடன் எப்போதும் சமமாகச் செயல்படுகிறது என்பதையும், பரிபூரண சரணாகதிக்கு உதாரணமாக ஸ்ரீராமபிரும்மத்தின் வாழ்வும் செயலும் இருப்பதையும் இந்நிகழ்வுகள் நமக்கு விளக்குகின்றன. ஏழு கடலின் நீர்ப் பரப்பு போன்ற பகவானின் அளப்பரிய சக்தியை, நமது மனம் என்னும் இங்க் பில்லரால் எடுத்து அனுமானித்து அளவிடஇயலுமோ.


I alone stand and carry the burden of your worries and tears. (BABA)

 உங்கள் கண்ணீரையும் கவலைகளையும் நான் ஒருவனே சுமக்கிறேன். ( பாபா)


ஆதாரம்: RadioSai

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக