தலைப்பு

வியாழன், 22 ஜூன், 2023

இரு அவதாரங்களை ஒரு ரிஷியும் ஒரு பக்தரும் உணர்ந்த தருணங்கள்!

எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ விஷ்ணு என்பதை ஒரு முனிவரும், ஸ்ரீ சத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை ஒரு கிருஷ்ண பக்தரும் உணர்ந்த உன்னத தருணங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...! 


கர்க மகரிஷி, யாதவ குலத்திற்கே குரு! மகா விஷ்ணுவின் மிகப் பெரிய பக்தர்! நந்த - யசோதையின் இல்லத்திற்கு ஒருமுறை விஜயம் புரிகிறார்! மதிய வேளை நெருங்க யமுனையில் நீராடி விட்டு தனக்கான "கீர்" எனும் உணவை தயாரித்து அதை பிரசாதமாக ஸ்ரீ மகா விஷ்ணுவுக்குப் படைத்து கண்மூடி வேண்டுகிறார்.. அந்த இடைவெளியில் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் அந்த பிரசாதத்தை நைஸாக வந்து சாப்பிட..‌மகரிஷி கண் திறக்க... "ஏன் இப்படி இறைவனுக்கு படைக்கும் போது இவ்வாறு நீ சாப்பிட்டு இடைஞ்சல் செய்கிறாய்?" என்று கர்கர் தர்க்கராக மாறி கேள்வி எழுப்ப... "நீங்கள் தான் சாப்பிட அழைத்தீர்கள் ஆகவே வந்தேன்!" என்று குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் பதில் விளக்க...

உடனே யசோதை அழைக்கப் படுகிறாள்...நடந்ததை கர்கர் விளக்க.. குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரிடம் விசாரிக்க... மகாவிஷ்ணுவை அழைத்து பிரசாதம் ஏற்கும்படி வேண்டினேன் என்று கர்கர் சொல்ல... அதனால் தான் நான் அதை இப்போது சாப்பிட்டேன் என்று ஸ்ரீ கிருஷ்ணரும் பதில் அளிக்க..

"நீ தான் மகாவிஷ்ணு என்றால் உன் நான்கு கரங்கள் எங்கே?" என்று யசோதை கேட்க..

"எனது நான்கு கரங்களை நான் காண்பிக்க வேண்டுமா?" என்று குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் எதிர் கேள்வி கேட்க...

அப்படி ஏதாவது நடந்தால் தனது குழந்தையை சமுதாயம் பேயோ பூதமோ என்று நினைத்து மிரளுமே என்ற ஒரு பாசத் தாய்க்கே உரித்தான அச்சத்தில்...

"உனக்கு இருக்கும் இந்த இரண்டு கைகளே எனக்கு போதும்... அதையே என்னால் சமாளிக்க முடியவில்லை... இன்னும் வேறு உனக்கு இரண்டு கரங்களா? வேண்டாம் வேண்டாம்!" என்று யசோதை குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு செல்கிறாள்!


மீண்டும் மகரிஷி கர்கரோ மீண்டும் யமுனையில் குளித்து.. கீர் தயாரித்து மீண்டும் மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்ய... வீட்டுக்குள் தொட்டிலில் படுத்துக் கொண்டிருந்த குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் கர்கர் கண் மூடி பிரார்த்தனை செய்யும் இடைவெளியில் மீண்டும் அந்த கீர் அதனைப் பருக...

கர்கர் பார்த்துவிட ..

யாருமில்லா அந்தத் தனிமைப் பொழுதில் உடனே குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தனது உண்மை ரூபத்தை காட்டுகிறார்!

காலமெல்லாம் யாரை பூஜித்தாரோ மகரிஷி கர்கர்... அந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவையே அப்போது தரிசிக்கிறார்! 

"எனக்கு பிரியமான பக்தன் நீ! நான் தான் ஸ்ரீ கிருஷ்ணராய் அவதரித்திருக்கிறேன்! இது காலமும் நானே உன் படையல்களையும் தவத்தையும் ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறேன்! இன்றும் நானே அதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்!" என்று தெளிவு படுத்திய பின் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் புரிகிறார் மகரிஷி கர்கர்...இதனை ஸ்ரீமத் பாகவதம் சுட்டிக் காட்டுகிறது!


இது போலவே ஒரு கிருஷ்ண பக்தர் கலியுக அவதாரமான ஸ்ரீ சத்ய சாயியே தனது ஸ்ரீ கிருஷ்ணர் என உணர்ந்து கொள்கிற அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது!

ஒருமுறை ஒரு குடும்பம் புட்டபர்த்தி வருகிறது! அது 1976. அந்தக் குடும்பத்தின் மகன் மட்டுமே பாபா பக்தன்.. ஆனால் அந்த குடும்பம் முழுமையுமே ஸ்ரீ கிருஷ்ண பக்தர்கள்! பாபாவை தரிசன நேரத்தில் பார்க்கிறார்கள்... அந்தக் குடும்பத்து மகனோ தரிசிக்கிறான்! 

ஆனால் அந்தக் குடும்பத் தலைவருக்கு பாபாவை பார்த்தபிறகும் பெரிதான அபிப்ராயம் ஏதும் இல்லை... ஆகையால் கிளம்பிவிடுகிறார்கள்! விசித்திரமாக இரண்டாவது முறையும் புட்டபர்த்திக்கு வருகிறார்கள்! 

அந்த சமயத்தில் தரிசன வரிசையில் பாபா நடந்து வர... 

ஒருவர் விபூதி கேட்கிறார்.. இன்னொருவர் பாபாவிடம் ஒரு கடிதம் தந்தபடி கால்களில் விழுந்து விபூதியையே கேட்கிறார்.. பாபாவோ இருவருக்குமே சொன்ன ஒரே வார்த்தை "காத்திருங்கள்!" என்பது தான்!


இரண்டாவது முறையாக வந்த அந்தக் குடும்பத் தலைவருக்கோ சந்தேகப் புயல் வலுப்பெறுகிறது! "நம் கண்முன்னே பாபா விபூதி தந்தால்.. அந்த டிரிக்'கை (தந்திரத்தை) நாம் கண்டுபிடித்துவிடுவோம் என்பதால் நைஸாக நாம் இருக்கின்ற இடம் விட்டு நழுவுகிறார் .. பாபா ஒரு போலி..‌" என்று தனக்குத் தானே ஏதேதோ கற்பனை செய்தபடி அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த தரிசன நேரத்தில் அப்படியே எழுந்து வேகமாக தனது அறைக்கு வந்து

 "இந்த போலி ஆசாமியின் புகைப்படம் இனிமேலும் என்னிடம் எதற்கு?" என்று பாபாவின் படத்தை கிழிக்கப் போகின்ற அதே நொடி... "அப்படிச் செய்யாதே! அந்தப் புகைப்படத்தை கிழிக்காமல் அதை சூட்கேசிலேயே வைத்துவிடு!" என்ற ஒரு குரல் அந்தக் குரலுக்கு உரிய ஒரு விரல் திடீரென அவரின் முதுகைத் தொடுகிறது... 

யார் தன்னை தொடுவது என்று திரும்பிப் பார்க்கையில் அவரால் அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.. இத்தனை காலம் அந்தக் குடும்பம் யாரை தனது கடவுளாக வழிபட்டுக் கொண்டு வந்ததோ அதே ஸ்ரீ கிருஷ்ணர்! "வா என்னோடு!" என்று அழைத்துப் போகிறார்.. 

பசுவின் பின்னால் பேசாமல் செல்லும் கன்றாய் மிக நன்றாய் ஸ்ரீ கிருஷ்ணரை பின்தொடர்கிறார் அந்த பக்தர்! 


பாபா இன்னமும் தனது தரிசனத்தை நிறைவு செய்யவில்லை என்பதால் வெளி சாலையில் யாருமே இல்லை... அனைவரும் தரிசன இடத்திலேயே குவிந்திருக்கின்றனர்! நுழைவு வாசல் அருகே கொண்டுவந்து அங்கே ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி அமரும்படி சொல்லிவிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்து போகிறார்! எதிர் திசையில் ஒரு புகைப்படக் கடை.. அதில் ஒரு படம்.. அதைப் பார்த்தபடியே ஆச்சர்யப்படுகிறார் ... ஒரே ஆச்சர்யம்... "அடடா இதே போல் தானே ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு இப்போது காட்சி அளித்தார்... ஒருவேளை நாம் அவரை நிஜத்தில் தரிசித்தோமா? இல்லை இந்தப் புகைப்படத்தைத் தான் பார்த்தோமா?" என்ற வேறொரு சந்தேகப் புயல் மீண்டும் அவரின் மனதை மையம் கொள்கிறது!


அந்த சந்தேக எண்ணம் ஏற்பட்ட அடுத்த நொடியே மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் அவர் முன் தோன்றி... "என்னவோ நீ என் பக்தன் என்று பெரிதாக வெளியே சொல்லிக் கொள்கிறாய்! ஆனால் நீ இன்று இப்படி நடந்து கொண்டு என்னை அவமதித்து விட்டாய்! ஏதோ ஓர் உறவினர் வீட்டுக்குச் சென்றால் இப்படித்தான் அவர்கள் இருக்கும் போதே சொல்லாமல் பாதியிலேயே வெளிநடப்பு செய்து அவர்களை அவமரியாதை செய்வாயா? இன்று நான் தரிசனம் கொடுத்ததைக் கூட உன்னால் நம்ப முடியவில்லை! சரி, என்னோடு வா! நானே சுவாமியை சந்திக்க வைக்கிறேன்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பாபாவை அவர் சந்திக்க வைக்க அழைத்துச் செல்கிறார்! 

அப்படியே தலையாட்டியபடியே அவர் ஸ்ரீ கிருஷ்ணரை மீண்டும் பின்தொடர்கிறார்!


அப்போது அந்த நேரம் தரிசனத்திற்கும் பஜனைக்குமான இடைவெளி நேரம்! அந்த தரிசன இருப்பிடத்தில் அவர் வருகிற போது...பாபா புன்னகை ததும்பத் ததும்ப அவரை அருகே அழைக்கிறார்! பாபா அவரின் தோள்களில் பிரேம மாலை போல் தனது கைகளால் சுற்றி உள் அறைக்கு அழைக்கிறார்.. "சுவாமி இங்கேயே அமர்ந்து கொள்கிறேன்!" என்று அவர் தயங்கிய போதும் "இல்லை..‌ உள்ளே வாருங்கள்!" என்று மீண்டும் அழைக்கிறார் பாபா!

பாபா அழைத்த அந்த தொனி.. "உன்னை உள்ளே அழைத்து என்ன செய்கிறேன் பார்!" என்பது போல் அதிர்ச்சி அடையச் செய்கிறது! பாபா மீண்டும் அழைக்க.. அவரும் அதே பதிலை அளிக்க... "சரி!" என்றவாறு அறைக்குள் செல்கிறார்! 

பஜனை ஆரம்பிக்க பாபா வெளியே வந்து சிம்மாசனத்தில் அமர்கிறார்! அவரோ பாபாவையே பார்க்கிறார்! இந்த முறை வெறும் பார்வை அல்ல அது தரிசனம்! அப்படி அவர் பாபாவையே உற்று தரிசிக்க .. பாபாவும் வாஞ்சையோடு அவரைப் பார்க்க...பஜனை - ஆரத்தி நிறைய... பாபாவும் அறைக்குள் செல்ல..

அவரோ கண் கலங்கியபடி மெழுகாய் உருகிக் கொண்டிருக்கிறார்...! அருகே அமர்ந்தவர் என்னவென்று வினவ...

பாபா நாற்காலியில் அமர்ந்திருந்த போது தான் பாபாவை தரிசிக்கவில்லை ஸ்ரீ கிருஷ்ணரையே தரிசித்ததாக வியப்போடு அவர் தெரிவிக்க... ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி எனும் ஆழமான அவதாரத் தொடர்பின் உணர்தலை அவர் முதன்முதலாக அனுபவிக்க... அவர் அப்போதே அக மாற்றம் அடைகிறார்...! பிற்காலத்தில் அவர் பிரசாந்தி நிலையத்திலேயே நிரந்தரமாகவும் தங்கி விடுகிறார்!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 36 - 40 | Author : Dr. J.Suman Babu) 


பல கோடி பேர் இறைவன் பாபாவை தரிசன நேரத்தில் பார்த்திருக்கிறார்கள்! ஆனால் கொடுத்து வைத்த ஒருசில பேர் தான் பாபாவை தரிசித்திருக்கிறார்கள்! பார்ப்பதல்ல தரிசிப்பதே முக்கியம்! அதுவே குணமாற்றம் அடைய வைக்கும்! அது இல்லாமல் பல்லாண்டு காலமாக பக்கத்திலேயே பாபாவை பார்த்துக் கொண்டே இருந்தாலும் தரிசனம் நிகழாத வரை நமக்கு அதனால் எந்தவித ஆன்மீகப் பயனும் இல்லை! பார்வைக்கு புறம் தேவை! தரிசனத்திற்கு அகம் மட்டுமே போதுமானது! பாபாவின் ஆன்மீகம் என்பது புறம் சார்ந்ததல்ல அகம் சார்ந்ததே!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக