தலைப்பு

திங்கள், 12 ஜூன், 2023

"இரு பேரவதாரத்திலும் வெளிப்பட்ட பேரொளி!"

எவ்வாறு துவாபர மற்றும்  கலியுக அவதாரங்களிடம் பேரொளி வெளிப்பட்டது எனும் சாட்சிய சம்பவங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...


"அது அதிகாலை 3 மணி... பிரம்ம முகூர்த்தம் எனும் புண்ணிய காலத்தில் , மதுரா நகரில் சிறையில் இருந்த தேவகி தேவி ஸ்ரீ கிருஷ்ணரை ஈன்றெடுத்தாள்! தேவகி மற்றும் வசுதேவருக்கு அளவில்லா ஆனந்த தருணங்கள் அவை! வெளிச்சமே வராத அந்த இருண்ட பொழுதுகளில் சிறையின் அந்த இருட்டறையில் அவதரித்த குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வெளிப்பட்ட பேரொளி அந்த இருட்டறையையே மிக மிக வெளிச்சமாக்கி அதை வியந்து பார்த்த வசுதேவர் - தேவகியை பரவசப்படுத்தியது! 

(ஆதாரம் : பாகவதம் 10.115) 


இதே போல் கலியுகத்திலும் அப்படி பல சம்பவம் நிகழ்ந்திருக்கின்றன!  குழந்தையாக இருந்த ஸ்ரீ சத்ய சாயியை அவரது அன்னை ஸ்ரீ ஈஸ்வராம்பா அவரை குளிக்க வைத்து , உடை உடுக்க வைத்து,அந்த பிஞ்சுப் பிறை நெற்றியில் சிவன் கோவில் விபூதியையும் சத்யம்மா கோவில் குங்குமத்தையும் இட்டு தூளியில் இடுகிறார்... இட்டுவிட்டு மிக அவசரமாய் அடுப்பில் பாலின் கொதிப்பு நிலையை பரிசோதிக்க ஓடுகிறார்..! அந்த நொடியில் குழந்தை பாபா ஓவென்று சப்தமிடுகிறார்! இப்படி ஒரு சப்த குரலை அதற்கு முன் அவர் கேட்டதே இல்லை... உடனே தூளியில் அருகே வருகிற போது பாபா அந்த தூளி விட்டு வெளியே தவழ்ந்தபடி சப்தமிட அவர் உடலைச் சுற்றி ஒளிவட்டத்தை ஈஸ்வராம்பா கவனிக்க அதிசயப்படுகிறார்! பிறகு பாபாவை மடியில் அமர்த்தியபோது அந்த சப்தமும் அடங்கிவிடுகிறது! பிற்பாடு இதை ஸ்ரீ ஈஸ்வராம்பா தனது மாமியார் லஷ்மம்மாவிடம் தெரிவிக்க... இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று யாராலும் இந்த தெய்வீக சம்பவத்தை சரிவர புரிந்து கொள்ள முடியாதென்றும் அறிவுரை வழங்குகிறார்!


இந்த சம்பவத்தை தொடர்ந்து அக்டோபர் 20, 1940 அன்று பால சத்ய தன்னை அவதார சாயி என்று பிரகடனப்படுத்துகிற மிக முக்கியமான தருணம்.. தன் பௌதீகக் குடும்பத்தை துறக்கின்ற அந்த நாளில் அண்ணன் சேஷம ராஜு வீட்டு எதிரே பாடப் புத்தகப் பையை தூக்கி வீசி எறிந்து "நான் உங்கள் சத்யா இல்லை.. சாயி பாபா!" என்று உரக்கக் கூவுகிறார் பாபா! அதை சமையற்கட்டு வழியாக அதிர்ச்சியோடு நோக்கிய  அண்ணி பாபாவின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வட்டமிடுவதை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்!


அதைத் தொடர்ந்து சித்ராவதி நதிக் கரையில் பக்தர்களை சூழ்ந்திருக்கும் பால் வடியும் பால பாபா திடீரென மலைகளில் ஓங்காரக் குரலில் அனைவரையும் கூவி அழைத்து தன்னை தரிசிக்கச் சொல்கிற போது.. பலர் பாபாவின் பேரொளியை கண்டதும்... சிலர் அவர் நெற்றியிலிருந்து விழி சிந்தும் ஒளியை கண்டு சரிந்து விழுவதும்... "என்னுடைய பெருஞ்சக்தியை உங்களால் தாங்கவே முடியாது என்பதால் தான் இப்படிப்பட்ட தரிசனம் தருவதை நான் குறைத்துக் கொண்டேன்!" எனும் உண்மையை பிறகு பகிர்ந்து கொள்கிறார்!

ஒருமுறை 1978 ஜுலையில் வொயிட் ஃபீல்டில் கிர்லியன் கேமரா மூலமாக அதனை பதிவு செய்து பிறரும் கண்டு வியக்கும் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறார் டாக்டர் பாரனோவ்ஸ்கி..

அவர் விளக்குகிற போது "அந்த ஆரா புட்டபர்த்தியை தாண்டி நீண்டு செல்கிறது... இப்படிப்பட்ட ஆராவின் விஸ்வரூப நீளத்தை நான் படம் படித்த ஒருவரிடமும் இதுவரை கண்டதில்லை... ஆராவில் சக்தியின் நிறம் வெண்மை, ஆனந்தத்தின் நிறம் நீலம், பேரன்பின் நிறம் ஊதா! மூன்றுமே பாபா உடல் முழுக்க சுற்றிக் கொண்டு இந்த பூமியை வியாபிக்கிறது!" என்று ஆச்சர்யப்பட்டுப் பேசுகிறார்! 

மேலும் அவர் "பாபாவை நான் மிக அருகாமையில் கூட அந்த அதிநுட்ப கேமராவை வைத்து காணொளி எடுத்துக் கொண்டிருந்த போது... அந்த ஊதா நிற ஆரா பக்தர்களோடு கலக்கிறது...  சக்கர நாற்காலியில் ஒரு சிறுமி அமர்ந்து பாபாவின் தரிசனம் பெறுகிற போது.. பாபா அருகே வருகையில் அவரிடமிருந்து பாய்ந்து வருகிற ஒளி அந்த சிறுமிக்குள் செல்வதை கண்கூடாக கண்டு வியந்தேன்!" என்கிறார்! பாபா இறைவனே என்று தனது கிர்லியன் கேமரா அனுபவத்தை அவர் பகிர்கிறார்!


இந்த நிகழ்வை ஒரு சேர்த்து பிளிட்ஸ் இதழாசிரியர் ஆர்.கே கரஞ்சியா பாபாவிடம் "சுவாமி உங்களின் ஆரா ஒளியை ஜான் ஹிஸ்லாப் போன்ற பக்தர்கள் பார்த்திருக்கிறார்களாமே! அது உண்மையா?" என்று வியந்து கேட்க...

"ஓரிருவர் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான எனது பக்தர்கள் அதனை தரிசித்திருக்கிறார்கள்! அதனை காண்பதற்கு தூய இதயம் வேண்டும்! அந்த தூய இதயத்தால் என்னை நேசிக்கிற போது அந்த ஆரா ஒளியை தரிசிக்க முடியும்... பக்தியால் ஞானநிலை எய்தியவர்களும் அதனை தரிசிக்கலாம்!" என்று தெளிவாக விளக்குகிறார்!


தனது துவாபர யுக அவதார ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி பாபா விவரிக்கும் போது

ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமுக வருடத்தில் சிரவன பாஹுல அஷ்டமி அன்று ரோஹினி நட்சத்திரத்தில் அவதரித்தார் எனும் பேருண்மையை விளக்குகிறார்! 


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 22 -26 | Author : Dr J.Suman Babu )


ரோகிணி நட்சத்திரமும் திருவாதிரை நட்சத்திரமும் ஒருவித தெய்வீகப் பேரொளியையே சிந்திக் கொண்டிருக்கிறது என்பதை மேலே விவரித்த இரு யுக சம்பவ வழி நம்மால் உணர முடிகிறது! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக