இறை அவதாரம் யுகம் விட்டு யுகம் இரண்டு முறை இறங்கி வருகிற போது எவ்வாறு இரண்டு நதிகளும் பிரிந்து வழிவிட்டன எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
(பாகவதம் : 1.19.6)
அதே போலவே கலியுகத்தின் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் நிகழ்ந்திருக்கின்றன...
பசுபர்த்தி வெங்கட்ராம ராஜு என்பவர் பாபாவின் பௌதீக சகலபாடி (Brother-in-law). அவர் கமலா புரத்தில் வசித்து வருகிறார்! அவரே கீழ்கண்ட சம்பவத்தை நேரில் பார்க்கிற பரவச சாட்சியாக தன்னுடைய அதிசய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்!
அவருடைய தங்கை சுசிலாவை ஸ்ரீ சத்ய நாராயண ராஜுவின் (இறைவன் ஸ்ரீ சத்ய சாயி) ரத்னாகர குடும்பத்தில் அண்ணனான சேஷம ராஜுவுக்கு திருமணம் நிகழ்த்தி வைக்கிறார்!
சத்யம் என்று தான் அப்போது பாபாவை அனைவரும் அழைப்பர்! (எப்போதும் அவர் சத்யமே!)
பாபாவுடைய தளராத ஆன்மீக உயர் நிலை கண்டு அங்கே படிப்பை கைவிடுவதே சாலச்சிறந்தது என அண்ணாவும் , அவரது மனைவி சுசீலாவும் நினைக்கிறார்கள்! ஆகவே அவரும் (சகலபாடி) அவரது நண்பர் சிலா சுப்பன்னா மற்றும் சத்தியத்தின் பெற்றோரும் புட்டபர்த்திக்கே அழைத்துச் செல்ல தீர்மானிக்கிறார்கள்... உரவகொண்டாவிலிருந்து சித்ராவதி நதிக் கரைக்கு அவர்கள் வர அப்போதே மாலை 6.30 ஆகிவிடுகிறது!
இருட்டிக் கொண்டிருக்கிறது! வசுதேவர் வருகிற வழியில் எப்படி யமுனை நதி துள்ளித் குதித்து அலையாடிக் கொண்டிருந்ததோ அதைப் போலவே சித்ராவதி நதியும் பாபாவின் வரவைக் கண்டு ஆர்ப்பரித்து அலையாடிக் கொண்டிருக்கிறது! சரி! மறு கரைக்குச் செல்ல இப்போதைக்கு வழியேதுமில்லை என்ற சூழ்நிலையில் அந்தக் கரையின் அருகாமை கிராமத்திலேயே தங்கிவிட்டு தேர்ந்த நீச்சல் கலைஞர்களின் உதவியுடன் அதிகாலையே நதியைக் கடக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்! ஆனால் அப்போது தான் ஒரு திசைதிருப்பும் சூழ்நிலை நிகழ்கிறது!
திடீரென சத்தியம் (பாபா) நதியில் கால்களை வைக்கிறார்! தன்னை பின்தொடரச் சொல்கிறார் சத்தியம்! சகலபாடியோ உடனே சத்தியம் பக்கம் விரைந்து அவரை தடுக்கும் நோக்கமாக அவரது முழங்காலை பிடித்து நிறுத்தப் பார்க்கிறார்! அது ஏற்கனவே நதியில் மூழ்கிய படியே இருக்கிறது! சத்தியத்தின் முட்டிக்கு மேல் சித்ராவதி நதி! கொடுத்து வைத்த அந்த நதி சத்தியத்தின் கால்களைப் பிடித்து புரண்டு புரண்டு வழிபட்டுக் கொண்டே இருக்கிறது!
உடனே சத்தியம் அவரின் கைகளைத் தடுத்து... "வாருங்கள்! என் பின்னால்!" என்கிறார்! பால பாபா என்று கூட ஆவதற்கு முன்னதான பதின்பருவ சத்தியம்!
சத்தியத்தின் கையை சகலபாடி பிடிக்கிறார்...அவரின் கையை அவரது நண்பர் பிடிக்கிறார்... அவரது கையை பெத்த வெங்கப்ப ராஜு (பாபாவின் பௌதீக தந்தை) பிடிக்க..அவரது கையை இறைத்தாய் ஸ்ரீ ஈஸ்வராம்பா பிடிக்க... இப்படி வரிசையாய் அவர்கள் சத்தியத்தையே ஆதாரமாகப் பிடித்தபடி பயந்து பயந்து அடி மேல் அடி வைத்து பின் தொடர... தங்களது சட்டைகளை அப்படியே கழட்டி கழுத்துக்குக் கீழே மாலையாகவும் சுற்றிக் கொள்கிறார்கள்!
திடீரென சகலபாடி வெங்கடராம ராஜு "சுவாமி! தந்தி வந்ததால் வந்தேன்! நான் தான் என் குடும்பத்திற்கான ஒரே ஆதரவாளன்! நானும் போய்விட்டால் அவர்களை கவனிக்க ஆளே இல்லை!" என்று பயத்தில் நடுநடுங்கிக் கத்துகிறார்! காரணம் சித்ராவதியோ சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது!
இவர்கள் கடக்கையில் இவர்களது வயிற்றுப் பகுதியே கண்களுக்குத் தெரியவில்லை! மீன்களை அறியும் நதிகளின் ஆழத்தை மனிதர்கள் எவ்வாறு அறிய முடியும் என்ற கேள்வியோடும் மூழ்கிவிடுவோமோ என்ற மிரட்சியோடும் அந்த சங்கடப் புலம்பல்கள்!
பாபாவோ அதற்கு குளிர்ச்சியாக "இந்த எல்லைக்கு மேல் நதியின் அளவு ஏறவே ஏறாது! ஏன் நீங்கள் தேவையில்லாமல் பயப்படுகிறார்கள்!" என்கிறார்!
அவரால் அதை நம்பவே முடியவில்லை.. இவ்வளவு வேகமாக பாயும் நதி எவ்வாறு அளவை மீறாமல் இருக்க முடியும்! விஞ்ஞானப் பூர்வமாக இது சாத்தியமே இல்லை! என்று அவர் நினைக்கிறார்! ஆனால் சத்தியம் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்ட அந்த சித்ராவதி நதி அவ்வளவு பெரிய பாய்ச்சலிலும் ஆம் தனது அளவை அது உயர்த்தவே இல்லை! நதியைக் கடந்தபிறகோ எதிர்க்கரை கிராம வாசிகள் இந்த இரவில் அதுவும் நதியை எப்படி படகே இன்றி கடந்தீர்கள் என்று பேராச்சர்யப் படுகிறார்கள்!
அது 9/9/1958.. அப்போது கோதாவரி நதி வெள்ளம்! ஆனால் வெங்கடகிரியில் ஒரு பள்ளியை திறக்க பாபா வரவேண்டிய சூழ்நிலை.. இந்த அபாய வெள்ள நிலையில் பாபா வரமாட்டார் என்று பக்தர்கள் நினைக்க.. வெள்ளம் ஒன்றுமே செய்யாமல் பக்தரின் உள்ளம் கொள்ளை கொள்ள பாபா ஆச்சர்யமாய் வருகிறார்... எல்லோரும் சுவாமி வரமாட்டார் என்று நினைத்தீர்கள்...சிலர் சுவாமியை வெள்ளம் கொண்டு போய்விட்டது என்று வதந்தி பேசினர்!
"நான் மனித வடிவில் இருந்தாலுமே பிரபஞ்சத்தில் எதுவும் என் சத்திய வழியில் தடையாகவே இருக்காது! நான் சங்கல்பித்தது நடந்தே தீரும்! நான் எடுத்த செயல் வெற்றிகரமாக நிகழும்!" என்று வெளிப்படையாக பாபா பேச... அனைவரும் பரவசப்படுகிறார்கள்!
அது 1963. குண்டூர் மாவட்டத்தில் ஷிர்டி சாயி கோவிலில் ஷிர்டி பாபாவை பிரதிஷ்டை செய்ய பாபா அங்கே செல்கிறார்! அந்த வைபவத்தை தரிசித்து மகிழ பக்தர்கள் குண்டூர் நோக்கி திரள... அங்கே கிருஷ்ண நதி வெள்ளத்தில்... அவனிகட்டா எனும் இடத்தின் பக்தர்கள் அந்த வைபவத்திற்கு செல்ல வழியின்றி தவிக்கிறார்கள்! ஆனால் பாபாவின் அருளில் எதிரே பார்க்காத வகையில் உடனே அசுரத் தனமாகப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அப்படியே வடிந்துவிடுகிறது! பிறகு பக்தர்களும் கோவில் பிரதிஷ்டையில் கலந்து கொண்டு இரு பாபாவையும் தரிசித்து இன்புறுகிறார்கள்!
இதே போல் தான் பாபாவை தரிசிக்க முடியாமல் வெள்ள சூழ்நிலை தடுக்கிறது... பக்தை நாகமணி வருடா வருடம் கலந்து கொள்ளும் புட்டபர்த்தி வைபவம் அது! ஆனால் ஒழுங்கான பேருந்து போக்குவரத்தே இல்லை! அவரின் கணவரோ அரசாங்க அதிகாரி.. ரஞ்சித் சிங் எனும் உயர் காவல் அதிகாரிக்கு நாகமணி தொலைபேசியில் அழைக்க... அவரும் பேருந்து இல்லை புட்டபர்த்தி வரை என்கிறார்! பூஜையறையில் பாபாவிடம் வேண்டி.. கணவர் அந்தத் தொலைபேசி விபரம் பற்றி கேட்கையில் பேருந்து போகிறது என்று பொய் சொல்லி கிளம்பிவிடுகிறார்!
பேருந்து ஓட்டுனரோ... புட்டபர்த்தி வரை எல்லாம் பேருந்து செல்லாது என்று சொல்கிற போதும்.. மிரளாமல் எதுவரை செல்கிறதோ அதுவரை பயணிக்கிறேன் என்று திடமாகக் கூறியபடி பயமே இன்றி பாபாவின் மேல் கொண்ட பூரண நம்பிக்கையால் அவர் தனது பேருந்து இருக்கையை விட்டு எழவே இல்லை!
"சுவாமி என்னால் இயன்றதை செய்துவிட்டேன்... இனி உன் சங்கல்பம்! நான் புட்டபர்த்திக்கு வருவதும் வராததும்!" என்று மனதிற்குள் பாபாவிடம் பேசுகிறார்!
ஆச்சர்யப்படும் அளவில் வெள்ளம் வடிய பேருந்து சித்ராவதியை கடக்க... ஓட்டுநரும் நடத்துநருமே வியந்து போகிறார்கள்...!
புட்டபர்த்தி சென்று சேர்ந்த உடனேயே பாபா நாகமணியை நோக்கி..
"ஆக நீ வந்துவிட்டாய்! அது என்மேல் உனக்கு இருக்கும் திடமான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி!" என்கிறார்!
(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 27 - 32 | Author : Dr.J.Suman Babu)
துவாபர யுகத்தில் நதியே வழிவிட்டது... கலியுகத்தில் நதி வெள்ள அளவு ஏறவே இல்லை! ஏன் கலியிலும் நதி வழிவிட்டிருக்கலாமே என்று யோசிப்பவர்களுக்கு... அதே ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
ஆயினும் இரு யுக நடப்புகள் வேறு வேறு.. வேறான நடப்புகளுக்காக வேறான நடவடிக்கைகளையே இறைவன் அவதரிக்கையில் முன்னெடுக்கிறார்! கலியில் யாரையும் இறைவன் சம்ஹாரம் செய்யவில்லை! அக மாற்றமே அடையச் செய்கிறார்! புறப் போரில் வெல்வதைக் காட்டிலும் அகப் போரில் வெல்வதே உண்மையில் கடினம்! சம்ஹாரத்தை விட அகமாற்றமே கடினம்! அந்தக் கடின கால அளவுகளால் தான் கல்கி அவதாரம் மூன்று சாயியாக விரிவடைந்திருக்கிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக