தலைப்பு

புதன், 28 ஜூன், 2023

இரு அவதாரங்களும் புரிந்த வியப்புமிகு கை சிருஷ்டி அற்புதங்கள்!

இரு யுகத்தின் இரு அவதாரமும் செய்த விசித்திர கை சிருஷ்டி அற்புதங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...


கோகுலத்தில் யசோதா நந்தகோபருக்கும் வசுதேவரால் கொண்டு சேர்க்கப்பட்ட விஷ்ணுவின் அவதார குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது!  அந்த இடமே குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரால் கவலைகள் மறந்து குதூகலப்படுகிறது! 

இப்படி இனிதே இளைய இதிகாசமாய் ஸ்ரீ கிருஷ்ண வளர்ப்பு மலர்ந்து வருகிறது!

ஒருமுறை "பழம் வாங்கலையா பழம் வாங்கலையா!" என்று ஒரு பழ வியாபாரப் பெண்மணி கூவிக் கொண்டு குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் வளரும் வீட்டருகே வருகிறார்! குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரே வாசற் கதவருகே வந்து நிற்கிறார்... பேரழகு முகம்... வசீகரப் புன்னகை... அதைப் பார்த்தப் பழக்காரப் பெண்மணி தானாக முன்வந்து இரண்டு பழங்களை எடுத்து குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரின் சிறுத்த மற்றும் கருத்த கைகளில் தருகிறார்! 

அது பண்டமாற்று முறை இருந்த அந்த காலக்கட்டம்! ஒரு பொருள் வாங்குவதற்கு தன்னிடம் உள்ள இன்னொரு பொருளை கொடுப்பர்! ஆகவே கெட்டிக்கார குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இரண்டு பழங்களைக் கைநிறைய எடுத்துக் கொண்டு தத்தி தத்தி நடந்து நடந்து வீட்டுக்குள்ளே சென்று இரண்டு கை நிறைய நெல்மணிகளை கையில் அள்ளிக் கொண்டு வந்து அந்த பழக்காரப் பெண்மணியின் பழக்கூடையில் போடுகிறார்...!

அவர் எடுத்து வரும் போதே தரையில் அட்சதைத் தூவலாய் அந்த நெல்மணிகள் சிதறுகின்றன...  ரசிக்கும்படியான மகிமை மிகு இந்த மழலைச் செய்கையை பார்க்கும் அந்தப் பெண்மணி புன்முறுவலோடு மிகவும் திருப்தியோடு அந்தக் கூடையை எடுத்துச் செல்கிறார்! தனது வீட்டிற்கு வந்த பிறகு அந்தக் கூடையைத் திறந்து பார்க்கிற போது ஆச்சர்யமே திறந்து கொள்கிறது! குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தனது பிஞ்சுக் கைகளால் அந்தக் கூடைக்குள் சிதறிய நெல்மணிகள் அனைத்தும் கலர் கலராய் மின்னிக் கொண்டிருந்தன... பேராச்சர்யத்தோடு அதைத் தொட்டுப் பார்க்கிறார் அந்தப் பெண்மணி.. அந்த நெல்மணிகள் அனைத்தும் நவரத்தினங்களாய் வைரங்களாய் மாறி இருந்தன...!


(ஆதாரம் : வியாச பாரதம் : 10.11.11)


"எது எனக்கு நீங்கள் பக்தியோடு அளித்தாலும் அது ஒரு இலையோ, பழமோ, பூவோ , ஒரு கோப்பைத் தண்ணீரோ அதனை நான் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்" என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்டது அவரது சிறுவயதிலிருந்தே அவரே அதனை வாழ்ந்து காண்பித்ததே என்பதை உணர முடிகிறது!


அது போலவே கலியுகத்தில் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்து போது.. அவரது பால்ய காலங்களில் தன்னைச் சூழ்ந்திருக்கும் நண்பர்களோடு மலை மேல் இருக்கும் புளிய மரத்திற்கு அழைத்துச் செல்வார்... யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்பார்.. சிலர் பழம் கேட்பார்கள்.. வேறு சிலர் வேறொரு பொருள் கேட்பார்கள்! பழம் கேட்டவர்களுக்கு "அதோ நீங்கள் கேட்ட பழம்!" என்று சுட்டிக் காட்டுவார்... அதில் அவர்கள் கேட்ட பழம் புளிமரக் கிளைகளில் தொங்கியபடி அவர்களை பறிக்கச் சொல்லி அழைக்கும்! 

மாம்பழம், கொய்யா, ஆப்பிள் என பலவித பழங்கள் அந்தப் புளியமரக் கிளைகளில் இயற்கையாய் விளைந்திருக்கும்... அந்த மகிமை மரத்தை கல்ப விருட்சம் என்று அனைவரும் அழைத்து இப்போது போற்றி வருகின்றனர்! 


இதே போல் விஜயதசமி, சிவராத்திரி வைபவங்களில் பால் வடியும் பால பாபாவை மாலைகள் அணிவித்து பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வருவர் பக்தர்கள்! அந்த சமயத்தில் பாபாவோ பல அற்புதச் செயல் செய்வார்! எவ்வாறு தனது துவாபர யுகத்தில் நெல்மணிகளை நவரத்தின மணிகளாக்கினாரோ அது போலவே தனது தோள் மாலைகளின் பூக்களைப் பிய்த்து பக்தர்கள் மேல் வீசி எறிவார்.. அவர்களிடம் அது விழும் போது மிட்டாய்களாக, பெப்பர் மின்ட்களாக, சிறு நாணயங்களாக, ஷிர்டி சாயி - சத்ய சாயி புகைப்படங்களாக அவர்கள் மேல் வந்து விழுந்து அவர்களை பேராச்சர்யப்படுத்தும்!


ஒருமுறை 1967'ல் ஒரு வெளிநாட்டு பக்தர் அர்னால்ட் ஷுல்மேனுக்கு சிருஷ்டி மோதிரம் அளிக்கிறார்.. அது பச்சை நிற ரத்தினக் கல் பதித்த மோதிரம்! அதை தேசம் விட்டு தேசம் எடுத்துச் செல்கையில் விமான பரிசோதகர்கள் ஆராய்ந்து வரி சுமையை ஏற்றுவார்களோ என பயப்படுகிறார்! ஆனால் நடந்தது முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது! 

பரிசோதித்தவர்களின் கண்களிலும் கைகளிலும் அது பிளாஸ்டிக்காக தென்படுவதில் அதை அனுமதிக்கிறார்கள்.. பிறகு அர்னால்ட் தனது தேசத்திற்கு வந்து பரிசோதனைக்கு வேறொரு கல் நிபுணரிடம் வழங்குகிற போது... அது ஒரிஜினல் ரத்தினம்... 10,000 ரூபாய் விலை மதிக்கத்தக்கவை என்ற உண்மையை எடுத்துரைக்க வியப்பின் உச்சிக்கே அர்னால்ட் போகிறார்!

"அற்புதங்கள் வேறு நான் வேறு அல்ல...அது என்னுடைய இயற்கை சக்தியால் வெளிப்படுகிறது... அது எனக்கு ஒரு சாதாரண செயல் மட்டுமே!" என்று Man of Miracles புத்தக நூலாசிரியர் மர்ஃபட்டிடம் விவரிக்கிறார் பாபா! 

இப்படி பாபா பக்தர்களுக்கு கல்லை வீசி எறிந்து பிடிக்கச் சொல்கையில் அது அவர்கள் கைகளில் வந்து சேர்கிற போது கற்கண்டான மகிமை சம்பவங்களும் இருக்கின்றன...!

ஒருமுறை ஒரு அமெரிக்க பக்தருக்கு ஒரு சிருஷ்டி ரத்தினக் கல் மோதிரத்தை பாபா அளிக்க... பிறகு வாங்கி அதை பாபாவே தனது திருவுதட்டால் ஊத உடனே அந்தக் கல் வைரக்கல்லாக மாறுகிறது! மீண்டும் அதை திரும்ப ஊத...அது உடனே ஷிர்டி சாயி உருவம் பதித்த மோதிரமாக மாற... 

"உனக்கு தெரியுமா? ஏன் இதை நான் மாற்றிக் கொண்டிருந்தேன் என்று ? இப்படித் தான் நான் மனிதர்களின் மனதையும் இதயத்தையுமே மாற்றி அமைக்கிறேன்!" என்று விளக்கம் தருகிறார் பாபா!

"நான் உங்களிடம் அகமாற்றத்தையே விரும்புகிறேன்! அதுவே எனக்கு முக்கியம்!" என்கிறார் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக பாபா!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 42 - 45 | Author : Dr. J.Suman Babu ) 


ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்திய சாயி என்பது வெறும் வார்த்தை துதிகளில் அல்ல அது செயல்பாட்டால், நோக்கத்தால், பேரன்பால், அவதார அணுகுமுறையால் , ஒரே இறை சுபாவத்தால் ஒன்றே என்பது தெள்ளத்தெளிவாக நம்மால் உணர முடிகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக