தலைப்பு

திங்கள், 26 ஜூன், 2023

கருவில் உயிரைக் காப்பாற்றிய இரு கருணை அவதாரங்கள்!

இரு யுகங்களிலும் எவ்வாறு தாயின் கருவறையில் இருக்கும் உயிரை மற்றும் இறந்த உயிரை உயிரூட்டி சுகப்பிரசவத்தை இரு அவதாரங்களும் ஏற்படுத்திய அற்புத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...


கௌரவ சேனைகளின் முக்கிய பிரதிநிதிகளான பீஷ்மர், துரோணர் , கர்ணன் , ஷல்யா ஆகியோர் மகா பாரதப் போரில் மாண்டு போயினர்! அந்த சமயம் துரியோதனனை ஆறுதல்படுத்த அஸ்வத்தாமனோ பாண்டவர் கூடாரத்தில் அக்னேய அஸ்திரத்தை ஏவி உப பாண்டவர்களைக் கொல்கிறான்!  அதோடு அவன் நின்றுவிடவில்லை ... பிரம்மாஸ்திரத்தை கர்ப்பிணியான உத்தராவின் வயிற்றுக்குள் ஏவுகிறான்!ஏற்கனவே சூல் வலியால் துடிக்கிற உத்தரா மேலும் அந்த சூழ்ச்சி எனும் சூழ் வலியால் துடிதுடித்தபடி இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டுகிறாள்... தன் இன்னுயிரை காப்பாற்றும்படி மன்றாடுகிறாள்... 


தாமதமே இன்றி உடனே ஸ்ரீ கிருஷ்ணர் அரூபமாக (உருவமற்றவராகி) அவளின் கருவுக்குள் புகுந்து அந்த அஸ்திரப் பாய்ச்சலைத் தடுத்து அந்தக் கருவின் உயிரைக் காப்பாற்றுகிறார்! இதில் ஆச்சர்யம் என்னவெனில் அந்த அஸ்திரத்தின் எதிர்மறை பாதிப்பே இன்றி கருவில் இருந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கிறது! அந்தக் குழந்தை வீர அபிமன்யுவின் தீர வாரிசு! தியாக சூரியனின் சிறு கீற்றே அக்குழந்தை, ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணர் அதன் உயிரை கவசம் போல் இருந்து காப்பாற்றி அருள்கிறார்! பிற்காலத்தில் யார் தன் உயிரை காப்பாற்றினாரோ அவரை தேடப் புறப்படும் காரணத்தினால் மிகப் பொருத்தமாகவே அந்தக் குழந்தைக்கு பரிக்ஷித் என்று பெயர் சூட்டுகிறார்கள்! 


(ஆதாரங்கள் : ஸ்ரீ மகா பாரதம் , சௌப்திக பர்வம் - பாகவதம் ,1:180,281)


இதே போல் இதற்கு எந்த விதத்திலும் குறைவின்றி... கலியுகத்தில் நிகழ்ந்த ஒரு துர்சம்பவம், அதை எவ்வாறு அதே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்து மகிமை புரிந்தார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது!


மேற்கு வங்காளத்தில் அது ஒரு குக்கிராமம்! 12 மைல் தூரம் சகதிப் பாதையில் நடந்து தான் பெரிய வசதி ஏதும் இல்லாத அந்த குக்கிரமத்திற்கு ஒருவரால் செல்ல இயலும்! அந்த குக்கிராமத்தின் எல்லைக்கு  அருகே இருக்கும் கிராமவாசிகளின் பொருட்களைக் கொள்ளை அடித்து கள் உண்பது, சூதாடுவது தான் இந்த குக்கிராமத்தினரின் அன்றாட அலுவலே! இப்படிப்பட்ட காட்டுமிராண்டி போன்றோர் நிறைந்த அந்த கொடூரமான கிராமத்தில் ஒரு சாது.. பள்ளி ஆசிரியராக இருக்கிறார்! மிகவும் நேர்மையான மனிதர்... மிகவும் குறைவான தனது வருமானத்திலேயே மானத்தோடு வாழ்ந்து வருகிறார்! அவர் பெயர் பீம்சென்! ஆனாலும் அவரின் மூத்த சகோதரரோ அவருக்கு நேர் விரோதமானவர்! அந்தக் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்... நேர்மையான பீம்சென்னை சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டே வெளியே விரட்டிவிடுகிறார் அவரின் மூத்த சகோதரர்! 

ஒருமுறை இறை பாக்கியம் புத்தக வடிவில் பீம்சென்னுக்கு கிடைக்கிறது! அவரது மாமன் சுதா முஜாம்தீர் எழுதிய ஸ்ரீ சத்ய சாயி பற்றிய ஒரு வங்காளி மொழிப் புத்தகத்தை தருகிறார்! அவர் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு ஸ்ரீ கஸ்தூரி எழுதிய வங்காளி மொழிப் பெயர்ப்பான "சத்யம் சிவம் சுந்தரம்" புத்தகத்தையும் வழங்குகிறார்! அந்த இரண்டு இறையருட் புத்தகங்களை முழுவதும் படித்து முடித்த பீம்சென் ஸ்ரீ சத்ய சாயி பாபா இறைவனே! என முழுமையாக உணர ஆரம்பிக்கிறார்! 


அது செப்டம்பர் 1977. அவரது மனைவியோ பேறு காலத்தில்...  நிறைமாதம்! ஆனாலும் குழந்தை பிறக்கும் ஒரு சிறு அறிகுறி கூட தென்படவில்லை! ஒரே குழப்பம் - ஒரே தவிப்பு! பீம்சென்னுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... கண்களைக் கசக்கி கையைப் பிசைகிறார்! மருத்துவமனையிலோ  பெரிய சுத்தியலால் பீம்சென்னின் உச்சந்தலையில் நச்சென்று அடிப்பது போல் இடிச் செய்தியை மருத்துவர்கள் இறக்குகிறார்கள்! குழந்தை வயிற்றுக்குள் இறந்துவிடுகிறது... இதனை எக்ஸ்-ரே வழியாகவும் படம் எடுத்து மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள்! பேச்சு மூச்சற்று அவர் மனைவி மரணப்படுக்கையில்... இப்படியே விட்டால் இறந்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் அந்தத் தாயைக் (பீம்சென் மனைவி) காப்பாற்றுவதே இயலாத காரியமாகப் போய்விடும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்துகிறார்கள்! 

பீம்சென்னோ இது என்ன Sin'னோ என உள்ளே துவண்டு போகிறார்.. மனமாற பாபாவை வேண்டுகிறார்! அது இரவு.. மருத்துவமனை அறைக்கு வெளியே...  பெஞ்சில் உட்கார்ந்து நெஞ்சில் கைவைத்தபடியே "நான் இந்தப் பிறவியில் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? யாரையும் ஏமாற்றவில்லை! யாரிடமும் பொய் சொல்லி பிழைக்க வில்லை, யாரின் மனதையும் நோகடிக்கவில்லை, அப்படியே தர்மமாக இருந்தாலும் இது போன்று ஏன் நான் அனுபவிக்க நேரிடுகிறது!? என் குழந்தையோ கர்ப்பத்திலேயே இறந்துவிட்டது‌... எனது மனைவி மரணப் படுக்கையில் பேச்சு மூச்சற்று இருக்கிறாள்! நியாயமாக இருப்பதற்கு இது தான் பரிசு என்றால்... நானும் பிறரைப் போல் தீய பாதையைத் தேர்ந்தெடுத்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிடுவேன்!" என்று பாபாவிடம் தனக்குள் தானே பேசிக் கொள்கிறார்! அப்படியே அந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிவிடுகிறார்! 


அடுத்த நாள் விடிகிறது! அந்த விடியலில் ஆச்சர்ய ஒளி வீசுகிறது... அது "சாயிராம் சாயிராம்" என்று பேசுகிறது!

நர்ஸ் ஒரு அதிசயச் செய்தியோடு அவரை எழுப்புகிறார்... அந்தச் செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை‌.. இடம் மாறி சொல்கிறார்களோ என்றே நினைக்கும் வண்ணம் இருந்தது அந்த அற்புதச் செய்தி!

"உங்க மனைவிக்கு சுகப் பிரசவம் ஆகியிருக்கு! சீக்கிரம் உள்ள வாங்க!" என்பதே அந்த அருட் செய்தி! கருவில் இருந்த அந்தக் குழந்தை ஏற்கனவே இறந்து போயிருந்தது! இதனை மருத்துவமே உறுதி செய்திருந்தது! பிறகு எப்படி உயிர் வந்தது...??! மரணப்படுக்கையில் சுயநினைவே இல்லாத அவரது மனைவி எப்படி பிழைத்தாள்?!! மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை! இரட்டிப்பு உயிர்ப்பு அது! 

அந்த குக்கிராமமே அந்த இரட்டிப்பு அற்புதம் பாபாவினில் தான் நிகழ்ந்தது என உணர ஆரம்பித்தது! ஆகையால் பாபாவிடம் ஓரிரு வார்த்தை பேசி நன்றி கூறும் விதமாக புட்டபர்த்தி கிளம்ப ஆவல் கொள்கிறார் பீம்சென்! ஆனால் கையில் ஏது பணம்? மனைவியின் நகைகளை விற்று அதில் பணம் தேற்றி வழியே தெரியாத மேலும் மொழியே தெரியாத புட்டபர்த்திக்கு எப்படியோ வந்து சேர்கிறார்!

அங்கே பார்த்தால் பெருங்கூட்டம்! 50,000 பேர் குவிந்திருக்கின்றனர்! ஒன்றுமே புரியவில்லை அவருக்கு! அது அவதார ஜெயந்தி சமயம்! அதற்காக திரண்ட திருக்கூட்டம் அது! இந்தக் கூட்டத்தில் பாபாவோ நம்மை எங்கே பார்ப்பார்? பேசுவார்? என்றே அசதியாகிறார் பீம்சென்! 

மீண்டும் அவர் புட்டபர்த்திக்கு வரும் வாய்ப்போ வெகு குறைவு! அதில் முக்கிய காரணம் பணமின்மையே! சரி..வெறுங்கையோடும் வெற்று இதயத்தோடும் இனி அவர் கிளம்ப வேண்டும்.. வேறு வழியில்லை என்றபடி கிழக்கு வாசற்கதவோரம் சோர்ந்து அமர்ந்திருந்த பீம்சென்னை நோக்கி வேகவேகமாக ஓடிவருகிறார் ஒரு சேவாதளர்..

"நீங்கள் தான் பீம்சென்னா?" என்று கேட்கிறார் ஒருவர்! பீம்சென்னுக்கு பெரிய ஆச்சர்யம்... புட்டபர்த்தியின் ஈ எறும்புக்குக் கூட தன் பெயர் தெரியாதிருக்கும் போது தன் பெயர் எப்படி வந்தவருக்கு தெரிந்தது என திகைக்கிறார்! 

"பாபா உங்களை அழைக்கிறார்!" என்ற அந்த ஒரு வார்த்தை கேட்டதும் உயிரே வந்தது போல் பாபாவை நோக்கி  ஓடோடிப் போகிறார்...

அவரின் வேகமான நடைக்கு ஏற்ப தன் குடும்பத்திற்கு பாபா செய்த மகிமையும் வேகமாக அவரது மனதில் வந்து போகிறது!


அது நேர்காணல் அறை... "ஏ.. எதற்குப் பயப்படுகிறாய்? நான் இருக்கும் போது? நான் உன் குழந்தைக்கு மருத்துவமனையில் உயிரூட்டவில்லையா? அப்போது டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? என்று நீ தான் கேட்டிருப்பாயே!" என்று பாபா பீம்சென்னோடு பேசிக் கொண்டே அவரது கண்களை உற்று நோக்குகிறார்...பிறகு அன்பின், பக்தியின் சக்தியை பற்றி பாபா விவரிக்கிறார்... சீதையின் பக்தியும் நம்பிக்கையுமே ஸ்ரீராமரை இலங்கை வரை வரவழைத்தது! என்று கூறி பீம்சென்னின் புட்டபர்த்தி வரவழைப்பை பொருத்திப் பொருத்தமாகப் பேசி ஆசி வழங்குகிறார்! 

"மகிழ்ச்சியாக இரு! சென்று 3 ஆண்டுகள் கடந்த பின் வா!" என்கிறார் இறைவன் பாபா!

அகமும் புறமும் மாறிப் போகிறார் பீம்சென்! அவரை கருவியாகக் கொண்டு அந்த குக்கிராமத்தையே மிக மோசமான நடவடிக்கைகளில் இருந்து தடுத்தாட் கொண்டு பக்தி- பஜனை - வழிபாடு என மாற்றி அமைக்கிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 142 - 146 | Author : Dr J. Suman Babu ) 


கருவில் இறக்கப் போகும் உயிரையும் சரி இறந்த உயிரையும் சரி இறைவன் யுகம் யுகமாக அவதாரம் எடுத்துக் காப்பாற்றி வருகிறார்! இதற்கு சான்றாக ஒன்றிரண்டு சம்பவங்கள் அல்ல... இறைவன் பாபாவின் மகிமைகளை நாம் உணர்ந்தது கையளவு... இன்னமும் உணரப்பட வேண்டியது கடலளவு!

நமது இந்த வாழ்க்கையே இறைவன் பாபாவை உணர்வதற்காகத்தான்! பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் என்பது அவரை புகழ்வதற்காக சொல்லப்படுவதல்ல... புகழ்ச்சி இகழ்ச்சியை கடந்த இறை புரட்சி அவர்! இந்தக் கலியில் ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு சூட்டிக் கொண்ட திருப்பெயர் "சாயிபாபா" அதுவே ஷிர்டியில் வாழ்ந்தது.. அதுவே சத்யாவாக சித்ராவதியில் தவழ்ந்தது! அதுவே பிரேமையாய் ஒட்டு மொத்த உலகத்தையும் தனது திருவடி நிழலில் இளைப்பாறச் செய்ய இருக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக