தலைப்பு

புதன், 7 ஜூன், 2023

ஸ்ரீ கர்க்க மகரிஷியும் ஸ்ரீ அரவிந்த மகரிஷியும் சொன்னது ஒன்றே!

எவ்வாறு துவாபர யுக ரிஷியும் கலியுக ரிஷியும் இறைவனின் அவதாரம் பற்றி ஒருங்கிணைந்து உணர்ந்து சொன்ன சத்திய வார்த்தைகள் பரவசமாக இதோ...


மகரிஷி கர்க்கர் மாபெரும் தவசி, மிகத் துல்லியமான ஜோதிடரும் கூட... அவர் தனது தவ வலிமையால் விளைந்த பிரம்ம ஞானத்தில் ஜோதிட ஜோதியாக திகழ்கிறவர்! அவர் ஒருமுறை நந்தரிடம் வளரும் இரு குழந்தைகளுக்கும் ஜாதகம் குறிக்க கோகுலம் வருகிறார்! நந்தரை நந்த கோபர் என்பர்! அந்த இரு குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும்! ஜாதகம் குறிக்கும் அந்த புனிதமான நன்னாளில் அவர் ஸ்ரீ கிருஷ்ண சுவாமியின் வளர்ப்புத் தந்தையான நந்த கோபரிடம் ஸ்ரீ கிருஷ்ணரை குறித்து.. 

அவர் யுகம் தோறும் மனித வடிவம் எடுப்பவர்! இதற்கு முந்தைய அவதாரங்களில் வெண்ணிறமாகவும், மஞ்சளாகவும், மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் வடிவம் எடுத்திருக்கிறார்! இப்போது அடர் நீலமாக அவதரித்திருக்கிறார்! ஆகவே அவர் கிருஷ்ணர் என அறியப்படுவார்! அவர் வசுதேவரின் மகன் ஆகையால் வாசுதேவர் என்றும் அழைக்கப்படுவார்! இந்த விளையாட்டுக் குழந்தை தனது குண நலன்களாலும் , செய்கையாலும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்! அதன் மூலமாக கொடுமை அழியும், நன்மை பாதுகாக்கப்படும்! நீ எல்லா வித சங்கடங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவாய்! சுப நேரம் உனக்கு வாய்க்கும்! அவர் தனது புனிதமான நோக்காலும் செய்கையாலும் புகழடைவார்! ஸ்ரீ மன் நாராயணனே அவர்! இங்கே அவதாரம் எடுத்திருக்கிறார்!"


(ஆதாரம் : வியாச பாகவதம் : 10.8.19) 


அதே போல் கலியுகத்தில் மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் தனது தீவிரமான தியான சாதனையை 1923 முதல் 1926 வரை தனது புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் மேற்கொள்கிறார்! அந்த தெய்வீக உறைவிலிருந்து நவம்பர் 24 1926 ஆம் ஆண்டு வெளியே வந்து தனது சீடர்களை அழைக்கிறார்!

பிறகு ஒரு 45 நிமிடங்கள் ஆழமான மௌனம்! அடர்த்தியான மௌனம் அது! அழுத்தமாய் மூச்சு விட்டால் கூட கேட்கப்படுகின்ற மௌனம் அது! பிறகு அந்த நீள் மௌனம் கலைத்து ஸ்ரீ அரவிந்த மகரிஷி தனது சீடர்களிடம் ஒரு பரவசப் பிரபஞ்ச ரகசியத்தை முதன்முறையாகப் பகிர்ந்து கொள்கிறார்! 


"இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூமியில் மனித உடம்பு எடுத்துவிட்டார்! இனி அவரது மனம் கடந்த அதிமனம் இந்த பூமியில் இயங்கும்! அது அளப்பரிய ஆனந்தத்தை இந்த உலகத்திற்கே அளிக்கும்! இனி தனது அளப்பரிய தெய்வீகப் பேராற்றலினால் பூமியின் பிரதேசங்களை அவர் சொர்க்கமாக்குவார்! ஒட்டுமொத்த உலகமும் அவரது தெய்வீக உரையாடலை கேட்கும்! என்னுடைய பிரார்த்தனைக்கு கடைசியாக பலன் கிடைத்தது! என்னுடைய வேண்டுதலுக்கு விடை கிடைத்தது! கடவுள் பூமியில் இறங்கி மனித வடிவம் எடுத்துவிட்டார்!" அவர் சொல்கிற தேதியை உற்று நோக்குகிற போது அது நவம்பர் 24 1926 ஆம் ஆண்டு என்பதை துல்லியமாக உணரமுடிகிறது! அதற்கு முந்தைய நாளான நவம்பர் 23 - 1926 அன்றே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணருடைய பேரவதார தினம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது! Sri Aurobindo has written about that day on page 208 of the book "Sri Aurobindo on Him­self and the Mother" (1953 edition)

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 20,21 | Author : Dr. J Suman Babu )


மகரிஷிகளால் மட்டுமே இறை அவதாரத்தை துல்லியமாக உணர முடியும்! ஆயினும் எல்லாவிதமான இறை செயல்களையும் மகான்களால் எடுத்தியம்ப இயலாது! அதுவே பரிபூர்ண இறை சுதந்திரம்! பரம இறை ரகசியம்! ஒரு கருவியை நாம் இயக்கலாம்... அது நம் சுதந்திரம், ஆனால் அந்த கருவியோ நம்மை இயக்க இயலாது.. இங்கே கருவி என்பது மகான்கள், மகரிஷிகள்! இயக்குவது சாட்சாத் இறைவனே! இல்லை எனில் மகரிஷி அரவிந்தர் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார் என்று சொல்லியதோடு அவருடைய பெயர் ஸ்ரீ சத்ய சாயி என்று திகழும் என சொல்லாததற்கு காரணம் அது பரிபூர்ண இறை சுதந்திரம்! பரம இறை ரகசியம்! சூரியனில் வரும் ஒரு கீற்று முழு சூரியனின் பிரதிநிதியே தவிர அதுவே முழு சூரியனும் இல்லை... அது போல் எதை மகான்களுக்கு உணர்த்தி எதை உரைக்க இறைவன் சங்கல்பிக்கிறாரோ அது மட்டுமே அவர்கள் தெரிவிக்கிறார்கள்! காரணம் அவர்கள் இறைவன் பாபாவின் கைக் கருவிகள் !


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக