எவ்வாறு இரு அவதாரங்களும் வாய் வழியேவும் வாயில் வழியேவும் விஸ்வரூப தரிசனம் காட்டி தங்களது இறைமையை உணர வைத்தார்கள் எனும் பேராச்சர்யப் பதிவு அமானுஷ்யமாக இதோ...!
ஒரு நாள் பலராமன் மற்றும் கோகுலத்து யாதவ சிறுவர்கள் யசோதையிடம் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் செய்யும் விஷமக் குறும்பை முதல் தகவல் அறிக்கையாய் யசோதையிடம் புகார் தெரிவிக்க வருகிறார்கள்! அவர் செய்த பாலக் குறும்பு விஷமம் என்னவென்று விசாரிக்கப்படுகிறது! அப்போது குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் மண்ணை தின்கிறார் எனும் அதிர்ச்சித் தகவலை அறிந்தவுடன் யசோதை கோபத்தின் உச்சிக்குச் செல்கிறாள்..! கையில் பிரம்போடு குறும்போடே குறும்பு செய்யும் ஸ்ரீ கிருஷ்ணரை அணுக முற்படுகையில்
"நான் என்ன இன்னும் குழந்தையா? மண்ணை தின்பேனா? நான் என்ன அறிவிலியா? புத்தி சரியில்லையா? இந்தப் பசங்களின் பேச்சை எல்லாம் கேட்காதீர்கள்! என் வாயை நன்றாக உற்றுப் பாருங்கள்! மண் இருந்தால் என்ன தண்டனை வேண்டுமானலும் தாருங்கள்! அது மண்ணா? இதோ நீங்களே நன்றாக உணர்ந்து கொள்வீர்கள்" என்று வாயை அகலத் திறக்கிறார் அண்ட சராசரமே யசோதைக்கு தெரிகிறது... பிரபஞ்சம் விரிகிறது.. அதில் எல்லாம்.. ஏன் கிருஷ்ணர் வாயை காட்டி யசோதை அதைப் பார்ப்பது கூட அவர் வாயில் தெரிகிறது.. பாச அதிர்ச்சி இறை அதிர்ச்சியாக மாறி மண்ணில் சரிகிறாள் யசோதை!
"அது ஒரு கனவா? மாயையா? மனக் காட்சியா? அல்லது சத்தியமா? என் சிந்தனை சக்திக்கு இழப்பா? கண்ணால் பார்க்க குழந்தை போல் இருக்கிறது.. ஆனால் அதனுடைய திருச்செய்கையை பார்க்கையில் கடவுளாகவே தோன்றுகிறது! ஆதிநாராயணனாகவே அந்தக் குழந்தை திகழ்கிறது! உலகியல் கட்டுகளில் இருந்து விடுவிக்கும் கடவுளரின் கடவுளாகவே ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் அந்தக் குழந்தை வியாபிக்கிறது என யசோதை பிரபஞ்ச ரகசியம் கசிந்த சர்வ சத்தியத்தை உணர்ந்து கொள்கிறாள்!
(ஆதாரம் : பாகவதம் - 10.342)
அதே போல் கலியுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சத்ய சாயியாக அவதரிக்கையில் தனது 14 ஆவது வயதில் தானே "சாயிபாபா" எனும் கலியுக இறைவனின் அவதாரம் என்று அறிவிக்கிறார்! ஆனாலும் அதற்கு முன்பிருந்தே சுமார் அவருடைய 9 ஆவது வயதிலேயே பக்கத்து வீட்டு சுப்பம்மா பால் வடியும் பால பாபாவினுடைய இறை சுபாவத்தை அப்போதே உணர்ந்து கொள்கிறார்!
சுப்பம்மாவுக்கோ குழந்தைகள் இல்லை... ஆகவே பாபாவிடம் பேரன்போடும் பரிவோடும் நடந்து கொள்வார்! சுப்பம்மா ஆத்து நபர்களோ பாபாவை பிராமண குணநலன்கள் பொருந்திய குழந்தை தான் என்று ஆனந்தப்படுவர்!
பாபாவின் வீட்டிலோ அவரும் அவரின் தாத்தா கொண்டம ராஜுவும் அக்மார்க் சைவ பிரியர்கள்! அதிதீவிரமாக சைவ உணவைப் புசிப்பவர்கள்! அந்த காலத்திலேயே பெற்ற தாய் ஸ்ரீ ஈஸ்வராம்பாவை தேவகியாகவும், சுப்பம்மாவை யசோதையாகவும் அந்த கிராமமே கொண்டாடியது!
சுப்பம்மாவுக்கோ பால் வடியும் பால பாபாவிடம் அளவு கடந்த பிரியம்! மழலைப் பருவத்திலிருந்து பதின்பருவத்திற்கு வருகிற பாபா தியானத்திலேயே பெரும்பாலும் தனது பொழுதுகளைச் செலவு செய்வார்! மலை மீதிலோ மரத்தின் நிழலிலோ மணல் மேட்டிலோ தியானத்தில் அமர்ந்திருப்பார்! ஆனால் சுப்பம்மாவோ பதின் பாபாவுக்கு வேளா வேளைக்கு உணவு தர வேண்டியே விதவிதமான பதார்த்தங்களை தயார் செய்து மலை மேல் நடந்தும் , வனாந்தரத்தில் அலைந்தும்.. ஆங்காங்கே தேடியும்... அவருக்கு உணவு பரிமாறுவர்! பாபாவினுடைய ஷிர்டி அவதாரத்தில் பாய்ஜா பாய் எப்படி தேடித் தேடி உணவு பரிமாறினாரோ அப்படி உணவு பரிமாறுவார்! அதுவும் பட்டினியோடு பரிமாறுவார்.. பாபா சாப்பிட்ட பிறகே தான் உண்பார்!
சுப்பம்மா வீட்டுக்கும் ஈஸ்வரம்மா வீட்டுக்கும் இருக்கின்ற தூரம் ஒரே ஒரு தடுப்புச் சுவர் தான்! ஆகையால் ஒரு பெஞ்ச் மீது ஏறிக் கொண்டு தனது முக தரிசனத்தைக் காட்டுவார்!
ஒருமுறை சுப்பம்மா பாபாவுக்கு உணவு பரிமாறுகிறார்.. பாபா நன்றாக ருசித்துச் சாப்பிடுகிறார் .. அப்படியே அவருக்கு விஸ்வரூப தரிசனமும் காட்டுகிறார்... உடனே ராமா கிருஷ்ணா என தன்னிலை மறந்த சுப்பம்மா யசோதையைப் போலவே ஆன்மீக அதீத நிலைக்குச் (Trance ) சென்று மண்ணில் சாய்கிறாள்! பாபாவே சாட்சாத் பரம்பொருள் என்பதை உணர்ந்து கொள்கிறார்! இந்த பேரனுபவம் பாபா தான் இறை அவதாரம் என்று அறிவிப்பதற்கு முன்பே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது!
(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 45 - 47 | Author : Dr. J. Suman Babu )
விஸ்வரூப இறைக் காட்சி கண்டு வளர்ப்புத் தாய் யசோதையும் வளர்ப்புத் தாய் சுப்பம்மாவும் இரு அவதாரமும் ஒன்றே என்பதை உணர்ந்து கொள்கின்றனர்! நமது இதயத்தில் தீவிர பக்தியை வளர்த்து இறை சாயி எனும் பேரனுபவம் அடைய இன்றிலிருந்தே தியானம் பயில்வோம்! எந்த முயற்சியும் இன்றி பூர்வ புண்ணியத்தால் இறை தரிசனம் பெறுவது அரிதான வகை.. ஆன்ம சாதனையால் இறை தரிசனம் பெறுவது எளிதான வகை!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக