தலைப்பு

திங்கள், 10 ஜூலை, 2023

இடித்த பெரும் மழையில் இருந்து காத்த இரு பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் இருட்டி வரும் வானிலையை தனது கைகளால் தடுத்து நிறுத்தி இன்னல் துடைத்தனர் எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...


ஒருமுறை கோகுலத்தில் நந்த கோபர்கள்  தங்களது பசுவினங்களைப் பராமரிக்க சுற்றி எங்கும் செழுமை வேண்டி வசந்த மழைக்காக வருணனுக்கு ஓர் யாகம் நிகழ்த்தலாம் என முடிவு செய்கின்றனர்...! தங்களுக்குள்ளேயே அதனை பேசி அவர்கள் ஓர் முடிவுக்கு வந்தாலும் எல்லாம் அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களது முடிவை மாற்ற எத்தனிக்கிறார்! இதன் வழியாக வருணனின் அகந்தைக்கு ஓர் பாடம் நிகழ்த்த முடிவு செய்கிறார்!

நமக்கு மழை தருவதே ஈரக் காற்றை நிறுத்தும் அந்த மாபெரும் கோவர்த்தன கிரி தான்! ஆகையால் கோவர்த்தன கிரியை பூஜை செய்தால் போதுமானது என்றும் அவ்வளவு செலவு செய்து வருண யாகம் நிகழ்த்தித் தேவையில்லை என்றும் கோபர்களை மடை மாற்றுகிறார்!

    வானில் இடி விழ வைக்க வேண்டிய வருணனின் தலையிலேயே இடி விழுந்தது போல் இருந்தது! அந்த கோவர்த்தன பூஜையை பார்த்து கொதித்துப் போகிறான்! வருண தேவனோ கோபத்தில் அக்னி  தேவனாகிறான்!

கோவர்த்தன கிரி போல் வளர்ந்து உடல் பெருத்து விஸ்வரூப தரிசனமாய் ஸ்ரீ கிருஷ்ணர் விரிகிறார்! கோவர்த்தன கிரி அருகே கோவர்த்தன கிரி போலவே பெருத்த அவரின் பாதங்களுக்கு பூஜை செய்கிறார்கள் கோபர்கள்! வழிபாடோ மிகவும் கோலாகலமாக நிகழ்கிறது! 


இதனால் ஆத்திரத்தில் வருணன் தூங்குகிற ஒருவரது  தலையில் தண்ணீர் பாத்திரம் கவிழ்த்துவது போல் கோகுலத்திற்கு பெரும் மழையை பெய்விக்கிறான்! அது பெருமழை மட்டுமல்ல பேய் மழை! கோகுலத்தவர் அதிர்ந்து போகிறார்கள்! கோகுலமே நீரால் மூழ்கிவிடும் அளவிற்கு மூர்க்க மழை! குடைகளே கண்களை குத்தும்படியான அடை மழை! "ஆபத்பாந்தவா அனாத ரட்சகா!" என ஸ்ரீ கிருஷ்ணரையே நந்த கோபர்கள் வேண்ட... அவரின் பாதங்களை அவர்கள் தீண்ட... ஐம்பூதங்களை சிருஷ்டித்த சாட்சாத் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரே முன்பு வராஹ அவதாரமாகி பூமியைக் காத்ததை அவர்கள் உணர்ந்திருந்திருந்தால் அவரிடமே சரணாகதி அடைகின்றனர்! 


"மலையின் உயரம் பெரியது... என் உயரம் சிறியது என நினைத்துவிடாதீர்கள்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் திரண்டு அசையாது இருந்த கோவர்த்தன மலையை தூக்கி உள்ளே அனைவரையும் அழைக்கிறார்! விடிய விடிய மழை! மழையோ மழை! ஆனால்ஸ்ரீ கிருஷ்ணர் மலைக் குடை ஏந்தி இருந்ததால் நந்த கோபர்கள் மட்டுமல்ல ஆவினங்களே அதில் அடைக்கலமாகின... வருணன் அனுப்பிய அந்த அந்த ராட்சச மழையிலேயே வருணனின் அகந்தையும் கரைந்து மண்ணோடு மண்ணாகப் போனது!

(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் - 10-920)


அது போலவே கலியுகத்தில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரிக்கிற போது அதே போல் பஞ்ச பூதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்! ஒருமுறை பாபாவுடைய பௌதீக சகோதரி வெங்கம்மா அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம்... வானில் மழையோ இந்த நொடியோ அடுத்த நொடியோ எம்பிக் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என்பது போல் வானிலை குளிர் காற்றால் தூது சொன்னது! அவர்களுக்கே பயம்... வெங்கம்மாவின் பக்கத்து வீட்டுக்காரரோ... "சித்ராவதி நதியை கடந்து விட்டால் கரும்பு இலைகள் கிடைக்கும்.. அதை வைத்து மண்ணை மூடிவிடலாம்.. இல்லை எனில் பெருத்த நஷ்டம் ஏற்படும்... மண் கரைந்தோடி வீடு கட்டுவதில் பொருள் நஷ்டமும் ஏற்படும்!" என்கிறார்! வெங்கம்மாவுக்கோ ஒரே பதட்டம்! என்ன செய்வதென விழி பிதுங்குகிறார்!


அதே இடத்தில் அவர்களோடு இருந்த பாபா "வெங்கம்மா! நீ கவலைப்படாதே! மழை வராது!" என தனது கைகளை தூக்கி வானம் பார்த்து அந்த மழை மேகங்களை அப்படியே நிறுத்துகிறார்! வந்த மழை அப்படியே திரும்பியது! அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்... அந்தப் பிஞ்சுக் கைகளுக்கு அப்படி ஒரு சக்தியா? என்று வியக்கின்றனர்! ஆம் அப்போது பாபாவின் பௌதீக சரீரத்திற்கு வெறும் 13 வயதே!


இதைப் போல் பெரிய அரங்கு .. கூர்க் மாவட்ட மடிகேரியில்... ஒரு ஆன்மீகக் கூட்டம்.. பாபா பேச வேண்டும்! பாபா பேச்சைக் கேட்க திரளான கூட்டம் மட்டுமல்ல திரளான கார்மேகமும் சூழ்ந்திருந்தது... பாபா பேசுவாரா? அல்லது மழை பேசுமா? மழை பேசினால் பாபாவின் பேச்சைக் கேட்பதற்கே கூடாரம் இல்லா மக்களின் அமர்வு கலையக் கூடும்! ஆகவே ஆகாயக் குடையின் கீழ் அமர்ந்திருந்த மக்கள் மனதில் ஒரே பதட்டம்! அங்கே சேவைத் திலகம் கஸ்தூரி இருக்கிறார்! 

அவருக்கு சடாரென வெங்கம்மா வீடு - வந்த மழை - தடுத்த பாபா கரம் - நினைவுக்கு வருகிறது! அவர் பேசிய பிறகு பாபா பேச ஆரம்பிக்கிறார்! மழை வரும் அறிகுறியோ மாறவில்லை.. ஆனாலும் மழை எம்பிக் குதிக்கவே இல்லை ! ஸ்ரீ சத்ய சாயி ராமன் போட்ட அருட் கோட்டை அது தாண்டவே இல்லை! 


பாபாவே பேசுகையில் "பாபா மழையை நிறுத்துவார் என கஸ்தூரி தன் பேச்சால் உங்கள் முன் அதனை தெளிவுப்படுத்தினார்... என் மேல் உங்களுக்கான நம்பிக்கையை உங்கள் இதயத்தில் மேலும் அவர் விதைத்தார்! ஆனாலும் தன் வார்த்தையில் அவருக்கு அத்தனை உறுதியின்றி.. மனதிற்குள் "சுவாமி மழை வராமல் எப்படியாவது தடுத்துவிடுங்கள்! என்று வேண்டிக் கொண்டார்! என் மேல் எப்போதும் உங்களுக்கு திடமான உறுதியான நம்பிக்கை வேண்டும்!

மழை இப்போது இங்கே இல்லையே தவிர மகாதேவ்பேட்'டில் பெய்து கொண்டுதான் இருக்கிறது! அது இங்கே வர இன்னும் 20 நிமிடங்கள் ஆகும்! நீங்கள் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்ற பிறகுதான் மழை வரும்! ஆகவே பயப்பட வேண்டாம்! நான் இருக்கிறேன்!" என்கிறார்!

பாபா சொன்னது போலவே கடிகார முள் துளி அளவு கூட கூடுதல் இன்றி குறைவின்றி சரியாக 20 நிமிடங்களில் அங்கே மழை பெய்ய ஆரம்பிக்கிறது! 

பாபாவின் அதரம் வெறும் அதரம் அல்ல அதுவே அண்ட சராசரத்தை அடக்கி ஆண்டு நமக்கு ஆன்மீகம் அருளும் மதுரம் என்பதை இதயம் இனிக்க இனிக்க உணர்ந்து கொள்கிறார்கள் கூர்க் மக்கள்! ஆம் அவர்கள் இருந்ததுஆகாயக் குடையின் கீழ் அல்ல.. பாபாவின் அருட் குடையின் கீழே தான்!

(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 52 - 55 | Author : Dr.J.Suman Babu) 


ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் பெரும்பாலும் மழையையே பெய்விக்கிறார்... வானக மழையைச் சொல்லவில்லை... கருணை மழையைச் சொல்கிறேன்! அந்த மழை பெய்கிற போது தான் நமக்கு மழையே பொழிய ஆரம்பிக்கிறது... ஒரு மழை இன்னொரு மழையை இழுத்து வருகிறது.. ஆம் பாபாவின் கருணை மழை நமக்கு ஆனந்தக் கண்ணீர் மழையை வரவழைத்து விடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக