தலைப்பு

சனி, 8 ஜூலை, 2023

காட்டுத் தீயை நொடியில் அணைத்த இரு அவதாரங்கள்!

எவ்வாறு படபடவென சூழ்ந்த காட்டுமிராண்டித்தனமான காட்டுத் தீயை கண்ணிமைக்கும் நொடியில் அணைத்து இரு அவதாரங்களும் தங்களையே நம்பி வாழும் பக்தர்களை காத்தது? எனும் பேராச்சர்ய அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...


கோபாலர்களுடன் வனப்பகுதியில் எப்போதுமே விளையாடுவார் பாலன் ஸ்ரீ கிருஷ்ணர்! அவர் அப்படி அணுக்கமாக இணக்கமாக இருந்ததால் தான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோபால கிருஷ்ணர் என்றே பெயரே வந்தது! 

அப்படி விளையாடி விளையாடி அவர்கள் அடர் வனத்தில் நுழைகிறார்கள்! பசு மேய்த்தலுக்கு சற்று ஓய்வு! ஆனால் சூழ்நிலை மாறி திடீரென வனத்தில் காட்டுத்தீ பற்றிக் கொள்கிறது... அதற்கு கூடுதலாக எட்டுத் திசைகளையும் திறந்து விடும் அளவுக்கு பலமான காற்று அந்த ராட்சச நெருப்புக்கு இறக்கைக் கட்டி விடுகிறது!

பசுக்கள் பதைபதைக்கின்றன...

கோபாலர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறார்கள்! 

"நீயே எங்களை காப்பவன்... நாங்கள் ஏதும் அறியாதவர்கள்! அங்கே பார் அக்னிச் சிறகுகள் சாம்பலாக்க ஆ என்று தனது ஆகாய வாயைப் பிளந்து தகனப் பசியோடு பறந்து வருகிறது... உன்னை சார்ந்தவர்களை கைவிடாதே கிருஷ்ணா... எங்களை காப்பாற்று!" என்று கோரஸாக மன்றாடுகிறார்கள்! 


உடனே கிருஷ்ணர் "நண்பர்களே... நான் சொல்லும் வரை கண்களை மூடிக் கொண்டே இருங்கள்! எந்த காரணத்தைக் கொண்டும் கண் திறக்காதீர்கள்!" என்று கூறியதால் அனைவரும் எதிர் கேள்வி கேட்காமல் அக்னி பயத்துடனேயே கண்களை மூட... ஸ்ரீ கிருஷ்ணரோ தங்களை விழுங்க வந்த அக்னி தேவனையே விழுங்கி ஏப்பம் விடுகிறார்! தனது திரு உதடுகளாலேயே சூழ்ந்த எல்லா நெருப்பையும் ஸ்ட்ரா போட்டு உறிவது போல் குடித்துவிடுகிறார்! பிறகு அவர் சொன்ன பிறகு கண்களைத் திறக்கிறார்கள்.. ஒரு பொட்டு தீ இல்லை.. ஏன் தீக்கங்கு கூட இல்லை...  அதிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் அந்த கோகுலத்தினரால் இறைவனின் அவதாரமே, அவர் சாதாரண மனிதரே இல்லை என்பதை உணர்ப்படுகிறார்!

(ஆதாரம் :- பாகவதம் : 10-750)


இதே போல் கலியுகத்திலும் பல காட்டுத் தீயை அணைத்திருக்கிறார் அதே ஸ்ரீ கிருஷ்ணரான ஸ்ரீ சத்யசாயி!


ஒருமுறை ஷில்லாங் மற்றும் மேகாலயா பகுதியில் சேவைத் திலகம் கஸ்தூரியை அழைக்கிறார்கள்! அருணாச்சல பிரதேச ஆளுநர், கர்னல் கே.ஏ.ராஜா போன்றோர் தேஜ்பூர் ராஜ்பவனில் வைத்து கஸ்தூரியை அழைத்து உபசரிக்கிறார்கள்!

அந்த சமயத்தில் கர்னல் வீட்டு வெளியே சடார் என காரணம் தெரியாமலேயே தீப் பிடிக்கிறது! அவர் வீட்டு சுற்றுப் புறங்களில் நேபாளி மக்கள் வாழ்கிற பகுதியாகவும் , காய்ந்த பெரிய பெரிய மூங்கில்களால் ஒரு கூடாரம் போல் அமைத்து வாழ்வார்கள்! ஒரு கட்டு மூங்கிலில் அப்படிப் பற்றிக் கொண்ட நெருப்பே அது! 

என்ன செய்வதென்று அறியாமல் கர்னல் ராஜாவின் மனைவி "பாபா பாபா!" என்று  திகைத்து அரண்டபடியே கத்த  அடுத்த நொடி தாமதமின்றி டினோஸர் போல் ராட்சசனாய் எழுந்த அந்த அசுர நெருப்பு அப்படியே பூனை போல் அடங்கிவிடுகிறது! ஒரே ஆச்சர்யம்... நெருப்பு தான் அடங்கியதே தவிர பாபா புரிந்த மகிமையால் இதயத்தில் பூத்து நிரம்பிய ஆச்சர்யம் அடங்கவே இல்லை!


ஒருமுறை அது 1959, ஜுன் 21 ஆம் தேதி! பாபாவுக்கு உடல் கொதிக்க ஆரம்பிக்கிறது... இமாலயத்திலேயே எரிமலைக் குழம்பு வெடிக்குமா? என்பது போல் பாபாவுக்கு காய்ச்சல்..‌. 105.5 டிகிரி கொதி கொதிக்கிறது! ஆனால் அடுத்த 5 நிமிடத்திலேயே அது 99 டகிரிக்கு குறைந்துவிடுகிறது! 

இதற்கு என்ன காரணம் என்பதை பின்னோக்கி பார்க்கிற போது...

அது நிலா வெளிச்சம் ஒரு முறை பாபா தனது பக்தர்களோடு அந்த நிலாக் குடையின் கீழே சாப்பிட.. அது முடிந்து கிளம்பிய ஒரு பக்தரிடம்.. "நெருப்போடு உன் தாயை பத்திரமாக இருக்கச் சொல்!" என்கிறார்! ஆனால் அதற்குப் பிறகு ஒரு நாள் அந்த பக்தரின் தாயார் விளக்கேற்றுகிற போது அவரது புடவையில் நெருப்பு பற்றி எரிகிறது... இந்தச் செய்தி அறிந்ததும் பாபாவோடு இருந்த அந்த பக்தர் பாபாவின் அனுமதியோடு நெருப்பு எப்படி அணைந்தது என்பதை கேட்க தொலைபேசியைச் சுற்ற... அது டிரங்க் கால்... "பாபா என் முன் வந்து உடனே என் புடவையின் நெருப்பை அணைத்தார்...அவர் கைகளில் நிச்சயம் நெருப்புப் பற்றி இருக்கும்!" என்று பிறகு தாயே தெளிவுபடுத்துகிறார்.. பாபாவின் கையில் தீப்புண் ஆகவில்லை... அந்த நெருப்பின் தகிப்பை மட்டுமே காய்ச்சலாய் உள்வாங்கிக் கொண்டார் பாபா! இந்த விபரம் மகன் மூலமாக அறிந்ததுமே தாய் உடனே சமாதானம் அடைகிறார்!


இதைப் போலவே அமெரிக்க யோகினி இந்திரா தேவி அம்மையாரின் சாயி நிலையம் அருகே பெரிய தீ விபத்து... ஜோ ஜோ என்று தீத் தாண்டவம் ஆடுகிறது! அதற்கு ஏதுவாக அந்த தீ நடனத்திற்கு காற்றும் அதற்கு சரியானதொரு மேடை போட்டுத் தந்துவிடுகிறது! அந்த கொடுந்தீக் கூட்டம்  காடுகளை எரித்த தனது அக்ரம ராட்சச நாவால் 3000 வீடுகளை விழுங்கி சாம்பலாக ஏப்பம் விடுகிறது! சாயி சென்டர்ஸ் கூட மெக்சிக்கோவில் தீக்கிரை ஆகும் என பலர் பயந்தார்கள் ஆனாலும் மிகவும் அதிசயமாய் எந்த சாயி சென்டர்ஸிலும் தீ பற்ற வில்லை..‌குறிப்பாக இந்திரா தேவி அவர்களின் சாயி நிலையத்தில் தீயே இல்லை... அதற்கு அருகே இருந்த இடங்கள் எல்லாம் தீச்சேதங்கள்... ஆனால் அம்மையாருடைய இடத்தில் அந்த தடாலடி தீயின் ஒரு காலடிச் சுவடு கூட இல்லை! அனைவரும் வியக்கிறார்கள்! ஆனாலும் அந்த நிலையத்தில் ஒரே ஒரு தீ மட்டுமே உள்ளே எரிந்து கொண்டே இருந்தது... அதுவே தியானத் தீ!

பிறகு அம்மையார் பாபாவை தரிசிக்கிற போது அவர் ஒரு ஸ்ரீ மகாலஷ்மி பதக்கம் பொருந்திய சிருஷ்டி கழுத்தணியை வழங்கி.. நிலையத்தில் வைக்கச் சொல்லியும்... "இனி அந்த நெருப்பு சம்பவம் எப்போதும் நடக்காது! இது உன் நிலையத்தை மேலும் பாதுகாக்கும்!" என்று உறுதி அளித்து ஆசீர்வதிக்கிறார்!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 48 - 52 | Author : Dr. J. Suman Babu ) 


இந்த நெருப்பு சம்பவம் ஷிர்டி பாபா அவதாரத்திலும் நிகழ்ந்தது! தாயின் அஜாக்கிரதையால் நெருப்பில் விழப்போன ஒரு குழந்தையை பாபா இருந்த இடத்திலேயே அவர் அருகே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் கை விட்டு ஒரு தள்ளு தள்ளுகிறார்! அப்படியே அங்கே தீயில் விழப் போன குழந்தையை நொடிப் பொழுதில் தடுக்கிறார்!

மூன்று அவதார நோக்கமும் ஒன்றே... அது என்ன நோக்கம்...? அதுவே சர்வ ஜீவ காவல்...அதிலும்  குறிப்பாக தன்னிடம் சரணடைந்தவர்களை நொடிப்பொழுதும் காப்பது! இந்த மூன்று அவதாரங்களில் உள்ள தனித்துவம்... ஸ்ரீ கிருஷ்ணரோ நெருப்பை சாப்பிட்டு ஜீரணித்தது... ஸ்ரீ ஷிர்டி சாயியோ தீப் புண்ணையே கையில் வாங்கிக்கொண்டது.. ஸ்ரீ சத்ய சாயியோ அதன் தகிப்பை மட்டும் உள்வாங்கிக் கொண்டது! ஆக இறைவன் யுகம் தோறும் அவதரிக்கிற போது நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது... காலக்கட்டத்தை உத்தேசித்து செயல்முறை மட்டும சற்று வித்தியாசப்படுகிறது! அவ்வளவே!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக