தலைப்பு

புதன், 5 ஜூலை, 2023

ஒவ்வொருவர் இதயத்திலும் நிறைந்திருக்கும் இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் தங்களை ஒன்றென உணர்த்தும் படியே நம் ஒவ்வொருவர் இதயத்தில் எப்படியாக இணைந்திருக்கின்றனர் என்பதை வாழ்க்கை அனுபவம் வழியாகவும் கீதை வழியாகவும் உணர்த்தும் உன்னத பதிவு சுவாரஸ்யமாக இதோ...


யோ மாம் பஷ்யதி சர்வாஞ்ச மயி பஷ்யதி 

தஸ்யம் ந பிரனஸ்யாமி  நச மே ந ப்ரனஸ்யதி 

அதாவது : நானே எல்லாவற்றையும் சிருஷ்டி செய்து அதனுள் நானே நீக்கமற நிறைந்திருக்கிறேன்! யார் சத்தியத் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்களோ அவர்களிடம் என்னை நான் மறைத்துக் கொண்டதே இல்லை! அந்த சத்ய சாதகரும் என் கண்மறைவை விட்டு ஒரு நாளும் நீங்கிச் செல்வதே இல்லை!


(ஆதாரம் : பகவத் கீதை - 6.30)


என்று ஸ்ரீ கிருஷ்ணர் தனது பகவத் கீதையில் இந்த இறைப் பேருண்மையை பட்டவர்த்தனமாய்ப் பகிர்ந்திருக்கிறார்!


அது அவ்வாறே கலியுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த போதும் தொடர்கிறது! அதற்கான உதாரண வாழ்வியல் சம்பவங்கள் பல...

ஒருமுறை ஒரு கலைஞர் இட்டாலியில் இருந்து வருகிறார்! கொஞ்ச நாள் ஆனந்தமாக ஆசிரமத்தில் தங்கி விட்டுச் அவரது தேசம் செல்கிறார்! நாட்கள் கடந்து போகிறது ஆனால் பாபா பற்றிய நினைவுகளை மட்டும் அவரால் கடந்து போகவே முடியவில்லை.. மனதிற்குள் அடிக்கடி பாபா வந்து மின்னலடிக்கிறார்! இதயத்தில் வந்து இமை திறக்கிறார்! இந்த விந்தையை அந்த இட்டாலிக்காரரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை... அந்த ஆச்சர்ய சந்தேகத்தை இன்னொரு முறை அவர் புட்டபர்த்தி வருகிற போது "ஏன் உங்களை என்னால் மறக்கவே முடியவில்லை‌... என்ன மாயம் இது?" என்று கேட்கிறார்! அதற்கு பாபா "மாய மந்திரம் ஏதுமில்லை! இதற்கு மிக முக்கிய காரணம் நான் உங்கள் இதயத்திலேயே குடியிருக்கிறேன் என்பதே தான் !" என்று தெளிவுபடுத்துகிறார்!


பல சாயி பக்தர்கள் இந்த விரி பிரபஞ்சத்தில் அசையும் மற்றும் அசையா சகல பொருட்களிலும் இறைவன்  சாயியையே காண்கிறார்கள்! 

இதனை ஒரு பக்திப் பெண்மணி விளக்குகிறார்! தினமும் அவரது வீட்டின் ஜன்னலுக்கு வந்து ஒரு சிறு பறவை அமரும்... அது பறவை அல்ல பாபா என்றே அந்த பக்தை உணர்கிறார்! ஏனெனில் அந்தப் பறவையோ குறுகுறு என்று அந்த பக்தையையே பார்த்துக் கொண்டிருக்கும்... வளர்ப்பினால் அன்றி இப்படி எந்த சாதாரண பறவைகளும் மனிதரையே கவனித்துக் கொண்டிருக்காது... அவர்கள் கூர்ந்து பார்த்தால் பயத்தில் பறந்தோடும் அல்லது முதுகை திருப்பிக் கொள்ளும்... பயப்படும்... ஆனால் அந்த பக்தை வீட்டு ஜன்னலில் அமர்ந்த பறவை அப்படி எதையும் செய்யவில்லை! அது போலவே அதே வீட்டில்  விசித்திரமான ஒரு பூனை வரும்.. அது வந்து தைரியமாக அவர்கள் முன்பாகவே எந்த பதட்டமும் இன்றி சுற்றி முற்றியும் பார்க்காமலும்... திருதிரு என முழிக்காமலும்... பிடிபட்டுவிடுவோமோ என்ற எந்த பதட்டமும் இன்றியும் வீட்டுக்குள் கம்பீரமாக நுழையும் அந்தப் பூனை அவர்கள் முன்னிலையிலேயே பாலை அருந்தும்... அதுவும் பாபா என்றே அந்த பக்தை உணர்கிறார்! விலங்கு மற்றும் பறவை சுபாவங்களின் செய்கை இல்லாத இப்படி ஒரு வினோத நடவடிக்கைகளால் பாபாவே தனது பக்தர் இல்லத்திற்கு தேடித் தேடி வந்து அருள்பாலிக்கிறார் என்பதை அனுதினமும் அதைப் போன்ற பல பக்தர்கள்  உணர்கிறார்கள்! 


அது செப்டம்பர் 6 - 1977... பாபா தனது மாணவர்களிடையே திரயீ பிருந்தாவனத்தில் ஞான உரை ஆற்றும் போது... 

"ஸ்ரீ கிருஷ்ணர் தூயப் பேரன்பின் முழுமை வடிவம்! அந்த கிருஷ்ணரே இந்த சாயி! அந்த கிருஷ்ணாவதாரமே இந்த சாயி அவதாரம்! கௌஸ்துப மணி என்கிற மிக அரியவகை ரத்தினம் ஸ்ரீ கிருஷ்ணரின் பாட்டனாரிடம் இருந்தது! அதை ஸ்ரீ கிருஷ்ணருக்கு பரிசாக வழங்குகிறார்! அதை அவரும் அணிந்து கொள்கிறார்! உங்கள் யாருக்கேனும் அந்த கௌஸ்துப மணி எப்படி இருக்கும் என்று தெரியுமா? என்று பாபாவே திடீரென கேட்கிற போது... ஒரே அமைதி! யாரிடமும் பதில் இல்லை! பிறகு பாபாவே நொடிப் பொழுதில் கையை வேகமாக அசைகிறார்... அவரின் வேகமான விரல்கள் காற்றை உரச... ஒரு நொடி மின்னல் வெளிச்சம் தோன்றுகிறது...! பிறகு கைகளை மூடிக் கொள்கிறார்! அந்த மூடிய கைகளை அனைவரின் ஆர்வ முடிச்சுகள் அவிழ அவிழ மெதுவாகத் திறக்கிறார்! அதில் வைரம் போல மின்னும் தகதகப்பில் கௌஸ்துப மணி ஜொலித்துக் கொண்டிருந்தது!

அது பச்சை நிறத்தோடு கூடிய நீல நிறமாக மாணவரின் ஆச்சர்யத்தால் அகலத் திறந்த கண்களில் பேரற்புதம் எனும் திருவிளக்கு தீபம் ஏற்றிக் கொண்டிருந்தது! அது முக்கோண வடிவத்தில் மின்னியது! அது வைரங்களாய் சுற்றி வரை பதிக்கப்பட்டு ஒரு தங்கச் சங்கிலிகளால் பூட்டப் பட்டிருந்தது! ரத்தினங்களை ஆராய்ச்சி செய்து அதன் மதிப்பை  யூகிக்கும் ஒரு சாயி மாணவர் அப்போது அங்கே இருக்கிறார்... ஆனால் அவராலும் அதை அருகே வைத்து ஆராய்ந்து பார்த்த போதும் கூட அதன் விலை மதிப்பை உணர முடியாமல் மனம் விக்கித்துப் போகிறார்! ஏனெனில் இதற்கு முன் அவர் அப்படி ஒரு ரத்தினத்தையே தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை...!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 47 - 48 | Author : Dr. J. San Babu ) 


ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி என்பதால் தான் , தானே துவாபர யுகத்தில் அணிந்திருந்த கௌஸ்துபத்தை மீண்டும் கலியுலகில் வரவழைத்துக் காட்ட முடிந்தது! இதில் இருந்து ஒரு சூட்சுமமான உட் பொருளையும் உணர்ந்து கொள்ளலாம்... அது யாதெனில்... வெவ்வேறு யுகங்கள் கடந்து வந்து இப்போது கலி யுகத்தில் நாம் இருந்தாலும் கூட... அந்தந்த யுகத்து பொக்கிஷங்கள் நம் கண்ணுக்கு மறைவாக இருக்கிறதே தவிர எவையும் இந்தப் பிரபஞ்சத்தை விட்டு நீங்கிச் செல்லவே இல்லை என்பதையே அது எடுத்துக் காட்டுகிறது! மேலும் வேறொரு யுகப் பொருட்கள் மட்டுமல்ல வேறொரு கிரகத்தின் பொருட்களையும் இறைவன் பாபாவால் வரவழைத்து காட்ட முடியும் என்பதும் நமக்கு மிகவும் தெளிவாகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக