தலைப்பு

சனி, 15 ஜூலை, 2023

ஸ்ரீ புர்குல ராமகிருஷ்ணா ராவ் | புண்ணியாத்மாக்கள்

ஒரு ஊரளவிலான  சாதாரண பதவிகள் கிடைத்தாலே மக்கள் நிலை தடுமாறி கடவுளையே அலட்சியம் செய்கின்ற கலிகாலம் இது. அதில் முதலமைச்சர், இரண்டு மாநிலங்களுக்கு  கவர்னர் என்றெல்லாம் பொறுப்பு வகித்த ஒருவர், தன்னை ஒரு பணிவான பக்தராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டு உதாரணமாக வாழ்ந்தார் என்பது போற்றத்தக்க அதிசயமே!. பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின்  நேரடி வாய்மொழியில் "உன்னதமான ஆன்மா" என்று பெயரெடுத்த ஸ்ரீ புர்குல ராமகிருஷ்ணா ராவ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் பாகம் ஒன்று புண்ணியாத்மாக்கள் வரிசையில் இதோ..


🌷சுவாமியின் பாராட்டு:
 
செப்டம்பர் 9, 1996 அன்று சுவாமி தனது தெய்வீகப் பேருரையில் பின்வருமாறு கூறினார், "புர்குல ராமகிருஷ்ணா ராவ் ஒரு சிறந்த பக்தர். பன்னிரண்டு மொழிகளை அறிந்த அவர் சிறந்த மொழியியலாளர், மிகவும் புத்திசாலி.  சுவாமியுடன் பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை மேற்கொள்ளும் ஆசை அவருக்கு இருந்தது. அவர் உத்தரபிரதேச ஆளுநராக இருந்தபோது, ​​சுவாமியுடன் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ள விரும்பினார். இந்தப் பயணத்தைப் பற்றி அறிந்ததும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏறக்குறைய 200 பக்தர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். புர்குல ராமகிருஷ்ணா ராவ் மற்றும் அவரது மனைவி புனிதமான இதயம் கொண்டவர்கள். உடன்வந்த மற்ற  பக்தர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உணவு உண்டனர். மேலும் நேரடியாக தாங்களே அனைத்து பக்தர்களுக்கும் தண்ணீர் வழங்கினர். அவரின் உதவியாளர்கள் அவரிடம் வந்து ‘ஐயா, நாங்கள் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்குவோம்’ என்று கேட்டபோது, ​​’நான் இப்போது கவர்னர் இல்லை, நான் சுவாமியின் வேலைக்காரன்’ என்று அவர்களிடம் கூறினார். அவர்களுடைய தியாக உணர்வு அத்தகையது!.

 
மற்றொரு சந்தர்ப்பத்தில், புர்குல ராமகிருஷ்ண ராவ் முன்னாள் ஹைதராபாத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ​​சுவாமி ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட்டைக்குச் சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒரு நொடியும் வீணடிக்காமல் ஒருவர் பின் ஒருவராக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதி கருவறையில் உள்ள வழக்கம் போல் தொண்டர்கள் பக்தர்களை நச்சரித்து வந்தனர். ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும், திரு ராமகிருஷ்ணா ராவ் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வந்து அவரிடம், ‘சார், நீங்கதான் முதல்வர்; எனவே, வரிசையில் நிற்க வேண்டாம். தயவுசெய்து முன்னால் வாருங்கள்’ என்று சொன்னார். அதற்கு ராமகிருஷ்ண ராவ், ‘அரசியல் கண்ணோட்டத்தில் நான் முதலமைச்சராக இருக்கலாம், ஆனால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் நான் ஒரு சாதாரண பக்தன். உடனே இறைவனை தரிசனம் செய்ய நான் அவ்வளவு பெரிய பக்தன் இல்லை’
என்று பதிலளித்தார்.


 
🌷பிறப்பும் வளர்ச்சியும்:
 
டாக்டர் புர்குல ராமகிருஷ்ண ராவ், ஆந்திராவின் மஹ்பூப்நகர் மாவட்டத்தின் படகல்லு கிராமத்தில்1899ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறந்தவர். சட்டம் பயின்று ஹைதராபாத்தில் வழக்கறிஞராக பெரும் பெயரைப் பெற்றவர். பின்னர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தேசிய இயக்கத்தில்  இணைந்து ஹைதராபாத் மாநிலத்தை இந்திய யூனியனுடன் இணைப்பதற்கான நிஜாமுக்கு எதிரான வரலாற்றுப் போராட்டத்தை வழிநடத்தியவர். சுதந்திரத்திற்குப் பிறகு 1952ம் ஆண்டு ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவின் ஆளுநராகவும் இருந்தவர். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தீவிர பக்தரான அவர், பாபாவின் தெய்வீகத்தன்மையை பல சந்தர்ப்பங்களில் அனுபவித்தார். ஹோவர்ட் மர்பெட்டின் "மேன் ஆப் மிரசில்ஸ்" புத்தகத்தில் இவரின் தெய்வீக அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
🌷சரணடைந்தோரை சதா ரட்சிக்கும் சாயி:
 
ஒரு நாள் கவர்னர் ராமகிருஷ்ணாராவ் தனது மனைவியுடன் இமயமலையின் பரேலியில் இருந்து நைனிடாலுக்கு ரயிலில் பயணம் செய்தார். முதல் வகுப்பு பெட்டி என்பதால், போகியில் அதிக ஆட்கள் இல்லை. பயணத்தின்போது இரவு பதினோரு மணியளவில்.. திடீரென மின்விசிறியில் ஒரு தீப்பொறி வந்தது, அது படிப்படியாக புகையுடன் தீயாக மாறியது. அவர் உதவியாளரை அழைக்க முயன்றார், பதில் இல்லை. எனவே உதவி கேட்டு கத்த ஆரம்பித்தனர்.


திடீரென்று எங்கிருந்தோ.. உபகரணங்களுடன் ஒருவர் அங்கே வந்தார். திடீரென்று வந்த அந்த நபரைப் பார்த்த ராமகிருஷ்ணா ராவ், இவர் திருடனாக இருக்கலாம் என்று ஒரு கணம் நினைத்து கலக்கமடைந்தார்.  வந்தவர் மின்விசிறியை பரிசோதித்து சில நிமிடங்களில் சரிசெய்து விட்டு, கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறினார். பின்  இவர்கள் நன்றி தெரிவிக்கும் முன்பே, ஓடும் ரயிலின் கதவைத் திறந்து கணப்பொழுதில் வெளியேறி மறைந்து விட்டார். ராவும் அவரது மனைவியும் அந்த நிகழ்வினால் வெகுவாக  ஆச்சரியமடைந்தனர்.


சில நாட்களுக்குப் பிறகு, சுவாமியை சந்திக்கும் சந்தர்ப்பத்தில்,  ரயிலில் நடந்த சம்பவத்தை  சுவாமி நினைவுபடுத்தினார்.  "நீங்கள் என்னை நினைக்கவில்லை, மேலும் பிரார்த்தனை இல்லாமல் நான் உங்களுக்கு உதவ வந்தபோது நான் ஒரு திருடனாக இருக்கலாம் என்றும் நினைத்தீர்கள்! அந்த எலக்ட்ரீசியன் நான்தான். அந்த நேரத்தில் நான் வந்திராவிட்டால் அந்த பெட்டியே தீப்பிடித்து எரிந்து போயிருக்கும்" என்றார். அவர்களை சிறிது கிண்டல் செய்தபின் மேலும், "உங்களை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்தபின்..  நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்களோ இல்லையோ.. அவர் உங்களை காப்பாற்றுவார்!"  என்ற மிக முக்கியமான பேருண்மையைக் கூறினார்.

 
🌷சுவாமியின் ரக்ஷை:
 
ஸ்ரீ புர்குல ராமகிருஷ்ணா ராவ் உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த சமயம், திரு.சோதி என்ற தனது உதவியாளருடன்  புட்டபர்த்திக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சுவாமி திரு.சோதிக்கு தங்க மோதிரம் ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார்.  மேலும் சுவாமியே அதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு விளக்கினார். "சுவாமியிடம் இருந்து இதுபோன்ற பரிசுகளைப் பெறுபவர்கள் ஆபத்தில் இருக்கும்போதெல்லாம், தொலைபேசி மூலம் ஒரு செய்தியை தெரிவிப்பது போல இந்தப் பொருட்கள் ஒரு செய்தியை உடனடியாக சுவாமிக்கு தெரிவிக்கின்றன".


பின்னொரு நாளில் பணி நிமித்தமாக.. கவர்னர் ராமகிருஷ்ணா ராவ், தனது மனைவி மற்றும் உதவியாளர் திரு சோதியுடன் விமானத்தில் கான்பூரிலிருந்து பெனாரஸுக்கு பறந்து கொண்டிருந்தனர். அந்த விமானம் பெனாரஸை அடைந்து  ​​தரையிறக்கப்படும் போது, முன் சக்கரம் சிக்கிக்கொண்டு சரியான திறக்கப்பட இயலாது போனதென்பதை விமானிகள் அறிந்தனர். இருந்தாலும், சக்கரங்களைத் திறக்க.. விமானிகள் தங்களால் இயன்றவரை முயன்றனர் ஆனால் முடியவில்லை. எனவே இயல்பான தரையிறக்கம் செய்ய முடியாததால், வானத்திலேயே விமான நிலையத்தை சுற்றி வட்டமிட  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெட்ரோலும் கூட தீர்ந்து கொண்டிருந்தது. அதனால் சக்கரமின்றி  விமானத்தின் அடிப்பகுதி நேராக தரையில் உரசியபடி இறக்க முடிவு செய்தனர். மிகப்பெரும் ஆபத்தினை எதிர்நோக்கி தீயணைப்பு வாகனங்கள் மற்றும் முதலுதவி சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.


அந்த தருணத்தில், கவர்னர் ராமகிருஷ்ணா ராவ் அருகில் இருந்த திரு சோதி, தனது விரலில் இருந்த பகவான் சிருஷ்டித்து அணிவித்த மோதிரம் அணிந்திருந்தார். இது விமானத்தை ஓட்டும் விமானிக்கு நன்கு தெரியும். விமானி  திரு.சோதியிடம் பாபா அணிவித்த மோதிர கையால் இந்த லிவரை பின்பக்கமாக இயக்க முயற்சி செய்து பாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப அவரும் பாபாவை பிராத்தனை செய்தபடியே  லிவரில் கையை வைத்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையை வைத்த உடனே.. ஜாம் ஆகியிருந்த சக்கரங்கள் செயல்படத் தொடங்கின. சில நொடிகளில்.. சக்கரங்கள் விடுபட்டு விரிந்த நிகழ்வைக் கண்ணுற்றனர். விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதே சமயத்தில், புட்டபர்த்தியில்.. இந்த சம்பவத்திற்கு சான்றாக, சுவாமி பக்தர்களிடம் “ராமகிருஷ்ணா ராவ் பயணித்த விமானத்தின் விபத்து தவிர்க்கப்பட்டது" என்றார். மேலும் அன்றைய தினம் அதிகாலையில் கவர்னரின் மனைவி கனவில், சுவாமி பூக்களையும் வளையல்களையும் கொடுத்து... நடந்த அந்த அதிசய சம்பவம் சுவாமியின் கருணையினால் நிகழ்ந்தேறியது என்பதை அவர்களுக்கும் உறுதி செய்தார்.
 

பனாரஸில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பாபாவுக்கு நன்றி தெரிவிக்க கணவன் மனைவி இருவரும் விமானம் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்கள். அப்போது பகவான் பாபா ஒயிட் ஃபீல்டில் இருந்தார். பாபா அவர்களை பார்த்ததும் புன்னகை புரிந்தார். கவர்னர் பாபாவிடம் பேசும் முன்னரே பாபாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. பாபாவே நடந்த எல்லா விஷயங்களையும் கூறி, தான் அவர்களைக் காப்பாற்றியதை உறுதிப்படுத்தினார்.


 
🌷வாரிசுகளையும் ரக்ஷித்த சுவாமி:
 

திரு. புர்குல ராமகிருஷ்ண ராவின் மகனான திரு.லக்ஷ்மிநாராயண ராவுக்கு 1980ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டாவது நாளே, நோய் தாக்குற்று  ஓயாமல் அழத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சுவாசம் நின்று போனது, மருத்துவர்கள் செயற்கையான முறையில் சுவாசமாளித்தனர். குழந்தையோ படிப்படியாக நீல நிறமாக மாறியது. இதைப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை பிழைப்பது கடினம் என்ற முடிவுக்கு வந்தனர். ‘எங்களால் இனி டாக்டர்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று தங்கள் இயலாமையைக் கூறினர். பக்தி நிறைந்த அந்த குடும்பத்தினர், சுவாமியின் விபூதியை குழந்தையின் மார்பில் பூசினார்கள். அதே நாளில் சுவாமி பெங்களூரில் இருந்து தங்களின் ஊரான ஹைதராபாத் வழியாக டெல்லி செல்வதாக அறிந்தனர். டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் விமானம், ஹைதராபாத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும். இதனை அறிந்த பக்தர்கள், விமான நிலையம் அருகே பந்தல்கள் அமைத்து, சுவாமியின் தரிசனத்தை எதிர்பார்த்து அங்கே திரண்டிருந்தனர்.


அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு லக்ஷ்மிநாராயண ராவும், அவர் சகோதரி ஷ்யாமளா தேவியும், தாயார் ஸ்ரீமதி அனந்த லட்சுமி அவர்களும் சுவாமியை விமான நிலையத்தில் தரிசனம் செய்தனர். சுவாமி அவர்களைப் பார்த்து, “அனந்தலக்ஷ்மம்மா, உங்கள் பேரன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார். உடனே, தன் பேரனைக் காப்பாற்றும்படி அனந்த லட்சுமி அம்மா கண்களில் கண்ணீருடன் சுவாமியைக் கெஞ்சினார். சுவாமி  அந்த அம்மையாரின் தலையில் கைவைத்து "உன் பேரனுக்கு முழு ஆயுட்காலம் உள்ளது. அவன் ஆரோக்கியமாக இருப்பான்" என்று ஆசீர்வதித்தார். 

 

அதிலிருந்து குழந்தையின் உடல்நிலை படிப்படியாக மேம்பட்டு, மிகுந்த ஆரோக்கியத்துடன்  வளர்ந்தது... என்று சொல்லவும் தான் வேண்டுமா? பின்னாளில், சுவாமியே அந்தச் சிறுவனுக்கு "சாய் ராமகிருஷ்ணா" என்று பெயரிட்டார் என்பது சிறப்புத் தகவல். ஒரு பக்தனை தன்வயப்படுத்தும்போது.. அந்தக் குடும்பம் மொத்தத்தையும் தன் கருணை மழையால் நினைப்பவர் பாபா என்பதற்கு இதுவே சான்று. இந்த சம்பவம் நடப்பதற்கு 13 ஆண்டுகள் முன்னரே கவர்னர் ராமகிருஷ்ணா  ராவ் காலமாகிவிட்டார் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய தகவல்.
 
 
🌷கவர்னருக்கு கிடைத்த இறுதி தரிசனம்:
 

சுவாமி தன் பக்தர்களை கைவிடுவதே இல்லை.. அவர்களின் ஒவ்வொரு தேவைகளையும் சுவாமியே கவனித்துக் கொள்கிறார்.

 மேலும், அவர்களின் இறுதி பயணத்தில் தரிசனம் தந்து தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொள்கிறார். 1967ம் ஆண்டு செப்டம்பர்  மாதம் ராமகிருஷ்ணா ராவ் அவர்கள்  உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருந்தார். அது சமயம் சுவாமி சென்னையில் இருந்தார்.  சர்வமும் உணர்ந்த சுவாமி  15ம் தேதி அவருடைய உயிர் பிரியவிருந்ததை அறிந்திருந்தார். எனவே அவர் உயிர் பிரியுமுன் தரிசனம் கொடுப்பதற்காக, சென்னையிலிருந்து புறப்பட்டார். இதில் குறிப்பிடத்தகுந்த மகிமை என்னவென்றால்..  சென்னையிலிருந்து ஹைதராபாத் வரை ஒரு இரவு முழுவதும் தானே கார் ஓட்டிச் சென்றார் சுவாமி. எப்பேர்ப்பட்ட புண்ணியாத்மாவாக திரு.ராவ் அவர்கள் இருந்திருந்தால் இப்படி ஒரு பெரும்பேறு அமைந்திருக்கும் என்பதை நாமே யூகித்தறியலாம்.


ஒவ்வொரு ஆண்டும்  "ஸ்ரீ சத்ய சாயி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் லேர்னிங்" எனப்படும் ஸ்ரீ சத்ய சாயி பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீ புர்குல ராமகிருஷ்ணா ராவ் அவர்களின் பெயரில்.. தனித்தன்மை வாய்ந்த மாணவருக்கான தங்க மெடல் வழங்கப்படுகிறது.
 
 
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்


✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக