தலைப்பு

திங்கள், 17 ஜூலை, 2023

இரு பேரவதாரங்கள் செய்த தெய்வீகப் பிரகடனங்கள்!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் தங்களது பரம தெய்வீகத்தை எந்தெந்த சூழ்நிலைகளில் பறைசாற்றின எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!


"நான் இந்த யோகத்தை சூரியனுக்குக் கற்றுக் கொடுத்தேன்! நீ என் பக்தன் என்பதால் அந்த பண்டைய ஞானத்தையும் பிரபஞ்ச ரகசியத்தையும் உனக்குக் கற்பிக்கிறேன்!" என்கிறார் ஸ்ரீ அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர்!

"ஆனால் கிருஷ்ணா! நீயே துவாபர யுகத்தில் தான் பிறந்தவன்.. பிறகு எப்படி பல கோடி ஆண்டுகளுக்கு முன் உதித்த சூரியனுக்கு அந்த ஞானத்தை உன்னால் வழங்கி இருக்க முடியும்?" என்று அனைவருக்கும் ஏற்படக் கூடிய அடிப்படையான சந்தேகக் கேள்வியைக் கேட்கிறார் அர்ஜுனன்!

அந்தக் கேள்விக்காகவே ஸ்ரீ கிருஷ்ணர் ஆர்வமோடு காத்திருந்ததைப் போல் புன்னகைத்தபடி 


பஹுனி மே வ்யதிதானி ஜன்மானி தவச்சார்ஜுனா

தன்யஹம் வேத சர்வானி நத்வாம் வேத பரம்தபா


"அர்ஜுனா! உனக்கும் எனக்கும் நிறைய ஜென்மங்களாகத் தொடர்பு இருக்கிறது.. நிறைய முறை பிறந்திருக்கிறோம்! அதை நான் முழுமையான ஆன்மீக விழிப்பு நிலையிலேயே உணர்ந்திருக்கிறேன்! ஆனால் நீ அதனை இன்னும் உணரவில்லை! எனக்கு எல்லையற்ற சக்தி இருப்பதால் எனது பிறப்பு பிறப்பல்ல ஒரு தெய்வீக வருகையே! நானே அனைவருள்ளும் நிறைந்திருக்கும் முழுமுதற்க் கடவுள்! இந்த விரி பிரபஞ்சத்தின் பேரிறைவன்! நானே அனைத்து இயற்கையையும் எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்! நானே எனது சுய சங்கல்பப்படி, நானே உருவாக்கிய மாயையின் துணை கொண்டு மனிதனாக ஒவ்வொரு முறையும் கீழ் இறங்குகிறேன்!"

என்று மிகத் தெள்ளத் தெளிவாக அர்ஜுனன் உணரும் வகையில் ஆழமாக அந்தப் பேருண்மையை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்!

(ஆதாரம் : ஸ்ரீமத் பகவத் கீதை- 4-5)


அதே போலவே கலியுகத்தில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த பின்னர்... அது 1970, நவம்பர் 31 அன்று நவகால் என்ற ஒரு பத்திரிகை நிருபர் அப்போது நிகழ்ந்த ஒரு வேத சம்மேளன பரிஷத் தருணத்தில் பாபாவின் ஆன்மீக ஞான உரையை கேட்கிறார்! உரையை நிறைவு செய்துவிட்டு பாபா... "ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?" என்று ஒரு பொதுக் கேள்வி கேட்க.. மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டு அந்த பத்திரிகை நிருபர் சில கேள்விகள் கேட்கிறார்!  அதில்

"சுவாமி! எப்போதிலிருந்து உங்களின் தெய்வீக சக்தியை நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?" என்ற ஒரு பொதுக் கேள்வியை முதலில் எழுப்ப...

"எனது பிறப்பிலிருந்தே... அதற்கு முன்னதாகவும்...அது மட்டுமில்லை...ரத்னாகர வம்ச சத்ரியகுலத்தில் நான் புட்டபர்த்தியில் அவதரிப்பதற்கு முன்பே ஷிர்டியில் வாழ்ந்த போதும் கூட... அதற்கு முன்னதான துவாபர யுகத்தில் நான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போதும் கூட!" என்று பாபா தெளிவுபடுத்துகையில்... அந்த நிருபரோ ஆச்சர்யப்படும்படி "அவ்வாறு எனில்?" என்று தயங்க... 

"ஆம்! என் சுய சங்கல்பித்தினாலேயே நான் மனித சரீரத்தில் அவதரிக்கிறேன்!" என்கிறார் பாபா!


ஒருமுறை பாபாவிடம் ஒருவர் "சுவாமி நீங்கள் கடவுளா?" என்ற கேட்ட / உலகமே ஆழ் மனதில் பொதிந்து வைத்திருக்கும் அந்தக் கேள்விக்கு... "ஆம் நான் கடவுளே! அது மட்டுமில்லை இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் கீற்றுகளே! அந்த ஒட்டுமொத்த தெய்வீகத்தின் விழுதுகளே மனிதர்கள்... நான் கடவுளே! அந்த ஆன்மீக விழிப்புணர்வே நான்!  கடவுளின் சிறு கீற்று தான் நீ என்பதை நீ இன்னும் உணர வில்லை! உனக்கு பல ஜென்மங்கள் நிகழ்ந்திருக்கின்றன...‌ இந்த பூமியின் தர்மத்தை காப்பாற்ற நானும் அவ்வப்போது அவதரித்திருக்கிறேன்! உனது பிறப்போ உன் கடந்த ஜென்ம கர்மாவின் பிரதிபலிப்புகளால் நிகழ்ந்தவை / நிகழ்பவை/  நிகழப் போகிறவை! ஆனால் என்னுடையது வருகையே பிறப்பு அல்ல...! எனது சுய சங்கல்பம் அது! மனிதர்கள் நீங்கள் மூன்று குணங்களால் அலைக்கழிக்கப்படுபவர்கள்! அவை உங்களுக்கு கர்மா எனும் தீரா கட்டுகளை ஏற்படுத்திவிடுகிறது! ஆனால் எனக்கு எந்த பற்றும் இல்லை... கர்மாவும் இல்லை! உன்னை பற்றற்ற நிலையில் மீட்டெடுப்பதை தவிர எனக்கு எந்த பற்றும் இல்லை! நான் இந்த மனித வடிவம் எடுத்ததன் காரணமே மனித குலத்தை தர்மத்தின் வழி தூக்கி நிறுத்தி சத்திய தர்ம சாந்தி பிரேம அகிம்சையை அவர்கள் இதயத்தில் விதைத்து ஆன்மீக நெறியில் அழைத்துச் சென்று மனித ஜென்ம இலக்கான முக்தி தர வேண்டும் என்பதற்கே!" என்று பாபா சந்தேகம் நீக்கி தெளிவாக தனது யுகம் யுகமான அவதார வருகையை விளக்குகிறார்!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 59 - 61 | Author : Dr. J. Suman Babu ) 


பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் - ஸ்ரீ கிருஷ்ணரே பாபா! ஒரு காலத்தில் எப்படி மாணவர்கள் தேர்ச்சி பெறாதவரை ஒரே வகுப்பில் படிப்பார்களோ... அதே போல் "சத்ய தர்ம சாந்தி பிரேம அகிம்சை" யை நாம் கடைபிடிக்காத வரை ஒரே பாடமே ஒரே ஞானாசிரிய இறைவனால் எடுக்கப்படுகிறது! நமது வாழ்க்கையே நாம் காண்கிற சோதனைத் தேர்வு! மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்து மனித உடல் எடுப்பதை விட்டுவிட்டு நாம் வாழ்வில் தேர்ச்சி பெற ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரை சரண் அடைவோமாக! பிட்டுக்கு மண் சுமந்தவரும் அவரே... ஆகவே வாழ்வில் தேர்ச்சி பெற நாம் தயாரிக்கப் போகிற பிட் "விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் நேசித்தல்" என்பதே! அதுவே இதயப் பெருக்கம் தருகிற ஒரே  குறுக்கு வழி! 


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக