எவ்வாறு ஒரு எளிய காபி தோட்டத்துக் கூலித் தொழிலாளி வாழ்வில் நிகழ்ந்த மெய்சிலிர்க்கும் அரிய சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...
அது கூர்க் காபி தோட்டம்! எளிய கூலித் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்! இது பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு அரிய சம்பவம்! அவள் பெயர் ஆர்.வி! பெண் என்பதால் முழுமையான அவர்களது பெயரை அனுபவம் பதிவு செய்தவர் எழுதவில்லை!
இந்த ஆர்.வி எளிமையான ஒரு கூலித் தொழிலாளி! காபி தோட்டத்தில் வேலை செய்பவள்! பாவம் - அப்பாவி!
சுமார் 20 வயது தான்!
எப்படி காபி கொட்டைகளை வறுத்து எடுப்பார்களோ அதைப் போல் ஆர்.வியின் வாழ்க்கை இல்லற இயந்திரங்களால் வறுத்தெடுக்கப்படுகிறது!
தினசரி அடி உதை ! மாமியார் கொடுமை என்பது நெருப்பு என்றால் கணவரும் சேர்ந்து கொடுமைப்படுத்துவது எரிகிற அந்த நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் இருக்கிறது! வேலை களைப்புப் போக ஒரே அடி உதையில் கூடுதல் மன ரோதனையும் அதிகரிக்கிறது!
இதில் நான்கு குழந்தைகள் வேறு ஆர்.விக்கு பிறந்து இறந்து போய்விடுகிறது! மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி ஆர்.விக்கோ எல்லா பக்கமும் அடி! அந்த புத்திரப் பேறு பெற்றும் இழந்த பழிவேறு இதயத்தை இறுக்குகிறது! காபி தோட்டத்திலிருந்து வீசும் காற்று கூட ஆர்.விக்கு ஆறுதலை சுமந்த வண்ணமாய் வீசவில்லை!
ஒருநாள் கணவரும் மாமியாரும் எங்கேயோ வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள்! 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியே மீண்டும் அவள் வாழ்வில் வந்தது போல் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! வாழ்வதற்கான மகிழ்ச்சி அல்ல அது சாவதற்கான மகிழ்ச்சி! தினமும் அடி வாங்கிச் சாவதற்கு ஒரேயடியாக செத்துவிடலாம் என்ற நியாயமான எண்ணம்!
வாழ்க்கை தனது காலால் இப்படிப்பட்ட அபலைகளை எட்டி உதைக்கிற போது அவர்கள் சாவின் கரையில் வீழ மாட்டோமா என்றே நினைப்பது உண்டு!
அது ஏப்ரல் 27 -1992 . மணியோ காலை சுமார் 9. ஆர்.வியும் வாழ்க்கையைத்தான் மணக்க முடியவில்லை , மரணத்தையாவது மணக்கலாம் என்று நினைத்து ஒரு தூக்கை ரெடி செய்கிறாள் ஆர்.வி! தாலிக் கயிறு தான் தனக்கு நிம்மதியை தரவில்லை தூக்குக் கயிறாவது தனக்கு நிரந்த நிம்மதியை தரட்டுமே என்கிற ஆதங்கம் அவளுக்கு! அந்த தங்கமான மனசுக்காரி தூக்குக் கயிற்றை இறுக்கமாகவே முடிச்சு போடுகிறாள்... தனது கணவன் தாலி கட்டிய போது அந்த மஞ்சள் கயிற்றுக்குப் போட்ட இறுக்கத்தை விட இது அதிகமான இறுக்கம்!
கழுத்தை அந்தத் தூக்கின் உள்ளே விடுகிறாள்!
அவளும் உண்மையில் சுதந்திரத்திற்காக பாடுபடுபவள் தான்! அவளுக்கு கணவனால் அக சுதந்திரமும் இல்லை, மாமியாரால் புற சுதந்திரமும் இல்லை! ஆகவே பகத் சிங் போல் அந்தத் தூக்கில் பயமே இல்லாமல் கழுத்தை நுழைக்கிறாள்! ஸ்டூலை ஓங்கி உதைக்கிறாள்! அந்த அரக்கனைத் தான் (கணவன்) உதைக்க முடியவில்லை... அது பாரத கலாச்சாரமும் இல்லை! ஸ்டூலையாவது உதைத்தாளே என்று தரையில் விழுந்த ஸ்டூலே சந்தோஷப்படும் அளவுக்கு சிறு சத்தம்!
அப்படியே அந்தத் தூக்கில் தொங்குகிறாள்... அந்த முடிச்சோ கழுத்தை இறுக்கி ஒரே ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது! அந்த மரண நொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த ஆர்.வியின் எதிரே ஒரு தூய வெளிச்சம் நிற்கிறது...! அதை அவள் ஆச்சர்யத்தோடும் கயிற்றின் இறுக்க ரணத்தோடும் பார்க்கிறாள்! அவளால் அந்த ஒளியை நம்பவே முடியவில்லை! அந்த ஒளிக்குள்ளே மஞ்சள் உடையணிந்து இறைவன் ஸ்ரீ சத்ய சாயி காட்சி அளித்து அபயம் காட்டுகிறார்...! அவளுக்கு பாபாவை முன்பே தெரியும்.. புகைப்படத்தில் தரிசித்திருக்கிறாள்! அவள் வேலை பார்க்கும் அந்த காபி தோட்டத்து முதலாளி குடும்பமே பாபா பக்தர்கள் தான்! ஆனால் அந்த பாபா ஏன் நம் முன்னர் வர வேண்டும் என்ற கேள்வி.. அந்த ஒளியில் பாபா தரிசனம் தந்து கொண்டிருக்க ... அவள் கழுத்தில் போட்ட அந்த இறுக்க முடிச்சோ தானாக அவிழ்கிறது! தரையில் தடால் என்று விழுகிறாள்! அந்த ஒளியும் மறைந்து போகிறது.. சப்தம் கேட்டு எதிர் வீட்டுப் பெண்மணி வர.. அவளிடம் எல்லாம் சொல்ல வேண்டியதாயிற்று ஆர்.விக்கு... கணவன் மாமியாரிடம் சொல்லக் கூடாதென்றும் , முதலாளிக்கு தெரியவே கூடாது, தெரிந்தால் வேலையை விட்டு அனுப்பிவிடுவார் என்றும் பக்கத்துவீட்டுக்காரியிடம் சத்தியம் வாங்கிவிடுகிறாள் ஆர்.வி! கூர்க்கில் அடிக்கிற காற்று போல் இந்த தற்கொலை விஷயம் பரவாது என்று நினைத்த அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!
முதலாளி மனைவியோ ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்து விசாரிக்கையில் ஆர்.வியின் வாழ்க்கை வெளியே வர.. அங்குள்ள அனைவருக்கும் பாபா அவளை காப்பாற்றியதும் அறிந்து கொள்ள... இந்த சூழ்நிலையில் கணவனும் மாமியாரும் "இவள் கடவுளாலேயே காப்பாற்றப்பட்டவள்!" என்று உணர்ந்து அன்று முதல் ஆர்.வியை அன்போடு நடத்த ஆரம்பிக்கிறார்கள்!
புருஷனை நினைத்து அழுத ஆர்.வியோ பாபாவை நினைத்து ஆனந்தமாய் அழுகிறாள்! அந்த ஈரத்தில் கூர்க்கில் வீசிய அப்போதைய காற்றில் கூட அத்தனை சந்தோஷ ஈரம் இருக்க வாய்ப்பு இல்லை!
(ஆதாரம் : சுருக்கு தளர்ந்தது (கட்டுரை) | என்.சி மாடப்பா (கூர்க்) | தமிழாக்கம் - ராமசாமி, மேட்டுப்பாளையம் | பக்கம் - 9-10 | நூல் - பிரசாந்தி)
தன்னை வழிபடுகிறார்களா? என்று பாபா பார்ப்பதே இல்லை! மனிதர்கள் நல்லவர்களா? என்பதை மட்டுமே பார்க்கிறார்! அப்படி எனில் அவரவரின் பூர்வ கர்ம கணக்குகளை அனுசரித்து தனது கருணை மிகுந்த காவல் கரங்களை நீட்டுகிறார்! அந்த தர்மக் கோடுகளை மீறாமல் தாராளமாய் தகுந்த ஆன்மாக்களுக்கு தகுந்த நேரத்தில் அருள் புரிகிறார் அல்லவா! ஆகவே தான் பாபா இறைவன்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக