தலைப்பு

செவ்வாய், 18 ஜூலை, 2023

ஏன் ஸ்ரீ சத்ய சாயி பாபா விரைவிலேயே தன் உடலைத் துறந்தார்?

26/2/1965 ல் பிறக்கிற மோகன்ஜியை, "நீ என்னவாக ஆக விரும்புகிறாய்?" என்று ஆசிரியர் கேட்ட போது "தனியாக இருக்க விரும்புகிறேன்!" என்று பதில் கூறியிருக்கிறார்! கப்பல் தொழிற்சாலையில் 24 ஆண்டுகள் முதன்மை மேலாண்மையாளராக பணியாற்றுகிறார் மோகன்ஜி! 1992 ல் சரிதாவோடு திருமணம்! அம்மு என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது... அப்படியே பயணித்தால் அது சராசரி வாழ்க்கை... அடிபட்டுப் பயணிக்கிற அதிர்ச்சி ஆன்மீக வாழ்வைத் தருகிறது...! அது மோகன்ஜி விஷயத்தில் உண்மையாகிறது!


முதன்தலாக பாபாவை கொடைக்கானலில் குடும்பத்தோடு தரிசிக்கிறார் மோகன்ஜி! அவர்கள் சென்றிருந்த சமயம் "பாபா இன்று தரிசனம் தரமாட்டார்!" என்று ஒருவர் சொல்ல... அனைவரும் பாபாவை காண்பதற்கு மந்திர ஜபம் நிகழ்த்த.. உடனே பாபா கதவைத் திறந்து வெளியே வருகிறார்... மோகன்ஜியை கண்ணுக்குக் கண் உற்று நோக்குகிறார்! அதுவே மோகன்ஜிக்கு முதல் தரிசனம்!

பிறகு 2000 ஆம் ஆண்டு மில்லியனமாக விடிந்தாலும் அவருக்கு மட்டும் மிரட்டும் இருட்டாக விடிகிறது... இடி மேல் இடி.. வெப் சீரியஸாய் நீள்கிறது வேதனை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. அவரின் கோடிக் கணக்கான வியாபார ஷேர் ஓரேடியாக சரிகிறது... நஷ்டமே நெஞ்சு வலி எடுக்கும்படியான பெருத்த நஷ்டம்! அதன் நஷ்ட அதிர்ச்சியை தொடர்ந்து மனைவி பிரிகிறாள்... தீப்புண்ணில் தேள் கொட்டியது போல் மகள் அம்மு இறந்து போகிறாள்.. அவருக்கு தோல் சம்பந்தமான நோயும் ஏற்படுகிறது!

ஒருநாள் அவரது நண்பர் "நான் கொடைக்கானலில் பாபா தரிசனம் பெறப் போகிறேன்.. அந்த சமயத்தில் பாபா என்னை நேர்காணலுக்கு அழைக்க வேண்டும், அதற்கு நீங்கள் வேண்டிக் கொள்ள வேண்டும்!" என்று மோகன்ஜியிடம் கேட்க.. புதிரான மோகன்ஜி வற்புறுத்தப்பட்டதால் பிறகு  சம்மதித்து பாபா அவர் அப்படி கேட்கிறார்.. அது தான் அவருக்கு நன்மை என்றால் அதை நீ கொடு!" என்று மட்டும் வேண்டிக் கொள்ள... 

அந்த நண்பர் பாபா தரிசனத்திற்குச் செல்கிற போது சில கடிதங்களை எழுதி வைத்து பாபாவுக்காக தரிசன நேரத்தில் காத்திருக்கிறார்..‌ மோகன்ஜி பிரார்த்தனைப் படியே பாபா அவரை நேர்காணலுக்கு அழைக்க.. பாபாவிடம் அவர் கடிதங்களை அளிக்க.. பாபா அதை தன் மடியில் வைத்துக் கொண்டு.. அந்த நபர் பரவசப்படும் அளவில் ஒரு கடிதத்தை அந்த கடித வரிசைகளின் உள்ளிருந்து எடுக்க..‌அது அந்த நபர் தனது நண்பன் மோகனின் தொடர் பிரச்சனைகளுக்காக வேண்டி தன்னிச்சையாக பிரார்த்தனை செய்தபடி எழுதிய பிரத்யேகமான கடிதம்.. அதை எடுத்துக் கொண்டு "மோகனை நான் நிறைய சோதனை செய்தேன்! வேறு யாராக இருந்தாலும் அந்த சோதனையில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.. இனி எந்த கவலையும் இல்லை! நான் மோகனை நன்கு கவனித்துக் கொள்வேன்! அவன் என் நேரடிப் பார்வையில் இருக்கிறான்!" என்று பாபாவே சொல்கையில் அந்த நபர் வியந்து போகிறார்!

வாழ்வில் ஏற்பட்ட தொடர் அதிர்ச்சி மோகன்ஜியை ஆன்மீக வாழ்க்கைக்குள் தள்ளி தியான சாதனை புரிய வைக்கிறது...! ஒருநாள் மோகன்ஜி தியானத்தில் பாபா தோன்றி அவரது தோல் நோய்க்கான சரியான மருந்தினைச் சொல்லி ஆசீர்வதித்துவிட்டு மறைந்து போகிறார்...!  பாபா சொல்படியே மோகன்ஜி எடுத்துக் கொண்ட மருந்து அவரை பூரணமாக குணமாக்குகிறது! மேலும் ஒருமுறை பாபா தியானத்தில் தோன்றி "உனக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கிறேன்!" என்று சொல்ல.. முதலில் மறுத்த மோகன்ஜி... பிறகு பாபா சங்கல்பத்தில் ஆன்மீக தாகம் கொண்ட தேவி என்பவரை திருமணம் புரிகிறார்.. மிளா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது... திருமணம் ஆன்மீக வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை அல்ல என்பதை அவரின் வாழ்வே நிரூபிக்கிறது!

 இறைவன் பாபா மற்றும் பல மகான்களின் ஆசிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்ற மோகன்ஜி ஒரு மெய்யுணர்வு யோகியாக இப்போதும் பலருக்கு ஆன்மீகத்தில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்! 


அவரிடம் "ஏன் பாபா விரைவிலேயே தன் உடலை உதிர்த்தார்?" என்ற கேள்வி கேட்க பட்டபோது... அதற்கு அவர் சொன்ன பதில் பரவசமானது!

"அது அவரது விருப்பம்! அவர் எங்கேயும் செல்லவில்லை..! என்கிறார்! பாபா ஒருவரிடம் சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன் "84 வயது வரை இந்த உடம்பில் நான் இருந்தேன்! என் செய்தியை யாரும் புரிந்து கொண்டு கடைபிடிக்கவில்லை.. இன்னொரு 84 வருடம் நான் இந்த உடம்பிலேயே இருந்தாலும் அதனால் என்ன பயன்?" என்று பாபா வெளிப்படையாக பகிர்ந்ததை மோகன்ஜி தெரிவிக்கிறார்!

மேலும் "பாபா எங்கேயும் செல்லவில்லை.. இன்னமும் பாபா நம் கூடவே இருக்கிறார்.. பாபாவின் தெய்வீகப் பேரிருப்பை நம்மால் துல்லியமாக உணர முடியும்!" என்கிறார்!


பாபாவுக்கு 21 வயது இருந்த போது அதே வயது ஒத்த ஸ்ரீ ஸ்ரீ மித்ரன் நம்பூதிரி பாட் என்பவரோடு மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார் பாபா! இருவரும் நண்பர்கள்! அந்த சமயத்தில் ஒரு சிருஷ்டி மோதிரத்தை பாபா அவருக்கு அளிக்க.. "ஏதோ ஒரு பெரிய வேலைக்காக (Big work) இந்த பூமியில் பாபா வந்திருக்கிறார்!" என்பதை நம்பூதிரி பாட் அந்த காலத்திலேயே உணர்ந்திருக்கிறார்! 

பிறகு ஒருமுறை பாபா அவரை சண்டி ஹோமம் செய்யச் சொல்லி புட்டபர்த்தி அழைக்கிறார்! அவர் வர மறுக்கிறார்..பாபா பக்தர்கள் அவரிடம் காரணம் விசாரிக்கையில் வெற்றிலைப் பழக்கம் தனக்கு இருப்பதாகவும், புட்டபர்த்தி சுத்தமாக இருக்கிறது... தான் அங்கே வந்து எங்கே வெற்றிலையைத் துப்புவது என்ற காரணம் சொல்ல... பரவாயில்லை என்று பாபா அவரை அழைக்க.. அவர் வருகிற சமயத்தில் பாபாவும் வெற்றிலை மென்று கொண்டிருக்கிறார்... அவருக்கு தர்ம சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக தானும் அந்த வெற்றிலை குதப்பலில் பங்கேற்கிறார்! இதுவே தன் நண்பருக்காக பாபா வெற்றிலை தின்ற ரகசியம்!  பிறகு ஹோமம் நிறைவு பெற.. அதனை நிகழ்த்தி வைத்த நம்பூதிரி பாட்'டிடம் பாபா "நீ பெரிய ஜோதிடர் ஆயிற்றே! எல்லோர் ஆயுட் காலத்தையும் துல்லியமாக கணிப்பவன் ஆயிற்றே! நீயே சொல் நான் பூமிக்கு வந்த காரணம் என்ன?" என்று கேட்ட போது.. அவரோ "யதா யதா ஹி தர்மஸ்ய கிளானிர் பவதி பாரத:" என்ற கீதை மொழியை பாபாவிடம் பகிர்ந்து "அதர்மம் தலைதூக்கியதால் நீங்கள் அவதரித்தீர்கள்!" என்கிறார்! 


அதற்கு பாபா "உண்மை தான்! சரி இதற்கு பதில் சொல்!  எவ்வளவு காலம் நான் இந்த உடலோடு இருப்பேன்!" என்று இன்னொரு கேள்வி பாபா கேட்க.. "உங்கள் ஆயுட் காலம் 96.. ஆனால் 80 வயதுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கள் செல்லலாம்! அது உங்கள் சங்கல்பம்!" என்கிறார் நம்பூதிரி பாட்... "ஆம் நீ சொல்வது மிகவும் உண்மை! அது என் சங்கல்பமே!" என்கிறார்!

இதை ஸ்ரீ ஸ்ரீ நம்பூதிரி பாட்டே மோகன்ஜியிடம் நேரில் தெரிவிக்கிறார்! அந்த சமயம் பாபா தன் உடலை உதிர்க்கவே இல்லை!


மேலும் மோகன்ஜி "பாபா அவதாரம் ஆகியபடியால் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்! உருவத்தில் இருப்பதை விட அரூபமாக அவர் இருக்கிற போது அவரின் தெய்வீக இயக்கம் மேலும் வீரியம் பெறுகிறது.. காரணம் அந்த உடல் வாகனத்தை அவர் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை!" மேலும்


"நாம் அழைத்தால் பாபா நிச்சயம் வருவார்... "அழைக்கிறேனே ஏன் வரவில்லை?" என்று நீங்கள் கேட்டால்.. உங்கள் அழைப்பு யசோதை யின் அழைப்பு போல் இல்லை.. உங்களின் பக்தி மீரா பக்தி போல் இல்லை...உங்களின் உறுதிப்பாடு கடினமானதாக இல்லை..!" என்று மோகன்ஜி உள்ளதை உள்ளபடி வெளிப்படையாகப் பேசி பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதையும் தனது உரையாடலில் பொருட்பொதிந்து இதயத்தில் பதிய வைக்கிறார்!


(Source : interview with mohanji Ashram of india / mohanji official :-  YouTube channels ) 


இறைவன் எப்படி சமாதியாவார்? சமாதி ஆகிறவர் எப்படி இறைவனாக இருப்பார்? பாபா இறைவன்! அவர் நம் கூடவே இருக்கிறார் ஒளி ரூபத்தில் மட்டுமல்ல ஸ்தூல உடல் ரூபத்திலும் அவர் தரிசனம் தருவார்! மனிதனே ஜென்ம ஜென்மமாக பல உடல்களை எடுக்கிற போது.. இறைவனுக்கு ஒரே ஒரு உடல் மட்டுமா? கொடுங்கோலன் ஹிட்லரே அவன் உருவம் கொண்ட பல பேரை தன்னோடு வைத்திருந்த போது.. பேரன்பு பரமாத்மாவான பாபாவுக்கு அந்த ஒரு உடலோடு அனைத்தும் முடிந்துவிட்டதா? சற்று நாம் விழிப்புணர்வோடு பாபாவை உள்ளார்ந்து உணர வேண்டிய அவசிய காலகட்டம் இது! அப்படி பாபாவை நேரில் - கனவில் - தியானத்தில் என இன்றளவும் தரிசித்த பக்தர்கள் நிறைய பேர் வாழ்கிறார்கள்! தேவை பாபாவின் மேல் நமக்கு சரணாகத பக்தி மட்டுமே! அதுவே பாபாவை நம்மருகே அழைத்து வரச் செய்கிறது‌... புண்டலீகனின் வீட்டுக்கே பாபா விட்டலனாக வந்தது போலவே...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக