தலைப்பு

செவ்வாய், 11 ஜூலை, 2023

1960'களின் பழைய பக்தர்கள் பகிரும் பாபாவின் பரம விநோதங்கள்!!

பழைய பக்தர்களின் அனுபவங்கள் ஆன்மீகப் பொக்கிஷங்கள்! தன்னை திறந்து காண்பித்த தெய்வத்திடம் தன்னை மறந்து காண்பித்த தூய பக்தி அவர்களுடையது! அத்தகைய பக்தியை பறைசாற்றும் வண்ணம் நிகழ்ந்த அற்புதங்கள் சுவாரஸ்யமாக இதோ...!


அது 1/4/1966. தென்கன்னட மாவட்டம். இடம் : அங்கோலா. ஸ்ரீ கோபால கிருஷ்ண நாயக் என்பவர் தனது சாயி அனுபவங்களை விவரிக்கிறார்.. கடந்த 2 மாதங்களாக பகவான் பாபா திருப்படத்தில் இருந்து விபூதி , குங்குமம் கொட்டுவதாகவும் பதிவு செய்கிறார்! இப்போது அந்த அற்புதம் பாபாவின் பேரிருப்பை உணர்த்துவதற்காக நிகழ்வது எனும் ஒரு ஆழமான புரிதலில் சகஜமாகிவிட்டது என்றாலும், எவர் வீட்டில் முதன்முதலாக நிகழ்ந்தாலும் அது முதல் பரவசமாகவே திகழ்கிறது!

     

ராஜ்கோட்டில் இருந்து வழக்கறிஞர் பி.ஆர் அன்சாரியா பதிவு செய்கிள போது... வைகுண்ட ஏகாதசி அன்று பாபாவுக்கு விசேஷ பூஜைகள் செய்கிற போது தேங்காய் படைக்கப்படுகிறது... பாபா தனது பேரிருப்பையும் அருளையும் உணர்த்த வேண்டி அந்த தேங்காய் தானாகவே மனித தொடுதல் இன்றி உடைபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்! அடுத்த நாளே அதனை பாபா நிறைவேற்றிவிடுகிறார்! அந்த சமர்ப்பண தேங்காய் இரண்டு துண்டுகளாக உடைந்து போகிறது!

    

அது 1965. ஜாம் நகர். டாக்டர் கத்கியா இல்லம். ஓம்காரம் முடிந்து சாயி பஜனையில் "ஓம்கார பிரியா சாயிராமா முனிஜன வந்தித சாயிராமா" என்று பாடுகிற போது பாபாவின் திருப்படத்தில் ஓம் எனும் எழுத்து தானாகவே உதயமாகி பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது! அது நெய்யாலா? அல்லது அமிர்தத்தாலா? எதனால் அந்த ஓம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.. ஆனால் அருகே சென்று நுகர்ந்து பார்க்கிற போது அமிர்த வாசனை வீசியதாக 50 பேர்களுக்கும் மேலானவர்கள் அனுபவித்து அதனை பதிவு செய்கிறார்கள்!


அது 1966. ஜி.வி ராகவலு என்பவர் சென்னையில் வசிப்பவர்! 

ஒருமுறை ஒரு கார் ஒன்று திடீரென வாசற்கதவருகே நின்று கொண்டிருந்த அவரது மருமகளின் அருகே நின்று விட்டு... அதில் இருந்து ஒரே வெண்ணுடை அணிந்த ஒருவர் கீழே இறங்கி வந்து வெள்ளை நிறக் கவரை கொடுக்கிறார்.. அவரை திண்ணையில் அமரச் சொல்லி அந்த மருமகள் "அப்பா" என்று மாமனாரை அழைக்க உள்ளே செல்கிறார்.. அவர் அந்த கவரை பெற்று யார் அது என்று வெளியே வருவதற்குள் காரும் இல்லை ஆளும் இல்லை!

கவரை பிரித்துப் பார்த்தால் சுருட்டிய மடக்கிய மூன்று பத்து ரூபாய்கள்! திகைத்துப் போகிறார் அவரது மருமகள்! அன்று தான் சிவராத்திரி அன்று புட்டபர்த்தி சென்றால் நன்றாக இருக்குமே, அதற்கு குறைந்தது முப்பது ரூபாயாவது வேண்டுமே, என்ன செய்வது? என யோசித்துக் கொண்டிருந்த மருமகளுக்கு கிடைத்த வரமாக அந்த கவர் வந்து சேர்கிறது! வந்து சென்றவர் யார் என்றே தெரியவில்லை...! 11 ஆம்  தேதி அவர்களது பூஜையறையில் பாபாவின் திருப்படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது! அந்த மாத 24 நாளாம் தேதி பாபா அனைவருக்கும் பிரசாதம் வழங்கிட...மருமகள் புட்டபர்த்தி வருகிறார்... அந்தக் குடும்பமே சாயி பக்திக் குடும்பம்! 

தரிசன வரிசையில் நடந்து வருகிற பாபா அந்த குடும்பத்து மருமகளைப் பார்த்து "நான் உனக்கு கவரும் பணமும் கொடுத்து வரச் சொல்லியும்.. கொடுத்தது யார் என்கிற சந்தேகம்? இன்னமும் நான் தான் கொடுத்தது என்று உனக்கு நம்பிக்கை வரவில்லை!" என்று சொல்லியபடி கடந்து செல்கிறார்! அப்போது பாபாவிடம் இருந்து புறப்பட்டு அந்த மருமகள் மேல் மோதிய காற்று ஒரு பக்தித் தெளிவை ஏற்படுத்துகிறது! 


அது எம்.எல்.ஏ ஆர்.எம் தேசாய். பெங்களூரில் வசிப்பவர். அவரது நண்பர் ஸ்ரீ நிங்கப்பா என்பவர் பியாசி பிஜப்பூர் ஜில்லாவில் உள்ள பகல் கோட் எனும் ஊரைச் சார்ந்தவர்! ஒவ்வொரு தசராவின் போதும் புட்டபர்த்தி வருபவர்.. அந்த முறை புட்டபர்த்தி செல்லமுடியாமல் பெங்களூரிலேயே தங்குகிற சூழ்நிலை.. மிகவும் வருந்துகிறார்! அப்போது தனது எம்.எல்.ஏ நண்பரையும் சந்தித்து நிச்சயமாக புட்டபர்த்தி செல்லப் போகிறேன் என்ற ஆதங்கத்தை சொல்லிவிட்டு தான் தங்கி இருந்த பூட்டப்பட்ட ஹோட்டல் அறையை திறந்தபோது திகைத்துப் போகிறார்... அங்கே அந்த ஹோட்டல் அறை டேபிளின் மேல் இலையினால் ஆன தொன்னையில் பிரசாதமும், மணம் மிகுந்த ஒரு விபூதி பொட்டலமும் வைக்கப்பட்டிருக்கிறது! பூட்டிய அறையில் பிரசாதமா? யார் வைத்தது என்று புரிந்து கொண்டு கண்கலங்குகிறார் நிங்கப்பா! அந்த பிரசாதங்களை நண்பரோடும் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மைக்காரராக மாறுகிறார் அந்த நிங்கப்பா! 'நிங்கப்பா பக்தி நிஜமப்பா!'


அது 5-11-1966. கேரளாவில் உள்ள பாலக்காடு. டாக்டர் பி.ஏ.மேனன்! தசரா முடிந்து புட்டபர்த்தியிலிருந்து தனது மருத்துவமனைக்கு வருகிறார்.. பாபா திருப்படத்திலிருந்து விபூதி கொட்டி இருக்கிறது! அது அக்டோபர் 30 ஆம் தேதி! பொதுவாக அவர் பாபா விபூதியை சேர்த்தே  நோயாளிகளுக்கு தருவார்! ஆகவே பாபா அனுகிரக மழையை விபூதி குங்குமம் என பொழிய ஆரம்பிக்கிறார்! 

அது அப்படியே பாபா திருப்படங்களின் நீட்சியாக இதர தெய்வப் படங்களிலும் பொழிய ஆரம்பிக்கிறது.. மகிமை வழிய ஆரம்பிக்கிறது! இளஞ்சிவப்பு , அடர்சிவப்பு என குங்குமம் குவிய ஆரம்பிக்கிறது! அதன் மூலம் வருகிற நோயாளிகளின் நோய்களும் உடனடியாக தீர‌ ஆரம்பிக்கின்றன...!


அது 1966. நவம்பர் 7. திருச்சி மாவட்ட அன்பில் என்ற ஊரில்...! பாபா பஜனையில் நடந்து வரும் போது பதியும் மலர்ப் பாதைகள் போல் தங்கள் வீட்டு பஜனையிலும் அவ்வாறு உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார் பி.ஓ. ஆறுமுகம்! அப்படியே மலர்ப்பாதை உருவாக்கப்படுகிறது.. பஜனை நிறைந்து ஆரத்தி எரிந்து அணைந்த பிறகு சுவாமி நாற்காலி வரை உருவாக்கப்பட்ட மலர்ப்பாதையை கவனித்து சிலிர்க்கிறார்கள்! மலர்கள் நசுக்கப்பட்டு.. ஒருவர் நடந்தால் எந்தவிதமான பூக்கலைப்பு நிகழுமோ யாரும் நடக்காத அந்த மலர்ப்பாதையில் நிகழ்ந்ததையும் தரிசித்து.. பாபா படத்தில் வழிந்த சந்தனத்தையும் சிலிர்க்கும்படி வந்தனம் செய்கிறார்கள்!


பாபா திருப்படத்திலிருந்து பாபா விபூதி மட்டுமல்ல வைக்கம் சிவன் கோவில் விபூதியும் பொழிந்திருக்கிறது என்பதை கோபாலகிருஷ்ணன் எனும் சென்னை பக்தர் 14-1-1966 அன்று பதிவு செய்கிறார்! அவர்கள் வீட்டில் வைக்கம் கோவில் திருவிழாவை பற்றி ஒருநாள் பேச்சு எழுகிறது.. அதை பேசுகிற போதே கேரளா வைக்கம் கோவிலில் என்ன வகையான விபூதி தருவார்களோ அதே விபூதி அவர்கள் வீட்டு பாபாவின் திருப்படத்தில் பொழிந்து அவர்களுக்கு அது சிவசாயி பரவசத்தை ஏற்படுத்துகிறது!


(ஆதாரம் : பிரசாந்தி | பக்கம் - 22-25 | 1960'களின் வெளியீடுகள்)


பேரிறைவன் பாபா தனது தெய்வீகப் பேரிருப்பை உணர்த்த தனது திருப்படங்களில் விபூதி பொழிகிறார்.. அது பக்தர்களுக்கு காவலாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் அமைகிறது! ஆனால் பிறவாமை எனும் நீண்ட நெடுஞ் ஜென்மமாய் பீடித்த கர்ம நோய் நீங்குவதற்கு ஆன்ம சாதனையே மிக முக்கிய பங்கு வகிக்கிறது! ஆக விபூதியை பூசுவது முதல் நிலை, நமது உடல் விபூதியாவதற்குள் ஆன்மா அனுபூதி அடைவதே பாபா அவதரித்து மீண்டும் மீண்டும் மீண்டும் என மூன்று முறை உதயமாவதற்கான அவதார நோக்கமே!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக