தலைப்பு

வியாழன், 27 ஜூலை, 2023

"சில கோமாளி மனிதர்கள் என்னை ஏமாளியாக நினைக்கிறார்கள்!" -- பாபாவின் தடாலடி செய்தி!

எவ்வாறு ஒரு பக்தருக்கு உண்மையை உள்ளது உள்ளபடி இதுவரை இல்லாமல் வெளிப்படையாக இறைவன் பாபா பகிர்கிறார் என்பது மிக சுவாரஸ்யமாக இதோ...

அது 2006 ஆம் ஆண்டு! பரம பக்தர் ஹரிஹர கிருஷ்ணன் ஒரு நாள் இரவு... ஏற்கனவே அவருக்கு வயிற்றுப் புண் பிரச்சனை காரணமாக விட்டு விட்டு ஏதாவது கொஞ்சம் சாப்பிட வேண்டும் இல்லை எனில் வயிறு அக்னி குண்டமாய் எரியும்! அப்போதெல்லாம் சிறிதளவு தயிர்சாதம் அந்த வயிற்று அக்னிக்குப் பாலை வார்க்கும்! அப்படி அவர் பாலை வார்த்த அந்த இரவுப் பொழுது...பாபா அவரது படுக்கைக்கு அருகே அமர்ந்திருப்பதை அவரால் கண்கூடாகக் காண முடிகிறது... அது கனவா? நினைவா? என்று அவரால் யூகிக்கவே முடியவில்லை... காரணம் : அவருக்கு நிறைய கனவுகளை பாபா வழங்கி உள்ளமையாலும்.. நேரிலும் பாபா நிறைய உரையாடல் நிகழ்த்தியமையாலும் எது கனவு? எது நினைவு? என அவரால் பிரித்தறிய இயலவில்லை! அந்த நிலை வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு பனிமூட்டமான நிலை என்று மட்டும் அவர் பதிவு செய்கிறார்! 


பாபா பக்தரின் அருகே அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார்... 

"நான் இந்த உலகத்திற்கு வந்துள்ளேன்! முதலில் மனிதர்களுக்கு அவர்கள் விரும்பும் உலகப் பொருட்களை எல்லாம் தருவேன்! என் அளவு கடந்த தெய்வீக சக்தியினால் அற்புதங்களை நடத்திக் காண்பித்து அவர்களை என் பக்கம் இழுப்பேன்! என் உபதேசங்களையும் , அறிவுரைகளையும் அவர்களைக் கேட்கச் செய்வேன்! இருப்பினும் சராசரியான மனிதர்கள் , கோமாளிகளைப் போல நடந்து கொள்கிறார்கள்! ஏனென்றால் அவர்கள் விரும்பும் உலகப் பொருட்களை எல்லாம் நான் வாரி வழங்குவதால் அவற்றைப் பெற்றுக் கொண்டு என்னை ஏமாளியாக எண்ணுகிறார்கள்!


நான் ஏன் அப்படிச் செய்கிறேன் ? என்றால் இந்த மக்கள் ஒரு கட்டத்தில் உலகப் பொருட்கள் மீது சலிப்படைந்து அவர்களுக்கு நான் என்ன தர விரும்புகிறேன்? என்று கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் இதையெல்லாம் செய்கிறேன். அதுவரையில் நான் பொறுமையுடன் காத்திருக்கிறேன்! 

இந்த ஜீவாத்மாக்கள், நான் அவர்களுக்கு என்னென்ன தர விரும்புகிறேன்? என்பதைக் கேட்டறிய முயற்சி செய்ய வேண்டும்! மாறாக என்னிடமிருந்து உலகப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு தாங்கள் கோமாளிகளைப் போல் நடந்து கொள்வதை அவர்கள் இன்னும் உணரவில்லை!

அஞ்ஞானம் என்னும் அறியாமையில் உறங்கும் இந்த ஜீவாத்மாக்கள் தம் மீது போர்த்திக் கொண்டுள்ள மாயை எனும் போர்வையை நான் விலக்கிவிட முயற்சி செய்கிறேன்! இருப்பினும் இந்த ஜீவாத்மாக்கள் மீண்டும் மாயை என்ற அந்தப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அஞ்ஞானத் தூக்கத்தில் அவர்களது துயிலைத் தொடர்கின்றனர்!

இந்த ஜீவாத்மாக்களை ஒரு குழந்தையைப் போல் என் கைகளில் நான் ஏந்திக் கொள்ளும் போது , அந்த ஜீவாத்மாக்கள் என்னைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்கிறார்கள்! ஏனெனில் ஒளிரும் அன்பையும் அக்கறையையும் பாராது ஜீவாத்மாக்கள் தங்கள் அகக்கண்களை மூடிக் கொண்டு அஞ்ஞான உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்! நான் அவர்களை அந்த உறக்கத்தில் இருந்து சிறிது அசைத்துக் குலுக்கி எழுப்ப முயற்சித்தாலும் அது பயனளிப்பதில்லை!


இந்த ஜீவாத்மாக்கள் என்னை ஏமாளி என்று கருதினாலும் நான் எனது இந்தச் செயல்பாடுகளை ஒருபோதும் கைவிடுவதில்லை! உலகப் பொருட்களை நேசிக்கும் இந்த ஜீவாத்மாக்களுக்கு சம்சாரக் கடலைக் கடப்பதற்கான ஞான ரத்தினங்களை நான் வழங்க விரும்பும் போது , அவர்கள் என்னை விட்டு ஓடிவிடுகிறார்கள்! கோமாளிகளைப் போல் பலர் இந்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு வாழ்க்கையின் முடிவில் ஏமாளிகளாக நிற்கிறார்கள்! இப்போது சொல் யார் ஏமாளி? யார் கோமாளி?" 


பதில் பேசமுடியாமல் மௌனமாக அமர்ந்திருந்த பக்தர் ஹரியிடம் மேலும்  "ஆரம்பத்தில் அவர்கள் என்னை தம்மில் ஒருவராகக் கருத வேண்டும் என்பதற்காகவே இவ்வுலகில் உள்ள கோமாளிகளில் நானும் ஒருவனைப் போல் நடந்து கொள்கிறேன்! பிறகு அடுத்த நிலையில் அவர்கள் என்னிடம் எதையெல்லாம் கேட்கிறார்களா , அவை அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்து ஒரு மனித ஜீவனுக்குள் மறைந்துள்ள மகத்தான சக்திகளைச் செயல்படுத்திக் காட்டுகிறேன்! அகத்தில் மறைந்துள்ள தெய்வீகத்தை உணர்ந்து கொள்வதற்காக இந்த மனிதப் பிறவியில் நான் கொடுத்துள்ள வாய்ப்புகளை விரயம் செய்து ஏமாற இந்த மனித ஜீவன்கள் ஏமாளிகளும் அல்ல... கோமாளிகளைப் அல்ல என்ற உண்மையை அவர்கள் உணர வேண்டும்! இதற்காகவே நானும் அவர்களுள் ஒருவரைப் போல் ஏமாளியாகவும், கோமாளியாகவும் நடித்துக் காட்டி ஜீவாத்மாவிற்குள் உறைந்திருக்கும் மகத்தான சக்திகளை அவர்கள் உணரும்படிச் செய்கிறேன்!


நான் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை! அந்த ஜீவாத்மாக்களின் ஒவ்வொரு பிறவியிலும் புதுப்புது அனுபவங்களைக் கொடுத்து இறுதியில் அவர்கள் தமக்குள்ளும் , தங்களைச் சுற்றி எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் அந்த தெய்வீகத்தை உணரும் வரையில் நான் அவர்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன்!" 

என்று சொல்லிவிட்டு பாபா மறைந்துவிட.. அதை எல்லாம் கேட்ட பக்தர் ஹரி கண்கலங்கி அழுகிறார்!


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 195 - 197 | ஆசிரியர் : எஸ்‌ஆர் ஹரிஹர கிருஷ்ணன் | தமிழாக்கம் : சேலம் எஸ்.ரமேஷ் சாயிராம்) 


இறைவன் பாபாவே நம் வாழ்க்கைக்குள் வந்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு! அந்த தெய்வீக வாய்ப்பினை நாம் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப் போகிறோமா இல்லை அந்த அரிய பெரிய வாய்ப்பினை உலகப் பொருட்களைப் பெற சுயநலமாகப் பயன்படுத்தி, மேலும் பேராசையால் உந்தப்பட்டு உலகத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வீணடிக்கப் போகிறோமா? என்பது நம் விழிப்புணர்வோடு கூடிய நடத்தையிலேயே அடங்கி இருக்கிறது!

யாராவது அமுதசுரபியை வைத்துக் கொண்டு பழைய சோற்றுக்குப் பிச்சை எடுப்பார்களா? 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக