தலைப்பு

திங்கள், 24 ஜூலை, 2023

ஒரே சமயத்தில் பல ரூபங்கள் எடுத்த இரு பேரவதாரங்கள்!

எவ்வாறு ஒரே சமயத்தில் பற்பல ரூபங்கள் எடுத்து பக்தரை காக்கிறது இந்த இரு பரிபூர்ண அவதாரங்கள் எனும் ஆச்சர்ய அனுபவங்கள் சில சுவாரஸ்யமாக இதோ...! 


பிருந்தாவனத்தில் பசு மேய்க்கும் கோபர்களுடன் கோ'பால ஸ்ரீ கிருஷ்ணர் மணலில் அமர்ந்திருக்கிறார்! மதிய உணவை உண்கிறார்கள்! நிலாச் சோறு போல் அது சூரியச் சோறு! பிறகு பசுவின் மத்தியில் விளையாடுகிறார்கள்... இதை உற்று கவனிக்கும் பிரம்மாவுக்கு... இப்படி ஒரு சராசரியாய் மானிட குழந்தை போல் மண்ணில் விளையாடும் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி மகாவிஷ்ணுவின் அவதாரமாக இருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார்! நான்முகனின் நான்கு மூளையும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க... சரி ஒரு சோதனை நடத்திப் பார்ப்போம் என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்... அதன் படியே பசுக்களை எல்லாம் மாயமாக கவர்ந்து சென்றுவிடுகிறார்! 


கோபர்களோ பாவம் பதைபதைத்துப் போகிறார்கள்.. இப்படி பசுக்களைக் கூட கவனிக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்தி ஆநிறைகளை ஆ குறைகளாய் தொலைத்துவிட்டோமே.. இதற்காக வீட்டில் தங்களுக்கு பிரத்யேக பூஜை நடக்குமே என்று பயப்படுகிறார்கள் ! அனைத்தும் அறிந்த ஸ்ரீ கிருஷ்ணரோ இது யாரின் செயல் என நன்கு உணர்ந்து பசுவை மீட்கச் செல்கிறார்... அதற்குள் கோபர்களையும் கடந்துவிடுகிறார் பிரம்மா! ஸ்ரீ கிருஷ்ணர் வெறுங்கையோடு தான் திரும்பியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளுகிறார் பிரம்மா! சரி.. என்ன தான் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என வேடிக்கை பார்க்கிறார் பிரம்மா! ஸ்ரீ கிருஷ்ணரோ கண்களை மூடி ஒரு மர்மப் புன்னகை சிந்தி தன்னையே பலவித ரூபங்களாக மாற்றி... அந்த ரூபங்களையே பசுக்களாகவும் கோபர்களாகவும் உருமாற்றுகிறார்! அப்படியே ஏதும் நடக்காதது போல் கோகுலத்திற்கு வருகிறார்! கோபர்கள் அவரவர் இல்லம் செல்கின்றனர்... இது தங்கள் மகன்கள் தானா? என்ற அளவுக்கு பேரன்பைப் பொழிகிறார்கள் கோபர்கள் வடிவில் இருந்த அத்தனை கிருஷ்ணர்களும்... பசுக்களோ என்றும் இல்லாதது போல் பூரிப்பாக இருந்ததை எண்ணி கோபர்களின் பெற்றோர் ஆச்சர்யப்படுகின்றனர்! பிரம்மாவுக்கு ஒருநாள் என்பது பூலோக வாசிகளுக்கு ஒரு வருடம்... ஆக பிரம்மா கவர்ந்தது என்னமோ 1 நாள் தான் என்றாலும் பூலோக கணக்குப் படி 1 வருடம் அப்படியே தொடர்கிறது... தினமும் தனது பலவித ரூபங்களையே மேய்ச்சலுக்கு கோபர்களோடு அழைத்துச் சென்று திரும்புகிறார்! அலகிலா விளையாட்டை ஸ்ரீ கிருஷ்ணர் புரிய...


என்ன இது?!! ஸ்ரீ கிருஷ்ணர் தன்னிடம் வந்து கவர்ந்த சிறுவர்களையும் பசுக்களையும் மீட்பார் என்று பார்த்தால்... ஏதும் நடக்கவில்லையே...?? என்று பூமியில் இறங்கி பிரம்மா உற்று நோக்க... நடக்கும் செயல் கண்டு ஆச்சர்யப்படுகிறார்! அவர் கண்களுக்கு பலரூப ஸ்ரீ கிருஷ்ணர்கள்... மறு நொடி ஸ்ரீ கிருஷ்ணர்களே கோபர்களாகவும் பசுக்களாகவும் பிரம்மா கண்களில் விரிய... உடனே தனது அகந்தையை அவிழ்த்து எறிகிறார்... அது நான்கு தலைகளை விட்டும் வெளியே ஓடிவிடுகிறது!


"எனது இந்த பிரம்ம பதவியால் என்ன பயன்?

ஓ! நான் உன்னுடைய ஒரு சிறு கீற்றை உணர்ந்தேன்!

நீ வேதத்தாலும் கண்டுணர முடியாதவன்!

உன்னை பசுக்களோடு விளையாடுவதைப் பார்க்க

உன் பாதார விந்தங்களில்

சரணாகதி அடைவதைத் தவிர

வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை ஸ்ரீ கிருஷ்ணா!" 

என்று உருகுகிறார் பிரம்மா!

ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி பாகவதத்தை விவரிக்கும் இரண்டு இடங்களில் தன்னிலை மறக்கிறார்... அதில் ஒன்று குசேலர் பற்றி விவரிக்கும் போது.. இன்னொன்று பிரம்மா தன் அகந்தை உணர்ந்து கரைகின்ற இந்த இதே இடம் தான்!


(ஆதாரம் : பாகவதம் 10 - 530)


இதே போல் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த போது தான் துவாபர யுகத்தில் பல ரூபங்களாக விரிந்ததையே பலமுறை செய்து கொண்டு வருகிறார்! 

         ஒருமுறை பாபா கொடைக்கானலில் இருக்கிறார்! குளிர் கொதிக்கா கோடையின் ஒரு மதியம் அது!

திடீரென பாபா "சுடாதே!" என உச்சரித்த படியே தரையில் சாய்கிறார்! பிறகு எழுந்து "கவலைப்படாதே! அந்த ஆயுதம்(துப்பாக்கி) என்னிடம் தான் இருக்கிறது - இப்படிக்கு பாபா" என்ற ஒரு தந்தியை போபாலுக்கு சேவைத் திலகம் கஸ்தூரியை வைத்து அனுப்பச் சொல்கிறார்! நான்கு நாட்கள் கடந்து பாபாவுக்கு போபாலில் இருந்து ஒரு பதில் கடிதம் வருகிறது! அப்போது தான் பாபாவை சுற்றி இருந்த சேவைத் திலகம் கஸ்தூரி போன்றவர்களுக்கு விபரமே புரிகிறது!

இரண்டாம் உலகப் போரின் உயிரையே பணயம் வைத்த பாபா பக்தரான ஒரு மேஜருக்கு நியாயமான பதவி உயர்வோ அங்கீகாரமோ கிடைக்கப்படவில்லை... ஆகவே அவர் மனம் உடைந்து போகிறார்! அவர் இருக்கிற இடம் போபால்... ஒருநாள் மன உளைச்சல் தாளாமல் தனது படுக்கை அறையில் வைத்திருக்கும் லைசன்ஸ் துப்பாக்கியால் தனது வாய்க்குள்ளே துப்பாக்கியை அழுத்தி அவர் சுடப் போகிற அந்த நொடி.. அதே நொடி.. சுடாதே என பாபா கொடைக்கானலில் விழுகிறார்! அதே சமயம் அவரது கதவு பலமாகத் தட்டப்படுகிறது... அந்த கதவு சப்தம் துப்பாக்கிச் சப்தத்தை கபளீகரம் (கவர்தல்) செய்துவிடுகிறது! இந்த நேரத்தில் யார் என்றபடி கதவு திறக்க... கல்லூரி நண்பரின் குடும்பம் வாசலில் வர... அவர்களோடு பேசுகிற நேரத்தில் மன இறுக்கம் தளர்கிறது... தற்கொலை செய்ய வேண்டும் என்ற உந்துதல் உருகுலைந்து போகிறது... அவர்களை வழியனுப்பி விட்டு படுக்கை அறைக்கு விரைந்து வருகிறார் மேஜர்... இருந்த இடத்தில் இருந்த துப்பாக்கியை காணவில்லை... தற்கொலை எண்ணம் மறைந்துவிடுவது போல் துப்பாக்கியும் மறைந்துவிடுகிறது! பிறகே அது பாபாவிடம் உள்ளதென தந்தி அறிந்து அவருக்கு உண்மை புரிய... மேலும் அவர் வீட்டுக்கு வந்தது கல்லூரி நண்பரின் குடும்பமே இல்லை அவர்கள் ஊரிலேயே இல்லை என்ற செய்தி அறிந்து .. யார் அப்படி குடும்ப சகிதமாக வந்தது என்ற உண்மையை ஆச்சர்யத்தோடு உணர்கிறார் அந்த மேஜர்!


அது போல் பல சம்பலங்கள்..

அது 1/07/1995 ஆம் ஆண்டு! காவலியில் இருக்கும் ஜவஹர் பாரதியின் விரிவுரையாளரான டாக்டர் மதுசூதன ராவ் வொயிட் ஃபீல்ட் வருகிறார்! ஆனால் பாபாவே அந்த சமயம் புட்டபர்த்தியில் இருக்கிறார்! ராவ் சேர்ந்த போது மாலை 5.15. பாபாவின் பௌதீக தரிசனம் அவருக்குக் கிட்டவில்லை... பாபா அங்கே இல்லை என்ற செய்தி அறிந்து அதை ஜீரணிப்பதற்குள் ஒரு அழகான வாலிபர் அவர் முன் வந்து அவரை அன்போடு உபசரித்து பிருந்தாவனத்தைச் சுற்றி காண்பிக்கிறார்.. முதலில் கல்லூரி பிறகு வகுப்பறைகள் பிறகு சோதனைக் கூடங்கள் என ஒன்று விடாமல் விவரிக்கிறார்! பேராசிரியர் அனில் குமார் அவர்களோடு ராவை சந்திக்க வைக்கிறார்‌...


இருவரும் பரஸ்பரமாக நலமா என்று பேசிய பிறகு 

"சுவாமி எப்போதுமே உங்கள் கூடவே இருக்கிறார்! நீங்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்! யாரிடம் நீங்கள் பேசுகிற போதும் அன்போடு பேசுங்கள்... நற்குணம், ஒழுக்கம் இவற்றை கடைபிடியுங்கள்... நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யாதீர்கள்... தகுதியான நபர்களுக்கு மட்டும் இரண்டையுமே தர்மம் செய்யுங்கள்! உண்மையையே பேசுங்கள்! பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்! வயதானவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!" என்று சொல்லிக் கொண்டிருந்த போது .. இடையில் விடுபட்ட ராவை வரவேற்று சுற்றி காண்பித்த வாலிபர் மீண்டும் வந்து ஒரு கோப்பை பால் தருகிறார்.. ஒரு இனிப்பு பாக்கெட்டையும் தருகிறார்! அப்படி ஒரு ருசியான பாலை அவனியிலேயே இதுவரை பருகியதில்லை என ராவ் வியக்கிறார்!

பிறகு காவலி என்ற ஊருக்கே திரும்புகிறார்...வந்து இனிப்புப் பாக்கெட்டை திறக்க.. அதில் இனிப்போடு 1979 ஆம் ஆண்டு சம்மர் கோர்ஸ் நடத்தப்பட்ட டைரியும் இருக்கிறது... வியக்கிறார்...  

பேராசிரியர் அனில் குமாருக்கு கால் செய்து நன்றி தெரிவிக்க... "நானாவது உங்களை சந்தித்து பேசியதாவது! நீங்கள் வந்திருந்த போது நான் வெயிட் ஃபீல்டிலேயே இல்லை! காரணம் என் பேராசிரியர் சேவையே வொயிட் ஃபீல்டில் இல்லை.. புட்டபர்த்தியில் தான்!" என்று விளக்கிச் சொல்ல.. மேலும் ராவ் வியப்பின் உச்சிக்கே செல்கிறார்!


"அநேக ரூப ரூபாய விஷ்ணவே பிரப விஷ்ணவே!" என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் சுவாமியை பற்றிய ஒரு சத்தியக் கூற்று இடம் பெற்றிருக்கிறது! அது சம்பவங்களாக ஒன்றல்ல இரண்டல்ல பல இன்னமும் சுவாமி சங்கல்பத்தில் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறது!  


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 65 - 70 | Author : Dr. J. Suman Babu ) 


இதே போல் இன்னொரு சம்பவம்.. திரு ராமநாதன் தொழில் நிமித்தமாக புட்டபர்த்தி வருகிறார்.. அவர் அந்த இடத்திற்கு புதிது.. வெளியே லாட்ஜில் தங்கி இருக்கிறார்! சரி என்று காலை பிரசாந்தி நிலையத்தில் முதன்முறையாக காலடி எடுத்து வைக்க...ஒரே தரிசன கூட்டம்.. அதில் நின்றபடி அவர் தான் சாயிபாபாவா ? என பிறரிடம் கேட்டு அறிகையில்... பாபா இவர் அருகே தனது படத்தைக் கொடுத்துவிட்டு நகர்கிறார்... பிறகு பாபா கல்லூரி சோதனைக் கூட உபகரணங்களுக்காக வந்திருந்த ராமநாதன் பாபாவின் கல்லூரி சென்று கல்லூரி முதல்வரிடம் நடந்ததை விவரிக்க... அவர் ஷாக் ஆகி.. "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! பாபாவின் தரிசனமா? அதிலும் ஒரே கூட்டமா? பாபா வொயிட் ஃபீல்ட் சென்று 1 மாதம் ஆகிவிட்டதே!" என்று அவர் பதற... ராமநாதன் பாபா தனக்கு அளித்த புகைப்படத்தைக் காட்ட... அந்த நொடி இருவருக்குமே மெய் சிலிர்க்கிறது..‌.! இதை திரு ராமநாதன் அவர்களிடமே நேர்காணல் எடுத்து ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் நாம் பதிவு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது! சர்வ சத்தியமாக ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி! இதில் எள்முனை அளவும் நாம் சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக