தலைப்பு

வியாழன், 20 ஜூலை, 2023

இரு அவதாரங்களின் சிறு வயதிலேயே அவர்களை இறைவன் என உணர்ந்த மகத்துவர்கள்!

எவ்வாறு இரு பெரும் அவதாரங்கள் தங்களின் அவதார ரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பே  அவர்களை இறைவன் என யார் யார் உணர்ந்தார்கள்? சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்! மிகப் பொருத்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!


அது ஒரு வனம்! யமுனை நதி வழிய வழியத் தவழ்ந்தோடும் கரை...அந்தச் செழித்தக் கரையில் நீராடி நிழலாடி மேய்ச்சலுக்கு கொண்டுவரப்பட்ட ஆநிறைகள் (பசுக்கள்) ஆசுவாசப்படுகின்றன... மேய்ப்பவர்களை பார்த்துவிட்டு துவாபர யுகத்து முனிவர்களான வாமதேவரும் , பரத்வாஜரும் அங்கே நின்று நிதானித்து அருகே கொடும் பாம்பு/ முதலைகள் இல்லாத நதிப் பகுதி இருக்கிறதா? என அவர்களிடம் விசாரிக்கிறார்கள்... காரணம் அவர்கள் முனி சிரேஷ்டர்கள்! குளித்துவிட்டு ஜப-தவங்கள் புரிய வேண்டும்! ஆனால் அந்த மேய்ச்சல் சிறுவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை! அப்படிப்பட்ட நதிப் பகுதி எவ்விடம்? என அவர்கள் அறியவில்லை! அப்போது அங்கே பந்தீரா பகுதியில்...அந்த நேரம் சடார் என்று படார் சப்தம்!!.. யார் என்று முனிவர்கள் தங்கள் ஜடாமுடிக் கழுத்தைத் திருப்ப... ஒரு பொலிவான தேஜஸ் நிரம்பிய ஒரு சிறுவனை பார்க்கிறார்கள்... அந்த சிறுவன் அவர்களை வணங்கி முதலைகள் அற்ற நதிப் பகுதிக்கு அழைத்துச் சென்று குளிக்க வைக்கிறான்!

தன்னை நந்த கோபரின் மகன் ஸ்ரீ கிருஷ்ணன் என்கிறான்! "பார்த்தால் சக்கரவர்த்தி திருமகன் போல் இருக்கும் இந்த பாலகன் பசு மேய்க்கும் இடத்திலா இருப்பது? சாத்தியமில்லையே! காரணம் என்னவாக இருக்கும்?" என்ற நியாயமான கேள்விகள் அவர்களை உறுத்துகின்றன... நதியில் முதலை இல்லை‌‌ ஆகையால் முதலையோ தீண்டவில்லை.. ஆனால் "யார் இந்த ஸ்ரீ கிருஷ்ணன்?" என்ற அந்தக் கேள்வி முதலை தீண்டுதலை விட  அதிக பாதிப்பைத் தர...குளித்து முடித்து இரண்டு முனிவர்களும் தியானத்தில் அமர்கிறார்கள்! 

அப்போது அவர்களது தியானத்தில்  மகாவிஷ்ணு தோன்றி மகா விஷ்ணுவே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறார்! பரவசத்தில் கண்களைத் திறக்கின்றனர்.. அப்போது இருவருக்கும் கண்ணில் நீர் கட்டி இருக்கிறது... 


"நாங்கள் என்னவெல்லாம் கற்றோமோ... வேதம் என்று எதையெல்லாம் கேட்டோமோ...

என்ன செயல்கள் எல்லாம் புரிந்தோமோ... எல்லாம் இப்போது கனிந்து விட்டது ...

ஓ! ஸ்ரீ கிருஷ்ணா...உனது இனிய தரிசனத்தால்... எங்கள் ஜென்மமே கடைத்தேறிவிட்டது!" என்று இரு முனிவர்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களில் விழுந்து ஆன்மீகப் பரவசம் அடைகிறார்கள்!


"நீங்களே இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலப் பரம்பொருள் அல்லவா! அந்த சூரிய சந்திரர் உமது விழிகள் அல்லவா! அந்த சரஸ்வதி அன்னை உமது நாவே அல்லவா...கணபதியும் கந்தனும் உமது வலது/ இடது தோள்கள் அல்லவா! மகா லஷ்மி தாயே உமது இதயம்...! ஆகாயமே உமது வயிறு...நாக லோகக் கடவுளே உமது கேசம்! நீயே வேதத்தை தோற்றுவித்த முழுமுதல் கடவுள்! நீயே யாகத்தை நடத்துபவனும்...‌யாகத்தின் பயனும்! நீயே பேரிறைவன் ஸ்ரீ ஹரி! முன்பு வராஹ மூர்த்தியாக, ஸ்ரீ நரசிம்மராக, வாமனராக, ஸ்ரீ ராமனாக நீயே அவதரித்தாய்... ஓ ஸ்ரீகிருஷ்ணா!" என்கிறார்கள் துவாபரத்து முனிவர்கள் வாமதேவரும் , பரத்வாஜரும்...!


மேலும் "உன்னை சுற்றிச் சுற்றி வலம் வரும் இந்த மேய்ச்சல் சிறுவர்கள் மகத்துவர்கள்! அவர்கள் தங்களது முற்பிறவியில் பெரும்புண்ணியம் செய்தவர்கள்! இந்த வனமே உன் திருப்பாதம் பட கொடுத்து வைத்திருக்கிறது! உனது பௌதீகப் பெற்றோரும்.. இப்போது உன்னை வளர்ப்பவரும் புனிதாத்மாக்களே!" என்கிறார்கள் அந்த இரண்டு முனிபுங்கவர்கள்!  "ஓ.. பிரபஞ்சத்து இறைவா.. இன்று முதல் எங்களையும் உனது பக்தர்களாக ஏற்றுக் கொள்வாயா?" என்று அவர்கள் பவ்யமாகக் (அடக்கமாக) கேட்கையில் ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகை ததும்புகிறார்... இரு பெரும் தவ முனிவர்களோ ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களில் விழுகிறார்கள்! அதைப் பார்க்க எப்படி இருக்கிறதெனில் இமாலயத்தின் உறை பனி உருகியபடியே  ஸ்ரீ கிருஷ்ண துளசியைச் சுமந்து கொண்டு யமுனையில் வந்து கலந்தது போல் கண்களில் விரிகிறது!

(ஆதாரம் : ஹரிவம்சா - 6.200)


அதே போல் இந்த கலியுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்து தனது அவதாரப் பிரகடனத்தை அறிவிப்பதற்கு முன்பே அந்த பிரம்ம ரகசியத்தை தனக்குள்ளேயே பொத்தி பொத்தி வைத்திருந்த போதும் அதே அந்த பரத்வாஜ், வாமதேவ முனிவரை போல் ஒரு மகத்துவர் தனது அதீத மனோ சக்தியால் கண்டுணர்கிறார்! அந்த மகத்துவர் முதன் முதலில் தரிசித்த போது பாபாவுக்கு வெறும் 10 வயதே! அவர் சந்தித்த இடம் கமலாபுர ரயில்நிலையம்! 

அவர் ரயில் ஜன்னல் வழியே பாபாவை தரிசித்த போது அப்படியே ஓடும் ரயிலில் இருந்து திடும் என குதித்து விடுகிறார்... கட்டப்பாவிலிருந்து அந்தப்பூர் செல்லும் ரயில் அது! அவர் ரயிலை தவறவிட்டாலும் இறைவனை தவற விடவில்லை...! அங்கே பாபாவோடு ஆத்ம நண்பர்கள் ரமேஷ் - சுரேஷ் இருக்கிறார்கள்! அவர்களுக்கும் பாபா வயதே! ரயிலோ ஓசை எழுப்பி  நகர்கிறது! ஆனால் அந்த மகத்துவருக்கோ பால பாபாவை தரிசித்த மாத்திரத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. செதுக்கி வைத்த சிலையாய் நிற்கிறார்! 


அந்த மகத்துவரின் நடவடிக்கையால் யாரோ பிள்ளை பிடிக்க வந்தவர் தானோ?! என அந்த இரண்டு பிள்ளைகளும் நினைக்க... பயந்து பாபாவையும் அழைத்துக் கொண்டு ரமேஷால் அழைத்துவரப்பட்ட அவரது தந்தையோடு கூடிய ஜீப்பில் தங்களது வீட்டிற்கு வேகம் எடுக்கிறார்கள்! அந்த மகத்துவரோ அவர்கள் பின்னே ஓடுகிறார்‌..‌.‌ வண்டி ரமேஷ் - சுரேஷ் வீட்டில் நிற்கிறது... அந்த மகத்துவர் வெளியேவே காத்திருக்கிறார்! "நிச்சயம் அவன் சத்யாவை தான் கடத்திச் செல்ல வந்திருக்கிறான்!" என அந்த வீட்டினர் தீர்மானித்து பால் வடியும் பால பாபாவை வெளியேவே விடவில்லை‌... 

அவர்களுக்கு அந்த நேரத்தில் அந்த மகத்துவர் ஒரு அமுதப் பாலை திருடிச் செல்லக் காத்திருக்கும் திருட்டுப் பூனையைப் போலவே கருத்தில் நம்புகிறார்! அந்த மகத்துவர் பற்றி பிற்காலத்தில் பாபாவே ஊட்டியில் தனது மாணவர்களோடு உரையாற்றுகிறார்! அந்த மகத்துவர் அப்போது வாசலில் கால்கடுக்கக் காத்திருந்து பிரியா விடை பெறுகிறார்! அவர் ஒரு வெளிநாட்டவர்... ரஷ்யாவை சேர்ந்தவர்! தனது அதீத மனோ சக்தியால் பல விநோத நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியவர் ! அந்த தரிசனம் அவருக்கு 1936 இல் நிகழ்ந்தது! அந்த சாயி தரிசனம் அப்படியே அவர் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது! பிற்காலத்தில் அவர் ஆரம்பித்த ஒரு கல்வி நிறுவனத்திலேயே ஒரு கேமரா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் படுகிறது... தனது இறுதி காலத்தில் அவர் சொல்லியே அவரது சீடர் பாரனோவ்ஸ்கி அந்த கேமராவோடு புட்டபர்த்தி வருகிறார்! அது ஆராவை பதிவு செய்யும் கிர்லியன் கேமரா... அந்த மகத்துவர் ரஷ்யாவை சேர்ந்தவர்! அந்த மகத்துவரின் பெயர் உல்ஃப் மெஸ்ஸிங்! 


அவர் எப்போதும் மிஸ்ஸிங் (missing) இல்லை... பாபாவின் பாதத்திலேயே தனக்கான ஓர் இடத்தை தனது முதல் பார்வையிலேயே அதில் பூத்த பக்தியிலேயே புக் செய்து கொள்கிறார்!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page : 61 - 65 | Author : Dr.J.Suman Babu ) 


இரு யுகத்திலும் இரு அவதாரங்களிடையேயும் ஒரே மாதிரியான நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதை உணரும் போது ஆச்சர்யமாய் தோன்றினாலும்... மனித வாழ்வில் சம்பவங்களுக்கான நிகழ்ச்சி நிரலை எழுதும் இறைவனே .. தனது சுய அவதாரத்தில் அதனை சங்கல்ப மாத்திரத்தில் எழுதிக் கொள்கிறான் என்பதை தெளிவாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக