எவ்வாறு இரு யுகங்களிலும் இரண்டு அவதாரங்களும் பக்தரை கொடும் பாம்புகளிடம் இருந்தும் பாம்பு விஷங்களில் இருந்தும் காப்பாற்றியது? எனும் பேராச்சர்ய அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ....
அது துவாபர யுகம்... இடமோ கோகுலத்திற்கு சற்று வெளியே.. ஸ்ரீ கிருஷ்ணரோடு பலராமரும் யாதவ குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்... அகாசுரன் எனும் ஓர் அசுரனை கம்சன் ஸ்ரீ கிருஷ்ணரை கொல்ல ஏவி விடுகிறான்! அந்த அசுரனோ மிக அச்சுறுத்தலாய் தாவி வருகிறான்! பகாவுக்கும் பூதனாவுக்கும் கூடப் பிறந்த இளைய சகோதரன் இந்த அகாசுரன்...அந்த பூதனாவே ஸ்ரீ கிருஷ்ணருக்கு விஷப் பால் குடிக்க வைக்கையில் சுவாமி அவளின் உதிரத்தையே குடித்து மாண்டு
போனது! அவளின் தம்பி மீண்டும் தாக்குதல் முனைப்பை எடுத்து களம் இறங்குகிறான்! தன் சுய ரூபத்தை மறைத்து மலைப் பாம்பின் வடிவம் எடுத்து ஆ என தனது ஆகாய வாயைத் திறந்து அந்த யாதவ சிறுவர்களையும், மேய்ச்சல் பசுக்களையும் கவர்ந்து கொள்கிறான்...
ஆனால் அவர்களைக் கொல்லவில்லை..காரணம் அவனது பகை முழுதும் ஸ்ரீ கிருஷ்ணரை கொல்வதே! ஆகையால் அந்த யாதவ சிறுவர்கள் ஏதோ குகையில் இருப்பது போல் அந்த ராட்சச மலைப் பாம்பின் வயிற்றில் இருண்டு கிடந்தாலும்... "நம்மை காப்பாற்ற நம் கிருஷ்ணன் இருக்கிறான்!" என்பதால் யாரும் சுருண்டு கிடக்கவில்லை... எல்லாம் அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் அந்த மலைப் பாம்பின் அகலத்தையும் உயரத்தையும் விட அதிகமாகி தனது ரூபத்தை பெரிதுபடுத்தி அந்த ராட்சச மலைப் பாம்பின் வாயை அகலத் திறக்க... உள்ளே மாட்டியவர்கள் வெளியே வந்து தப்பிக்க... அப்படி பிளக்கப்பட்ட வாய் அப்படியே இரண்டாக இரண்டாக வாயோடு சேர்ந்து அந்த அசுரப் பாம்பின் உடம்பே இரண்டாகிறது... அப்படி அந்த அகாசுரனை வதம் செய்து அவனுக்கு முக்தி தருகிறார் துவாபர யுகத்தில் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர் என்கிற கலியுக ஸ்ரீ சத்ய சாயி!
(ஆதாரம் : பாகவதம் : 10-466)
அதே போல் கலியுகத்தில் அவதரித்த அதே ஸ்ரீ கிருஷ்ணரோ ஸ்ரீ சத்யசாயியாக பாம்புகளிடம் இருந்து பல முறை தனது பக்தர்களைக் காப்பாற்றி இருக்கிறார்!
ஒருமுறை அது பாபாவின் ஆரம்ப காலகட்டம்.. பௌதீக இளம் வயது அவருக்கு... அதிகாலை எழுந்து பாபா சித்ராவதி நதியில் குளிக்கச் செல்கிறார்.. வரும் வழியேவே தனது பக்தனை பாம்பு கடித்து உயிருக்கே ஆபத்து ஏற்படப் போகிறது என்பது பாபா உணர்ந்து கொள்கிறார்! அது வெளிச்சமே வராத அதிகாலைப் பொழுது! பாம்புகள் தங்களது மூதாதையர் இருப்பிடம் என அங்கே இங்கே சகஜமாய் நடமாடும் இடமே அப்போதைய புட்டபர்த்தி!
ஆக பாபா விரைந்து சென்று மந்திர் அடைந்து எந்த இடத்தில் தனது பக்தனை பாம்பு கடிக்க இருக்கிறதோ அந்த இடத்திற்கு ஓடி வந்து.. மிகச் சரியாக பாம்பு அந்த பக்தனை கொத்துகிற போது .. அந்த நொடி அதே துல்லியமான நொடி .. அவரை தள்ளிவிட்டு விட்டு தான் அந்த கடியை வாங்கிக் கொள்கிறார்! விஷம் ஏற ஏற அப்படியே மண்ணில் சாய்கிறார்! பாபாவின் அந்த பக்தரோ துடித்துப் போகிறார்..
"என் சக்தியை உனக்கு கொடுத்தேன்!" என்று சொல்லியவாறே பாபாவின் அந்த சரிதல் ஏற்படுகிறது! விபரம் புரியாமல் அந்த பக்தர் கலங்க... பாபா சொல்லிய விதமே அந்த பக்தரின் கைகளில் விபூதி உருவாக ஆரம்பிக்கிறது.. பிறகு அவர் உள்ளுணர்வு ஏற்பட்டவராக அந்த விபூதியை தண்ணீரில் கலந்து பாபாவின் உடம்பில் தெளித்து.. பின் அந்த விபூதி கலந்த நீரை குடிக்க வைக்கிறார்! பாபா எழுந்து விடுகிறார்! அதற்குள் பாபாவின் பௌதீக பெற்றோரும் அந்த இடம் வந்துவிட.. கொஞ்ச நேரத்தில் அந்த சூழலே அனைவரையும் கலங்கடித்துவிட்டது... பாபாவின் அந்த சரிதல் சரிதல் அல்ல... தனது பக்தருக்காக பாபா எதையும் செய்வார் என்பதை தெளிவுப் படுத்திய அது ஒரு ஆழமானப் புரிதல்!
ஒருமுறை விஜயவாடா நகரில் கொள்ளுபுடி என்கிற கிராமத்தில் வசிக்கிற பாபா பக்தை ஒருவர்.. அவரது பெயர் பேபி.. அவரது மருமகன் பெயர் பரமேஸ்வர ராவ்! அவரோ கார் வாடகைக்கு விட்டு தனது வாழ்வை நடத்துபவர்! அப்படி ஒருநாள் ஒரு வெட்னரி மருத்துவர் அவரது காரை வாடகைக்குக் கேட்க... அவரோடு ராவ் குண்டூர் வரை செல்கிறார்!
அந்த இடம் ஒரு விவசாய இடம்.. நேரமோ வெளிச்சம் மங்குகிற இருள் பரவுகிற நேரம்... இருவரும் வந்த வேலை முடித்து காருக்குள் ஏறுவதற்கு முன்.. ராவை ஏதோ ஒன்று கடித்துவிட்டது போல் ஒரு உணர்வு.. சுறுக் என்று ஒரு வலி.. அவரால் காரில் இருக்கையில் நிலை கொள்ள முடியவில்லை... வாய் அடைத்துப் போகிறது... "என்னால் இப்போது பேசவே இயலவில்லை!" என்று மருத்துவருக்கு எழுதி காட்டிய ராவ் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காரிலேயே சரிகிறார்! அந்த வெட்னரி மருத்துவர் பதறியபடியே தனது ஒரு நண்பரின் துணையோடு ராவை
ராத்திரியே அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கிறார்! அப்போது அந்தக் கடி பாம்புக் கடி தான் என்று உறுதி செய்யப்படுகிறது! ஆனால் மிகவும் மோசமான நிலையில் மூச்சுப் பேச்சற்றுக் கிடக்கிறார் ராவ்! இனி காப்பாற்ற வழியில்லை என்று மருத்துவர்கள் கைவிரித்து விடுகிறார்கள்! நேரம் முள்ளாய் உறுத்துகிறது வெட்னரி மருத்துவருக்கு... என்ன செய்வது? ஏது செய்வது? என்று விழி பிதுங்குகையில்...
திடீரென ஒரு இளம் மருத்துவர் அங்கே வந்து... "ஓ டாக்டர்கள் கைவிரித்து விட்டார்களா? அவர்களுக்கு நோய் நிவாரணத்தை விட பணத்தின் மீது தான் குறி!" என்று கூறிவிட்டு..உடனே ராவின் உடலை மசாஜ் செய்து.. அவரது இதயப் பகுதியையும் நன்றாக மசாஜ் செய்துவிட்டு... ராவின் மூக்கில் ஆக்சிஜன் உபகரணங்கள் மாட்டிவிட்டு 2 டாக்டர் , நர்ஸ்களை அழைத்து அவரை கவனித்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுகிறார்! இரண்டு நாள் செல்கிறது... மூன்றாவது நாள், அது ஒரு வியாழக் கிழமை! அதே இளம் டாக்டர் ராவ் தங்கிய மருத்துவ அறைக்கு வந்து "என்ன பரமேஸ்வர ராவ்! எப்படி இருக்கிறீர்கள்? பரவாயில்லையா? மூச்சு விட முடிகிறதா? ஏதேனும் சிரமம் என்றால் இந்த நர்ஸை அழைத்து மீண்டும் சுவாசக் குழாயை பொறுத்தச் சொல்லுங்கள்! ஒன்றும் பிரச்சனை இல்லை! சரியாகி விடும்! இப்போதெல்லாம் பணப் பசி தான் அதிகமாகிவிட்டது டாக்டர்களுக்கு... நோயை குணப்படுத்தும் சேவை நோக்கமே அவர்களிடம் இல்லை!" என்று ராவின் சுவாசக் குழாயை எடுத்து அவரை ஆசுவாசப் படுத்திவிட்டு அந்த இளம் டாக்டர் கதவருகே வருகிற போது.. வெளியே கண்கலங்கிய படி மாமியார் பேபி காத்திருக்க... "இங்கே இருக்கும் யாருக்கும் எந்த ஒரு பணமும் நீ கொடுத்து விடாதே!" என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்! அப்படிச் சொன்ன உடனே தான் பேபிக்கு வந்தது பாபாவோ என ஒரு பொறி தட்டுகிறது! உடனே விசாரிக்கிறார்! இதற்கிடையில் அந்த விஷ பாதிப்பால் சுவாசம் சரிவர இயங்கினாலும் ராவுக்கு கண் சற்று பாதிப்பாகிறது.. அதுவும் ஓரிரு நாளில் பார்வை தெளிவாகிவிடுகிறது! அவரின் கேஸ் ரிப்போர்ட்டில் டாக்டர் ராகவா ராவ் என்று கையெழுத்தானதை விசாரிக்கிற போது தான் தெரியவருகிறது அப்படி எந்த ஒரு டாக்டரும் அந்த மருத்துவமனையில் டியூட்டி பார்ப்பதே இல்லை என்பது!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page no : 55 - 59 | Author : Dr.J.Suman Babu )
நமது இதயப் பூந்தொட்டியை புற்றாக்கி அதில் நுழையும் மனித ஆணவத்தையே அடக்கி அதன் மேல் பிரேமையால் நர்த்தனம் ஆடி எந்தப் பாம்பையும் பசுவாக்குவது தான் இருபெரும் அவதாரங்கள்! தான் எத்தனை முறை கடி வாங்கினாலும் மீண்டும் மீண்டும் தனது பக்தனை தடுத்தாட் கொண்டு அவனுக்கு நல்ல புத்தி புகட்டி ஆன்மீக முன்னேற்றம் அளிப்பது என்பது பூர்ணாவதாரத்திற்கே உண்டான தனித்துவச் சிறப்பு! அத்தகைய பரிபூர்ணாவதாரமே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் என்பது துதிச் சொல் அல்ல பல பக்தர்களின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக