தலைப்பு

புதன், 19 ஜூலை, 2023

"ஈகோ இருக்கும்வரை சுவாமியை நெருங்க முடியாது!" -ஸ்ரீ பெஸ்தோன்ஜி பொச்சா

1967'களில் ஆங்கில சனாதன சாரதியில் வெளியான அரிய அற்புத கட்டுரை... பேரிறைவன் பாபா பக்தரான பெஸ்தோன்ஜி பொச்சா அருளியது... அந்தக் கட்டுரையில் இடம்பெற்ற வியப்புமிகு தெய்வீக வரிகள் சுவாரஸ்யமாக இதோ...!


நம் உள்ளத்தில் எப்போதும் நிழலைப் போல் வாசம் செய்து கொண்டிருக்கும் துரதிருஷ்டப் பேயான ஈகோவே (நான் என்னும் அகங்காரமே), இறைவனின் படைப்பில் உள்ள தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்ள இயலாதவாறு தடையாக இருந்து வருகிறது! இந்த அகங்காரமே உடலுக்கும் உள்ளத்திற்கும் விபரீத உணர்வுகளை  ஏற்படுத்திக் கொண்டு அந்தந்த பணிகளைச் செய்பவர்களாகவும் , செய்விப்பவர்களாகவும் , பயனை அடைபவர்களாகவும் பாவிக்கும்படி செய்து கொண்டிருக்கிறது!

நமக்குள்ளே நமக்கு ஏற்படும் பேதங்களுக்கும் , தெய்வீக தன்மையிலிருந்து தூர விலகி இருப்பதற்கும் அகங்காரமே காரணம்! இது கர்வம், தற்பெருமை , மேலும் சொந்தத்திற்குரிய இயற்கை சுபாவங்களான பேராசை, தன்னலம், பொறாமை போன்றவைகளைத் தூண்டச் செய்து கொடுப்பவனும் , வாங்குபவனுமாகிய படைப்பிற்கு மூலாதாரனான இறைவனை மறக்கும்படிச் செய்கிறது! இந்த அகங்காரப் பேயானது பூஜையறைகளிலும், கோவில்களிலும், மசூதிகளிலும் , கிருஸ்தவர்களின் தேவாலயங்களிலும் சதா ஜெபமாலைகளை திருப்பிக் கொண்டிருக்கும் சாதகர்களையும் கூட இறைவனை மறக்கும்படிச் செய்கிறது!


அகங்காரத்தை பேய் எனச் சொல்வதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது! அதை வெளிப்படையாக எவ்வளவு தான் அடக்கி ஆண்டாலும் , அது உள்ளத்துள்ளே பன்மடங்கு அதிகரித்து மானிடரின் மானிடத்தன்மையை குழப்பம் செய்து கொண்டே இருக்கும்! அது உள்ளத்தின் உள்ளே நிலையாக வேரூன்றி நின்று கொண்டு பலாத்காரத்துடன் கர்வத்தை அதிகரிக்கச் செய்து தன்னல முயற்சிகளுக்கு சித்தமாகும்படிச் செய்கிறது! கிடைத்த வாய்ப்பை அனுகூலமாக்கிக் கொண்டு மானிடனை செருக்கு நிறைந்த பித்தனாகவும் , வஞ்சகம் நிறைந்த மோசக்காரனாகவும் மாற்றுகிறது! 

வயலில் முளைத்திருக்கும் களையை செடிகளின் மேல் வாரியாகக் களைவோமானால் பூமியின் உள்ளிருக்கும் அதன் வேர் மறுபடியும் முளைத்து உறுதியான செடிகளாக வளர்ந்து நெற்பயிர்களையே அழித்துவிடும் அல்லவா! 

மானிடனின் அகங்காரம் கூட அத்தகையதே! உரைப்பது எளிது ஆனால் செயலாற்றுவது சிரமம் அல்லவா! அகங்காரத்தை நிர்மூலம் ஆக்குவது (ஒன்றுமில்லாமல் செய்வது) சிரமத்திலும் சிரமம் (கடினம்)


சாதகனின் ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையிலும் அகந்தையே தடையாக குறுக்கே நிற்கிறது!

சாதகன் மேலான நிலைக்கு சென்று கொண்டிருந்த போதிலும் விஷயங்களை அதிகமாக எண்ணுவதனால் அதள பாதாளத்திற்கே போகும் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது! அதன் கெடுதல் தரும் பயனே மிகவும் அதிகம்! *ஒரு ஆன்மீக சாதகன் தியானத்தில் மனதை உள்ளடக்கும் சாதனையை செய்து வருகிற போது அதற்கு எதிராக மனம் மேற்கொள்ளும் இறுதி முயற்சியே அகந்தை!* சாதகனின் மனோ திடத்தை பைத்தியக்காரத்தனமாக சிதறடித்து , அவனிடம் இம்மி அளவிற்கும் கூட உலகப் பற்று மிகுந்திருக்குமேயானால் , அதை மறுபடியும் உயிர்ப்பிக்கும் முயற்சியை அகந்தையானது மேற்கொள்ளும், மேலும் அவனுடைய மனதில் பயத்தையும் , சந்தேகத்தையும் பிறப்பிக்கச் செய்யும்! சர்வ சாதாரணமாக இறுதி வெற்றி அகங்காரத்தினுடையதே! 

ஆகையால் எல்லையற்ற கருணைக்கும், அன்பிற்கும் உறைவிடமான இறைவன் ஒவ்வொரு ஜீவாத்மாவின் இதயத்தின் உள்ளும் குடி கொண்டிருக்கிறார்! அவர் இருக்கும் இடத்தில் மற்றொன்று இருக்க வாய்ப்பே இல்லை அல்லவா! அதை அறிந்து கொள்ளாததே நம்முடைய அறியாமை! 


விஞ்ஞானம் எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்தபோதிலும், மானிடனின் பேரறவில் அறியாமை குடிகொண்டிருக்கும் வரை இவ்வுலகத்தில் சுக சாதனைகளை அடையவே முடியாது!

நாமஸ்மரணையின் உதவியால் அஞ்ஞான இருளை நிர்மூலமாக்கி இந்த தீயகுணங்களை அழித்தாலன்றி நிலையான சுகத்தை அடையவே இயலாது. நாமஸ்மரணை என்றால் தனக்கு பிரியமான இறைவனின் பெயரை அனைத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமோடு உச்சரிப்பதே ஆகும்!

இன்று நம்மிடையே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் யுக புருஷரும், அவதார மூர்த்தியுமான பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களை சாயிராமா , சாயி கிருஷ்ணா , சாயி நாதா, சாயிபாபா, சாயி சிவா, சாயி ரங்கா போன்ற வெவ்வேறு பெயர்களோடு வெவ்வேறு வகைகளில் துதித்து வருகிறோம்! பகவான் ஸ்ரீ பாபா அவர்களின் உபதேசமும் இதுவே! மானிடனின் விருப்பங்களுக்கும் , ஆரோக்கியத்திற்கும் ஜீவிதத்தூண்! வாழ்க்கைப் படகு! மேலே சொல்லப்பட்ட வர்ணனைகளின் தொகுப்பே அவர்! அவற்றை எல்லாம் கடந்து நிற்பவரும் அவரே! ஆகையால் நாம் அனைவரும் பகவான் பாபாவிடம் நம்முடைய நோய்களுக்குத் தகுதியான மருந்துகளைப் பெற்று உட்கொள்வோமாக! வணக்கத்துடனும் நம்பிக்கையுடனும் பகவான் பாபாவை அடைவோமாக!


அவ்விதம் நாம் செயல்படவில்லையானால் மத விஷயங்களாகவும், தென்படுகின்றன காட்சிகளினால் ஏமாற்றமடைந்து அருவருப்பான மார்க்கங்களை அனுசரித்து , நம்முடைய அலட்சிய சாதனைகள் நிறைவேறவில்லையே என ஆராய வேண்டியதாக இருக்கும்! அகங்காரமே நம்முடைய சக்திக்குப் பகையாகத் திகழ்கிறது! சுவாமி பாபா வாக்களித்தபடி எதுவும் நிறைவேறவில்லை என்றும் , நாம் அவரிடம் வேண்டிக் கொண்ட கோரிக்கைகள் அனைத்தும் வீணாயின என்றும், அறியாமையால் பொறுப்பற்ற முறையில் சுவாமியை நிந்திக்கிறோம்! ஆனால் இந்த நிந்தனை எனும் அகந்தையே நம்மை வேதனைக்கு உட்படுத்துவதும், நமது  இயல்புகளுக்கே விரோதமாக இருப்பதும் நம்மை விட்டு பாபாவை தள்ளி வைத்துவிடுகிறது!

நாம் முழுக்க முழுக்க கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு , முடிவில்லா விகார ரூபங்களான  கோரிக்கைகளைக் கோரிக் கொண்டிருப்பது ஆதி வியாதிகளுக்கு எல்லாம் மூல காரணம்! 

இதயக் கதவுகளைத் திறந்து இறைவன் பாபாவை வரவேற்போமானால் நம்முடைய இதயம் அனைத்தும் அவருடைய அன்பு கலந்த அமிர்தத்தினால் நிரம்பி வழியும்! சூரியனின் ஒளியை விடவும் விசாலமும் எல்லையற்றதுமான பாபாவினுடைய பேரன்பு அனைவரின் உள்ளத்திலும் சமமாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கும்! நம்முடைய அகந்தையே நம்மை பாபாவிடம் இருந்து வேறாகப் பிரித்து, நாம் ஆன்ம ஜோதியை அடைய இயலாதவாறு இடையூறு செய்துவிடுகிறது! உயிரினங்கள் அனைத்தையும் பேரன்புடன் நேசிப்பதே இறைவன் பாபாவை நேசிப்பதாகும்! அவ்விதம் செய்வோமானால் புனிதமும் , மேன்மையும் பொருந்திய இறைவனின் அனுகிரகத்தையே அடையலாம்! 


ஆகையால் நமக்கு இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பை நல்லமுறையில் விநியோகம் செய்து கொண்டு அத்தகைய அனுகிரகத்தை அடைவோமாக! இந்த அகங்காரப் பேயை நம்மிடமிருந்து நிர்மூலமாக்க வேண்டும் என்றும், அது மறுபடியும் முளைக்குமானால் அதை நம் உள்ளத்தில் இருந்து வேருடன் களையும் ஞானத்தையும் , நிலையான வைராக்கியத்தையும் பகவான் பாபா அவர்களே அனுகிரகிக்க வேண்டுமென கோரிக் கொண்டு , பகவான் அவர்களின் உபதேசங்களை நன்றி அறிதலுடன் கடைபிடிப்போமாக!

இதுவே நம்முடைய வாழ்க்கையின் லட்சியம்! அதுவே நம்முடைய பிரார்த்தனை ! பகவான் பாபாவின் கருணையினால் நாம் அனைவரும் பரிசுத்தம் அடைவோமாக! 


--ஸ்ரீ பெஸ்தோன்ஜி பொச்சா

(ஆதாரம் : Pestonjee Pocha - Sanathana Sarathi, Dec. 1967) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக