டாக்டர் காடியா என்று அன்போடு சாயி வட்டத்தில் அழைக்கப்படும் ஸ்ரீ திருபாய் ஜக்ஜீவன்தாஸ் காடியா, நவவித பக்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள சரணாகதி மற்றும் சேவை ஆகிய இரண்டின் அடையாளமாக விளங்கியவர். 1960ம் ஆண்டு தொடங்கி 2009ல் தன்னுடைய கடைசிமூச்சிருக்கும் வரை சிறந்த பக்தராக, சேவகராக, பஜன் பாடகராக, ஆன்மீக வழிகாட்டியாக.. மொத்தத்தில் சாயி பக்தர்கள் மத்தியில் ஒரு உதாரண புருஷராக வாழ்ந்தவர். ஒரு மகரிஷிக்கு ஒப்பாக வாழ்ந்த டாக்டர் காடியா அவர்கள், தன்னை "தாசன்" (இறைவனுக்குப் பணியாளன்) என்றும், "தாசானுதாசன்" (இறைவனின் அடியார்க்கு அடியவன்) என்றும் கூறி மகிழ்பவர்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவில் பிறந்த டாக்டர் காடியா, அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். தன்னுடைய இன்டர்-சயின்ஸ் படிப்பிற்காக இந்தியாவின் மும்பை பவன்ஸ் கல்லூரிக்கு வந்தார். அதை முடித்த பின்னர் மங்களூரின் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவைப் பற்றிக் கேள்வியுறும் பெரும் பாக்கியம் அமைந்தது. 1960ம் ஆண்டு, தனது M.B.B.S படிப்பின் இரண்டாம் ஆண்டில்.. முதன்முறையாக பிரசாந்தி நிலையம் வந்த காடியா, சுவாமி அச்சமயம் சென்னை சென்றுவிட்டதாகக் கேள்வியுற்றார். சுவாமியைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு.. பேராசிரியர் திரு.கஸ்தூரி தன்னிடம் இருந்த "சத்யம் சிவம் சுந்தரம்" புத்தகத்தின் ஒரு பிரதியை காடியாவிற்குப் படிக்கக் கொடுத்தார்.
🌷சிவராத்திரி பிரார்த்தனையும் சிவனின் கருணையும்:
சிவராத்திரி தினத்தன்று சுவாமி நிகழ்த்தும் லிங்கோத்பவ அதிசயங்களைக் கேள்வியுற்று, அந்த தெய்வீகக் காட்சியினைத் தானும் காணும் ஆர்வம் கொண்டார் காடியா. அந்த ஆண்டு (1960) சிவராத்திரியின் போது, ஆறுநாட்கள் முன்பாகவே பிரஷாந்தி நிலையத்திற்கு வந்த சேர்ந்தார். சிவராத்திரிக்கு முந்தைய தினம்... அச்சிறு கிராமத்தில் ஏறத்தாழ ஏழாயிரம் பேர் குழுமி விட்டதைக் கண்டார்; பக்தர்கள் கட்டாந் தரையிலும், மரத்தடி நிழலிலும் படுத்து உறங்கியதைக் கண்டு மலைத்துப் போனார். சிவராத்திரி நிகழ்வின் போது, இந்தப் பெருங் கூட்டத்தின் மத்தியில்.. சுவாமியை நெருங்கிக் காணும் தனது ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ? என்றும் ஐயமுறத் தொடங்கினார்.
'சுவாமி.. நீங்கள் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் மந்திர் உள்ளே அமர்வதற்கு எனக்கு இடம் தரவேண்டும். அப்படி நடந்தால், நான் நூறு முறை மந்திரைப் பிரதட்சணம் செய்வேன்' என்று மனதினுள் பிரார்த்தனை செய்துகொண்டார். சிறுது நேரத்திலேயே ஒரு அதிசயம் நடந்தது. சுவாமி மந்திரின் உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம்.. முன்னால் நகர்ந்து இன்னும் பலருக்கு இடமளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, நான் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே அந்த இடம் தரப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அன்று மதியம் எல்லோருக்கும் முன்னதாகவே சென்று மந்திரில் பாபாவின் மேடைக்கு அருகில் அமர்ந்து கொண்டார். சுவாமி, மாலை 7 மணியளவில் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். சிவராத்திரி தினத்தில் கலியுக சிவசக்திரூபன் நிகழ்த்தும் லிங்கோத்பவம் என்கின்ற மாபெரும் அற்புதத்தினைக் காணும் பெரும்பாக்கியம் காடியாவிற்கு அமைந்தது. அன்றைய தினம் தங்கத்தில் ஒன்று, வெள்ளியில் ஒன்று மற்றும் சலவைக் கல்லினால் (மார்பில்) ஒன்று என மூன்று லிங்கங்களை சுவாமி உத்பவம் செய்வதை அருகிலிருந்து கண்ணுற்றார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, சிவராத்திரிப் பிரசாதமாக.. மறுநாள் காலை சுவாமி விபூதி பொட்டலங்களை விநியோகம் செய்தபடி காடியாவின் நெருங்கி அவரை நோக்கி விரல் நீட்டி, "உனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. சுவாமியை உணர்ந்து கொள்ள நீ அடிக்கடி இங்கே வர வேண்டும்" என்று கூறினார்.
🌷சொந்த அனுபவப் பிரசாதம்:
சுவாமியின் கட்டளைக்கு ஏற்ப அடிக்கடி பிரசாந்தி நிலையம் வர ஆரம்பித்தார் மருத்துவ மாணவர் காடியா. சுவாமியிடம் நேர்காணலுக்கு அழைக்கப் பெற்ற பக்தர்களை சந்தித்து, 'பகவான் என்ன பேசினார்?' என்று கேட்பார். ஒரு முறை சுவாமி, காடியாவிடம் வந்து "என்னை உளவு பார்க்கிறாயா?" என்று கேட்டார். 'இல்லை சுவாமி, தகவல் திரட்டுகிறேன்!' என்றார் காடியா. அதற்க்கு சுவாமி, "எதற்காக வருத்தப் படுகிறாய்? உனக்கு சொந்த அனுபவங்களே கிடைக்கப் போகின்றன. சிறிது நாள் பொறுத்திரு. சுவாமி உன்னை அழைப்பேன்" என்றார். அதேபோல, சிறுது காலத்திற்குப் பின்னர்... நிறைய நேர்காணல்களை பெற்றார். ஒரே நாளில் மூன்று முறைகூட நேர்காணல்களைப் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல், காடியாவுடன் பிரஷாந்திக்கு வரும் மற்றவர்களுக்கும் தவறாமல் நேர்காணல் கிடைத்தது; பலருக்கும் சுவாமியின் சிருஷ்டி பரிசுகளும் கிடைத்தன. ஆசிரமத்திலும் வெளியிலும் சுவாமியினால் பலரும் பல்வேறுபட்ட நோய்களில் இருந்து அதிசயத்தக்க வகையில் குணமாவதையும் கண்ணுற்றார்.
ஒருமுறை சுவாமி காடியாவிடம், சிறிய (தாயத்து போன்ற) வெள்ளிக் குழல் ஒன்றைக்கொடுத்து... "இது உன்னுடைய ரட்சை! மூன்று மாதத்திற்குள் உனக்கு ஒரு ரயில் விபத்து நேரவிருக்கிறது. ஆனால் கவலைப் படாதே; சுவாமி இந்தத் தாயத்தின் மூலம் உனக்குப் பாதுகாப்புத் தருவார்" என்று கூறினார். இது நிகழ்ந்த சிறிது காலத்திற்குள், ஒருமுறை காடியாவின் சென்னை பயணத்தின் பொது சேலம் சந்திப்பில் ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப் பட்டதை அறிந்து சுவாமிக்கு நன்றி கூறினார். ஒருமுறை காடியாவின் சென்னை பயணத்தின் பொது சேலம் சந்திப்பில் ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதைக் கேள்வியுற்றார். அதற்குப் பிறகு அவரின் பிரஷாந்திப் பயணத்தின்போது சுவாமி அவரிடம், "சுவாமி உன்னை ரயில் விபத்திலிருந்து காப்பாற்றினேன். ஆனால் அது தற்செயலாக நடந்ததாக நீ எண்ணுகிறாய்" என்று கூறினார். அந்த அதிசய பாதுகாப்பு மட்டுமல்லாமல் தனது எண்ண ஓட்டத்தையும் துல்லியமாக சுவாமி அறிந்துவைத்திருப்பதை காடியா உணர்ந்தார்; அன்றிலிருந்து சுவாமியிடம் அவரது நம்பிக்கை வலுவுற்றது.
🌷ஷீரடி சாயியே ஸ்ரீ சத்யசாயி:
காகா சாஹேப் தீக்ஷித் என்று பிரபலமாக அறியப்பட்ட ஹரி சீதாராம் தீக்ஷித்தின் சகோதரன் மகன் மாதவ் தீக்ஷித் மற்றும் அவரது மனைவி உட்பட 12 பேர் ஸ்ரீ சத்யசாயி பாபாவை சந்திக்க வைக்கும் தெய்வீகக் கருவியாக டாக்டர் காடியா அமைந்தார். சுவாமியுடன் அவர்களுக்கு நேர்காணல் நிகழ்ந்தபோது சுவாமி, "நான் உன்னை ஷிரடியில் நெற்றியில் அடித்த பிறகு உனக்குத் தலைவலி ஏற்படுகிறதா?" என்று மாதவ் தீக்ஷித்திடம் வினவினார். யாருமறியா இவ்விஷயத்தைக் கேட்ட மாதவின் கண்கள் குணமாகி சுவாமியின் பாதத்தை பற்றி நமஸ்காரம் செய்தார். பின்னர் சுவாமி, " இந்த நிரூபணம் உனக்குப் போதாது. தனிப்பட்ட நேர்காணலில் மேலும் சில நிரூபனங்களைத் தருகிறேன்" என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட நேர்காணல் முடியும் தருவாயில், சுவாமி கதவருகே வந்து.. டாக்டர் காடியாவிடம் "திட்சித்திற்கு நாம் அவருடைய பழைய வரலாற்றை நினைவுபடுத்தும் சில அன்பளிப்பைக் கொடுக்கலாமா?" எனக் கேட்டார். காடியாவோ சுவாமியிடம் ‘உங்கள் விருப்பம்’ என்றார். சுவாமி கையசைப்பில் ‘க்ளிக்’ என்ற சப்தத்துடன்.. சுமார் 6 அங்குல உயரம், 2 அங்குல அகலம் மற்றும் 650 கிராம் எடையுள்ள தங்க சீரடி சாயிபாபா விக்ரஹத்தை வரவழைத்து அதனை மாதவ் தீட்சித்திடம் கொடுத்தார். மேலும், "இந்த விக்ரஹத்திற்கு அபிஷேகம் செய்! அந்த அபிஷேக நீரைக் குடி ! உனக்கு உடல் நலம் சரியில்லை என்பது சுவாமிக்குத் தெரியும். இந்த புனிதமான அபிஷேக நீர் உனது நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தி விடும்” என்று சுவாமி கூறினார்.
சிலகாலத்திற்குப் பிறகு மாதவ் தீக்ஷித் நீரிழிவு நோயிற்காக இன்சுலின் எடுத்துக்கொண்டு அவதியுற்ற சமயம்... ஒரு நேர்காணலில் சுவாமி, டாக்டர் காடியாவிடம் "நாளையிலிருந்து தீக்ஷித்திற்கு நீ ஊசி போட வேண்டாம்" என்றார். சுவாமியின் அந்த அறிவிப்பைக் கேட்டு காடியா கவலையுற்றார். ஒருவேளை சுவாமி மாதவை சுவர்க்கத்திற்கு அனுப்பத் திருவுளம் கொண்டுவிட்டாரோ என்று எண்ணினார். சுவாமியோ, சாக்லேட் நிற விபூதி கொஞ்சம் வரவழைத்து மாதவை உண்ணுமாறு கூறினார். பின்னர் "நீரிழிவு நோய் குணப்படுத்தப்பட்டது" என்று கூறினார். அதற்குப்பின் இன்சுலின் ஊசி போடப்படுவது நிறுத்தப் பட்டது மட்டுமல்ல, தீக்ஷித் திருப்தியாக இனிப்புகளையும் உன்ன ஆரம்பித்தார் எனக் கூறவும் வேண்டுமா?
🌷ஜென்மாந்திர பந்தம்:
1960ம் ஆண்டு தொடங்கி.. சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, குரு பூர்ணிமா, ராமநவமி, கோகுலாஷ்டமி, சுவாமியின் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது புட்டபர்த்திக்கு வந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் பாக்கியம் டாக்டர் காடியாவுக்கு அமைந்தது. சுவாமியினுடைய வெளிப்புற மகிமைகளைக் கண்ணுற்று அதனால் கிளர்ச்சியுற்று சுவாமியைத் தொடரும் மற்றுமொரு சராசரி பக்தராக அல்ல... சுவாமியின் ஒவ்வொரு செயலின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் நன்கு உணரும் உயர் ஞானம் கொண்டவராகத் திகழ்ந்தவர் டாக்டர் காடியா.
🌷 மருத்துவ மேற்படிப்பும், திருமணமும், சாயி சேவையும்:
ஆனால், மேலும்.. ஓராண்டு படிப்பான D.P.H படிக்க ஆவல் கொண்ட டாக்டர் காடியா, சுவாமியிடம் தெரிவித்தார். சுவாமி, "உன் விருப்பம் கட்டாயம் நிறைவேறும், நீ குஜராத்தின் ஜாம் நகருக்குச் செல்!" என்றார். அங்கு எம்.பி.ஷா மருத்துவமனையில் விரிவுரையாளராகச் சேர்ந்து காலையில் உடற்கூற்றியல் பாடங்களை நடத்தினார். மாலையில் மருத்துவமனை மாணவர்களிடையேயும், ஜாம் நகர் வண்டாபாரியில் உள்ள ஷீரடி கோவிலிலும் சுவாமியின் தெய்வீக செய்திகளை எடுத்துரைத்தார். அந்த சமயம்... பாபாவின் அற்புதங்கள் யாவும் வெறும் கற்பனைக் கதைகளே என்று கூறி அவரைக் கண்டு சிரித்த மாணவர்களையும் புட்டபர்த்திக்குச் செல்ல வைத்து பக்தர்களாக்கினார்.
1964 முதல் 1968 வரை குஜராத்தில் நூறுக்கும் மேற்பட்ட சாயி அமைப்புகளை நிறுவ சுவாமி, டாக்டர் காடியாவை தனது தெய்வீகக் கருவியாகப் பயன்படுத்தினார். இதற்கிடையே 1967ல் மகர சங்கராந்தி நன்னாளில், டாக்டர் காடியாவின் தாயாரின் வேண்டுதலுக்கு இணங்க சுவாமியே காடியாவின் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமாங்கல்யத்தையும் தானே ஸ்ருஷ்டி செய்து காடியாவிடம் தந்து மணமகள் நந்தாவிற்கு அணிவிக்கச்சொல்லி ஆசீர்வதித்தார்.
பின்னர் 1968ல் அதே எம்.பி.ஷா மருத்துவமனைக் கல்லூரியில் மூன்றாண்டுகள் படிக்கும் மருத்துவ மேற்படிப்பான M.D படிப்பதற்குத் தேர்வாகி சிறந்த முறையில் கற்றுத் தேறினார். அது மட்டுமல்ல, அதிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் விரும்பிய D.P.H படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார்; சுவாமியின் வாக்கு தவறாமல் பலித்தது.
🌷ஆப்பிரிக்க சபரியின் பழங்கள்:
கருணை மிகுந்த பாபாவோ, டாக்டர் காடியாவின் பெற்றோருடைய இல்லத்திற்கே சென்று தரிசனம் அளித்தார். மாபெரும் பக்தனைப் பெற்றெடுத்த புண்ணியவதியான அந்தத் தாயார் சுவாமியிடம், 'இந்த சபரியின் பழங்களை உண்பதற்கு வந்திருக்கிறீர்களா?' என்று வினவினார். அதற்க்கு சுவாமியோ, "அம்மா, காடியாவின் குடும்பம் சாயி குடும்பமே! சுவாமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வந்திருக்கிறார்" என்று பதிலுரைத்தார். மேலும் அனைவருக்கும் திராக்ஷை பழங்களையும் விபூதியையும் பிரசாதமாகத் தன் கைப்படவே கொடுத்த பின்னர், அன்பிற்குரிய காடியாவின் தாயாரை ஆரத்தி எடுக்கச் சொல்லி ஆசீர்வதித்தார்.
🌷ஸ்வாமி கிருஷ்ணதாஸின் தியானச் செய்தி:
இமயமலை தபஸ்வியான ஸ்வாமி கிருஷ்ணதாஸுக்கு பின்வருமாறு ஓர் அசரீரி தெளிவாகக் கேட்டது, "விஷ்ணு மனித வடிவில் தோன்றி புட்டபர்த்தியில் வாழ்ந்து வருகிறார். எவ்வளவு விரைவில் வர முடியுமோ அவ்வளவு விரைவில் வா!". திகம்பரரான அவர் இடுப்பை சுற்றி ஒரு ஆடை அணிந்து உடனே புட்டபர்த்திக்கு கிளம்பினார். பிரஷாந்தி நிலையத்தில் அவரைக் கண்டதும் சுவாமி " நீ வந்து விட்டாயா?" எனக் கேட்டார். "ஆம் இறைவா! எனக்கு மோட்ஷம் கொடுப்பதற்காக என்னை அழைத்தீர்களா?" எனக் கேட்டார் அந்தத் தபஸ்வி. "நான் மோட்சம் தருவதற்கு முன்பாக நீ மனித குலத்திற்கு நான் கூறும்படி பணி செய்ய வேண்டும்" என்று சில குறிப்புகளை வழங்கி மஹாராஷ்டிரா மாநிலம் "ரேவ்தந்தா" மாவட்டத்திலுள்ள சவுல் எனும் ஊரின் குன்றின் மேலுள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு அனுப்பி வைத்தார். சுவாமி கொடுத்த குறிப்புகளில், 1."விபூதியும் உணவும் வேறொருவர் தயவு அவசியமின்றி சுவாமியே அளிப்பார்!" என்பதும் 2."சுவாமி தியானத்தின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு தெய்வீக செய்திகளை நேரடியாக வழங்குவார், சந்தேகங்களை நிவர்த்தி செய்வார்" என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
ஒரு சமயம் அந்த மகானை சந்திக்கும் பெரும்பாக்கியம் டாக்டர் காடியாவிற்குக் கிட்டியது. காடியா அவரைச் சென்றடையும் முன்பே தபஸ்வி கிருஷ்ணதாஸின் தியானத்தில் சுவாமி தோன்றி, காடியாவை வரவேற்று அங்குள்ள குன்றின் அடிவாரத்தில்.. ஒரு நிகழ்ச்சியை அவரை வைத்து நடத்துவதற்கான குறிப்புகளை வழங்கியிருந்தார். அந்தக் குறிப்புகளின்படி டாக்டர் காடியாவும், சுமார் 500 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியை செம்மையாக நடத்தி முடித்தார். பின்னொரு சமயம் தனது மனைவி நந்தாவுடன் அதே சுவாமிஜியை காடியா சந்தித்தபோது, பாபா தனது தியானத்தில் கூறியதாக ஒரு செய்தியைக் கூறினார் . "இனி உலகம் முழுவதும் எனது செய்தியை காடியா பரப்புவான் என்று அவனிடம் கூறிவிடு!" என்பதே அந்த செய்தி. மற்றுமொரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால்.. அந்த சந்திப்பின்போது, வழக்கமாக ஸ்வாமி கிருஷ்ணதாஸுக்கு மட்டுமே போதுமான அளவு உணவு தோன்றுகின்ற (சுவாமி அருளிய) அவரின் "அட்சய பாத்திரத்தில்" அன்று 3 பேருக்கான தென்னிந்திய உணவு தோன்றி இருந்தது.
🌷 சுவாமியின் செய்தியாளர்:
சுவாமியின் பரிபூரண நல்லாசியைப் பெற்றிருந்த டாக்டர் காடியா எந்த நாட்டிற்குச் சென்றாலும், எந்த ஊருக்குச் சென்றாலும், யார் ஒருவரைச் சந்தித்தாலும் சுவாமியின் தெய்வீக செய்திகளை எடுத்துக் கூறுவதே தனது தலையாய பணியாக மேற்கொண்டார். "ராமர், கிருஷ்ணர், பாபா மூவரும் வெவேறான உடைகளில் ( உடல்களில்) தோன்றினாலும் கூட மூவரும் ஒருவரே!" என்ற சுவாமியின் செய்தியை ஆணித்தரமாக ஆதாரப் பூர்வமான அனுபவங்களுடன் அனைவருக்கும் போதித்தார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், ஐரோப்பிய தேசங்கள் பலவற்றிலும் சுவாமியைப் பற்றிய செய்திகளை கொண்டு சேர்த்ததோடு, பூஜை பஜனை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பலரையும் சுவாமியின் ஆனந்த சாம்ராஜ்யத்தினுள் அழைத்து வந்தார். சுவாமியின் அருள் பொதிந்த ஒரு விபூதிப் பாத்திரம் அவரிடம் இருந்தது. அது அமுத சுரபியாக விபூதியினை சுரக்கக் கூடியது. தீரத்தீர... தேவைப் படுவோர்க்கென அதில் விபூதி பெருகும் அதிசயத்தைப் பலரும் கண்டு ஆனந்தம் அடைந்தனர். அந்த மகிமை விபூதியினால் எண்ணற்ற பலனை ஏராளமானோர் அடைந்தனர். அவையனைத்தையும் சுருக்கமாகக் குறிப்பிட்டால் கூட 500 கட்டுரைகள் எழுதலாம்.
அதுமட்டுமின்றி டாக்டர் காடியா தனது பயணங்களில், பல மகான்களைச் சந்திக்கும் பேற்றினையும் பெற்றார். ஸ்வாமி சர்னானந்தஜி, துறவி ஸ்ரீ ஜல்ராம் பாபா, மகான் ஹாஜி பாபா போன்றவர்களை சந்தித்ததோடு சுவாமியைப் பற்றியும் அவர்களிடம் பேசி இருக்கிறார். அதில் குறிப்பிடும்படியாக, கராச்சியைச் சேர்ந்த 92 வயதுடைய முஸ்லீம் மகான் அல்-ஹச்-சிராசி-அஸ்கர்-சாஜி எனப்படும் ஹாஜி பாபாவுடனான சம்பாஷணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஷீர்டி பாபாவிற்கும், சத்யசாயி பாபாவிற்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று டாக்டர் காடியா அவரிடம் கேட்க... "நானும் ஷீரடி பாபாவும் பிர் (சாதுக்கள்) வரிசையில் வருகிறோம். ஆனால் சத்யசாயி பாபாவோ கிருஷ்ணரின் வரிசையில் வருகிறார். என்னுடைய ராஜ்ஜியம்... பாகிஸ்தான், கிழக்கு ஆப்ரிக்கா போன்ற சில நாடுகளில் உள்ள பக்தர்களுக்கு உட்பட்டது. ஆனால் சத்யசாயிக்கு எல்லையே கிடையாது" என்றார்.
தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மீக அனுபவங்களின் திரட்டை, டாக்டர் காடியா "சாயி ஸ்மரண்" என்ற புத்தகப் பொக்கிஷமாக உலகிற்குத் தந்துள்ளார். பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவையும் அவரது மகிமைகள் மற்றும் போதனைகளின் சாரத்தையும் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துத் தெளிய வேண்டிய புத்தகம் அது.
பகவான் பாபா கூறுவதை பின்வருமாறு டாக்டர் காடியா பதிவு செய்கிறார், "அற்புதங்களுக்கு முக்கியத்துவம் தராதே! மிகைப்படுத்தாதே! எனது சக்தியின் பெருமை அற்புதங்களில் அல்ல! அது எனது பிரேமையில் உள்ளது. நான் விண்ணை மண்ணாகவும், மண்ணை விண்ணாகவும் மாற்ற முடியும் என்பது உண்மையே. ஆனால் தெய்வம் அவதாரமாக இறங்கி வரும் போது இது போன்ற செயல்களுக்கு உடன்படாது. நீ பார்க்கும் வெளிப்படையான அற்புதங்கள் யாவும், அன்பு என்னும் அமுதக்கடலில் ஒரு துளியே ஆகும். துளிகளைக் கண்டு மயங்காதே! அந்த அமுதக் கடலைக் கண்டுபிடித்து அதில் மூழ்கி எழு!".
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக