தலைப்பு

வெள்ளி, 24 ஜூன், 2022

வேங்கடகிரி யுவராஜா கனவில் பெற்ற மாம்பழமும்... காற்றே தந்திகளாய் மாறிய மகிமையும்... !

பாபா பக்தர்களின் அனுபவங்கள் இன்றளவும் தீராத ஒரு மகா சமுத்திரம்... அதில் பற்பல அனுபவங்கள் அந்த சமுத்திரத்தில் மிதக்கும் முத்துச் சிப்பிகள்... அதில் ஒரு முத்து ராஜாங்க நல்முத்து... அதன் அனுபவ மாலை சுவாரஸ்யமாய் வாசிப்பவர்களே உங்கள் இதயக் கழுத்துகளில் இதோ...

ஒருமுறை கோலாலம்பூர் பக்தர் ஜகதீசனுக்கு ஒரு பார்சல் வருகிறது... அவர் புட்டபர்த்தி சென்று தரிசன - பாத ஸ்பரிசன- நேர்காணல் பெற்று அப்போது தான் 3 வாரங்கள் கடந்து இருந்தது... பார்சலின் மேல் யாருக்கு அனுப்புகிறார்கள் என்ற முகவரியே இல்லை... பெங்களூரில் இருந்து வந்தது என முத்திரை மட்டுமே அந்தப் பார்சலில் பதிந்திருந்தது... அமெரிக்க சுவாமி பக்தை திருமதி ஜெயந்தி மோகன் அவர்களுக்கும்ம் இப்படி ஒரு பார்சல் வந்திருக்கிறது‌.. நம் யுகத்திலும் பதிவு செய்திருக்கிறோம்! அப்படி ஒரு விசித்திர கருணை பார்சல் வழி இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது!


திரு. ஜகதீசன் சுவாமியுடன்... 

அந்தப் பார்சலை பிரித்துப் பார்த்து திகைத்துப் போகிறார் ஜகதீசன்... அப்படி ஒரு விநாயகரை அவர் தரிசனம் செய்ததே இல்லை அவர்... அந்த பார்சலில் விநோத விநாயகரின் உருவப்படச் சுருள்... அந்தச் சுருளை விரிக்கிறார் ஜகா... அந்த விநோத விநாயகர் கையில் கதை, பரசு (கோடரி), தாமரை, அபய முத்திரை ஆகியவற்றை தாங்கிப் பிடித்து திவ்யமாக காட்சி தருகிறார் கண்கண்ட கணபதி... கதை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆயுதம், கோடரி ஸ்ரீ பரசுராமர் ஆயுதம், தாமரை விஷ்ணு கைமலர்... எல்லாம் ஒரே பரப்பிரம்மமே என்பதை உணர்த்துகிறார் பாபா...

இது பாபா அனுப்பியதே என்பதை உணர்ந்து சிலிர்த்துப் போகிறார்... அவர் முகவரியே பதிவிடாமல் அவர் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தது?! 

அமெரிக்க ஜெயந்தி அவர்களுக்கு வந்த பார்சலில் யார் அனுப்பியது என்றே பதிவிடாமல் அமெரிக்க அரசாங்கம் அப்படி ஒரு பார்சலை கொண்டு போய் சேர்க்கவே சேர்க்காது... ஆனாலும் எப்படி வந்தது? 

பாபா அனுப்பாமல் யாரால் அனுப்ப முடியும்?! இதனை மேலும் நூலாசிரியர் 40'களில் நிகழ்ந்தவற்றோடு நிகழ்ந்த ஆச்சர்ய அனுபவத்தை சேர்த்துப் பதிவு செய்கிறார்!


ஸ்ரீ சத்ய சாய் பாபா -1948 @ புட்டபர்த்தி

அது 1948. பாபாவுக்கு 25 வயது கூட இல்லை... பாபா 40 வயதிலேயே 20 வயது போல் இருப்பவர்.. இறைவனுக்கேது மூப்பும் பிணியும்? 

வேங்கடகிரிக்கு விஜயம் செய்யுமாறு ராஜா வேண்டுகோள் விடுத்தபோது சரி என சம்மதிக்கிறார் பாபா! பாபா விஜயம் புரிய வேண்டிய நாளும் நெருங்குகிறது...  வேங்கடகிரி ராஜா தனது மகனான யுவராஜா கோபாலை கார் எடுத்து பாபாவை அழைத்துக் கொண்டு வரும் படி கூறுகிறார்... ஆனால் கோபாலோ விளையாட்டுப் பையன்.. கிரிக்கெட் பக்தன்... ஆக அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

அன்று இரவே பாபா யுவராஜா கோபால் கனவில் தரிசனம் அளித்து 2 மாம்பழங்களையும் 1 புன்னகையையும் பரிசளிக்கிறார்! உடனே எழுந்து தந்தையை அவசரமாய் எழுப்பி "அப்பா... பாபா கனவில் வந்தார்... நான் உடனே காரை எடுத்துக் கிளம்புகிறேன்!" என துடிக்கிறார்... "சரி.. அதிகாலையில் செல்! இப்போது தூங்கு!" என்கிறார்... அதிகாலை கார் புயலாய் விரைகிறது புட்டபர்த்திக்கு... பாபா யுவராஜா கோபாலை பார்த்து அவரை வாஞ்சையோடு வரவேற்று "மாம்பழம் ரொம்ப சக்தி தான், இல்லையா?" என குறும்புச் சிரிப்பு சிரிக்கிறார்! "2,3 நாளில் வேங்கட கிரிக்கு செல்லலாம்!" என பாபா உத்தரவிட ... கிரிக்கெட் பக்தரான யுவராஜா கோபால் அதை அந்நொடியே மறந்து கடவுள் பாபா பக்தராகிறார்!


பிறகு கார் புட்டபர்த்தியிலிருந்து வேங்கட கிரி அரண்மனைக்கு கிளம்புகிறது... காரில் யுவராஜா கோபாலும், பிரபஞ்ச ராஜா ஸ்ரீ சத்ய சாயி கோபாலனும் பயணிக்கிறார்கள்... வரும் வழியில் தந்தி அனுப்ப சொன்னார் ராஜா என கோபால் பாபாவிடம் தெரிவிக்க... "எதுவும் தேவையில்லை பங்காரு... நான் பார்த்துக் கொள்கிறேன்!" என பாபா உடனே தெரிவிக்க... பயணம் நீள்கிறது... வேங்கடகிரி அரண்மனையை கார் நெருங்குவதற்கு முன்பே மனிதத் தோரணங்கள் வழிநெடுக பாபாவை வரவேற்க பூக்களோடும் மேள வாத்தியங்களோடும் விண்ணை முட்டும் ஓசையில் ரீங்கரிக்க... யுவராஜா கோபால் மிக ஆச்சர்யப்படுகிறார்... நாங்கள் வருகின்ற நேரம் ராஜாவுக்கு எவ்வாறு தெரிய வந்ததென? என்று... பாபா காரை விட்டு இறங்கிய உடனேயே ... அந்த சாலையிலேயே வேங்கடகிரி ராஜா பாலபாபாவின் பாதங்களில் தன் தலையைப் பதிக்கிறார்! 

வேங்கட கிரி ராஜாவிடமே கேட்கிறார் யுவராஜா கோபால்..

"எப்படி உங்களுக்கு தெரியும்? நாங்கள் இன்று வருகிறோம்.. இந்த நேரத்தில் ?" என்று... 

"நீ வரிசையாக அனுப்பிய தந்திகளை வைத்துத் தான்" என ராஜா தெரிவிக்கையில்...

"நானா? தந்தியா? எனக் குழம்புகிறார்...

"நான் அனுப்பவே இல்லையே!" என்கிறார்..

பிறகு ராஜா வேங்கட கிரி தபால் நிலைய அதிகாரியை விசாரிக்கையில்.. அப்படி ஒரு தந்திகள் தங்களிடம் வரவும் இல்லை.. நாங்கள் அனுப்பவும் இல்லை என சொல்லிவிடுகிறார்கள்...

அந்த ஒவ்வொரு தந்திகளும் வேங்கடகிரி ராஜாவின் தனிஅறை மேஜையிலேயே சிருஷ்டியாகி இருக்கிறது என்பதை பிறகே உணர்ந்து கண்கலங்குகிறார்கள்... காற்றே தந்திப் பறவைகளாய் உருமாறிய மகிமையை பால பாபாவே அரங்கேற்றுகிறார்...!

அப்படி அப்போதே மகிமை புரிந்தவரான சுவாமி கோலாலம்பூர் ஜகாவுக்கு பார்சல் அனுப்பியது ஒன்றும் ஆச்சர்யமில்லை எனப் பகிர்ந்து கொள்கிறார் நூலாசிரியர்... அது சத்தியம்... அப்போது மட்டுமில்லை இப்போதும் அது தொடர்கிறது என்பது சத்தியத்திலும் சத்தியம்! 


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி/ பக்கம் : 1 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பாபாவால் முடியாதது ஏதுமில்லை... இயலாதது என்று எதுவுமில்லை... அற்புதங்களில் எல்லாம் பெரிய அற்புதம் பாபா நம்மேல் காட்டும் பேரன்பே... வைத்த கருணையே... காற்றை தந்திப் பறவைகளாக மட்டுமில்லை நம் மூச்சையே ஞானப் பறவையாக மாற்றுவதற்கே இறைவன் பாபாவின் திருஅவதாரம்... அது பிரேம புறப்பாட்டிலும் தொடரும்...! தொடர்வதாலேயே அவர் இறைவன்... பாபாவின் சொல்ஒளியை செயல்முறை விளக்கில் ஏற்றி ஆன்ம வெளிச்சம் பெறுவதே நம் அன்றாட அத்தியாவசிய கடமை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக