தலைப்பு

புதன், 15 ஜூன், 2022

சாயிபக்தர் பக்தர் வீட்டில் திருடி மூட்டைக் கட்டிய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு ஓடிய திருடர்கள்!


பாபா பக்தர்கள் இன்றளவும் கண்டு அனுபவித்து வரும் பாபாவின் பேரனுபவங்கள் இதிகாசமானவை! ஒவ்வொன்றும் சிலிர்க்க வைக்கிற வியப்புகள்.. அப்படிப்பட்ட வியப்புகள் இதய லயிப்புகளாய் இதோ...

பாபாவுக்கு பழம்பெரும் பக்தர் திருமால் ராவ் ஒரு தங்கும் அறை கட்ட புட்டபர்த்தியில் அடிக்கல் நாட்டி அதைத் தோண்டுகிறபோது நிறைய சிவலிங்கங்களின் ஆவுடை... அதாவது பீடங்கள் மட்டுமே நிலத்திலிருந்து கிடைக்கின்றன... "இதென்ன சுவாமி வெறும் பீடங்கள் மட்டுமே இருக்கின்றன... லிங்கங்கள் எங்கே?" என திருமால்ராவ் கேட்டதற்கு... "அவை எல்லாம் இங்கே இருக்கின்றன...!" என பாபா தன் வயிற்றைத் தொட்டபடி காட்டுகிறார்... அப்போது பாபா சொன்ன திருவாசகம் ஒருவருக்கும் புரியவில்லை! அதற்குப் பிறகிலிருந்தே பாபா சிவராத்திரியில் நிகழ்த்தி வந்த லிங்கோத்பவம் ஆரம்பிக்கிறது!

ஸ்ரீ சத்ய சாயியுடன் ஸ்ரீ திருமலை ராவ் மற்றும் குடும்பத்தினர்-1946

ஒருமுறை பாபா மந்திரம் எழுப்பி 1945 ல் பாபாவுக்கென தனி அறை கட்டப்பட்டு அவர் நுழைகிற போது தட்டு நிறைய கொண்டுவரப்பட்ட இனிப்புகள் பாபாவுக்கு தரப்படுகின்றன... உடனே அங்கு சூழ்ந்த பக்தர்கள் பாபாவிடம் இருந்து பெறுவதே பிரசாதம் என்பதால் ஆவலாய் கை நீட்டுகின்றனர்...ஷிர்டி பாபாவுக்கு பூஜை ஆரத்தி எல்லாம் முடிந்த பிறகு இந்த சம்பவம் அரங்கேறுகிறது... எந்த பக்தர் கையிலும் அந்த இனிப்புகளை தராமல் திருமால் ராவை அழைக்கிறார்... அழைத்து அந்த தட்டு இனிப்புகளை சித்ராவின் நதிப்படுகையில் கொட்டிவிட்டு புதைத்துவிடச் சொல்கிறார்... இனிப்புகளை வாங்க எதிர்ப்பார்த்த பக்தர்கள் திடுக்கிடுகிறார்கள்... ஏன் இப்படி பாபா செய்தார் என குழம்புகிறார்கள்... பிறகு தான் புரிந்தது அது பாபாவை கொல்வதற்காக விஷம் வைக்கப்பட்ட இனிப்புகள் என்று... செய்தி அறிந்து அதிர்ந்து போகிறார்கள்... ஒரு முறை இரு முறை அல்ல பாபாவை கொல்லப் பார்த்த சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன... ஆனால் அந்த சதி வலைகள் அனைத்தும் இறைவன் பாபாவுக்கு வெறும் சிலந்தி வலைகளே!

கலியுகத்தின் ஆகச்சிறந்த அறியாமை என்பது சாகப் போகும் மனிதன் சாகாத இறைவனை சாகடிக்க முயல்வதே! பாபா ஸ்ரீ கிருஷ்ணராய் வாழ்ந்ததை விட ஸ்ரீ சத்ய சாயியாய் வாழ்கிற போது பாபாவுக்கு நிகழ்ந்த சூழ்ச்சிகள் அதிகம்! ஆனால் பாபா தனது முந்தைய ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை விட மிகப் பொறுமையானவர்... மன்னிக்கும் மஹா காருண்ய கடவுள்!


ஒருமுறை மசூலிப்பட்டிணம் கடற்கரைக்கு பக்தரோடு பாபா செல்கிறார்.. அலைகள் பாபாவை ஆரத்தழுவி வரவேற்கின்றன... வாருங்கள் சுவாமி என கை உயர்த்தி அழைக்கின்றன... விறு விறு வென பாபா கடலுக்குள் செல்கிறார்... பார்க்கின்ற பக்தர்க்கு பதைபதைப்பு ஏற்படுகிறது.. கடலுக்குள் வெகு தூரம் செல்கிறார் பாபா... சடாரென மறைந்து போகிறார்... "அய்யய்யோ சுவாமி" என பக்தர்களின் அடிவயிறு அலற... திடீரென ஒரு காட்சி கடலிலிருந்து வெளியே தோன்றுகிறது.. பார்த்து திகைத்துப் போகிறார்கள்... ஆம் ஆதிசேஷ பாம்பணையில் பாபா சாய்ந்து சயனிக்கிற காட்சியை கடற்கரையில் இருந்தபடி காணும் பக்தர்கள் ஸ்தம்பித்துப் போகிறார்கள். 

கடற்கரை அற்புதங்கள் ஏராளம்... ஒரு முறை கடற்கரை ஒன்றில் ஒரு வெள்ளிக் குங்கும சிமிழை வீசி எறிகிறார்... அலைகளுக்கு பாபா திலகம் இடுவது போல் அமைகிறது... உடனே அந்த நீல அலைகள் வெள்ளி குங்குமச் சிமிழை மீண்டும் கரை ஒதுங்கியதில் நிரம்பி இருந்ந நீரை பக்தர் அனைவருக்கும் பகிர்கிறார்... அது தேவாமிர்த சுவையோடு இருப்பதில் நீல அலைகள் பக்தரின் விழிவழி பொங்கி வழிகின்றன...

சென்னை வேங்கட முனி குடும்பத்திற்கு பாபா அளித்த ஒரு ஜபமாலை வேங்கட முனியின் தள்ளாத வயது தாய் மரணப்படுக்கையில் எமனுக்காக காத்திருக்கிற கடைசி நொடிகள் என அவர்கள் நினைத்தபோதும்... பாபா சிருஷ்டி ஜபமாலையை அருகே வைக்கிறார்கள்... வைத்த அடுத்த நொடிக்கெல்லாம் அந்த வயதான தாய் தனக்கு ஒன்றுமே இல்லை என்ற வண்ணம் எழுந்தபடி "ஏன் என் தலைமாட்டில் இப்படி அழுகிறீர்கள்?" என ஆச்சர்யமாகக் கேட்கிறார்...

அதே பக்தர் வேங்கடமுனியின் புதல்வர்களில் ஒருவர் வலிப்பு நோயால் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த போது... அவனின் தாய் (வேங்கட முனியின் மனைவி) அந்த ஜபமாலையைத் தேடுகிறார்... அகப்படவில்லை... பிறகு தேடியதில் அதைத் தொடுகிறார்.. கையை நழுவிப் போகிறது... மீண்டும் அதனை எடுத்து வருவதற்குள் வேங்கட முனி மகன் சுவாமி பாதம் சேர்ந்துவிடுகிறான்! ஒவ்வொருவருக்கும் மரண விதி என்பது பாபா நிர்ணயிப்பதே... இயற்கையின் சுழற்சிமுறையில் பாபா தலையிடுவதே இல்லை.. காரணம் அந்த செயல்முறையின் சிருஷ்டி  கர்த்தாவே பாபா தான்!


சோமயாஜுலு எனும் ஒரு பாபா பக்தர்... சிவராத்ரி நாளில் மிக வேகமாக பூஜை செய்து விட்டு கிளம்பிவிடுகிறார்... அவருக்கு விமான அவசரம்... ஹைதராபாத்'திலிருந்து சென்னைக்கு சென்றாக வேண்டும்... காரில் போய்க் கொண்டிருக்கும் போது... "இன்று சிவராத்திரி.. இன்று சுவாமி லிங்கோத்பவம் நிகழ்த்துவார்.. என்ன அவசரம்... சிவராத்ரி தான் முக்கியம்... சரியாகவே பூஜை செய்த திருப்தி இல்லை!" என நினைத்து காரை திரும்பச் சொல்லி.. வீட்டிற்கு சென்று.. குளித்து மீண்டும் அபிஷேக பூஜைகள் செய்கிறார்... விமானம் தவறுகிறார்...அன்று சென்ற விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து அதிர்ந்து போய் "சுவாமி நீ என்னை காப்பாற்றி விட்டாய்!" என உளமாற உருகுகிறார்... பிறகு சென்னைக்கு வருகிறார்... வீட்டு கதவைத் திறந்ததும் வேர்த்துக் கொட்டுகிறது! 

வீடே கொள்ளையடிக்கப்பட்டதற்கான அடையாளங்களாய் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன... அதிர்ச்சி அடைகிறார்... இங்கும் அங்கும் பார்க்கிறார்... எல்லாம் கடற்கரை கிளிஞ்சல்களாய் சிதறிக் கிடக்கின்றன... பீரோ திறக்கப் பட்டிருக்கிறது... ஆனால் ஒரு பொருளட்கள் கூட அந்த வீட்டை விட்டு வெளியேறவில்லை... சில பொருட்களை மூட்டை கட்டியபடி அப்படியே ஆங்காங்கே கிடக்கின்றன... ஒரு மதயானை கடைத்தெருவில் புகுந்து கலைத்த கடையாய் மாறிப்போன வீட்டை மிகவும் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்துகிறார் சோமயாஜுலு...


பிறகு அவருக்கு ஒரு தந்தி வருகிறது... அது பாபாவிடமிருந்து வருகிற தந்தி... அதில் "அன்று சாமான்களை எடுத்து அடுக்க நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருப்பீர்களே! நான் ஒரு சாமானைக் கூட எடுத்துப் போகவிடவில்லை... அந்த திருடர்கள் தோளில் மூட்டை கட்டி வைத்திருந்த பொருட்களைக் கூட திருப்பி இறக்கி வைத்துவிட்டு ஓடும்படி செய்துவிட்டேன்! சாமான்கள் ஒன்றும் களவு போயிருக்காதே! வார பஜனை வழக்கமாக நடந்து வரட்டும்!" என அந்த தந்தி கடிதத்தில் இருக்கிறது... தந்தியையும் தனது வாயையும் ஆச்சர்யத்தில் திறந்து வைத்தபடி சோமயாஜுலு விழிகளில் இருந்து வருகிற கண்ணீர்த் துளிகள் பாபாவுக்கு பதில் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தன...


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் : 53 - 65 / ஆசிரியர் : பி.எஸ் ஆச்சார்யா)


நம்மையே கொள்ளை அடித்த பரம்பொருள் பாபாவால் நமக்கு நேரும் வெறும் பொருள் கொள்ளையை தடுக்க முடியாதா என்ன?! இழப்பது பக்குவத்தைத் தருகிறது... மீட்பது பாபாவின் அபயத்தைத் காட்டுகிறது! காப்பது அவரது காருணயத்தை புரிய வைக்கிறது! உலகில் எதை இழந்தாலும் உயிர் வாழலாம்... ஆனால் நமது உயிராகிய பாபாவை நெறிதவற நாம் இழந்து விட்டோமெனில் இந்த உலகமே நமது கைகளில் இருந்தும் ஒரு துளி பயனுமில்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக