தலைப்பு

திங்கள், 27 ஜூன், 2022

ராமேஷ்வர கடல் கொந்தளிப்பில் மூழ்கிய தனுஷ்கோடி - சிக்கிய சாயி பக்தர்கள் - பாபா செய்தது என்ன?

தனது பக்தருக்கு ஏதேனும் ஒரு இக்கட்டு எனில் அக்கட்டை நீக்குவதற்கு கத்திரிக்கோலோடு விரைபவர் பாபா... பற்றை அறுப்பதாகட்டும்... பயத்தை அறுப்பதாகட்டும்... அபாயத்தை துண்டிப்பதாகட்டும் பாபாவை போல் துரிதமாக மின்னல் கூட செயல்படமுடியாது... ஒரு பேரிடரில் சிக்கிய சாயி பக்தர்கள் என்ன ஆயினர்...? சுவாரஸ்யமாய் இதோ...

அது 1964 ஆம் ஆண்டு... ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிக்கிறது... கோப ஆவேச அலைகள் கரைகளை சிதைக்கிறது... ஒரே ஆங்கார ஓங்கார கடலலைகள்... தனுஷ்கோடியையே மூழ்கடிக்கிறது... மனிதரின் பாவங்கள் இயற்கையை பாதிக்கிறது... அதன் விளைவே பூமி சந்தித்து வருகிற இன்னல்களும் பேரிடர்களும்... மனித பாவங்கள் ஒருவித தீய அதிர்வலைகளை உருவாக்கி...  அதன் விளைவாக ஏற்படுகிற பேரிடரில்... அப்போது தனுஷ்கோடியே மூழ்கிவிடுகிறது... கடல் தரையாவதும் தரை கடலாவதும்... இந்த பூமியில் எதுவும் நிலை இல்லை என்பதை காட்டுகிறது! அப்படி மூழ்கிய தனுஷ்கோடியில் ருத்ர தாண்டவம் ஆடும் பேயலைகளில் மாட்டிக் கொண்ட ரயில் ஒன்றில் 200 பேருக்கும் மேலானோர் மூழ்கி இறந்து போகிறார்கள்... கடலே அவர்களுக்கு திரவ சவப்பெட்டியாகிறது!


அந்த ரயிலில் தான் பாபா பக்தரான டாக்டர் பானர்ஜியின் நண்பர்களும் அவரது மகனும் பயணிப்பதாக இருக்கிறது... அங்கிருந்து அவர்கள் பயணிப்பதான திட்டம் அது... பேரிடரை அறிந்த பானர்ஜியின் நிலை குலைகிறார்... அங்கே ராமேஸ்வரப் பகுதிகளை கடல் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.. இங்கே பானர்ஜியின் இதயப்பகுதியை துக்கம் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது... வெளி உலகத் தொடர்புகள் வேறு ராமேஸ்வரத்தில் துண்டிக்கப்பட்டு விடுகின்றன... பானர்ஜிக்கும் அவரது மனைவிக்கும் கடல் கொப்பளிக்கிறது  கண்களில்... அதனாலேயே அந்த துக்க மூழ்குதல்... தகவல் ஏதும் கிடைக்கவில்லை.. மகன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா? எந்த செய்தியும் இல்லை... கண்டேன் சீதையை என வினவ ஆஞ்சநேயர் துணை வரவில்லை... ஆகவே ஸ்ரீராமரிடம் ஓடுகிறார்கள் புட்டபர்த்திக்கு... "சாயிராமா... சுவாமி!" என பாபாவின் காலடியில் விழுவதற்குச் செல்கிறார்கள்!


அப்போது பாபா தனது பக்தர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கிறார்... அவரது ஞான உரைப் பொழியில் ஒரு இடம் வருகிறது.. அதை பாபா விவரிக்கிற போது டாக்டர் பானர்ஜியை ஒரு பார்வை பார்க்கிறார்... உடனே "தீபத்திற்கு ஒன்றும் ஆகாது!" என்கிறார் பாபா.. அது அவர் செய்து வருகிற ஞான உரைப் பொழிவுக்கும் சரியாகப் பொருந்துகிறது... டாக்டர் பானர்ஜி மகன் பெயர் தீபக்... அவருக்கும் அதில் ஒரு செய்தியை பாபா தருகிறார்... அதுவும் அவருக்கு மட்டும் புரிகிறபடி... இது எப்படி சாத்தியம்? இறைவனை தவிர யாரால் இயலும்..? அதுவும் மின்னலே தோற்கிற ஒரு நொடிக்குள்... அந்த Presence of Super mind... அதுவே இறைவன் பாபா என்கிற omnipresence (எங்கும் நிறைத்தன்மை) 

வீட்டில் அழுதது இன்னமும் மீதமிருக்க பாபா அதைச் சொன்ன அந்த நிமிடமும் அழுகிறார்கள் பானர்ஜி தம்பதியினர்...

இறைவன் பாபா ஆறுதலுக்காக கூட நம்மிடம் பொய் சொல்வதில்லை... காரணம் அவர் சத்திய இறைவன்... ஸ்ரீ சத்ய சாயி இறைவன்! இப்போது பானர்ஜிக்கு தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்பது பாபாவின் சங்கேத ஞான மொழியால் புரிந்துவிடுகிறது... ஆனால் எங்கே இருக்கிறான்? 


ஞான உரைப் பொழிவு நிறைகிறது.. பாபா பானர்ஜி தம்பதியிடம் விளக்கமாக... "அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள்" என பாபா நேரடியாக அறிவிக்க... கடலலை உப்பு வார்த்த பானர்ஜி தம்பதியினர் வயிற்றில் பாபா பாலை வார்க்கிறார்... பாலைப் பெறுகிறது இதயப்பாலை... "அவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்...ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் பாபா... இதில் 'அவர்கள்' என்பதில் பானர்ஜியின் நண்பர்களையும் சேர்த்தே குறிக்கிறது! 

"சுவாமி... அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ் முழுவதையும் கடல் கொண்டுவிட்டதாக செய்தி வருகிறதே சுவாமி.." என பானர்ஜி கண்கலங்கி வார்த்தை பதறிப் பேச... உடனே பாபா "இல்லை இல்லை... இரண்டு கெஸ்ட் ஹவுஸ்கள் உள்ளன... ஒன்றைத் தான் கடல் கொண்டு விட்டது.. இன்னொன்று இருக்கிறது.. அதில் தான் பத்திரமாக இருக்கிறார்கள்! கவலைப்படாதே!" என்கிறார்! இப்படி வரிக்கு வரிக்கு அங்கே என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்கிறது? என்பதை பாபா தத்ரூபமாக விளக்குகிறார்!

பாபா சொன்ன அந்த கெஸ்ட் ஹவுஸ் செய்தியை அதுவரை யாரும் கண்டுபிடிக்கக் கூட இல்லை... காரணம் அது வெள்ளக்காடு... எந்த ரிப்போட்டராலும் அப்படி ஒரு துல்லிய தகவல்களை சேகரிக்க வாய்ப்பே இல்லை.. பாபாவுக்கு தெரியாதது எதுவுமே இல்லை...இறைவன் பாபா எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதையே அது காட்டுகிறது!


மறுநாள் காலை 8 மணிக்கு "அனைவரும் நலம்!" என தந்தி வருகிறது.. பானர்ஜிக்கு ஏற்கனவே பாபா சொல்லிய காரணத்தினால் அந்த தந்தி பாபா வார்த்தையை ஊர்ஜிதப்படுத்தியதே அன்றி ஏற்கனவே பானர்ஜி தம்பதி பாபா  அதற்கு முன் தினம் சொல்லிய தகவலிலேயே சமாதானம் அடைந்துவிடுகின்றனர்...


(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம்: 140 / ஆசிரியர் : க.நாகராஜன்) 


ரயிலில் சென்ற 200 பேர்களையும் காப்பாற்றாமல் பானர்ஜி நண்பர்கள் மற்றும் மகனை மட்டும் காப்பாற்றி இருக்கிறாரே பாபா... என்ன ஓரவஞ்சனை? என வாசிப்பவர்கள் நினைக்கலாம்... இல்லை.. அது அப்படி இல்லை... சரணாகதி அடைந்தால் மட்டுமே காப்பாற்றப்பட வேண்டும் என்பது தர்ம நியதி... அது தான் இறைவன் பாபாவின் காவலுக்கான கடவுச்சொல்! நம்பிக்கை - பக்தி - சரணாகதி இவையே அந்த தெய்வீகக் கடவுச் சொல்(password)... எப்படி கடவுச்சொல்லில் ஒரு எழுத்து பிழையாக இருந்தாலும் உள்ளே செல்ல முடியாதோ... அப்படியே அரை குறை பக்தி எந்தக் கரைக்கும் நம்மை கொண்டு சேர்க்காது! திட வைராக்கியத்தோடு பாபாவிடம் சரணாகதி அடைந்து நாம் வருவதை ஏற்றால்... வருவதெல்லாம் நமக்கு ஆன்ம நன்மையே தருகிறது!


   பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: