தலைப்பு

வெள்ளி, 10 ஜூன், 2022

பூனா மடத்தில் சிக்கி சீரழிய இருந்த பெண்ணை பிணமாக்கி பாபா மீண்டும் உயிரூட்டிய பேரதிசயம்!

வாசிக்க வாசிக்க பாபா வயப்படுகிறார்... யோசிக்க யோசிக்க பாபா ஜெய'ப்படுகிறார்... நினைத்துப் பார்க்க நித்திய நிகழ்விலும் பரிபக்குவமாய் பாபா நம் அகத்தில் சுகப்படுகிறார்... பாபா வழங்குகிற ஒவ்வொரு அனுபவமும் ஆன்மாவுக்கு பலம்... வாழ்க்கைக்கு நலம்... அதன் தொடர்ச்சியாக இதயத்தை சிலிர்க்கச் செய்கிற சில அனுபவங்கள் இதோ...


பாபா கட்டுகிற பிரம்மாண்ட மருத்துவமனைகள் எல்லாமே ஆரோக்கியக் கோவில்கள்.. ஸ்ரீ தன்வந்த்ரி அங்கே நிரந்தரமாய் வாசம் புரிகிறார்... அங்கே நிகழ்கிற அனுபவங்கள் ஏராளம்... இரவு வேளைகளில் நோயாளிகள் பலர் பாபாவை தரிசித்திருக்கிறார்கள்... வெறும் கனவு அனுபவம் அல்ல... தங்களது படுக்கை அருகே பாபா நின்றதை காண்பதாக பலர் விடிகாலையில் மருத்துவ பணியாளர்கள் கூட பகிர்கிறார்கள்... தங்கள் நெற்றியில் மற்றும் நாவில் விபூதி போட்டதை கண்கலங்கிப் பேசுகிறார்கள்... பாபா எங்குமே எப்போதுமே மறைந்து போய்விடவில்லை என்பதற்கான திருச்சான்றே அது!


ஒருசமயம் பாபாவின் மருத்துவமனையில் ஆண்டரிக்கை வாசிக்கப்படுகிறது... வாசிக்கும் மருத்துவ அலுவலர் மருத்துவமனையில் வியத்தகு பிணி நீக்கம் நிகழ்ந்ததாக பரவசமுடன் பகிர்கிறார்... அதை பாபா உடனே இடைமறிக்கிறார்... "இந்த மருத்துவமனை மட்டுமே என்னுடைய மருத்துவமனை என்று யார் சொன்னது? இல்லை... இது மட்டுமல்ல... அப்படி எண்ண வேண்டாம்! எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மருத்துவமனைகளும் என் மருத்துவமனைகளே! உடலாலும் மனதாலும் கடும் நோயால் கடினப்படுகிற பிணியாளர்கள் எல்லோரும் என்னுடையவர்களே!" என மிக தீர்க்கமாகப் பேசுகிறார்! பாபா பேதம் பார்ப்பதே இல்லை... இறைவனால் எப்படி பேதம் பார்க்க முடியும்? அதனால் தான் பாபா பரிபூர்ண இறைவன்!

மேலும் "உலகம் முழுவதுமே என் வீடு... ஒவ்வொரு நாடும் அதில் ஒவ்வொரு அறை!" என்கிறார் இறைவன் பாபா! 

பாபாவின் ஒரே திருநோக்கமே தன் பக்தர்களை ஆன்ம அனுபவத்தில் திளைக்கச் செய்வதே! ஆன்ம சாதனை எனும் தியானத்தில் ஈடுபடாமல் நீங்கள் எத்தனைமுறை புட்டபர்த்தி வந்து போனாலும் பயனில்லை என்கிறார்!

     ஒரு பக்தருக்கு பாபா கொடுத்த சிருஷ்டி விபூதியை இன்னொருவர் மும்பையில் தனது வீட்டில் உட்கொண்ட அதே நேரத்தில் பாபா படத்திலிருந்து ஒரு ஒளிக்கற்றை வெளியே வந்து பாய்கிறது... அந்த தருணத்திலிருந்து வாழ்க்கை வளம் பெறுகிறது என்பதை நூலாசிரியர் பதிவு செய்கிறார்!


லக்னோவிலிருந்து வாரணாசிக்கு (காசிக்கு) ஒரு அன்பர் சென்று கொண்டிருந்த போது..‌அவரின் காரின் கண்ணாடி முகப்பில் ஏதோ ஒன்று விழுகிறது.. உடனே வண்டியை ஓரமாக நிறுத்தி அது என்னவென வெளியே வந்து பார்க்கிறார்... அதைத் தொடுகிறார்... கையில் எடுக்கிறார்... கண் கலங்குகிறார்...‌ முன்பு ஒருமுறை பாபாவிடம் அவர் நேர்காணல் பெற்ற போது "சுவாமி நீங்கள் எனக்கொரு ஜப மாலையை தர இயலுமா?" என கைகூப்பிக் கேட்ட பொழுது... பாபாவோ "இப்போதல்ல... பிறகு தருகிறேன்!" என ஆசி கூறி அனுப்புகிறார்... பாபா தருவதாக சொன்ன அதே ஜபமாலை இப்போது அவரின் கார் முகப்புக் கண்ணாடியில்... பாபாவின் திருச்சொல் ஒரு நாளும் பொய்யாகிப் போனதே இல்லை! பாபா தனது ஸ்தூல கரங்களால் தான் ஒன்றை நமக்கு தர வேண்டும் என்பது அவசியமே இல்லை... 

"கைவரும் பொருட்கள் உன் வரமன்றோ!" "கிடைக்கும் யாவையும் உன் திரு உபயம்!" எனும் கவச வரிகள் சர்வ சத்தியமே!


தசராவின் போதும் பல வைபவங்களின் போதும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நாராயண சேவை வழங்கப்படும் பிரசாந்தி நிலையத்தில்... அங்கு மட்டுமின்றி பாபா பக்தர்கள் எங்கும் நாராயண சேவையை இப்போதும் தொடர்கிறார்கள்... ஒருமுறை அன்பர் ஒருவர் "சுவாமி பக்தர்கள் உணவருந்துவதை புகைப்படங்கள் எடுத்து பத்திரிகைக்கு செய்தியாக வழங்கலாமே!" என அபிப்ராயம் சொல்கிற போது... "இல்லை இல்லை.. உன் எண்ணம் இயற்கைக்கு மாறான எண்ணம்... உன் பெற்றோர் வீட்டிலோ உறவினர் வீட்டிலோ நீ உணவருந்துவதை புகைப்படம் எடுத்து நீயே செய்தியாக வெளியிடுவாயா?" எனக் கேட்கிறார்... எல்லோரும் தன் குழந்தைகள்.. குழந்தைகளுக்கு உணவிடுவதை தாய் என்றாவது பெருமையாகப் பேசுவாளா? அல்லது அதை வைத்து விளம்பரம் தேடுவாளா? இறைவன் பாபாவே சாஸ்வதமான நம் ஒரே பிரபஞ்சத் தாய் என்பது இந்த சம்பவம் வழி உணர முடிகிறது! 

ஒருமுறை அமெரிக்க பெண்மணி ஒருவர் பாபாவை கேள்விப்பட்டு அவரை தரிசிக்க வேண்டும் என இந்தியா வருகிறார்.. முதலில் மும்பையில் இறங்குகிறார்... அங்கே பாபாவை பற்றிய சில நூல்கள் வாங்கிப் படிக்கிறார்..‌பூனாவில் இருக்கிற ஒரு ஆன்மீக மடத்திற்கு சென்ற பிறகு பாபாவை தரிசிக்கச் செல்லலாம் என திட்டம் இடுகிறார்... அந்தத் திட்டமே அவர் தலையில் தீயை வாரி இறைக்கும் என அவர் அறியவில்லை...

      மடத்தில் அப்பெண்மணியை நல்லபடியாக வரவேற்று... அங்கே தங்க வைக்கப்படுகிறார்... அந்தப் பெண்மணியோ பார்த்துவிட்டு போகவே வருகிறார்..‌ஆனால் அவர்களின் அன்பொழுகும் பேச்சால் "தங்குங்கள்!" என்று அவர்கள் வற்புறுத்த தங்கிவிடுகிறார்! அவர் தங்கிய அந்த இரவே அந்த மடத்தின் தலைவர் அந்த பெண்மணியை சீரழிக்க கதவைத் திறந்து உள்ளே வருகிறார்... புறாவாய் சயனித்திருந்த பெண்மணி மீது அந்த காமுகக் கழுகு பாய்கிறது... அவர் தொந்தரவு செய்யத் தொடங்கியதுமே "Oh My God... Sathya Sai!" (ஓ என் கடவுளே! சத்ய சாயி) என அலறுகிறார் பாவம்... கூப்பிட்டக் குரலுக்கு வருவது தானே கடவுள் பாபாவின் முக்கியமான பணியே! அந்த மடத்(தனமான) தலைவர் மானபங்கத்தை துவங்குகிற போது அந்த பெண்மணி பிணமாகிவிடுகிறார்...

மூச்சு பேச்சே இல்லை.. மிரண்டுபோகிறார் போலி முனி... "அய்யய்யோ இப்படி நேர்ந்துவிட்டதே! இதிலிருந்து தப்ப வேண்டுமே!" என அந்த அறையை விட்டு வெளியே ஓடிவிடுகிறார்! அந்தப் பிணத்தை அப்புறப்படுத்த தனது சீடர்களுக்கு உத்தரவிடுகிறார்... அதற்குள் அந்த அறையில் பெண்மணிக்கு உணர்வு மேலிட.. நிகழ்ந்ததை உணர்ந்து அந்த மடத்தை விட்டு தப்பிவிடுகிறார்... பிணம் காணவில்லையே என்று மேலும் அந்த பொய்க்கூட்டம் மிரள்கிறது!


அடுத்த நாளே அந்தப் பெண்மணி பிரசாந்தி நிலையம் வந்து சேர்கிறார்... பாபா அழைக்கிறார்... பாபாவின் நேர்காணல் வாய்ப்பு கிடைக்கிறது... அது நேர்காணல் அறை... "ஓ சுவாமி!" என கதறி அழுது அவர் தனக்கு நிகழ்ந்த இக்கட்டினை சொல்ல வருவதற்குள்... "எனக்கு அனைத்தும் தெரியும் பங்காரு!" என பரிவோடு அவர் தலையைத் தொடுகிறார் பாபா! "நீ என்னை கூப்பிட்டதுமே நான் வந்துவிட்டேனே! உன் உயிர்த்துடிப்பை நிறுத்தி.. மீண்டும் அவன் வெளியே ஓடிய பிறகு தான் உனக்கு மீண்டும் உயிரூட்டினேன்!" என்று பாபா சொன்னதும் ...

"ஓ அத்தனையும் உங்கள் அனுகிரகம் தானா? ... என்னை காப்பாற்றினீர்களே பிரபு!" என முகம் மலர்கிறார்.. ஆனாலும் அந்தப் பெண்மணியின் அல்லல் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறி வழிந்து கொண்டே இருந்தது.. நிற்கவே இல்லை... சுவாமி துரௌபதி எனும் ஒரு பக்தையை மட்டுமல்ல கலியுகத்தில் இன்றளவும் எத்தனையோ பக்தையரின் வாழ்க்கையை மீட்டு காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்!


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் : 88 - 106 / ஆசிரியர் : பி.எஸ் ஆச்சார்யா)


பாபாவின் காவலாலேயே இந்த பூமி இன்றளவும் இற்றுவிடாமல் இயற்கை சமன்பாட்டினை ஓரளவுக்காவது பெற்று வற்றிவிடாமல் வாழ்கிறது... மனிதன் தர்மம் எனும் கிளையை முறித்துக் கொண்டே போனாலும் இறைவன் பாபாவின் பேரருள் வேரை அவனால் ஒன்றுமே செய்துவிட முடிவதில்லை... பக்தி என்பது ஒருவருக்கு உள்ளே நிகழ ஆரம்பித்துவிட்டால் அவரை கணப்பொழுதும் காப்பாற்றுவதே பாபாவின் தலையாய பணி! உண்மையான பக்தர் மலை போல் எதற்கும் அசராமல்... எதைப்பற்றியும் அலட்டாமல் அமைதியாக வாழ்வர்! பெரிய புயலே வரட்டுமே அது கூழாங்கற்களைத் தான் குப்புறக் கவிழ்த்தும் அதனால் மலையை என்ன செய்துவிட முடியும்?


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக