தலைப்பு

செவ்வாய், 28 ஜூன், 2022

பாபாவின் சிருஷ்டி மோதிரத்தை தூக்கி வீசி எறிய நினைத்திருந்த பானர்ஜிக்கு நடந்தது என்ன?


பாபாவின் பக்தர்கள் எண்ணிலடங்காதவர்கள்... அவர்களின் பாபா அனுபவங்களோ அதை விட எண்ணிலடங்காதவை... அவற்றுள் நேர்ந்த வித்தியாச அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...

டாக்டர் பானர்ஜி என்பவர் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இல் பேராசிரியராக இருந்தவர். அவருக்கு ஆரம்பத்தில் பாபாவின் மேல் நம்பிக்கையே இல்லை... அவரை அழைத்துக் கொண்டு இல்லை இல்லை இழுத்துக் கொண்டு போனது சக்ரவர்த்தி எனும் அவரது பைலட் நண்பர்! அது 1961 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி... அவர் முதன்முதலாக பாபாவை தரிசிக்கிறார்... அந்த முதல் தரிசனம் அவரை அடியோடு மாற்றிவிடுகிறது... ஒரு கும் இருட்டு சாதாரண ஏற்றிய மெழுகுவர்த்தியை கண்டாலே வெளிச்சம் பெறுகிற போது அது கண்டதோ சர்வ லோகத்தை ஆளும் சூரியனை... ஆகையால் அக மாற்றம் பானர்ஜிக்கு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது!


பானர்ஜியின் நண்பரான ஜி.டி ஹஸ்ராவின் மகனுக்கு ஆஸ்துமா... மூச்சுப் போக்குவரத்து நெரிசல்... காற்றின் காலடித்தடங்கள் முள் பாதையில் நடப்பது போல் சிரமமாக இருக்கிறது! 24 நாளுக்கு ஒருமுறை வந்து துக்கம் விசாரித்த ஆஸ்துமா.. அவரது மகனுடனேயே தங்க ஆரம்பிக்கிறது! "புட்டபர்த்தி செல்லலாம் பானர்ஜி.. ஏற்பாடு செய்!" என்கிறார் ஹஸ்ரா... ஆஸ்துமா மகனோடு பிரசாந்தி நிலைய ஆலயம் வருகிறார் ஹஸ்ரா.. டாக்டர் பானர்ஜியின் ஏற்பாட்டில்... அங்கே டாக்டர் பகவந்தத்திடம் பிரச்சனை குறித்து பேசுகிறார்.. "இல்லை இன்று சுவாமி யாருக்கும் நேர்காணல் தருகிற வாய்ப்பு இல்லை!" என்கிறார்! உடனே கோபம் வந்துவிடுகிறது பானர்ஜிக்கு... தனது முதல் தரிசனத்தையும் பாபா சிருஷ்டித்து அளித்த மோதிரத்தையும் காட்டிய பிறகும்... பகவந்தமோ தான் எதுவும் செய்வதற்கில்லை எனச் சொல்லிவிட...

கோபப் பறவை மூக்கிலிருந்து பானர்ஜியின் மூளைக்குள் பாய்கிறது... "சுவாமி மட்டும் இன்று எனது நண்பர் ஹஸ்ரா குடும்பத்திற்கு நேர்காணல் தரவில்லை என்றால் ... அவர் சிருஷ்டித்து அளித்த மோதிரத்தை வீசி எறிந்துவிடுவேன்!" என கர்ஜிக்கிறார்... கோபத்தையும் கடந்து ஹஸ்ரா மேல் என்ன ஒரு நட்பு அவருக்கு.. அவரின் மகன் மீது என்ன ஒரு பரிவு! உடனே சில நிமிடங்களில் கோபப் பறவை சிறகொடிந்து போக... "சரி சுவாமி.. நீங்கள் எனக்கு நேர்காணல் தராவிட்டாலும் பரவாயில்லை... நண்பரின் ஆஸ்துமா மகனுக்காவது நேர்காணல் கொடுங்கள்... அதுவே போதும்... அவன் கஷ்டப்படுவதை என்னால் சகிக்க முடியவில்லை சுவாமி!" என நினைத்துக் கொண்டு ஒரு சமாதான உடன்படுக்கைக்கு வருகிறார் பானர்ஜி!

கூட வந்திருந்த புரஃபஸர் ஐயர் அன்றிரவே பெங்களூர் கிளம்பலாமா? என யோசிக்கிற போது... கார் பேட்டரி டவுன் ஆகி இருப்பதால் அந்த எண்ணத்தை கைவிடுகிறார்! அப்போது பகவந்தம் ஓடி வருகிறார்...


என்ன ஆயிற்று? என அவர் வரும் பாதையையே பானர்ஜி உட்பட வந்திருந்தவர்கள் பார்க்கிறார்கள்! மூச்சிறைக்க... "உங்களை சுவாமி மாலை 4 மணிக்கெல்லாம் நேர்காணலுக்கு அழைக்கிறார்!" என்கிறார் பகவந்தம். "அச்சோ நாம் தேவையில்லாமல் ஏதேதோ பேசி விட்டோமே..சுவாமி கேட்டிருப்பாரே...என்ன சொல்வாரோ!" என பானர்ஜி இதயம் கசக்கிறது...டிங் டாங் என மணி 4... அது பாபாவின் நேர்காணல் அறை... கசந்த இதயத்திற்கும் ஆஸ்துமாவினால் அசந்த இதயத்திற்கும்  பாபா சிருஷ்டித்து ரசகுல்லா தருகிறார்... 


உடனே பானர்ஜி மனம் " இதை இப்போதே சாப்பிடாமல் விட்டால் 24 மணி நேரத்திற்குள் ஒரு வேளை மறைந்துவிடுமோ!" என குழந்தை போல் நினைத்துக் கொண்ட அடுத்த நொடி "நீங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் அனைவருக்கும் கொடுத்து சாப்பிடுங்கள் !" என்கிறார் பாபா! என்ன நம் மனதின் கேள்விக்கு அப்படியே டான் டான் என பதில் சொல்கிறாரே என பேராச்சர்யப்படுகிறார் பேனர்ஜி! பிறகு ஆஸ்துமாவினால் அவதிப்படும் ஹஸ்ரா மகனை அருகே அழைத்து தங்கத்தால் ஆன ஒரு சிருஷ்டி லாக்கெட்டை கொடுத்து.. "பையனின் கழுத்தில் அணிவித்துவிடுங்கள்!" என்கிறார்! அந்த நொடியிலிருந்து ஆஸ்துமா பதறி அடித்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வது போல் கண்டம் கடந்து  காற்றில் கரைந்து காணாமலேயே போய்விடுகிறது! பாபா அந்த நேர்காணல் முழுவதும் "நீ ஏன் அப்படி என் சிருஷ்டி மோதிரத்தை வீசி எறிவேன் எனச் சொன்னாய்?" என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை... அது தான் பாபா இறைவன் என்பதற்கான உதாரணமும்... தவறை நினைத்து வருந்துபவர்களை தூக்கி அரவணைத்து மடி ஏற்பதே இறைவன் பாபாவின் ஆன்மீக பாணியும்...!


(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயா பாபா / பக்கம் : 137 - 139 / ஆசிரியர் : க.நாகராஜன்) 


மூச்சுக்கு திரையிடுவது ஆஸ்துமா... பார்வைக்கு திரையிடுவது அகந்தை... இதயத்திற்கு திரையிடுவது ஆசை... ஆன்மாவுக்கு திரையிடுவது கர்மா... எல்லா திரையையும் நீக்கி நமக்கு ஆன்ம ஞானம் அளிப்பது பாபா என்கிற ஒரே இறை! திரைக்குப் பின் ஒளிந்து கொள்வதற்கு பெரிய அறிவு தேவையில்லை... ஆனால் திரையைக் கிழித்து பாபா சொல்படி நடப்பதற்கு மிகப்பெரிய திடமும் , வைராக்கியமும் , பாபா மேலான பிரேமையும் , ஏற்றுக் கொள்ளும் நேர்மையும் தேவைப்படுகிறது! தியானம் எனும் ஆன்ம சாதனையால் மட்டுமே அவற்றை அடையமுடிகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக