தலைப்பு

திங்கள், 6 ஜூன், 2022

பாபாவுக்காக இனிப்பு நிறைந்த கிண்ணத்தோடு காத்திருந்த தேவர்கள்!

பாபாவின் மகிமைகள் ஒரு ஜென்மத்தில் பகிர்வதற்கும் கேட்பதற்குமே தீராத அமுதக் கடல்! பலர் பல்வேறு சூழலில் அனுபவித்த தங்களது பாபா அனுபவங்களை... அவர்கள் நேரடியாகப் பார்த்து உணர்ந்து கொண்ட பாபாவின் பல்வேறு ஆச்சர்ய அற்புதங்களை இன்னமும் மறுபதிப்பு செய்யாத பல அரிய பழைய புத்தகங்களில் பத்திரமாகவே இருக்கிறது... அதை விசித்திரமாக மீள் உருவாக்கம் செய்து தருவதே ஸ்ரீ சத்ய சாயி யுக மகிமை... அந்த ஆச்சர்யப் பூச்சரங்கள் தொடர்ச்சியாக இதோ...


புட்டபர்த்தியின் ஆதிகாலத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள்... அவர்கள் எத்தனையோ மெய் சிலிர்க்கும் பாபா அனுபவங்களை நேருக்கு நேராக தரிசித்திருக்கிறார்கள்‌.. அடிப்படையில் அவர்கள் வஞ்சகமில்லா அப்பாவிகள்... ஆகவே தான் பாபாவும் அவர்களுக்கு அளப்பரிய பாக்கியத்தை அருளி இருக்கிறார்... உயர்ந்த நெடுமரங்கள் தனது இடுப்பளவே இருக்கும்படியான விஸ்வரூப தரிசனம்... தனது சிரசைச் சுற்றிய ஜோதி சக்கர சுழற்சி... நெற்றிக் கண் தரிசனம் என ஏராள அற்புதங்கள்...! அன்யதா சரணம் நாஸ்தி புத்தகத்தில் இன்னமும் ஆழமாக அவை விவரிக்கப்பட்டிருக்கிறது!


"பாருங்கள் ஜோதி தரிசனம்!" எனச் சொல்லிவிட்டு மறைந்துவிடுவார்... கற்பக மரமாகிய புளியமரத்தின் மேலே அனைவரின் பார்வையைத் திருப்பி ஒளிப்பந்தை காட்டுகிறார்... அது பெரிதாவதையும் தரிசித்துச் சிலிர்த்துப் போகிறார்கள்...  "இதோ இங்கே இருக்கிறேன் !" என குரலை மட்டும் ஒலிக்க வைத்து தனது திருமுகத்தை அந்த ஒளிப்பந்தில் காட்டி அவர்களை திக்குமுக்காடச் செய்கிறார்! அந்த எளிய மக்களிடம் கேமரா இல்லை... ஒருவேளை இருந்து அதைப் பதிய முனைந்திருந்தால் அந்த லென்ஸ் கூட எரிந்து போயிருக்கும்... 

ஒளிப்பந்தில் தனது திருமுகத்தை மட்டுமல்ல மற்றொரு நாள் தேவி மகாலட்சுமியாக காட்சி அளிக்கிறார்...

பாபாவை போல் நீந்த ஒரு மனிதராலும் இயலாது... ஒரே ஒரு தாவு... ஒரு டைவ்... அடுத்த நொடி மறுகரைக்குச் சென்று... வாருங்கள் இங்கே என அழைப்பார்... ஓட்டப்பந்தயத்திற்கு பக்தரை அழைத்து மின்னலில் இருந்து உற்பத்தியான மான் போல் துள்ளித் துள்ளிக் குதிப்பார்‌...! இதனை நூலாசிரியர் வியக்க வியக்க பதிவு செய்கிறார்...இதைப் பதிவு செய்த புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு வெளியானது 1987.. (அப்போது அடியேனுக்கு 3 வயதே! ) நூதன அனுபவங்கள் எல்லாம் நுண்ணிய வகையில் நல்ல வண்ணம் அவை அரிய நூல்களில் இன்றும் பதிந்தே இருக்கிறது!


மரக்கிளைப் பலகையில் ஒருமுறை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கையில் பால பாபா அவர்களுக்கு தன் ரூபத்தை மறைத்து கிருஷ்ண ரூபத்தைக் காட்டி... கிருஷ்ண ஊஞ்சல் தரிசனம் அவர்களின் இருவிழிகளுக்கு ஊட்டுகிறார்... அதை திடீரென தரிசித்த அவர்கள் ஆனந்தப் பெருவெளியில் அகம் நிறைய மூர்ச்சையற்று கீழே விழுகின்றனர்... உடனே பால பாபா கையசைத்து மந்திராட்சதை தூவ அவர்களின் மூர்ச்சை தெளிவாகிறது... இதை வாசிக்கிற போது பாகவத லீலைகள் வாசிப்பது போலவே நம்மால் உணரப்படுகிறது...ஆம் அதில் சந்தேகமே இல்லை...! பாபாவும் ஸ்ரீகிருஷ்ணரும் ஒன்றே! இறை ஆற்றலை மட்டும் வைத்தல்ல பாபாவை இறைவன் எனச் சொல்வது... பாபாவுக்கு எல்லாவிதமான பேராற்றல் இருந்தும் நம்மோடு அவர் அகந்தை இல்லாமல் இருப்பது... கனிவான அணுகுமுறை... விஷமோ ரசமோ இரண்டையும் ஒரேவித மனோநிலையில் ஏற்பது... ஆத்திரப்படாத சொல்... அவசரப்படாத செயல்... மன்னிக்கும் குணம்... இது மனிதனுக்கு துளியும் இல்லாத தன்மை... சிறுக செல்வம் சேர்ந்தாலே செருக்கோடிருக்கும் மனிதனுக்கு இத்தகைய இறை குணங்கள் எல்லாம் சாத்தியமே இல்லை! வெறும் ஆற்றலை வைத்தும் லீலைகளை வைத்து மட்டுமல்ல பாபா குணத்தால் இறைவன்! அதுவும் அத்தகைய பேராற்றலை தன்னகத்தே வைத்துக் கொண்டு... இப்படி இருப்பது மனித நடைமுறையே அல்ல! மகான்களுக்கு கர்மாவை மாற்றி அமைக்கும் பேராற்றல் இல்லை என்பதால் பாபாவை மகான்களின் வரிசையில் வைப்பது அவரை குறைவாக மதிப்பிடுவதே!


ஒருமுறை பாபா சென்னையில் முகாமிட்டிருந்த போது அன்று கிருஷ்ண ஜெயந்தி... பாபா தங்கி இருந்த அறையொன்றில் வட்ட வடிவத்தில் நடந்து கொண்டே இருக்கிறார்... சடாரென பின்பக்கம் திரும்பி அந்த வீட்டு அம்மையாரிடம் "இங்கே சில தேவர்கள் எனக்கு இனிப்புகள் நிறைந்த ஒரு கிண்ணத்தோடு காத்திருக்கிறார்கள்!" என்கிறார்... அந்த அம்மையார் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து "அப்படி யாரும் இல்லையே சுவாமி!" என ஆச்சர்யமாய் கேட்கிறார்... உடனே பாபா மேலே கைகளை நீட்டியபடி இருக்க... மிக அற்புதமான வேலைப்பாடு நிறைந்த ஒரு கிண்ணம் தோன்றுகிறது... அதில் அத்தனை வகை இனிப்புகளும் நிறைந்திருக்கின்றன... அதை அப்படியே எடுத்து அந்த அம்மையாரிடம் தருகிறார்... அந்த இனிப்புகளை அதற்கு முன் அந்த அம்மையார் பார்த்தது கூட இல்லை... அது இந்த பூமியின் இனிப்பு வகையறாவே அல்ல... அதில் ஒரே ஒரு இனிப்பை ஒரே ஒரு கிள்ளு கிள்ளி தனது தேவாமிர்த அதரத்தில் போட்டுக் கொள்கிறார்! 

அந்த சமயத்தில் வந்திருந்த அந்த தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்களா இல்லையா! 

தேவர்களே அவதாரங்களை தரிசிக்க வரும் தேசம் என்பதால் தானே பாரதம் ஆகச் சிறந்த இன்னல்களிலும் புயலின் இடையே பவ்யமுடனும் பரிபக்குவமுடனும் வளைந்து வாழும் நாணலாய் இன்றளவும் தப்பித்துக் கொண்டிருக்கிறது!


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் : 39 - 48 / ஆசிரியர் : பி.எஸ்.ஆச்சார்யா) 


பல ஜென்ம தொடர் தவத்தால் ஓரளவுக்கு மகான்கள் பெறும் இறை ஆற்றல்கள் பாபாவின் சுபாவமாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்...? அந்த இறைப்பேராற்றலே பூமியில் பாபா என அவதாரம் எடுத்திருக்கிறது என அர்த்தம்... ஹரித்வாரில் பாய்ந்தோடும் கங்கை காசிச் சொம்பில் நமக்காக நம் இல்லத்திற்கு வருவதைப் போல்... அகண்ட பரிபூரண பரப்பிரம்ம பாபா நமக்காக தன்னைச் சுருக்கி அவதரிக்கிறார்! அது மூன்றாய் அவதரித்து மூளும் அதர்மம் அழிக்க பிரேமையாய் இன்றும் தொடர்கிறது !


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக