தலைப்பு

செவ்வாய், 7 ஜூன், 2022

30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த உதவிப் பொறியாளருக்கு பாபா நிகழ்த்திய அற்புதம்!

பாபா ஆற்றிடும் அன்றாட அற்புதங்கள் ஏராளம்... ஒவ்வொன்றும் தெய்வீகமானது.. தனித்தன்மை நிறைந்தது... அத்தகைய அற்புதம் எனும் பொக்கிஷ கிடங்கிலிருந்து ஓரிரு நவரத்தினங்கள் சுவாரஸ்ய வெளிச்சமாய் இதோ...

கும்பகோணத்தில் ஒருமுறை பாபா முகாமிட்டிருக்கிறார்... ஒரு சிறுவனை தாயும் தந்தையும் கொண்டு வந்த வண்ணம் அழுது கொண்டு பாபாவின் பாதங்களில் முன் விழுந்து வணங்குகிறார்கள்... அவர்களின் கண்ணீர் பாபாவின் பாதங்களை நனைக்கிறது... அந்தச் சிறுவனால் வாய் பேசவே இயலாது... என்னவிதமான வைத்தியம் பார்த்தும் சிறுவனின் வாய் பேசா நிலை சரியாகவே இல்லை... எனவே பாபாவே கதி என கால்களில் விழுகிறார்கள்... அந்தச் சிறுவனின் தோளினைப் பரிவோடு தொட்டு மேடை மீது ஏற்றி தான் பேச இருக்கிற மைக்'கின் முன் நிற்க வைக்கிறார்... பாபா தனது கைகளைத் தட்டிக் கொண்டே பஜனை பாட ஆரம்பிக்கிறார்... "உம்... நீயும் பாடு!" என அந்தச் சிறுவனை பார்த்த வண்ணம் கூறுகிறார்... அந்த திருச்சொல் ... ஒரே சொல்... அவ்வளவு தான் அந்த சிறுவன் வாய் திறந்து பின்பாட்டு பாடவே ஆரம்பித்துவிடுகிறான்.. மேடையின் கீழே நின்று கொண்டிருக்கும் அவனது பெற்றோர்களால் அதனை நம்பவே முடியவில்லை... கையெடுத்துக் கும்பிட்டபடி அழுகிறார்கள்... பாபா சொல் ஒன்றே போதுமானது.. அவரின் சொல்லுக்கான செயலை அந்தச் சொல்லே நிகழ்த்திவிடுகிறது!

இதனை அறிந்து பலர் தங்களது வாய் பேச இயலா குழந்தைகளை அழைத்து வருகிறார்கள்.. அனைவருக்கும் விபூதி தந்து அனுப்பி விடுகிறார் பாபா! அதில் ஓரிருவருக்கு நாள்பட பேசும் ஆற்றலும் வந்துவிடுகிறது... கர்மாவை சார்ந்ததே அனைத்து நோய்கள் மற்றும் புலன் இயலாமையும்...பலர் அதனை அனுபவித்தே தீர்க்க வேண்டி இருக்கிறது... சிலர் தனது பூர்வ புண்ணியங்களினால் அதனை விரைவாகக் கடந்துவிடுகின்றனர்!


ஷிர்டி சாயி பக்தர் ஒருவர்... மும்பையில் தொழிலதிபராக இருக்கிறார்... பாபாவை பற்றிய நூல்கள் சிலவற்றைப் படித்த பிறகு பாபாவின் புகைப்படத்தை வாங்கி பூஜையறையில் மாட்டி வைக்கிறார்.. இப்போது இரண்டு பாபாக்களும் அவர் பூஜையறையில்... இருவரும் ஒருவரே என உணர்ந்து கொள்கிற பக்தி அது! அவர் படம் வாங்கி மாட்டிய அந்த வியாழக்கிழமையே பாபா படத்திலிருந்து விபூதி படர ஆரம்பிக்கிறது... படர ஆரம்பித்து கொட்டுகிறது... விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதே... இது எப்படி சாத்தியம்? என படத்தின் பின்னால் உள்ள பின் அட்டை லேமினேட்டை மாற்றிவிட்டு பிறகு படத்தை பூஜையறையில் மாட்டுகிறார்... இப்படி அவர் எத்தனை முறை செய்த பிறகும் அத்தனை முறையும் விபூதி வழிவது நிற்கவே இல்லை.. பேராச்சர்யப்படுகிறார்! 


இதனைத் தொடர்ந்து அவர் புட்டபர்த்திக்கு பாபா தரிசனம் காண செல்கிறார்... நேர்காணலுக்கு அவரும் அழைக்கப்படுகிறார்! பாபா தனது திருக்கர அசைப்பில் சிருஷ்டி விபூதியை வரவழைத்து அனைவருக்கும் தானே நெற்றியில் இட்டு விடுகிறார்! ஆனால் அந்த மும்பை தொழிலதிபருக்கு பாபா இட்டுவிடவே இல்லை...‌ அப்போது அவர் முகம் வாடிப்போகிறது.. "சுவாமி" என சன்னமான குரலில் ஏக்கத்தோடு அழைக்கிறார்... உடனே பாபா அவரை நோக்கியபடி "உங்களுக்கா... ம்ம்...விபூதியை உங்கள் வீட்டிலேயே சுவாமி தருகிறாரே! நீங்கள் சுவாமியிடம் வருவதற்கு முன்பே... சுவாமி உங்களிடம் வந்தாயிற்றே!" என புன்னகை தவழ பிரேமை ததும்பத் ததும்ப உரைத்து...‌அவரை புல்லரிக்கச் செய்கிறார்! புல்லாங்குழல் காற்றை பூப்பூக்க வைப்பதற்கு முன்பே காற்று புல்லாங்குழலை புல்லரிக்க வைத்துவிடுகிறது!


பாபாவின் சிருஷ்டி லீலைகள் நம்மை திசை திருப்புவதற்கு அல்ல அது நம்மை நமக்குள் உற்று நோக்கி தெய்வீகத்தை அகத்தில் உணரப்படுவதற்கே நிகழ்கிறது என்பதை நூலாசிரியர் பதிவு செய்கிறார்... இத்தனை அவதாரம் நிகழ்ந்தும் ஏன் இன்னமும் இந்தியாவில் ஏழ்மையும் பஞ்சமும் இன்னலும் மாறவில்லை எனும் அடிப்படை கேள்விக்கு... பாபா அவதரிப்பதற்கு முன்பே அவர் இறைவனாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவரே... எத்தனை அவதாரங்களும் இறை தூதர்களும் தோன்றி அறநெறிகளை அறிவுறுத்திய போதும்... அதனை வாழ்வில் கடைப்பிடிக்காமல் மனிதன் வாழ்வில் சேகரித்த தீய கர்மாக்களின் விளைவே இப்போது பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது! என்பதையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவிடுகிறார்!


பக்தர்களின் சவுகரியத்துக்காக மட்டுமே பாத மந்திரத்திலிருத்து பாபா பிரசாந்தி நிலையம் உருவாக்கி பிரவேசம் புரிந்தார்... செல்வந்த பக்தர்களின் அடிமன ஆழத்தில் கருணையை விளைவித்து கட்டுமான சேவைகள் புரிய வைத்தார்... அப்படி உருவானதே பாபாவின் அனைத்து மனித குல சேவா பணிகளும்... காளை மாடுகளைக் கூட காராம் பசுக்களாக மாற்றுவது இறைவன் பாபாவால் மட்டுமே சாத்தியம்!

மாபெரும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு சமயம்... 30 அடி உயரத்திலிருந்து உதவிப் பொறியாளர் தவறி கீழே விழுகிறார்... அதனை பார்ப்பவர்கள் உறைந்து போகிறார்கள்... சிலர் "சாயிராம்" என தங்களையும் மறந்து கத்துகிறார்கள்! கீழே விழுந்தவர் அவ்வளவு தான் என நினைப்பதற்குள்... அவர் எதுவும் தனக்கு நடக்காதது போல் கைகால்களை உதறிவிட்டபடி மிகத் தெளிவாக மிரட்சி இன்றி நடந்து போவதைப் பார்த்து கட்டுமானப்பணி செய்தவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்... பாபாவின் கட்டுமான சேவைப் பணிகளில் ஈடுபட்ட ஒருவருக்குக் கூட ஒரு அசம்பாவிதமோ... சிறு சிராய்ப்போ ஏற்படவே இல்லை என்பதை மிக தீர்க்கமாய் நூலாசிரியர் பதிவு செய்கிறார்! பாபாவின் கருணை நிழலின் கீழே வசிப்பவர்கள் எவரும் அச்சப்பட வேண்டியதே இல்லை... பாபாவின் கருணை நிழல் என்பது  தாயின் கருவறையை விட பாதுகாப்பானது!


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் : 70 / ஆசிரியர் : பி.எஸ்.ஆச்சார்யா) 


"வெறும் கையோடு என்னிடம் வாருங்கள்...வந்து  எனது கருணையையும் பாதுகாப்பினையும் அள்ளி எடுத்துக் கொண்டு செல்லுங்கள்!" என இறைவன் பாபாவை தவிர எவரால் சொல்ல இயலும்? வெறும் வார்த்தை அல்ல அது பெரும் ஆன்மீக நிகழ்வியல்! அதை அனுபவிக்காத ஆத்மார்த்த பக்தர்களே இல்லை... பாபாவின் கருணை நிழல் குடையின் கீழ் வசித்தும் எதற்கும் பயந்தும் ,ஏங்கியும், வாழ்வினை குறைகூறியும் வாழ்வது அந்த அற்புத நிழலுக்கு நாம் ஏற்படுத்துகிற களங்கமே...! பக்குவப்படுவதற்கே பாபாவின் கருணை நிழல் நமக்கு ஞான வெளிச்சமூட்டுகிறது!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக