தலைப்பு

சனி, 11 ஜூன், 2022

முதியவர் ரூபத்தில் தோன்றி பழம்பெரும் பக்தர் பாலபட்டாபிக்கு ஆற்றைக் கடக்க உதவிய பாபாவின் பரிவு!


சுவாமியின் பழம்பெரும் பக்தர் அநேகம். அவர்கள் எல்லாம் சுவாமி பக்தியின் பொக்கிஷங்கள். அந்தப் பொக்கிஷங்களில் பாலபட்டாபி சாயிராமும் ஒருவர். அவர்களின் சுவாமி அனுபவங்களை வாசிக்க வாசிக்க சுவாமிபால் பக்தி பெருகுவது உறுதி.. அப்படியான ஓர் பரவச அனுபவம் இதோ...

முதன்முதலில் பால பட்டாபி அவர்களுக்கு பகவானிடத்தில் நம்பிக்கை எல்லாம் இல்லை.. பாபாவின் தெய்வீக அன்பினால் ஈர்க்கப்பட்ட விதமே இங்கு வர்ணிக்கப்படுகிறது!


பால பட்டாபி, 40 பேர் கொண்ட குழுவோடு முதன்முதல் தரிசனத்திற்கு செல்லும் பொழுது பாபாவிற்கு 20 வயதே ஆகியிருந்தன!எல்லோரும் மாலைகள் வாங்கிவந்து பகவானுக்கு கொடுக்க அவற்றை ஏற்றுக் கொண்ட சாயி, பால பட்டாபியின் மாலையை ஏற்கவில்லை! "நீ முழுமனதோடு என்னை காண வரவில்லை, எப்படியோ வந்திருக்கிறாய்" என்றார்!!!

துணுக்குற்ற பாலபட்டாபி, "என் மனதை படிக்கும் இவர் நிறைய விஷயம் உள்ள, சக்தி வாய்ந்தவர் தான்" என நம்பலானார்.


அதுதான் அவர் வாழ்வின் அன்பு நாடகத்தின் தொடக்கம்! இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தாயத்தை வரவழைத்து, ஒரு மஞ்சள் நூலில் கோர்த்த, பட்டாபியின் கழுத்தில் கட்டி விட்டு ஆசிர்வதித்தார். பட்டாபி புட்டபர்த்தியில் நீண்ட நாட்கள் தங்கி விட்டார். ஏனெனில் அப்படி தங்க முடிவு எடுக்கும் முன் சித்திராவதி நதிக் கரைக்கு அழைத்துச் சென்று, பட்டாபியின் வியாபார விபரங்களை ஒன்றுவிடாமல் பாபா தனது சுத்தமான சம்ஸ்கிருதம் கலந்த தெலுங்கில் கூறிவிட்டார்!! பட்டாபிக்கு பெருமூச்சு வந்துவிட்டது ஆச்சரியத்தில்! அதனால் பாபாவின் ஆன்மீக நடவடிக்கைகள் கண்டு அங்கேயே பர்த்தியில் நெடு நாட்கள் தங்கி விட்டார்! பாபா வலியுறுத்தி அவரை ஊருக்குச் சென்று கடமையைச் செய்ய சொன்னார். மனமில்லாமல் கிளம்பிச் சென்றார். 


ஊருக்கு வந்த பின் தனது வெல்ல வியாபாரம் எவ்வளவு நஷ்டம் அடைந்து விட்டது என்பதை அறிந்தார். உடுமலைப் பேட்டையில் இருந்து மீண்டும் பாபாவின் அருள் பெற வேண்டி வந்தார். ஆனால் தனது கஷ்டங்களை எடுத்துக் சொல்ல வாய்ப்பே கிட்டவில்லை! பர்த்தியை விட்டுக் கிளம்பும் முன் பாபா தன் கையை அசைத்து 9 மெடல்களை வரவழைத்து அனைத்தையும் பட்டாபியிடம் கொடுத்தார்.

ஒவ்வொன்றிலும் பாபாவின் சிறுவயது உருவங்கள் பதிக்கப்பட்டிருந்தன. பட்டாபி மிகவும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்ததால் ஆசீர்வதித்து கொடுத்தார்.


ஆனால் மீண்டும் ஊருக்கு போய் யாரையும் எதிர் கொள்ள சக்தியில்லாமல் மீண்டும் ஒருமுறை பாபாவை சந்தித்து பேச திரும்பி வந்தார். புக்க பட்டணத்தில் இருந்தார் பட்டாபி. புட்டபர்த்தி செல்ல இடையே ஒரு ஆற்றை கடக்க வேண்டும். ஆற்றில் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்தது. தனது பையை புக்கபட்டினத்தில் கர்ணம் வீட்டில் வைத்துவிட்டு, ஜனகப்பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அது சித்திராவதியின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் பாதை! வியாழக்கிழமை எப்படியும் பகவானை தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தார். 


ஆனால் நீர் கரைபுரண்டு ஓடியது. இரவு 8.30 மணி இருக்கும். பாபாவை வேண்டிக்கொண்டு ஆற்றை கடக்க தீர்மானித்தார். அப்பொழுது பாபா கூப்பிடுவது போலவே, "அப்பா மகனே! குழந்தாய்!" என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்கையில் ஒரு வயதானவர் கையில் கம்பு ஒன்றை பிடித்து கொண்டு, இதை மறுமுனையில் நீ பிடித்துக் கொண்டு என் பின்னே வா! நான் ஆற்றை கடக்க உதவுகிறேன் என்று கூற, பட்டாபியும் பின்தொடர்ந்தார். கரையை கடந்ததும் மாயமாய் மறைந்துவிட்டார்.

பட்டாபி சொட்ட சொட்ட நனைந்தவாறு பழைய மந்திரை அடைந்தார். பக்தர்கள் அவரிடம், "8.00 மணிக்கு பாபா அவர்கள் "உடுமலைப்பேட்டை பக்தன் வருகிறான்" என்று கூறி 1/2 மணி மறைந்து விட்டு 8.30க்கு வந்தார் என்றனர்!!! 


பட்டாபி கண்ணீரில் கரைந்து போனார். பாபாவின் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார்! அவரை சாப்பிட சொன்னதற்கு பட்டாபி தான் வியாழக்கிழமை சாப்பிடுவது இல்லை எனவும், பசியோடு வணங்குவதை பகவான் ஏற்பதில்லை எனக்கூறி பூரி, கிழங்கு தாமே வரவழைத்தார். மீண்டும் பட்டாபி அதில் வெங்காயம் இருக்குமே என்றார். பிறகு உண்மையான பக்தியில் சம்பிரதாயங்கள் அவசியமில்லை என உணர்ந்து, உட்கொண்டார். தனது படுக்கையில் படுக்க வைத்தார். சுகமாக தூங்குவதற்காக!

தனது எல்லையற்ற கருணையால் மீண்டும் தன் பக்தன் சக்தியைப் பெற அருளினார்!

ஆதாரம்: Baba Sathya Sai, Part 1 P 229
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 

🌻 இறைவன் ஸ்ரீ சத்யசாயி சொல்வது சரியே!! பக்தி சம்பிரதாயங்களைக் கடந்தது. இறைவன் ஸ்ரீ சத்யசாயி இதயத்தையே பார்க்கிறார்‌.
சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிப்பேன் ஆனால்  பரஸ்பர அன்பையும் பரிவையும் சகல ஜீவராசிகளின் மேல்.. சுற்றி வாழும் மனிதர்களின் மேல் காட்டமாட்டேன் என்றால் சத்யசாயி இறைவன் அந்தப் போலியான சடங்கு சம்பிரதாயங்களை ஏற்கமாட்டார். பரஸ்பர அன்பும்..‌ சரணாகத பக்தியுமே பரமசாயிக்கு மிக மிக முக்கியம்!!! 🌻


1 கருத்து: