தலைப்பு

வியாழன், 23 ஜூன், 2022

தேசத்தியாகி ஸ்ரீ கே.எம்.முன்ஷியின் சாயி அனுபவங்கள்!


தேசப்போராட்ட வீரர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ கே.எம்.முன்ஷி... வல்லபாய் படேலை தன் ஆதர்ஷ தலைவராக ஏற்றவர்.. 1942 ல் "வெள்ளையனே வெளியேறு!" என்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்... அந்த காலத்து காங்கிரஸ் மற்றும் சுவராஜ் கட்சியின் உறுப்பினர்... 1938ல் பாரத வித்யா பவனத்தை தோற்றுவித்தவர்...1950ல் பாராளுமன்றத்தை அலங்கரித்து சேவையாற்றியவர்... தென்னாட்டு காந்தியான ராஜாஜி போலவே இவர் ஒரு வக்கீலும், எழுத்தாளருமாவார்! உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் (1952 -1953) , உத்தரப்பிரதேச கவர்னராகவும் திகழ்ந்தவர் (1952 - 57)

இவர் பெற்ற பாபா அனுபவங்கள் ஆச்சர்யகரமானது!


பாபா மே 1968ல் மும்பையின் பாபா திருக்கோவிலான தர்ம ஷேத்திரம் திறக்கிறார்... மொராஜி தேசாய் அரசின் துணை பிரதமர்  கலந்து கொள்கிறார்... அந்தத் திருக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான ஸ்ரீ கே.எம். முன்ஷியும் கலந்து கொள்கிறார்... அது தான் முன்ஷி கலந்து கொண்டு பாபாவிடம் பெறும் முதல் தரிசனம்... அதற்கு முன் பாபாவை பற்றிய ஒரு தெளிவான அகப்பார்வை அவரிடம் இல்லை.. *மகாத்மா காந்தியின் கொள்கைப்பிடிமானம் தவறு எனில் தவறு என அவரிடமே சொல்லும் துணிச்சலும் நேர்மையும் மிகுந்தவர் தேசத்தாயான சுபாஷ் சந்திரபோஸை போலவே ஸ்ரீ முன்ஷி... அப்படி வெளிப்படையாகப் பேசி காந்திஜியிடம் இருந்து விலகி பிறகு வாருங்கள் என சேர்த்துக் கொள்ளப்பட்ட மிக தர்மவான் ஸ்ரீ கே.எம்.முன்ஷி...


அப்போது அந்தத் திருக்கூட்டத்தில் கே.எம்.முன்ஷியின் வலது கை லேசாக நடுங்கிக் கொண்டிருக்கிறது... அதை பாபா கவனிக்கிறார்... பாபா கவனிக்காமல் எப்படி இயங்கும் இந்தப் பிரபஞ்சம்?! உடனே தனது நாற்காலியை விட்டு எழுந்து கொள்கிறார் பாபா.. அது தான் பெருங்கருணை... ஒரு நொடி கூட தாமதமப்படுத்தவில்லை... கே.எம்.முன்ஷியின் நேர்மைக்கும் தேசத்தொண்டுக்கும் தியாகத்திற்கும் கிடைத்த கருணை அது...! பாபாவின் அந்த இறங்குதல்... அந்த இரங்குதல்...


பார்க்கின்ஸன் எனும் ஒருவகை நடுக்குவாதம் நோயினால் வெகு காலமாகவே பாதிக்கப்பட்டிருந்தார் ஸ்ரீ முன்ஷி... பாபா நெருங்குகிறார்... பாபாவா நெருங்குகிறார்...? முன்ஷி செய்த புண்ணியமே நெருங்குகிறது... பெரும் பேறு நெருங்குகிறது... பரம பாக்கியம் நெருங்குகிறது... நெருங்கி முன்ஷியின் விரல்களை எடுத்து தனது கைகளின் உள்ளே மூடிக்கொள்கிறார் பாபா.. இப்படித்தானே தனது பக்தரின் வாழ்கையை அடை காப்பது போல் காக்கிறார் பாபா! பூம்புனித சிருஷ்டி விபூதி பாபா கையசைப்பில் குவிய...அதை முன்ஷியின் விரல்களில் பூசிவிடுகிறார்... வெள்ளையனை எதிர்த்து அறவழியில் சிறைச்சாலையில் கம்பி எண்ணிய புண்ணிய விரல்கள் அல்லவா அவ்விரல்கள்... இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுகிற ஸ்ரீ முன்ஷி தேசம் உயிர்க்க எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்..‌அத்தனையும் எழுதிய விரல்கள் அல்லவா அவ்விரல்கள்... இப்போது விபூதியால் முலாம் பூசப்பட்டு ஆரோக்கியம் பெறுகிறது.. நடுக்கம் நிற்கிறது...


இதனை ஸ்ரீ முன்ஷியே விளக்குகிறார்...

"எனது கைவிரல்களில் விபூதி பூசி.. ஒரு மோதிரத்தையும் சிருஷ்டித்து அணிவித்துவிடுகிறார்... உடனே எனது வலது கை இறுக்கம் போய்விட்ட உணர்வைப் பெறுகிறேன்! "சென்றேன் கண்டேன் வென்றேன்" என சீசர் எழுதியிருந்தான்.. நான் அதை சற்று மாற்றிச் சொல்ல வேண்டும்... அது தான் எனது சுவாமி அனுபவத்தில் நிகழ்ந்தது...

"சென்றேன் - கண்டேன் - வெல்லப்பட்டேன்!" என மனம் திறந்து தனது பாபா அனுபவம் குறித்துப் பரவசமாக மொழிகிறார்! 

சுதந்திரத்தை வென்றெடுத்த கைகளில் ஒரு கையாகத் திகழ்ந்த ஸ்ரீமுன்ஷியின் நடுக்குவாத நோயினையினும் குணமாக்கி தனது பேரன்பால் அவரது மனதையும் வென்றார் பாபா! புறவிடுதலையின் சிற்பிகளில் ஒருவர் ஸ்ரீமுன்ஷி..நமது அகவிடுதலையின் ஒரே பிரபஞ்ச சிற்பி சாட்சாத் இறைவன் பாபாவே!


(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா / பக்கம் : 105 / ஆசிரியர் : க.நாகராஜன்) 


எதிர்பார்ப்பின்றி எவர் செய்த நன்மையும் வீண் போவதில்லை! பக்தியோடு தன்னலம் மறந்து எவர் செய்த புண்ணியமும் விழலுக்கு இறைத்த நீரில்லை! அப்படி ஒருபோதும் பாபா விடுவதே இல்லை! அது பிரபஞ்ச விதியுமில்லை! மனிதன் எதைச் செய்தாலும் 'தான் செய்கிறேன்' என்ற எண்ணம் இருக்கும்வரை அவன் அதன் கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்! ஸ்ரீ முன்ஷி தரிசனம் பெறவே சென்றாரே அன்றி பாபா குணமாக்குவார் என்ற எந்தவித எதிர்பார்ப்பும் அவரிடம் இருக்கவில்லை.. தியாகிகளுக்கு ஏது எதிர்பார்ப்பு?! அவ்வகை தியாக இளைஞர்களையே பாபா வரவேற்று அரவணைத்து மடியமர்த்திக் கொள்கிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக